Wednesday, July 26, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (4)

அன்று மலேஷியாவில் இருக்கும் தெரிந்தவர் அம்மாவைப் பார்க்க வந்திருந்தார்.அவர் சென்றபின் அம்மா கேட்டார் "நீயும் காலேஜ் படித்து அயல்நாடு செல்வாயா?"என்றார்.அதற்கு என் அத்தை சொன்னார்."கவலைப்படாதே நிச்சயம் நடக்கும், உன்னையும் கூட்டிச் செல்வான்". அதற்கு அம்மா சொன்னாள் "இந்த உடம்புடன் போக முடியுமா/'. மறுமொழியாக அத்தை சொன்னார் "முடியவிட்டால் உன்னை கட்டியாவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் பயப்படதே" என்றார் அது வேறு விதமாக காலையில் பலிக்கும் என்று தெரியாமல்.
இரவு மணி 11.00 இருக்கும். அம்மா அவனை எழுப்பி பாத்ரூமுக்கு போகவேண்டும் என்றார்.சரி என்று அவன் பிடித்துக்கொள்வதற்குள் கட்டிலில் இருந்து இறங்கி நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பிடித்து தூக்கினால் தொடை கால் எல்லாம் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. கான்சரால் முழுவதும் பழுதடைந்த ரத்தகுழாய் உடைந்துவிட்டது.அம்மா அந்த நிலையிலும் தெளிவாக சொன்னார் "டேய்,என்னை உன் மடியில் வைத்துக்கொண்டு, அந்த கங்கைச் சொம்பை உடைத்து ஜலத்தை என் வாயில் விட்டுக்கொண்டே என் காதில் நாராயணா என்று சொல்".என்றார்.சொன்னதைச் செய்து பாதி ஜலம் உள்ளே போய்க்கொண்டிருக்குக்போதே க்ள்க்... க்ள்க்.. ஜலம் வெளியே வந்து தலை தொங்கி விட்டது.கதை முடிந்தது.அத்தை சொன்னது மாதிரியே மறுநாள் அவளை கட்டித் தூக்கிக்கொண்டு சென்றார்கள்.
அந்த மரணம் அவன் மனத்தில் ஒரு மாறாத ரணம்தான்.இந்தக்கதை முடிந்து விட்டது ஆனால் இன்று ஒரு புதுக்கதை ஆரம்பித்து விட்டதே.இதைத்தான் இப்படிச் சொன்னார்களோ
The beginning is the end, the end is the beginning,you are in the middle

Tuesday, July 25, 2006

மரணங்கள்... முடிவதில்லை

நண்பர்களே சிங்கை பயணத்தை சுருக்கமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பவேண்டிய சூழ்நிலை.என் சகோதரனின் மனைவி திடீரென்று இதயக்கோளாறினால் இன்று இறந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. என்னுடைய இன்றைய நிலைக்கு பெரிதும் காரணமானவன் என் அண்ணன்.அவனுடைய துக்கத்தில் நான் பங்கு கொண்டு ஆறுதலாக இருக்கவேண்டும்

Monday, July 24, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (3)

அம்மா இருந்தது மகளிர் பகுதி அங்கு ஆண்கள் அனுமதி கிடையாது.மேலும் அங்கே நோயாளிகளுக்கு குறிப்பிட்ட உடைதான் அணியவேண்டும் அந்த அம்மாபுடவை மட்டும்தான் கட்டி பழக்கம்.ஆனால் அங்கே சுடிதார் போன்ற உடைதான் அணியவேண்டும். அந்த உடையுடன் மகனைப்பார்பதற்கு வெட்கப்பட்டுத்தான் பார்க்க மாட்டேன் என்றாள்.நர்ஸுடன் அனுமதி பெற்று உள்ளே சென்று அம்மாவைப் பார்த்தான்.என்னடா இது இந்த கண்றாவி ட்ரஸ்ஸேல்லாம் போடச்சொல்லறா... "அதெல்லாம் ஒண்ணுமில்லை டீர்ட்மெண்ட்டுக்கு செளவுகரியமாக இருக்கும்" என்று சமாதானம் சொன்னான்


ஒரு வாரம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்தாயிற்று.கடைசியில் பெரிய டாக்டர் சொன்னார். "உங்க அம்மாவுக்கு கர்பப்பையில் புற்று நோய் அதுவும் முற்றிய நிலையில் உள்ளது.அறுவை சிகித்சை நிலையையும் தாண்டி விட்டது.வீட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள். மருந்து மாத்திரை தருகிறோம்.ஆனால் இன்னும் மிக அதிகமாக ஆறு மாதம் தான் உயிருடன் இருப்பார்கள்"ஆனல் இதை அம்மாவிடம் சொல்லக்கூடாது என்றார்கள்.நெருப்பபை வாரி கொட்டியது போல இருந்தது.

வீட்டிற்கு அழைத்து வந்தாகி விட்டது.உறவினர்களும், நண்பர்களும் வந்து பார்த்து போய்க்கோண்டு இருந்தார்கள். சிலர் டாக்டர் கொடுத்த ஆறு மாதத்தையும் குறைத்துச்சொன்னார்கள். நாளுக்கு நாள் வியாதியின் உக்ரம் அதிகமாயிற்று.மிகவும் கஷ்டப்பட்டாள்.ஆனால் நடுவே கேட்டுக்கொண்டே இருந்தாள். என்னை ஏன் டக்டர் ஒரு மாதம் கழித்து டெஸ்ட்டுக்கு வரச்சொல்லவேயில்லை என்று.

டிஸம்பர் மாதமும் ஓடிவிட்டது ஆனால் இந்த ஐந்து மாதத்தில் அவள் செய்த நல்ல காரியம் தினமும் அவனை சமைக்கச் சொன்னது.சாதம் வடிக்க,சாம்பர்,ரசம்,கறி,கூட்டு ஏன் ஊறுகாய் போடக்கூட கற்றுக்கொடுத்துவிட்டாள். அவன் மாமிகூட கேட்டாள் " ஏன் அக்கா காலேஜ் போகும் ஆம்பிள்ளை பையனை இப்படி கஷ்ட்டப்படுத்திரே" அதற்கு அம்மா கூறிய பதிலை சில நட்களுக்கு பிறகுதான் மாமி இவனிடம் கூறினாள். "இவாள்ளம் ஏன் நீ கூட எனக்கு தெரியாதென்று நினைத்துக்கொண்டு இருக்கெ நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான் உயிரோடு இருப்பேன் என்று.ஆஸ்பத்திரியில் கூட இருந்தவர்கள் சொல்லிவிட்டார்கள். மாதாந்திர டெஸ்ட்டுக்கு கூப்பிடவில்லையென்றல் அவ்வளவுதான் என்று. இவ்வளவுநாள் அவனைகஷ்டப்படுத்தியது ஏன் தெரியுமா நான் போனதற்குப்பிறகு அவன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படகூடாது.இப்போது பார் அவன் நன்றாக சமைக்கிறான் இனி பயமில்லை " ஆம் அவள் சொன்னது சரிதான் இன்றும் அவன் சமையலில் ஒரு எக்ஸ்பர்ட்.அன்று ஜனவரி நான்காம் தேதி இரவு மணி பத்து இருக்கும். வீட்டில் அவனும் அவ்ன் அத்தையும்,அண்ணியும் மட்டுமே இருந்தர்கள் அண்ணன்கள் இருவரும் நைட்ஷிப்ட் சென்றுவிட்டார்கள். நாளை பார்ப்போமா......

Thursday, July 20, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (2)....... நண்டுப்பிடியில்

காலை சீக்கிரமே விடிந்து விட்டது. "நீ காலேஜ்க்கு லீவ் போடாதே நான் டாக்டரிடம் போயிக்கிறேன்" இது அன்னையின் ஆணை.சரி என்று சொல்லிவிட்டு காலேஜ் போய்விட்டான் அந்தப் பையன்.கல்லூரி முடிந்ததும் உடனே வீடு திரும்பி விட்டான். வீடு பூட்டியிருந்தது.பக்கத்து வீட்டில் சாவி வாங்கி வீட்டிற்குள் போனால் சாப்பிடகூடப் பிடிக்கவில்லை.

இரவு எட்டு மணிக்கு எல்லோரும் திரும்பி வந்தார்கள் ஆனால் அம்மா வரவில்லை. மாமி அவனைத் தனியாக அழைத்துச் சென்று சொன்னார். "அம்மாவுக்கு கேன்சராம் அதற்க்காக அடயார் கேன்சர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்" என்றார். அவனுக்கு பக் என்றது. நண்டுப்பிடியில் அகபட்டுவிட்டதை உணர்ந்தான்.பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு மறைந்த தந்தையின் ஞாபகம் லேசாய் வந்தது.அண்ணன்கள் இருவரும் மற்றும் எல்லாரும்சொன்னர்கள்" கவலைப்படாதே ஒரு வாரத்தில் அம்மா வந்து விடுவாள் நீ நாளைக்கு போய்ப் பார்த்து விட்டு சாப்பாடு கொடுத்துவிட்டு வா" என்றார்கள் அந்த இரவும் சிவராத்திரிதான் அவனுக்கு.

காலையில் எழுந்து சரியாக ஒன்பது மணிக்கு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கொண்டு சைக்களில் நேராக கேன்சர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.சைக்கள் கூட அவ்வளவு விரைவாக போகும் என்று அன்று தான் அவன் தெரிந்து கொண்டான். அங்கு விசாரித்ததில் அவன் அம்மா பொதுப்பிரிவில் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். பொதுவார்டில் அவனுக்காக மாமி காத்துக்கொண்டு இருந்தர்கள்.சாப்பாட்டை வாங்கிக்கொண்டு" கொஞ்சம் இரு அம்மாவிடம் சொல்லிவிட்டு உன்னை கூட்டிக்கொண்டு போகிறேன்" என்றார்கள்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து "அம்மா உன்னை இப்போ பார்க்க விரும்பவில்லை உன்னை வீட்டுக்குப்போகச் சொன்னார் "என்றார்.தலைமேல் இடி வீழ்ந்தாற்போலிருந்தது அவனுக்கு. காரணம் தெரியவில்லை.ஆனால் காரணத்தை அவன் தெரிந்து கொண்டபோது மனம் இன்னும் சங்கடப்பட்டது. என்ன காரணம்..... நாளை பார்ப்போமா

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால்.....

இது நடந்தது 1963_64.அவனுக்கு வயது 15 இருக்கலாம்.ஸ் ஸ் ல் சி பாஸ் செய்து அன்றுதான் கல்லூரி சேர்ந்திருந்தான்.அந்தக் குடும்பத்தில் அவன் கடைசிப்பையன்.மிகவும் நடுத்தரகுடும்பம்.செற்ப வருமானத்தில் ஐந்து பேர் வாழ்க்கை நடத்தவேண்டும்.அந்த குடும்பத்திலேயே அவன் தான் முதல் முதலில் கல்லுரியை எட்டிப்பார்க்கிறான். அவனைவிட அவன் அம்மாவுக்கு.மிகவும் பெருமை.பையனும் மிகவும் சந்தோஷத்துடன் கல்லூரிக்குச்செல்கிறான். மாலை தனது முதல் நாள் அனுபவத்தை தாயுடன் பகிர்ந்துகொள்ள ஆசையோடு ஓடி வருகிறான். வீட்டில் நுழைந்தவுடனே அவனுக்கு அதிர்ச்சி.அவன் தாய் தரையில் படுத்துக்கொண்டு இருக்கிறாள் சுற்றி அவன் அண்ணி,மாமி, எல்லோரும் ஏதோ சிந்தனையில் இருந்தார்கள்.இவன் பதற்றத்துடன் என்னவென்றூ கேட்டான். அம்மாவுக்கு திடீரென்று உடம்பு சரியில்லை உதிரப்போக்கு எற்பட்டு இருக்கிறது என்ற தகவல் தான் அவனுக்குகிடைக்கிறது.உடனே தாயாருடன் அரசாங்க இலவச மருத்துவ மனைக்கு செல்கிறார்கள்.
அங்கே மருத்துவர்களின் பரிசோதனைக்குப்பிறகு மறுநாள் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்யவேண்டும் என்று உறுதியாக கூறி விட்டார்கள்.அந்தப்பையன் மிகுந்த குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றான். இரவில் அவன் சகோதரனும்,அண்ணியும்,மாமியும் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டுடிருந்தார்கள்.அதில் எதுவும் இவனுக்கு கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்ததால் எதுவுமே கேட்கவில்லை. நாளையப்பொழுது நல்லபடியாக புலரவேண்டுமென்று வேண்டிக்கொண்டு படுத்தான். தூக்கம் வரவில்லை.நாளையப்பொழுது எப்படி விடிந்தது,நினைத்தது நடந்ததா? யார்நினைத்தது? நாளை பார்ப்போம்.......

Monday, July 17, 2006

சங்கீத.... ஜாதி....முல்லை(2)

தனிவழி
மஹாவித்துவான்...... கச்சேரி.அன்று. நிர்பந்தத்தின் காரணமாக புதுப்பையனை ம்ருதங்க வாசிக்க ஏற்பாடு. பாகவதருக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை. கச்சேரி ஆரம்பித்ததலிருந்து மிருதங்கம் தகறார்தான்.எப்படியோ ராகம் தானம் பல்லவி வரை வந்துவிட்டார். பல்லவி ஸ்வரம் பாடி முடித்தவுடன் பையன் கேட்டான்"அண்ணா நான் தனி வாசிக்கட்டுமா' என்று. எரிச்சலுடன் இருந்த பாகவதர் சொன்னார்"நீ இதுவரைக்கும் என்ன சேர்ந்தா வாசிச்சே, தனியா தானே வாசிச்சுண்டு இருந்தே. நீ என்பாட்டுக்கு எங்கே வாசிச்சே ஏதோ நீ உம்பாட்டுக்கு வாசிச்சே அப்படியே வாசி"என்றாரே பார்க்கலாம்.
சண்டையும்.... சமாதானமும்.
பாகவதர் நன்றாகப்பாடிக்கொண்டிருந்தார்.ஆனால் பக்க வாத்யம் பக்கா வாத்தியமாக இல்லை.மிருதங்கம் தகராறு.மிருதங்கத்தில் தோலை இழுத்து பிடித்து (வார் பிடித்தல்) சரி செய்தால்தான் சுருதி சரியாக இருக்கும் செய்யாமல் விட்டுவிட்டு கச்சேரியின் போது நடுவில் அவ்வப்போது செய்துகொண்டு இருந்தார்.பாகவதர் பொறுமை இழந்து இரண்டாவது முறை சரி செய்யும்போது சொன்னார்"என்ன அண்ணா போன வார்லே வார் பிடிச்சதா அடுத்த வார் வந்தா தான் சமாதானம் ஆகும்' என்றவுடன் அரங்கமே அதிர்ந்தது.
வேஸ்டாதானே....போரது...
50 வருடங்களுக்கு முன்பு மாஹாவித்துவான் தலைநகர் டெல்லிக்கு கச்சேரிக்கு சென்றிருந்தார். நன்றாக 41/2 மனி நேரம் பாடினார்.கச்சேரி முடிந்ததும் அவருடன் வந்திருந்த பிரபல சங்கீத விமர்சகரைக் கூப்பிட்டார் "அம்பி இங்கே தடுக்கு (மறைவிடம்) எவ்விடே"என்றாரெ 'எதுக்கு மாமா' 'நீர் பிரியனும்" 'மாமா இது கோவில் வீட்டுக்கு போயிடலாம் "இல்லைடா அம்பி இதோ இப்படி தெருஓராமா இருந்தேருன்." மாமா அந்தமாதிரி பண்ணா இந்த ஊர்லே போலீஸ்காரன் பிடிச்சுண்டு போயிடுவான்" போட்டாமேடா வேஸ்டாதனே போறது .பிடிச்சுண்டு போகட்டுமே"கேட்டவுடன் நம்ப ஆள் ஆடிப்போய்விட்டார்.

Friday, July 07, 2006

சங்கீத...ஜாதி...முல்லை

சங்கீதம்--இங்கீதம் ..... ஒரு மிகப்பெரிய மஹா...... சங்கீத வித்வானிடம் தன் பையனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளச்செய்ய ஒரு தந்தை தன் பையனுடன் சென்றிருந்தார். வித்வான் அப்போது பூஜையிலிருந்தார். வந்தவர்கள் இருவரும் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து இருந்தார்கள்.பையன் சோபவில் கால்மேல்கால் போட்டுக்கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்து இருந்தான். பூஜையைமுடித்துக்கொண்டு பாகவதர் வெளியேவந்தார். அப்பா மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் சொல்லி தான் வந்த விஷயத்தைச் சொன்னார். பையன் அப்படியே உட்கார்ந்து இருந்தவாறே வணக்கம் மாமா என்றான். பாகவதர் தந்தையிடம் சொன்னார் "நான் உங்க பையனுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறேன் அதற்கு முன்னால் நீங்கள் அவனுக்கு கொஞ்சம் இங்கீதம் கற்றுக்கொடுங்கள்" என்றாரே பார்க்கலாம்
சங்கீத ஞானமு...
வருடாவருடம் அந்த மஹா... வித்வான் அந்த ஊருக்கு ராமநவமியன்று அந்த ஊர் பெரியமனிதரின் அழைப்பை ஏற்று கச்சேரி செய்துவந்தார்.அந்த வருடமும் அந்த ஊருக்குவந்து கச்சேரி செய்தார். பெரியமனிதரும் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டு இருந்தார். இரண்டு கீர்த்தனை முடிந்து கொஞ்சம் இடைவெளியில் பெரியமனிதர் போனவருடம் வித்வான் மிகவும் நன்றாகப் பாடிய தோடி ராகத்தை இந்த தடவையும் மறுபடிப் பாடச்சொன்னார்.வித்துவானும் தோடி ராகத்தை விஸ்தாரமாகப் பாடினார்.பாடி முடிந்ததும் பெரிய மனிதர் வித்துவானிடம் சொன்னார்"இந்த தடவை தோடி ராகத்தை மிகமிக ந்ன்றாக பாடினீர்கள்"என்றார்.வித்துவான் சிரித்துக்கொண்டே சொன்னார்"நான் வருடாமும் அப்படியேத்தான் பாடிக்கொண்டு இருக்கிறேன் அவ்விடதிலேதான் ஞானம் கொஞ்சம் இந்தவருடம் ஜாஸ்தியா வளர்ந்திருக்கிறது" என்றாரே பார்க்கலாம். தொடரும் ஆதரவு இருந்தால்

Tuesday, July 04, 2006

விட்டு விடுதலையாகி நிற்பாய்

ஓய்வுபெற்று இரண்டு நாட்களாகிவிட்டது,என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.காலை மணி 10 இருக்கும். டக்,டக் என்று ஜன்னலில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து கண்ணாடி வழியாகப் பார்த்தேன்.இரண்டு புதிய நண்பர்கள்.ஆனால் அவர்களோ என்னைப்புதியவன் போல் பார்த்தார்கள்.அந்த சமயத்துக்கு நான் வங்கியில்தான் இருப்பேன் பதவியில் இருந்தபோது.இந்த வீட்டிலேயே நான்கு வருடங்களாக இருந்தபோதிலும் பார்க்காத புதிய முகங்கள்.இருவரும் ஒரேமாதிரியாக தலையைச் சாய்த்து என்னை நீ யார் என்பதுபோல் பார்த்தார்கள். இரண்டுமே அழகான மைனாக் குருவிகள்.அதில் ஒன்று ஆண் மற்றது அதன் பேடை.இரண்டும் என்னைப் பார்த்து கண்களில் நட்புடன் நாம் நண்பர்கள் ஆகலாமா என்பது போல் பார்த்தது. நானும் சரி என்பதுபோல் உள்ளேசென்று சிறிது அரிசிமணிகளைஎடுத்து வந்து ஜன்னலின் வழியாக கை விட்டு அவைகளுக்கு உணவாக வைத்தேன். அதைத்தொடாமல் இரண்டும் ஒருமுறை என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு எங்கோ பறந்து சென்று விட்டன.என் கண்களில் ஏமாற்றம் வருத்தம்.

சிலநொடிக்குபின். இரண்டும் வேகமாக திரும்பிவந்தன. இந்த தடவை வரும்போது ஒரு விருந்தாளியையும் கூட்டிக்கொண்டு வந்தன.அதனுடைய குஞ்சு பறவைப்போலிருந்தது.சிறியாதாக இருந்தாலும் மிக அழகாய் இருந்தது கண்ணைச்சிமிட்டி என்னைப்பார்த்து எனக்கும் உண்டா என்பதைப்போல் பார்த்தது. கொஞ்சும் அழகு கொள்ளை அழகு.அந்தபெண்மைனா கிழே சிதறி இருந்த அரிசி மணிகளைத் தன் வாயால் கொத்தி தன் குஞ்சுக்கு வாயில் கொடுத்து பசியாறாச்செய்தது அது பசியாறியதும் இரண்டு மைனாக்களும் மீதி இருந்த அரிசியை கொத்தித் தின்றன.எனக்கு என் தாயின் முகம் நினைவில் வந்தது.இப்படித்தானே அவளும் தனக்கு வைத்துகொள்ளாமல் எனக்களித்துவிட்டு மீதமுள்ள சொல்ப உணவை அருந்திவிட்டோ அல்லது பட்டினியுடனோ படுத்துகொள்வாள்.தாய்ப்பாசம் என்பது ஆண்டவன் ராஜ்ஜியத்தில் ஒரே அளவுகோல்தான்.

சாப்பிட்டுமுடிந்தவுடன் என்னைபார்த்து கவலைப்படாதே நீயும் எங்களைப்போல் இனிமேலாவது சம்சாரபந்தத்திலிருந்து "விட்டு விடுதலையாகி" சுதந்திரமாக இருஎன்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.உடனே மூன்றும் பறந்து செல்லத் தயாராகி உனக்குதான் வேலை இல்லை எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது நாங்கள் போகிறோம் என்று சொல்லிப்போவதுபோல் பறந்துச் சென்றது. அவைகள் போனபின்பு மனமும் இடமும் வெற்றிடமாயிற்று. ஆனால் மனம் மட்டும் இந்தப் பாரதியாரின் பாடலை அசைபோட்டது.
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
சரணங்கள்
1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)

Sunday, July 02, 2006

அழைத்ததால் வந்த ஆறுதல் தந்த ஆறு விளையாட்டு

ஆறு விளையாட்டுக்கு இரண்டு பேர்கள் அழைத்திருக்கிறார்கள். இனிமேல் போடாமல் இருந்தால் மரியாதை இல்லை. வலைவுக்கு புதியவன். நெளிவு, சுளிவு,தொழில் நுட்பம் தெரியாதவன்.முயற்சியில் ஜெயித்தால் "கெரிடிட்"எனக்கு இல்லையென்றால் "ட்பிட்" ஆறு விளையாட்டுக்கு அழைத்த திருமதி.கீதா மற்றும் நாச்சியார் அவர்களுக்கு. வங்கியிலிருந்து ஓய்வு பெற்று ஒரு நாள்தானே ஆயிற்று டெபிட்,கெரிட் மறக்கமுடியவில்லை.

1) பிடித்த ஆறு
அ)ஆறுமுகன் (குலதெய்வம்)
ஆ)ஆறுதல்(எப்பவும் கசேஇல்லமேகொடுக்கலாம்)
இ)மூனாறு(சமீபத்தில் போய்வந்த இடம் மற்றபடி கொலையெல்லாம் எனக்கு பண்ணத்தெரியாது)
ஈ)பாலாறு( மணலாறுதான் எப்பவும் இருந்தலும் சொந்த ஊர் ஆறு அல்லவா)
உ)அடையாறு(50 வருடமாக அதன் அருகிலேயேதானே வாழ்கிறேன்)
ஊ)கூவம் ஆறு( சீக்கிரம் மணக்கப்போகிறது)

2)பிடித்த ஆறு படங்கள்
அ)தில்லானா மோகனாம்பாள்
ஆ)காசேதான் கடவுளடா
இ)திருவிளையாடல்
ஈ)சிந்துபைரவி
உ)காதலிக்க நேரமில்லை(கலேஜ்க்கு கட் அடித்து அண்ணனிடம் அடி வாங்கி பார்த்தது)
ஊ)திருட்டு பயலே(நண்பர் திரு.சுசி கணேசன் எடுத்தது)

3)பிடித்த ஆறு புத்தகங்கள்
அ)தியகபூமி(கல்கி)
ஆ)துப்பறியும் சாம்பு(தேவன்)
இ)அம்மா வந்தாள் (தி.ஜா.ரா /தி ரா ச இல்லை)
ஈ) அர்த்தமுள்ள இந்துமதம் (கண்ண தாசன்)
உ)அக்னிப்பரிக்ஷை) ஜெயகாந்தன்)
ஊ)சுந்தர காண்டம்(பால குமரன்)

4) பிடித்த ஆறு பாடகர்கள்
அ)திரு. ம்.டி. ராமனாதன்(நன்றி ஹரி)
ஆ)திருமதி.அருணா சாய்ராம்
இ)திரு. டி.கே. ஜெயராமன்
ஈ)திரு. விஜய் சிவா
உ)திரு.டி.ம்.கிருஷ்ணா
ஊ)திரு.ஜேசுதாஸ்

5) பிடித்த ஆறு ஹோட்டல்கள்
அ)வெங்கட்டா லாட்ஜ்(கும்பகோணம்0
ஆ)காளியாகுடி ஹோட்டல் (மாயவரம்)
இ)ராயர் கேப்(மைலப்பூர்)
ஈ)கணேஷ் மெஸ்(மதுரை)
உ)கோமள விலாஸ் (கொல்கத்தா)
ஊ)ம்.டி.ர்.(பெங்களூர்)

6)மிகவும் பிடித்த வலைப்பதிவாளர்கள்
அ)திரு.குமரன்(என்னை வலைக்குள் இழுத்தவர்)
ஆ)திரு.ஜி. ராகவன் (முருகனுடன் பேச்சு விளையாட்டு நமக்கெல்லாம் வார்த்தை விளையாட்டு)
இ)திரு.ஸ்.கே.(கவிதைக்கு கவிதையால் அழகு செய்பவர்)
ஈ) திரு.அம்மஞ்சி(சிரிக்கவைப்பதையே தொழிலாகக்கொண்டவர் எப்பொழுதும் அஸின்னுடன் கனவில் இருப்பவர்
உ)திருமதி.கீதா சாம்பசிவம்(மார்கண்டேயனி என்றும் பதினாறு)
ஊ)திருமதி.நாச்சியார்(சும்மாஇருந்த சங்கை ஊதிக்கெடுத்தவர்)

ஆறு விளையாடு விளையாடிச்சு.பூங்கொத்தோ கல்லோ எதுவாக இருந்தாலும் எனக்கில்லை.போற்றுவார் போற்றலும் தூற்றூவார் தூற்றலும் போகட்டும் திருமதி நாச்சியாருக்கே
அன்பன். தி ரா ச