Monday, December 31, 2007

புத்தாண்டே வருக



நல்லது தீயது நாமறியோமே நல்லதை நாட்டுக, தீயதை ஓட்டுக வாழ்க வளமுடன்


-





Thursday, December 27, 2007

நடராஜனின் தரிசனமே....

நடராஜனது ஐந்து சபைகள்தான் மேலேயுள்ளது. மதுரையில் பாருங்கள் வலது பாதம் தூக்கி ஆடுகிறார். அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.



திரு. மௌளி அவர்கள் போனபதிவுக்கு போட்ட பின்னுட்டத்தில் "இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவோமே"என்ற பாட்டை தருமாறு கேட்டிருந்தார். இதோ படமும் கருத்தும் முன்னே பாடல் பின்னே.


சென்னைக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு திருத்தலம். கரைக்கால் அம்மையாருக்கு சிவபதவி அளித்த இடம். நடராஜர் எட்டு கரங்களுடன் நடனம் ஆடும் தலம் ( ரவி எட்டுகைகள் இருக்கிறதா இல்லையா எண்ணிப்பார்த்து சொல்லுங்கள்)அபய கரம்,அருள் கரம்,அதிரமுழங்கும் உடுக்கை ஒரு கரம், திரிசூலம் ஒரு கரம், மான் ஒரு கரம் அக்னி ஒரு கரம், நாகபாசம் ஒரு கரம் மற்றும் நாட்டிய முத்திரையுடன் ஒர் கரம் ஆக எட்டு கரம்

உலகத்தின் சுழற்சிதான் நடராஜரின் நடனம்.அஜபா நடனம் என்றும் கூறுவார்கள். ஐயனின் வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது. நம் பாபநாசம் சிவன் அவர்கள்
அவனது நடனத்தை இப்படி வர்ணிக்கிறார்:-


செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி


ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி


கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி


இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)


நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க


தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க


சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க


முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க"


மேலும் கூறுகிறார்

கஞ்ஜ மலரிதழின் விழியாள்-ஓயாக்காதலுடன் சிவகாமி மணாளநின்


சரணம்கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென


குழவி இளம் பிறை பளீர் பளீரென


நஞ்சம் தவழும் நீல கண்டமும் மின்ன


ஒருநங்கை கங்கை சடையில் குலுங்க-நடமாடும் ஆடல் அரசே.


இந்தப்பின்னனியில் மேலே உள்ள ஆடலரசனின் படத்தை இந்த பாடலுடன்/<"இங்கே">"> கேட்டுப் பாருங்கள். மனதில்அவனது ஆனந்த நடனம் தெரியும்.


திருவாலங்காட்டில்தான் தன்காதிலிருந்த குண்டலம் கீழே விழுந்ததாக
பாவனையுடன் சிவன்அதை இடது காலால் எடுத்து அணிய அதுபோன்று செய்ய முடியாமல் சிவகாமி தோல்வியோடு தலை குனிந்தாளாம். ஆனால் நம் சிவனின் பார்வையோ வேறு மாதிரி இருக்கிறது.காளியுடன் ஆடும்போது தோற்றுவிடும் நிலையை அடையும் தருணத்தில் எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தினால் காதிலிருக்கும் குண்டலம் கீழே விழுவதுபோல விழவைத்து (அழுகுணி ஆட்டம் ஆடி) இடது காலால் எடுத்து பின்பு உயரத்தூக்கி அதை காதில் அணிந்ததாக இப்படி கூறுகிறார்


"சுபஞ்சேர் காளியுடனாடிப் படு தோல்வி யஞ்சி திருச்செவியிலணிந்த-மணித்தோடு விழுந்ததாக மாயங்காட்டியும் தொழும்பதம் உயரத்தூக்கியும்-விரிப்ரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின்திருப் பதம்தஞ்சமென உனை அடைந்தேன் பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும்துரையே சபை நடுவில் தத்திமி என்று ஆடும்


சரி இனி திரு. மௌளி கேட்ட பாடலுக்கு வருவோம்.திரு. சிவன் அவர்களின் அருமையான பாடல்களுள் ஒன்று.கமாஸ் ராகத்தில் அமைந்த இடது பதம் தூக்கி என்ற பாடல்.



இறைவன் எப்படி ஆடுகின்றான் என்பதை எவ்வளவு விவரமாக வர்ணிக்கின்றார். புன்னகையோடு இடது காலை தூக்கி தில்லையிலே ஆடுகிறானாம். அவன் மட்டும் ஆடவில்லை அவனுடன் இந்தப் பூமியும் ஆடியது(சுழற்சி), தலைமேல் இருந்த கார்க்கோடகன் என்ற கொடிய பாம்பும் ஆட,பக்தர்கள்ஜெயஜெயவெனகோஷிக்க,புலிப்பாதமுனிவர்கண்குளிர்ந்து

கொண்டாட ஆடினார். ஆடியபோது ஆண்டவனின் கால் சிலம்புகள் கலீர் கலீர்என்று முழக்கமிட,தலையில் இருக்கும் பிறைச் சந்திரன் தலை இந்த பக்கமும் அந்தபக்கமும் ஆடும் போது பளீர் பளீர் என்று மின்ன, மைத்துனாரன திருமால் மத்தளம் வாசிக்க, சிவகாமி மணாளன் திருசிற்றம்பலத்தில் மகிழ்ச்சியோடு ஆடுகின்றான்

பாட்டை கீழே படியுங்கள்


ராகம் கமாஸ தாளம் ஆதி 1 களை



பல்லவி



இடது பதம் தூக்கி ஆடும்


நடராஜனடி பணிவையே நெஞ்சே (இடது)



அனுபல்லவி




பட அரவாட புவியத ளாட


பக்தர்கள் ஜய ஜய எனவே


புலி பதஞ்ஜலி இரு கண் குளிர தில்லையிலே (இடது)


சரணம்




திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென


திருமுடி இளமதியொளி பளீர் பளீரென


திமிதக தரிகிடதோம் என திருமால் மத்தளம் அதிர


சிவகாமி மணாளன் திருச்சிற்றம் பலந்தனில் புன்னகையோ (இடது



திரு வி ஆர் கிருஷ்ணன் அவர்களின் பாடலைகேட்க /<"இங்கே"> செல்லவும்




திருமதி. சுதா ரகுநாதன் படிய பாடலைக் கேட்க/<"இங்கே">"> செல்லவும்.






Sunday, December 23, 2007

தில்லை நடராஜனின் தரிசனமே....


இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியதுவீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள்.

ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.

நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான்.



ராகம்:சாமா தாளம்: ஆதி

பல்லவி

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே எப்போது.....(வருவாரோ)

அனுபல்லவி

திருவருந் தென்புலியூர் திருச்சிற்றம்பலவாணர்குருநாதனாக வந்து குறைதீர்க்கக் கனவு கண்டேன்

இருவினை பிணிகளைக் கருவறுத்திடுகிறேன்பயப்படாதே என்று சொல்ல.....(வாருவாரோ)

சரணம்

மறையாலும் வழுத்தறியா மகிமை பெறு ந்டராஜன்நறியூறுஞ்சேவடியை நம்பினவனல்லவா

அனுதினஞ்சிவ சிதம்பரமென்ற அடிமையென்றருள் புரிந்திடவிங்கே......(வாருவாரோ)



தனக்கு வாக்கு கொடுத்தபடி தில்லை பொன்னம்பலவாணன் வருவனோ மாட்டானோ. அப்படியே வந்தாலும் தன்னோடு ஐக்கியமாக்கிக்கொள்கிறேன் என்று வாக்களித்தபடி வரம் தந்து தன்னைச் சேர்த்துக்கொள்வானோ அல்லது தான் தாழ்ந்த குலத்தவன் என்று எண்ணி தவிர்த்துவிடுவானோ என்றெல்லாம் நினைத்து அவரது மனம் சஞ்சலப்படுகிறது. குருநாதனாக வந்து எனது இந்தப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் உண்டான பிணிகளான பாவங்களைத் போக்கி இனி எனக்கு பிறவியே இல்லாத ஸாஸ்வதநிலையை அளிப்பேன் பயப்படாதே என்று கனவிலுறுதி மொழி அளித்த பொன்னம்பலவாணன் வருவானோ மாட்டானோ...?ஆனாலும் என்மனம் அப்படி வராமல் இருக்கமாட்டான் என்று கூறுகிறது. ஏன் தெரியுமா கனவில் சொன்னவன் யாரோ அல்ல. நான்கு வேதங்களாலும் அறுதியிட்டு உறுதியாக விளக்கமுடியாதவுனுமாகிய அந்த கனகசபாபதியின் பாதங்களை நம்பினவன் நான்.அதுவும் எப்பேர்ப்பட்ட பாதம் அது.தில்லை மூவாயிரம் முனிவர்கள் தினமும் பூசித்திடும் பாதம்,சிற்சபையில் திந்திமிதிமிதோம் என்று ஆடியபாதம்,பார்க்கப் பார்க்க திகட்டாத பாதம், எல்லையில்லாத இன்பம் அருள் செய்திடும் பாதம்.நான் தினந்தோறும் சிவ சிதம்பரம் என்றுஎப்போதும் கூறி வணங்கின அவன் அடிமை என்று என்மேல் கருணை கொண்டு அருள் புரிந்திட வராமல் இருக்கமாட்டான் என்று தன்னை தனே சமாதான்ப்படுத்திக்கொண்டு இரக்கம் குணத்தை வெளிப்படுத்தும் ராகமான சாமாவில்இந்தகீர்த்தனையை போட்டு இருப்பது கேட்பவர் மனத்தை உருகச் செய்யும்.
கீழே சென்று பாடலை கேட்டு பார்த்து மகிழுங்கள்
.


திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்





Friday, December 14, 2007

விட்டல..... விட்டல.....

கடந்த ஒருமாதமாக நல்ல கச்சேரிகளுக்கு தங்கமணியுடன் போகும் வாய்ப்பு கிட்டியது. அதிலும் முக்கியமாக திரு. ஓ ஸ் அருண் அவர்களுடைய பஜன் எங்கு நடந்தாலும் சென்றோம். ஆண்டவனைத் தொழுவதில் நாமசங்கீர்த்தனத்துக்கு ஈடு இணைகிடையாது. ராமனையே தெய்வமாக வழிப்பட்ட திரு. தியாகராஜஸ்வாமிகளே கடைசியில் மங்களம் பாடும்போது ' "நீ நாம ரூபமுலகு நித்ய ஜெய மங்களம்" 'என்றுதான் முடித்தார் . அதிலும் திரு அருண் அவர்கள் அபங்கங்கள் பாடும்போது அனைவரையும் பக்தியின் எல்லைக்கே கூட்டிச்சென்று விடுகிறார்.இந்த சீசனில் எல்லோரும் ஒரு அபங்கமாவது பாடுகிறார்கள்.


யார் வேண்டுமானாலும் எந்த ஊருக்கும் வேண்டுமானாலும் போங்கள். ஆனால் தப்பித் தவறிகூட பணடர்பூர் போய்விடாதீர்கள்.அப்படியே போனாலும் சந்திராபாகா நதிக்கரையில் இருக்கின்ற விட்டோபா பாண்டுரங்கணை மாத்திரம் பார்த்துவிடாதீர்கள். இடுப்பில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறானே யார் தெரியுமா அவன். "படா சித்தச் சோர மனமோஹன்' அவன் தொழிலே மனங்களை கொள்ளையடிப்பதுதான். அவனை நீங்கள் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்
"மேரா சித்தசோர விரஜமோஹன்" உங்களுடைய மனத்தையும் அபஹரித்துவிடுவான். ஓ.ஸ் அருணின் இந்த அபங்கம் "விட்டல.... விட்டல...'மிக அருமையானது.பாண்டுரங்கனின் கோவிலில் 24 மணிநேரமும் விட்டல விட்டல என்று நாமசங்கீர்த்தனம்தான்.கேட்டுத்தான்,பார்த்துத்தான் ரசியுங்களேன்.





Tuesday, December 11, 2007

மஹாகவியின் பிறந்தநாள்.

.அவதாரம்:- 11/12/1882 மறைவு;- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் புதுவையில் பாரதியுடன் இருக்கும்போது, ""மகான்கள் தீர்க்காயுசா யில்லாமல் போய்விடுகிறார்கள்? பாரதியாரே, அதற்குக் காரணம் என்ன?"" என்று கேட்டேன்.""மகான்கள் பூலோகத்திற்குத் தேவ தூதர்கள். ஜனோபகாரார்த்தமாக அவர்கள் உதிக்கிறார்கள். பூலோகத்தில் அவர்கள் வந்த காரியம் ஆனதும் அவர்கள் இவ்வுலகத்தில் நிற்க மாட்டார்கள். மறைந்துவிடுவார்கள்"" என்றார். அவர் வாக்கையும் அனுபவத்தையும் கவனித்தால், அது சரியென்றே தோன்றுகிறது.ஏனென்றால், ஸ்ரீ விவேகானந்தர் நாற்பதாவது வயதில் காலமானார். அவருடைய சிஷ்யையும் வேத புத்திரியுமான சகோதரி நிவேதிதா தேவி, தமது நாற்பதாவது வயதில் காலமானார். நிவேதிதாவுக்குச் சிஷ்யரான பாரதியும் நாற்பதாவது வயதில் காலமானார். இவ்விதம் குரு பரம்பரை காலமான விஷயம் அதிசயமாக இருக்கிறது.புதுவையில் அவர் எங்கேனும் நடந்து செல்லும்போது, பாரதியாருடன் நானும் போக விரும்பி நடந்தால், அவருக்குச் சரியாக என்னால் நடக்க முடியாது. அவருக்கு வீதிகளில் மெதுவாக நடக்கத் தெரியாது; எனக்கு அவசரமாக நடக்க முடியாது. எனவே, என் ஓட்டம் அவர் நடைக்குச் சரியாக இருக்கும்.புதுவையில் அவர் எழுதிய "பாஞ்சாலி சபத"த்தின் முதல் பாகத்தை ஒரு ஜமீன்தாரிடம் படித்துக் காட்டினேன். அவர் அதிசயமாக கேட்டுக்கொண்டிருக்கையில், அவருடன் இருந்த அவரது காரியதரிசி, என்னை, ""இந்தப் புத்தகம் யார் எழுதியது?"" என்று கேட்டார். அதற்கு நான், ""பாரதியார் பாடியது"" என்று சொன்னேன்.அவர், ""பாரதி எந்த ஊர்?"" என்றார்.""அவர் எட்டையபுரம்"" என்றேன்.""இப்படிப்பட்ட பாடல் எழுதியவர் எட்டையபுரம் அல்ல"" என்று அவர் சொன்னார்.காரியதரிசி அப்படிச் சொன்னதற்கு, நான் ""இல்லை ஐயா, அவரே பல தடவைகளில் தாம் எட்டையபுரம் என்று சொல்லி யிருக்கிறாரே?"" என்றேன்.""கிடையாது; அவர் எட்டையரும் இல்லை. வேண்டுமானால் நீர் நேராகப் போய் இந்தத் தர்க்க சந்தர்ப்பத்தைச் சொல்லி, இன்னொருதரம் கேளும்; என்ன சொல்கிறார், பாரும். இருந்தாலும் நான் சொல்லுகிறேன், கேளும். இப்படிப்பட்ட பாட்டு எழுதியவரின் ஊர், பாஞ்சாலங் குறிச்சியாகத்தான் இருக்க வேண்டும். பாஞ்சாலங் குறிச்சி தவிர, மற்ற ஊர்களில் பிறந்தவர்களால் இப்படிப்பட்ட வீரப் பாட்டு எழுத முடியாது"" என்றார்.அந்தக் காரியதரிசியின் சொல்லில் கொஞ்சம் சந்தேகப்பட்டு நான் பாரதியாரிடம் சென்று, ""ஐயா, தாங்கள் எந்த ஊர்?"" என்று கேட்டேன்.""என்ன கிருஷ்ணா, அடிக்கடி எந்த ஊர் என்று கேட்கிறாய்? எட்டையபுரம், எட்டையபுரம் என்று எத்தனை தடவை சொல்லுவது!"" என்றார். அதன் பேரில் நான் மேற்படி ஜமீன்தார் வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னேன். பிறகு புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே, ""அந்த ஓரந்தான்"" என்றார் பாரதியார். எட்டையபுரம் ஓரந்தானாம் பாஞ்சாலங்குறிச்சி.ஒரு நாள் பாரதியாரை, ""ஐயா, இந்த ஊரில் நல்ல மடு ஒன்று கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. தாங்கள் தினம் அங்கு ஸ்நானத்திற்கு வர முடியுமா?"" என்று கேட்டேன்.""எங்கே? எங்கே?"" என்று அவர் பரபரப்புடன் கேட்டார்.""நமது வீட்டிற்கு மேற்கே சுமார் இரண்டு மைல் தூரத்தில், அந்த மடுவிற்கு விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் சென்றால்தான், நிம்மதியாகக் கும்பலில்லாமல் ஸ்நானம் செய்யலாம்"" என்றேன்.""விடியற்காலம் நீ எப்பொழுது வந்து எழுப்பினாலும், உன்னுடன் வருகிறேன். தப்பாமல் விடியற்காலையில் வீட்டில் வந்து என்னை எழுப்பு"" என்றார் பாரதி.அவர் சொன்னபடி மறுநாட் காலையில் நாலு மணிக்கு அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன்.""யார்?"" என்றார் பாரதியார். ""ஏன்?"" என்றேன். உடனே சந்தோஷமாக எழுந்து வந்து கதவைத் திறந்து என் கூடவே மடுவுக்குக் கிளம்பினார். போகும் மார்க்கத்தில், இவர் வீட்டிற்கும் மடுவிற்கும் இடையில் ரஸ்தாவிற்கு இரு புறத்திலும் நஞ்சை வயல்களும் தென்னந் தோப்புகளும் இருந்தன. இவற்றின் செழுமையையும், பிரகிருதீய அழகு ஆனந்தங்களையும் ---பிறப்பிலேயே வரகவியாதலால் எனக்குத் தெரியாமலேயே தாம் கவனித்து கவனித்து, குயில் பாட்டுக்கு அடிப்படை தேடிக்கொண்டார்.அன்று அவரும் நானும் ஒரு மடுவில் ஸ்நானம் செய்தோம். இவ்வாறு இரண்டு நாள் ஆயிற்று. மூன்றாம் நாள், நான் அவர் வீட்டிற்குப் போகாமையால் அவர் என் வீட்டிற்கு விடியற்காலையில் நடந்துவந்து கதவைத் தட்டி எழுப்பினார். உடனே நான் விழித்து, குரலிலிருந்து பாரதி என்று தெரிந்து, என் தாயாரிடம் அம்மா, ""இவர்தானம்மா பாரதி"" என்றேன்.என் தாயார் உடனே கதவைத் திறந்து, பாரதியை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னாள். பிறகு, ""பையா! பாரதி, பாரதி என்றாயே, அவரைச் சுப்பிரபாதம் சொல்லச் சொல்லு, பார்ப்போம்"" என்றாள்.அதற்குப் பாரதியார், ""சுப்பிரபாதம் என்றால் என்ன?"" என்று கேட்டார்.உடனே என் தாயார், ""சுப்பிரபாதம் என்றால் என்ன என்கிறாரே! இவ்வளவுதானா உன் பாரதி!"" என்றாள்.இதனிடையே நேரமாகவே, நாங்களிருவரும் மடுவுக்குப் புறப்பட்டோம். பாரதியாருக்கு மனதில் நிம்மதியில்லாமல் "சுப்பிரபாதத்திற்கு" என்னை அர்த்தம் கேட்டார்.""சமஸ்கிருத சுப்பிரபாதம், தமிழில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி"" என்றேன். திருப்பள்ளியெழுச்சியில் ஒரு பாட்டுச் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன். அதைக் கேட்டு, அதே மாதிரியாகப் "பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி"யை எழுதி, என் தாயாரிடம், அந்தப் பாடல்களை நேராக முதல் முதலில் பாடிக் காட்டினார்.பாதியார் வீட்டில் நான் நாலாயிரப் பிரபந்தம் பாராயணம் செய்வதுண்டு. அவர் மெ?5;மாக ஆழ்ந்த கவனத்துடன் பத்திரிகைகளுக்கு வியாசங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சமயம், என்னை மெ?5;மாகப் பாராயணம் செய்து கொள்ளும்படியாகச் சொன்னார்.அதற்கு நான், ""ஐயா, எழுதும் காரியம் தங்களுடையது. படிக்கும் காரியம் என்னுடையது. அவாளவாள் காரியத்தை அவாளவாள் ஏககாலத்தில் கவனத்துடன் செய்துவந்தால், யாருக்கு என்ன நஷ்டம்?"" என்றேன்.அதற்கு அவர், ""நீ சத்தம் போட்டுப் படிப்பதால், நான் எழுதும் காரியத்துக்குத் தடையாக இருக்கிறது"" என்றார்.அதற்கு நான், ""ஐயா, நீங்கள் மற்ற மனிதர்கள் மாதிரி சாதாரண மனிதராக என் புத்தியில் படவில்லை. ஆகையால்தான், தாங்கள் எழுதும் போது நானும் கூசாமல் பாராயணம் செய்து வருகிறேன். ஏககாலத்தில் ஒரு காரியத்திற்கு மேல் காரியங்கள் செய்யவல்ல சக்தி தங்களிடம் இருப்பதாக எண்ணி நான் படித்து வருகிறேன்"" என்றேன்.உடனே அவர், ""நான் உன் வழிக்கு வருவதில்லை. நீ எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்"" என்றார்.ஒரு நாள் பாரதியார், ""கிருஷ்ணா, இந்த நாலாயிரம் எத்தனை ஆழ்வார்கள் சேர்ந்து பாடியது?"" என்று கேட்டார்.""பத்து ஆழ்வார்களின் பாடல்களெல்லாம் சேர்ந்து ஒரு நாலாயிரப் பிரபந்தம்"" என்றேன்.""பத்து ஆழ்வார்கள் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களே! நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன், பார்!"" என்றார்.""உங்கள் ஒருத்தரால் ஆறாயிரம் பாட முடியாது. ஏனெனில், கலி முற்ற முற்ற மனிதனுக்கு ஆயுசு குறைவு. கலி முற்றிய காலத்துச் சிறிய மனிதர்கள் நாம். ஆகையினால் முடியாது"" என்று நான் சொன்னேன்.""நல்லது பார்"" என்ற அவர், பாரதி ஆறாயிரம் என்று ஒரு நூல் எழுத ஆரம்பித்தார். இதனிடையில் குடும்பக் கவலை, சள்ளை, வறுமை, வியாதி, முடிவில் மரணம். ஆறாயிரம் பாடல்கள் பூர்த்தியாகவில்லை. அறுபத்தாறுதான் பாடி முடிந்தன. அவர் காலத்திற்குப் பின் இதை அச்சிட்டவர்கள் பாடல்களைக் கணக்கிட்டு இந்த நூலுக்கு "பாரதி அறுபத்தாறு" என்று பெயரிட்டு அச்சிட்டார்கள் போலும்.""ஐயா, பாரதியாரே! உங்கள் கொள்கைகள், கருத்துக்கள் எல்லாம் எனக்குத் திருப்திகரமாக இருக்கின்றன. தாங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்வதும், நான் சொல்வதைத் தாங்கள் ஒப்புக்கொள்வதும் நமக்குள் இயல்பாக இருக்கிறது. ஜனங்களில் பலர் நாம் தப்பிதமான கொள்கைகளை வைத்திருப்பதாகச் சொல்லுகிறார்களே. அதற்கென்ன சொல்லுகிறீர்கள்?"" என்று நான் ஒரு சமயம் கேட்டேன்.""நாம் இப்போது சொல்லுபவற்றையெல்லாம் நானூறு வருஷங்கள் கழித்து உலகம் ஒப்புக்கொள்ளும். நாம் இன்னும் நானூறு வருஷங்களுக்குப் பின்னாலே தோன்றவேண்டியவர் முன்னாலேயே தோன்றிவிட்டோம். அதற்கென்ன செய்வது?"" என்று பதிலளித்தார் பாரதியார். அவர் இவ்வாறு சொல்லி 25 வருஷந்தான் ஆகிறது!(பாரதியாரின் ஆப்த நண்பர் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், "ஹிந்துஸ்தான்" வாரப்பதிப்பின் 1938ஆம் ஆண்டு பாரதி மலரில் எழுதிய சில குறிப்புகள்.)




Friday, December 07, 2007

டிஸெம்பர் பூக்கள் போட்டிக்கு

பூ என்று பார்த்தால் பஞ்சவர்ணகிளி தெரியாது
பஞ்சவர்ணகிளி கிளி என்று பார்த்தால் பூ தெரியாது