கௌசிகம் <>

கௌசிகம்

Friday, July 17, 2009

பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள்

திருமதி பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள் மாரடைப்பால் நேற்று மறைந்து விட்டார்.அவரைப் பற்றி நான் கடைசியாக எழுதிய பதிவையே அவருக்கு காணிக்கையாக்குகிறேன். சாந்தி நிலவவேண்டும் என்று பாடி நமக்கெல்லாம் சாந்தி அளித்த அவர்தம் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைம்.அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
வேலூர் செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். தாமல் என்று பெயர். அழகான சிவன் கோவில் டிரங் சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும்.இந்த ஊரில்தான் 28-03 1919ல் திருமதி D. K பட்டம்மாள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.பெண்கள் வெளியே சென்று வாரத அந்தக் காலத்திலேயே 5 வயது தம்பி D K ஜெயராமன் துணையோடு காஞ்சிபுரம் சென்று சங்கீதம் கற்று வந்தார்.பின்னர் காஞ்சிக்கே குடிபெயர்ந்து பிரபல வித்வான் காஞ்சிபுரம் நைனா பிள்ளையிடம் சங்கீதம் கற்றுக் கொண்டு பிரபலமானார். சங்கீத உலகத்தின் முடிசூடா விதுஷிகள் எம் எஸ் சுப்பலக்ஷ்மி, எம் எல் வஸந்தகுமாரி,டி.கே பட்டம்மாள் என்று பெயர் பெற்றார்.



பாரதியின் பாட்டுக்களை பாடுவதற்கு பயந்த அந்த பிரிட்டிஷ் காலத்திலேயே துணிந்து பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் பாடி பிரபலப் படுத்தினார். நல்ல கணீரென்ற குரல், அக்ஷர சுத்தம், சிதைவு படாத கீர்த்தனைகள் ராகபாவம் இதெல்லாம்தான் இவருக்கு சொத்து.அதுவும் தீக்ஷதர்கீர்த்தனைகளை அவரை மாதிரி பாட மற்றுமொருவர் பிறக்கத்தான்வேண்டும். அதே மாதிரி பெண்களூக்கு மிருதங்கம் வாசிப்பதில்லை என்ற வைராக்கியத்தை விட்டு விட்டு பாலக்காடு மணி ஐய்யர் இவருக்கு வாசித்த பெருமையினாலேயே இவரது சங்கீதம் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.



அதனால்தான் இவரை பட்டம்மாள் என்று சொல்லுவதைவிட பாட்டம்மாள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம். பட்டங்களுக்குத்தான் பட்டம்மாளால் பெருமை.



இன்று அவருக்கு வயது 90. அவருக்கும் அவரது கணவர் திரு. ஈஸ்வர்னுக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருளுமாறு கஞ்சி காமாக்ஷி சமேத ஏகாம்பிரேஸ்வரரை வேண்டிக்கொள்ளும் என்னுடன் நீங்களும் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.

Saturday, March 28, 2009

பாட்டம்மாள்

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். தாமல் என்று பெயர். அழகான சிவன் கோவில் டிரங் சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும்.இந்த ஊரில்தான் 28-03 1919ல் திருமதி D. K பட்டம்மாள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.பெண்கள் வெளியே சென்று வாரத அந்தக் காலத்திலேயே 5 வயது தம்பி D K ஜெயராமன் துணையோடு காஞ்சிபுரம் சென்று சங்கீதம் கற்று வந்தார்.பின்னர் காஞ்சிக்கே குடிபெயர்ந்து பிரபல வித்வான் காஞ்சிபுரம் நைனா பிள்ளையிடம் சங்கீதம் கற்றுக் கொண்டு பிரபலமானார். சங்கீத உலகத்தின் முடிசூடா விதுஷிகள் எம் எஸ் சுப்பலக்ஷ்மி, எம் எல் வஸந்தகுமாரி,டி.கே பட்டம்மாள் என்று பெயர் பெற்றார்.


பாரதியின் பாட்டுக்களை பாடுவதற்கு பயந்த அந்த பிரிட்டிஷ் காலத்திலேயே துணிந்து பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் பாடி பிரபலப் படுத்தினார். நல்ல கணீரென்ற குரல், அக்ஷர சுத்தம், சிதைவு படாத கீர்த்தனைகள் ராகபாவம் இதெல்லாம்தான் இவருக்கு சொத்து.அதுவும் தீக்ஷதர்கீர்த்தனைகளை அவரை மாதிரி பாட மற்றுமொருவர் பிறக்கத்தான்வேண்டும். அதே மாதிரி பெண்களூக்கு மிருதங்கம் வாசிப்பதில்லை என்ற வைராக்கியத்தை விட்டு விட்டு பாலக்காடு மணி ஐய்யர் இவருக்கு வாசித்த பெருமையினாலேயே இவரது சங்கீதம் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் இவரை பட்டம்மாள் என்று சொல்லுவதைவிட பாட்டம்மாள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம். பட்டங்களுக்குத்தான் பட்டம்மாளால் பெருமை.

இன்று அவருக்கு வயது 90. அவருக்கும் அவரது கணவர் திரு. ஈஸ்வர்னுக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருளுமாறு கஞ்சி காமாக்ஷி சமேத ஏகாம்பிரேஸ்வரரை வேண்டிக்கொள்ளும் என்னுடன் நீங்களும் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.


அவரைப் பற்றிய குறும் படம் . அதற்கு பின்னால் அவருடைய பேத்தி திருமதி. நித்ய ஸ்ரீ அவரை நேர்க்காணல் கண்டு அதில் அவரைப் பற்றிய அரிய செய்திகளையும் பொதிகை டி வி நிகழ்ச்சியின் படத்தையும் பார்க்கலாம்.




-





-




திரு. பாபநாசம் சிவனின் முத்தான ஒரு பாடல்.வசந்தா ராகத்தில் அமைந்தது . வசந்தாவின் ஜீவா-ஸ்வரமான மா தா என்ற ஸ்வரங்களை வைத்து விளையாடி இருக்கிறார் . இதற்குத்தான் ஸ்வராக்ஷரம் என்று பெயர். -ஸ்வரங்களே வார்த்தைகளாக வரும்.

ராகம்;- வஸந்தா தாளம்:- ஆதி 2 களை

பல்லவி

மாதயயை நிதி எனும் நீ தயையை புரிந்தருள் மாதவன் மருகனேமுருகனே குகனே மலைமகள் மகனே........(மாதயயை நிதியெனும்)

அனுபல்லவி

போதயன் பணிமலர்ப்பாதனே மறைமுகன் புகலரும் ப்ரணவ மகிமை மெய்ப்பொருளை புகழ் தாதை காதில் ஓதும் குருநாத...(மாதயயை நிதியெனும்)

சரணம்

கந்தனே கலியுகந்தனில் இருகண்கண்ட

தெய்வமென எண்டிசை புகழும்செந்திலாதிப

சிறந்த வேலணியும்சேவலா

அமரர் காவலா ஷண்முகா...(மாதயை நிதியெனும்

எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபநாசம் சிவனின் வஸந்தா ராகத்தில் அமைந்த மாதயயை நிதி எனும் நீ தயயை புரிந்தருள் என்னும் முருகன் மீது அமைந்த மிக அற்புதமான பாட்டை அவர் குரலில் இங்கே கேளுங்கள்">

Labels:

Monday, February 23, 2009

சம்போ மஹாதேவன்சங்கர கிரிஜா ரமணன்




இன்று சிவராத்ரி.சிவனைப் பற்றி சிந்திக்கவும் அவன் புகழைபாடுவதும் அல்லது பாட்டைக் கேட்பதும் விசேஷம்.ஒரே ஒரு வில்வ இலையை ஆத்மசுத்தியோடு அர்ப்பணித்தால் போதும் ஹரண் மகிழ்ந்து விடுவான்.வேடன் கண்ணப்பனுக்கு அவனளித்த உமிழ்நீரையும்,இறைச்சியையும், அவன் காலால் செருப்படியும் பெற்றுக்கொண்டு அவனுக்கு முக்தி அளித்தநாள்.ராமானையே சிறப்பித்து வாழ்நாள் முழுவதும் பாடிய திரு.தியகராஜஸ்வாமிகள் சிவன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார். தருமமிகு சென்னக்கும் அவர் வந்திருந்தார்.சென்னை பிராட்வே அருகில் ஐகோர்ட்டுக்கு எதிரில் உள்ள பந்தர் தெருவில் உள்ள(இப்பொழுதும் உள்ளது)சத்திரத்தில் தங்கி இருந்தார்.அங்கிருந்து திருவெற்றியூர் போய் திருபுரசுந்தரியாகிய வடிவுடைய அம்மனின் மீது ஐந்து பாடல்கள் பாடியுள்ளார்.அதே மாதிரி குன்றத்தூருக்கு அருகில் உள்ள போரூரில் உள்ள சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரேஸ்வரனின்மீது ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் பந்துவராளி ராகத்தில் அமைந்த"" சம்போ மஹாதேவ சங்கர கிரிஜா "" என்ற பாடல்.
ராகம்:-பந்துவராளி. தாளம்:சாபு

பல்லவி

சம்போ மஹாதேவ சங்கர கிரிஜாரமண...(சம்போ)

அனுபல்லவி

சம்போ மஹாதேவ சரணகத ஜனரக்ஷக
அம்போ ருஹலோசன பாதம்புஜ பக்திம்....(சம்போ)

சரணம்

பரமதயாகர ம்ருகதர தரகங்கா தரதணீ
தரபூஷண த்யாகராஜ வரஹ்ருதய நிவேச

ஸுரபிருந்த கிரீடமணி வர நீராஜிதபத கோ
புரவாஸ் ஸுந்தரேச கிரீச பராத்பர பவஹர ...(சம்போ)

சம்போ மஹாதேவா! சங்கரா! மலைமகளான பார்வதியின் அழகியமணவாளா!
கமலக்கண்ணனே, உன்னைச் சரணமடைந்தவர்களை காப்பவனே எனக்கு உன் திருவடியைதொழும் பக்தியைத் தா.

நீ பக்தர்களிடம் மட்டுமல்லாது மிருகங்களிடம் கூடதயவுடையவன்.அதனால்தான் பாம்பை தலையின் மீது ஆபரணமாக அணிந்திருக்கிறாய்.சந்திரனையும் கங்கயையும் முடி மீது வைத்து ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கிறாய்.அது மட்டுமல்ல இந்த எளிய தியகராஜனின் தூய உள்ளத்திலும் நிறைந்து உறைகின்றாய்.

தேவர்களின் மணிமுடிகளில் உள்ள ரத்தினம், வைரம்,போன்ற நவரத்தினங்கள் தங்களது பாதராவிந்தங்களை சேவிப்பதால் எழும் ஒளியே தங்களுக்கு தீபராதனையாகும்,கோவூரில் கோவில் கொண்டவன்,ஸுந்தரேசனென்ற பெயருடன் விளங்குபவன்,ஆதியுமந்தமும் இல்லாத பராத்பரன்,மாயப்பிறப்பறுக்கும் மஹாதேவன்.சம்போ மஹாதேவா

பாடலை மும்பை ஜெயஸ்ரீ குரலில் இங்கே கேளுங்கள் ">

Labels:

Sunday, February 08, 2009

கடல் கடந்த தியாகராஜர்

நங்க நல்லூர் சங்கீத சமாஜம் காரியதரிசி திரு. ராமனாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "சார் இந்ததடவை பிப்ரவரி 8ஆம் தேதியன்று தியகராஜ ஆரதனை வந்து நடத்திக் கொடுங்கள். மதியாணம் சாப்பாடும் உண்டு"என்றார். நான் உடனே "சார் இந்த தடவை வர முடியாது.அந்தத் தேதியில் நானும் தங்கமணியும் சிங்கபூர் மகன் வீட்டுக்கு செல்கிறோம். என்றேன். மனதுக்குள் தாங்க முடியாத வருத்தம் பஞ்ச ரத்ன கீர்தனையை கேட்கமுடியவில்லை என்றா இல்லை இல்லை நல்ல பஞ்ச பட்ச சாப்பாடு போச்சேன்னுதான்.


ஒரு நாள் சிஙகபூரில் என் புரோக்கிராம் மேனேஜெர் என் மகன் "'அப்பா 8 ஆம் தேதி பிப்ரவரி டோபிகாட் அருகில் உள்ள மியுசியம் கண்ணாடி அரங்கில் தியகராஜ உத்ஸ்வம் போகலாமா'' என்றான்.தண்ணீரில் இருந்து வெளியே தவித்துக் கொண்டு இருக்கும் மீன் போல சங்கீதம் இல்லாமல் பாலைவனத்தில் தவித்துக் கொண்டு இருக்கும் எனக்கு ஒரு பாட்டில் குளிர்ந்த மினரல் தண்ணீர் வேண்டுமா என்பது போல் இருந்தது. உடனே சரி யென்று சொல்லிவிட்டேன்.
8 ஆம் தேதி காலை 7 மணிக்கே(நம்ம ஊர் மணி 4.30) குளித்து ஜிப்பா போட்டுக் கொண்டு ரெடியாகி விட்டேன்.ரயில் வண்டி பிடித்து மியுசியம் அரங்கத்துக்குச் சென்றோம். டோபி காட்டில் இறங்கி பொடி நடையாகவே சென்றோம். வழியெல்லாம் தமிழர் கூட்டம்தான். அன்று தைப் பூசம் திருநாள். தமிழர்கள் சாரிசாரியாக டோபிகாட்டில் உள்ள முருகன் கோவிலுக்கு போய்க் கொண்டு இருந்தார்கள். பால் குடம் எடுத்துக் கொண்டு பல பேர்கள். அலகு குத்திக் கொண்டு காவடி எடுத்துக் கொண்டு பல பேர்கள், வெறு காவடி எடுத்துக் கொண்டு பல பேர்கள் இப்படி மக்கள் கூட்டம்தான் அன்று சிங்கையில். இதே மாதிரி எல்லா முருகன் கோவில்களிலும் அன்று கூட்டம்தான்.13 ஆவது ஆழ்வரின் சந்தேகமான யார் தமிழ்க் கடவுள் என்ற கேள்விக்கு விடையை அங்கே பார்க்கலாம்.
எப்படியோ இடத்தைக் கண்டுபிடித்து ஆரம்பித்து இருப்பார்களோ என்ற பயத்தில் போனால் நல்ல வேலை அப்பொழுதுதான் சுருதி கூட்டிக்கொண்டு இருந்தார்கள்.உள்ளே போனால் சிறியவர்களும் பெரியவர்களுமாய் 100 பேர்கள் குழுமியிருந்தார்கள்.சிறுவர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்ததைப் பார்த்ததில் மனதிற்கு நிறைவாக இருந்தது.கொஞ்ச நேரம் வயலின் மற்றும் வீணைக் கச்சேரிகள் நடந்தது.சரியாக 10 30 மணிக்கு மேடையில் 6 பெரியவர்கள் மற்றும் சிறியவர்களும் அமர்ந்து முதலாக ஸ்ரீ கணபதி என்ற சௌராஷ்ட்ர ராகத்தில் அமைந்த தியகராஜரின் கீர்த்தனையை பாட ஆரம்பித்த உடனே களை கட்டி விட்டது. அதன் பின்னர் ஜகதாநந்த தாரகா என்ற நாட்டை ராகத்தில் ஆரம்பித்து கடைசியில் ஸ்ரீ ராகத்தில் கடைசி கீர்த்தனையான எந்தரோ மஹானு பாவலு என்று முடிக்கும் போது மணி 11.30 ஆகிவிடது.நானும் என் மகனும் கையில் புத்தகம் எடுத்துச் சென்றதால் கூடவே பாட முடிந்தது.பாடிக் கொண்டு இருக்கும் ஒரு பெண்மணியின் கையில் ஒரு புத்தகம் இருந்தது. சற்று துல்லியமாகப் பார்த்தால் என்ன ஆச்சர்யம் அது நாங்கள் எங்கள் நங்க நல்லூர் சமஜத்தில் பாடுபவர்கள் எல்லோருக்கும் அளிக்கும் பஞ்சரத்ன கீர்த்தனை ஸ்வரத்துடன் கூடிய புத்தகம்தான் அது.மனதில் நினைத்துக் கொண்டேன் இங்கு முடிவடையும் இந்த 11.30 மணிக்கு அங்கே சரியாக 9 மணிக்கு ஆரதனை ஆர்ம்பிக்கும் என்று. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் அங்கில்லாதது இங்கு. பாட்டு ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லோரும் அமைதி காத்து ஆராதனையை முழுமைபெறச் செய்தனர். நம்மவர்கள் இதை கற்றுக் கொள்ளவேண்டும். அத்தனை ஒழுக்க உணர்வு.நடுவில் எழுந்து போவது வம்பு,கத்தல் அதெல்லாம் மூச் கிடையாது.

ஆரதனை முடிந்து விட்டது வீட்டுக்கு போகலாமா? என்றான் என்மகன். நானும் சரியென்று அரை மனதுடன் கிளம்புவதற்காக வெளியே வந்தோம். என்ன அரைமனது என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை இதே நங்க நல்லூராக இருந்தால் நல்ல சாப்பாடு இருந்திருக்கும். வெளியே வந்ததும் 'சார் பிரசாதம் வாங்கிக்கொள்ளுங்கள்"என்று ஒரு குரல் ஆறாவது கீர்தனையாக இனிமையாக ஒலித்தது.சரி எதோ சுண்டலோ லட்டோ தரப் போகிறார்கள் என்று பார்த்தால் என்ன ஆச்சர்யம் ! நல்ல தெர்மகோல் பாக்ஸில் பேக் செய்யப்பட்டு அதனுள்ளே புளியஞ்சாதம், ரவகேசரி, கொத்துக் கடலை சுண்டல், தயிர்சாதம், சோயா மில்க் ஒரு ஆரஞ்சு பழம் எல்லாம் கொடுத்தார்கள்.இப்படி காதுக்கும் வயிற்றுக்கும் உணவளித்த சிங்கை வாழ் தியாகராஜ பக்தர்கள், சங்கீத ரசிகர்கள்வாழ்க என்று வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம். தியாகராஜர் ஒருவேளை உண்ண உணவுக்கு கஷ்டப் பட்டார் என்று படித்திருக்கிறேன் ஆனால் அவர் பெயரால் இன்று லட்சோப லட்சம் பேர் உலகெங்கும் உணவு அருந்தும்படியாக அவரது நாமமும் கீர்த்தனைகளும் சிறப்பான பணியை செய்து கொண்டு இருக்கின்றன."'எந்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு"'






Labels:

Wednesday, January 14, 2009

எண்ணத்தால் எழில் மிகும் வண்ணக் கோலங்கள்






மக்கள் மறந்ததால் மறைந்துவரும் கலை இது. பல குழந்தைகளுக்கு ஏன் சில பெரியவர்களுக்குக் கூட கோலங்கள் என்றால் டக்கென்று ஞாபகத்துக்கு வருவது இரவு சன் டீ.வியில் வரும் கோலங்கள் சீறீயல்தான்.ஆனால் இது அது அல்ல. கோலக்கலையைப் பற்றியது.மார்கழி மாதம் வந்துவிட்டாலே மகளிர் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காலையிலேயே எழுந்து அவரவர் வீட்டின் முன்பு அழகிய கலர்ப் பொடிகளுடன் கோலப் போட்டியில் அசத்திவிடுவார்கள். இதில் சில சமயம் ஆண்களும் கலந்து கொள்வார்கள். கோலம்போடுவதற்கு கலர்ப் பொடிகளைவிட பொறுமை,கல்பனாசக்தி,கணக்கில் திறமை,சுறுசுறுப்புபோன்றவைகள் மிக அத்தியாவசியமானது. இது பெரும்பாலும் பெண்களிடம்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அதனால்தான் இந்தக்கலையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.இபொழுது இந்தக்கலை மறைந்துவரும் நிலையில் உள்ளது.அடுக்குமாடி கட்டிடங்கள் மிகுந்துவரும் இந்நாட்களில் கோலம் போடும் பெண்களும் இடமும் தட்டுப்பாடாகிவிட்டன.இந்தக்கலை அழிந்துவிடாமல் ஆதரிக்கவேண்டியது இன்றைய சமூகத்தினரின் கடமை. பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தக்கலையை நன்கு கற்பித்து போஷித்தால் பிற்காலத்தில் சிட்னி,ஹுஸ்டன்,டொரான்டோ போன்ற இடங்களிலாவது நம் மக்கள் கோலம் போடுவார்கள்.


Labels:

Saturday, December 27, 2008

ஸ்ரீ ஹனுமனை துதி மனமே தினமே




ஸ்ரீ ராம ஜெயம்



மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)



ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)
ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான்.. மாதவம்)
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)
நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்

இன்று ஹனுமத் ஜயந்தி
வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு கூடவெ இருப்பினும்,விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.
மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி, கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,இணயில்லாத பலம் மிக்கவரும்,அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகபேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.வெறும் புஜ வலிமை போதாது.
மனித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான். தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.
ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவெ கீ நாயீ
-ஹனுமனின் மீது ஒரு பாடல் கிளிக் செய்யுங்கள் W/

Labels:

Tuesday, December 23, 2008

காஞ்சி மாமுனியின் கருணை



மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரோடு இருந்த நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்க முடியவில்லை. வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம்.பேசமாட்டார்கள். வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று. மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். ""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது . நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு
முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""
.
இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்

Labels:

Thursday, November 27, 2008

தங்கள் இன்னுயுர் ஈந்தும் தாய் நாட்டினைக் காப்பர்

மக்களாய்ப் பிறந்தோர் மடிவது
திண்ணம்தாய்த் திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை
அழித்திடும் முயற்சியில்மும்பையில் தீவிரவாதிகளுக்கு எதிராக தன்னுயிர் ஈந்த
பாரத தேவியின் புதல்வர்களுக்கு வீர வணக்கம்
அவர்தம் ஆன்மா சாந்தியடைய மோக்ஷதீபம் ஏற்றுவோம்

Labels:

Saturday, October 18, 2008

.கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் . அவருடைய கிருதிகளை பாடம் செய்வது பாடுவதும் மிகக் கடினம். ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதியான இது மிகவும் விசேஷம் வாய்ந்தது.நம்மவர்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் இந்த அயல்நாட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர்.எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷ்ணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண்.என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, ..அக்ஷரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டு விட்டு என்னுடன் அனுசரித்துப் போவீர்கள் இது சிறந்தது என்பதில்.

ராகம்: ஸ்ரீ தாளம்: கண்ட
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹிமாம் லலிதே

ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே
சரணம்:
ராகா சந்த்ரமுகீ ரக்ஷித கோலமுகீ
ரமா வாணி ஸகி ராஜயோக ஸுகீ
ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி
ஸங்கரி ஸங்கர குருகுஹ பக்தவஸங்கரி
ஏகாக்ஷரி புவனேஸ்வரி ஈஸப்ரியகரி s
ஸ்ரீ -சுககரி ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி!!
தமிழாக்கம்
திருவாரூர் எனும் கமலாலயத்தில் வாழும் கமலாம்பிகையே. லக்ஷ்மியின் கணவனான விஷ்ணுவினால் வணங்கப்படுபவளே. வெண்மை, கருமை ஆகிய இரண்டு நிறங்களுக்கு உரிய கௌரி துர்கையாய் காட்சித் தருபவளே. சிவபிரானோடு இரண்டறக் கலந்தவளே. லலிதா தேவியே.ஸ்ரீ கமலாம்பிகையே. மங்களங்களை அருள்பவளே. என்னைக் காப்பற்றுவாயாக.

பௌர்ணமி நிலவைப் போன்ற முகத்தை உடையவளே. வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே. லக்ஷிமியும் ஸரஸ்வதியும் உனக்கு தோழியிராக விளங்கும் பெருமை பெற்றவளே. ராஜ யோகம் எனும் உன்னத சுகத்தில் ஆழ்ந்து திளைப்பவளே. சாகம்பரீ என அழைக்கப்படும் வன துர்கைஅன்னையே. மெல்லிய இடையைக் கொண்டவளே. சந்திரனுடைய இளம் பிறையை ஆபரணமாகத் தரித்தவளே. சங்கரன், குழந்தை முருகன், மற்றும் உனது அடியார்களுக்கு வசப்படுபவளே. ஹ்ரீம் என்னும் ஓரெழுத்தில் உறைபவளே. உலகத்தின் ஒரே ஒப்பற்ற தலைவியே. கையிலைநாதனுக்கு பிரியமானவளே. சகல ஐஸ்வர்யங்களையும் மட்டில்லா சுகத்தையும் அருளும்படி செய்பவளே. ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே ஸ்ரீ கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று தாயே.



-

இதே பாடலை திரு டி கே ஜெயராமனின் சிஷ்யர்பாலாஜியின் கணீரென்ற குரலில் நன்றாகப் பாடியுள்ளார் . ஏன் என்று தெரியவில்லை இந்த இளம் கலைஞர் இளம் வயதில் நல்ல புகழ் உச்சியில் இருக்கும்போதே பாடுவதை நிறுத்திவிட்டார்.சங்கீத அரசியல்தான் காரணமோ?

திரு பாலாஜி சங்கர் அவர்கள் குரலில் இங்கே கேளுங்கள்">

Labels:

Wednesday, October 15, 2008

கல்யாணமே வைபோகமே

. அன்பர்களே நண்பர்களே இந்த மாதம் 31 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் எனது மகளின் திருமணம் ஆண்டவனின் அருளோடு நடக்க இருக்கிறது . இடம்: ஸ்ரீ மத ஸ்ரீ ரங்கம் ஆண்டவன் -ஸ்வாமிகள் ஆ-சரமம் -சர் தேசிகாச்சாரி ரோடு ஆழ்வார்பேட் மயிலை . முழு விவரமும் அன்பர்களுக்கு இ மெயில் முலமாக அனுப்பியுள்ளேன் . சென்னையில் உள்ளவர்கள் நேரில் வந்து அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். 30 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் 9. 00 மணிவரை நடக்க இருக்கும் வரவேற்பிற்கும் வருமாறு கேட்டுக்கொள்கிறேன் விவரம் வேண்டுவோர் மெயில் அனுப்புங்கள் அனுப்பிவைக்கிறேன்
அன்பன்
திராச


 
subscribe form -->