Tuesday, December 15, 2009

சனி வழி தனி வழி 2

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

மஹான் முத்துஸுவாமி தீக்ஷதரின் சிஷ்யர்களின் ஒருவரான தஞசை பொன்னைய்யாபிள்ளைக்கு ஒரு சமயம் கடும் வயிற்றுவலி வந்து துன்பப்பட்டார். அவரது துன்பத்தைப் பார்த்து தாளமுடியாமல் அதற்கு காரணம் என்ன என்பதை தீக்ஷதர் அறியமுற்பட்டபோது அது நவகிரகங்களின் கோசாரத்தினால் அவரது ராசிக்கு ஏற்பட்ட துன்பம் என்பதையும் அறிந்துகொண்டார்.அதுவரை அம்பாளையும் மற்ற தெய்வங்களையும் மட்டுமே பாடி வந்த தீக்ஷதர் பரிகாரதேவதைகள் ஆகிய நவகிரங்களயும் துதித்து சிஷயனின் மேல் ஏற்பட்ட கருணையினால் ஒன்பது கிரகதேவதைகளின் மீது கீர்தனைகளை இயற்றினார்.மதுரைமணிஐய்யர் அவர்கள் தன் ஒவ்வொரு கச்சேரியிலும் தவறாமல் அந்த அந்த நாட்களுக்குகுரிய நவகிரகக் கீர்தனையைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திவாகரதனுஜம் சனைஸ்வரம் என்று சனீஸ்வர பகவான் மீது யதுகுல காம்போதி ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பாடுவார்.

சத்யாவின் கீபோர்ட் இசையில் முதலில் பாட்டைக்கேளுங்கள். அர்த்தத்துடன் பாடலை விரிவாகப் பிறகு பார்த்து கேட்டு ரசிக்கலாம்.சரி யார் இந்த சனி பகவான்.சனி சூரியபகவானுக்கும் சாயதேவிக்கும் பிறந்தவர்.சூரியன் மனைவியான சம்ஞா கணவனின் உக்கிரத்தைப் பொறுக்க மாட்டாமல், நிழலான சாயா என்பவளைப் படைத்து, அவளை தன் கணவனிடம் விட்டுத் தான் தந்தை வீடு சென்று விட்டாள். இந்த சாயாதேவியிடம் சூரியனுக்கு சனி பகவான் பிறந்தார். சம்ஞாவின் புத்திரனான யமன் சனியை உதைக்க, அவன் கால் ஊனமாகியது. மெது வாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் "சனைச்சரன்' (மெதுவாகச் சஞ் சரிப்பவன்) என்ற பெயர் ஏற்பட்டது.
கோணஸ்தன்,பிங்கலன்,பப்ரு,கிருஷ்ணன்,ரௌத்ரன்,

அந்தகன்,யமன்,சௌரி,சனைஸ்வரன்,மந்தன்,பிப்பலன் என்னும் பெயர்களை உடையவன். யமதர்மராஜனுக்கு சகோதரன்.சத்யம் நேர்மை இவற்றிற்கு உறைவிடம். யாருக்கும் பயப்படாமல் தன் கடமையைச் செய்வார். மெதுவாக விந்தி விந்தி காலை சாய்த்து நடப்பவர் என்பதால் சனீ என்றும் சிவனிடம் சண்டைபோட்டு ஈஸ்வரபட்டம் வாங்கியதால் சனீஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.

இவர் நவகிரக பீடத்தில் சூரியனுக்குத் தென்மேற்குத் திக்கிலிருப்பார். குள்ளமான உருவம், காகத்தை வாகனமாக உடையவர்,பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவர். வில்வடிவ பீடத்தில் நீளா தேவி, மந்தா தேவி என்ற தம் இரு மனைவியருடன் காட்சிதருபவர். மகர கும்ப ராசிகளுக்கு அதிபதி. இவருடைய தந்தையான சூரியனுக்கும் இவருக்கும் பகை.அதனால் சனிதசை வந்தால் அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை வரும்.மனைவியை விட்டும் குடும்பத்தை விட்டும் பிரிய வேண்டி வரும்.அதிகுரூர பலன்களைக் கொடுப்பவர்.எலும்பு முறிவு குறிப்பாக காலில் வரும்படி செய்பவர்.
ஆனால் இப்படிப்பட்ட சனிபகவானை தீக்ஷதர் தயாள குனத்தில் அமுதகடல் என்றும், கோரிய வரங்களை அளிப்பதில் காமதேனு போன்றவர் என்று புகழ்கிறார்.எப்படி என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்

Monday, December 14, 2009

சனி வழி தனி வழி


ஒரு ஆறுமாதமாக எந்த வேலை எடுத்தாலும் தடங்கல், முனைப்பு இல்லை உடம்பு மிகவும் மோசமான நிலை, அலுவலக காரியங்களும் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போனது. போதாக்குறைக்கு பொன்னியம்மா குறைவேறு என்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று 30௦, 600 என்று தங்கம் விலை மாதிரி ஏறிக்கொண்டு இருந்தது .


அப்பாடா அவ்வளவுதான் என்ற நினைப்பில மண்ணை அள்ளிப்போட்டது மருத்துவ அறிக்கை. உணவுக்குழாயில் இதயத்திற்கு அருகில் மூச்சுக்குழலுக்குமேல் ஒரு சிறிய பை போன்ற குழி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதுபாட்டுக்கு இருந்து விட்டு போகட்டுமே என்றால் சாப்பிடும் போது சில சமயம் உணவு அதில் மாட்டிக்கொண்டு மூச்சுக்குழலை மூடி மயக்கம் வந்து கீழேவிழுந்து கிருஷ்ணாம்பேட்டையா பெஸண்ட் நகரா என்ற கேள்விக்கு விடை காணும்படி ஆகிவிடுகிறது. இதனால் என்ன நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை(வீட்டில் இருப்பவர்களுக்குத்தனே அதெல்லாம்) பையன்,மாட்டுப்பெண், பேரன், மாப்பிள்ளை, பெண் என்று எல்லோரும் வந்து பார்த்துவிட்டு போயகிவிட்டது. பிளாக் உலக நண்பர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் விசாரித்தார்கள்.இவ்வளவு ஆகியும் நம்மிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு மட்டும் போகவில்லை.
என்னுடைய மைத்துனியின் கணவர் காசியில் வேதம் படித்து என்னை மாதிரி லௌகிகத்தில் இல்லாமல் புனிதமான வைதீகத்தில் இருப்பவர்.ஆஸ்பத்திரிக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு கேட்டார்'என்ன அத்திம்பேரே இவ்வளவு சீரியாசாக இருந்தும் எனக்கு சொல்லவே இல்லையே என்றார். நான் சொன்னேன் "அப்படியொன்றும் சீரியஸ்சாக இல்லை அப்படியிருந்தால் முதல் தகவல் உங்களுக்குத்தான் வந்திருக்கும்."

சரி வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள் இன்னும் ஏன் நிலைமை சரியாகவில்லை என்று பார்த்தால் வந்தவர்களில் ஒருவர் போகவில்லையாம்

சரி இவ்வளவு தூரம் நம்மை ஆட்டிப்படைப்பவர் யார் என்று விசாரித்தால் அவர் ஒன்பதில் ஒருவர். கடந்த சிலமாதங்களாகவே என்னுடன் என் வீட்டிலேயே தங்கியுள்ளார் என்றும் அவர் பெயர் சனீஸ்வரர் என்றும் தெரிய வந்தது

சரி நாம் கூப்பிடாமலேயே அழையாத விருந்தாளியாக வந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று எண்ணம் வந்தது. அதை வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.சனீஸ்வரரைப்பற்றி யார் நமக்கு கூறுவார்கள் என்று பார்த்த பொழுது என் தாயரின் நினவு வந்தது. அவள் குளித்துவிட்டு சமையல் செய்யும்போது சொல்லும் ஒரு பாடலில் சில வரிகள் ஞாபகம் வந்தது. " கடன் வேண்டி காத வழி போனாலும் கடனும் இல்லை என்று சொல்லி காலை உடையவைப்பேன் இன்றை வா நாளை வா என்றே இழுக்கடிப்பேன் இப்படியாகப் பட்ட சனீஸ்வர பகாவானின் ஸோத்திரத்தை ஒருநாளும் மறாவாமல் இருதரம் சொன்னவர்க்கு சனியொன்றும் வாரமல் சகலமும் காத்திடுவேன் பசியாது நித்தியம் பார்வதியாள் படியளப்பாள் என்று முடியும்.
இது போதவில்லை வேறு யார் இவரைப்பற்றி துல்லியமாக கூறியிருப்பார்கள் என்று யோசித்தபோது முத்துஸ்வாமி தீக்ஷதர் ஞாபகம் வந்தது. அவரையுமா சனிபகவான் விடவில்லை.

மீதி அடுத்த பதிவில்

Friday, July 17, 2009

பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள்

திருமதி பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள் மாரடைப்பால் நேற்று மறைந்து விட்டார்.அவரைப் பற்றி நான் கடைசியாக எழுதிய பதிவையே அவருக்கு காணிக்கையாக்குகிறேன். சாந்தி நிலவவேண்டும் என்று பாடி நமக்கெல்லாம் சாந்தி அளித்த அவர்தம் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைம்.அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
வேலூர் செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். தாமல் என்று பெயர். அழகான சிவன் கோவில் டிரங் சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும்.இந்த ஊரில்தான் 28-03 1919ல் திருமதி D. K பட்டம்மாள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.பெண்கள் வெளியே சென்று வாரத அந்தக் காலத்திலேயே 5 வயது தம்பி D K ஜெயராமன் துணையோடு காஞ்சிபுரம் சென்று சங்கீதம் கற்று வந்தார்.பின்னர் காஞ்சிக்கே குடிபெயர்ந்து பிரபல வித்வான் காஞ்சிபுரம் நைனா பிள்ளையிடம் சங்கீதம் கற்றுக் கொண்டு பிரபலமானார். சங்கீத உலகத்தின் முடிசூடா விதுஷிகள் எம் எஸ் சுப்பலக்ஷ்மி, எம் எல் வஸந்தகுமாரி,டி.கே பட்டம்மாள் என்று பெயர் பெற்றார்.பாரதியின் பாட்டுக்களை பாடுவதற்கு பயந்த அந்த பிரிட்டிஷ் காலத்திலேயே துணிந்து பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் பாடி பிரபலப் படுத்தினார். நல்ல கணீரென்ற குரல், அக்ஷர சுத்தம், சிதைவு படாத கீர்த்தனைகள் ராகபாவம் இதெல்லாம்தான் இவருக்கு சொத்து.அதுவும் தீக்ஷதர்கீர்த்தனைகளை அவரை மாதிரி பாட மற்றுமொருவர் பிறக்கத்தான்வேண்டும். அதே மாதிரி பெண்களூக்கு மிருதங்கம் வாசிப்பதில்லை என்ற வைராக்கியத்தை விட்டு விட்டு பாலக்காடு மணி ஐய்யர் இவருக்கு வாசித்த பெருமையினாலேயே இவரது சங்கீதம் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.அதனால்தான் இவரை பட்டம்மாள் என்று சொல்லுவதைவிட பாட்டம்மாள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம். பட்டங்களுக்குத்தான் பட்டம்மாளால் பெருமை.இன்று அவருக்கு வயது 90. அவருக்கும் அவரது கணவர் திரு. ஈஸ்வர்னுக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருளுமாறு கஞ்சி காமாக்ஷி சமேத ஏகாம்பிரேஸ்வரரை வேண்டிக்கொள்ளும் என்னுடன் நீங்களும் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.

Saturday, March 28, 2009

பாட்டம்மாள்

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். தாமல் என்று பெயர். அழகான சிவன் கோவில் டிரங் சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும்.இந்த ஊரில்தான் 28-03 1919ல் திருமதி D. K பட்டம்மாள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.பெண்கள் வெளியே சென்று வாரத அந்தக் காலத்திலேயே 5 வயது தம்பி D K ஜெயராமன் துணையோடு காஞ்சிபுரம் சென்று சங்கீதம் கற்று வந்தார்.பின்னர் காஞ்சிக்கே குடிபெயர்ந்து பிரபல வித்வான் காஞ்சிபுரம் நைனா பிள்ளையிடம் சங்கீதம் கற்றுக் கொண்டு பிரபலமானார். சங்கீத உலகத்தின் முடிசூடா விதுஷிகள் எம் எஸ் சுப்பலக்ஷ்மி, எம் எல் வஸந்தகுமாரி,டி.கே பட்டம்மாள் என்று பெயர் பெற்றார்.


பாரதியின் பாட்டுக்களை பாடுவதற்கு பயந்த அந்த பிரிட்டிஷ் காலத்திலேயே துணிந்து பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் பாடி பிரபலப் படுத்தினார். நல்ல கணீரென்ற குரல், அக்ஷர சுத்தம், சிதைவு படாத கீர்த்தனைகள் ராகபாவம் இதெல்லாம்தான் இவருக்கு சொத்து.அதுவும் தீக்ஷதர்கீர்த்தனைகளை அவரை மாதிரி பாட மற்றுமொருவர் பிறக்கத்தான்வேண்டும். அதே மாதிரி பெண்களூக்கு மிருதங்கம் வாசிப்பதில்லை என்ற வைராக்கியத்தை விட்டு விட்டு பாலக்காடு மணி ஐய்யர் இவருக்கு வாசித்த பெருமையினாலேயே இவரது சங்கீதம் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் இவரை பட்டம்மாள் என்று சொல்லுவதைவிட பாட்டம்மாள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம். பட்டங்களுக்குத்தான் பட்டம்மாளால் பெருமை.

இன்று அவருக்கு வயது 90. அவருக்கும் அவரது கணவர் திரு. ஈஸ்வர்னுக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருளுமாறு கஞ்சி காமாக்ஷி சமேத ஏகாம்பிரேஸ்வரரை வேண்டிக்கொள்ளும் என்னுடன் நீங்களும் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.


அவரைப் பற்றிய குறும் படம் . அதற்கு பின்னால் அவருடைய பேத்தி திருமதி. நித்ய ஸ்ரீ அவரை நேர்க்காணல் கண்டு அதில் அவரைப் பற்றிய அரிய செய்திகளையும் பொதிகை டி வி நிகழ்ச்சியின் படத்தையும் பார்க்கலாம்.
-

-
திரு. பாபநாசம் சிவனின் முத்தான ஒரு பாடல்.வசந்தா ராகத்தில் அமைந்தது . வசந்தாவின் ஜீவா-ஸ்வரமான மா தா என்ற ஸ்வரங்களை வைத்து விளையாடி இருக்கிறார் . இதற்குத்தான் ஸ்வராக்ஷரம் என்று பெயர். -ஸ்வரங்களே வார்த்தைகளாக வரும்.

ராகம்;- வஸந்தா தாளம்:- ஆதி 2 களை

பல்லவி

மாதயயை நிதி எனும் நீ தயையை புரிந்தருள் மாதவன் மருகனேமுருகனே குகனே மலைமகள் மகனே........(மாதயயை நிதியெனும்)

அனுபல்லவி

போதயன் பணிமலர்ப்பாதனே மறைமுகன் புகலரும் ப்ரணவ மகிமை மெய்ப்பொருளை புகழ் தாதை காதில் ஓதும் குருநாத...(மாதயயை நிதியெனும்)

சரணம்

கந்தனே கலியுகந்தனில் இருகண்கண்ட

தெய்வமென எண்டிசை புகழும்செந்திலாதிப

சிறந்த வேலணியும்சேவலா

அமரர் காவலா ஷண்முகா...(மாதயை நிதியெனும்

எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபநாசம் சிவனின் வஸந்தா ராகத்தில் அமைந்த மாதயயை நிதி எனும் நீ தயயை புரிந்தருள் என்னும் முருகன் மீது அமைந்த மிக அற்புதமான பாட்டை அவர் குரலில் இங்கே கேளுங்கள்">

Monday, February 23, 2009

சம்போ மஹாதேவன்சங்கர கிரிஜா ரமணன்
இன்று சிவராத்ரி.சிவனைப் பற்றி சிந்திக்கவும் அவன் புகழைபாடுவதும் அல்லது பாட்டைக் கேட்பதும் விசேஷம்.ஒரே ஒரு வில்வ இலையை ஆத்மசுத்தியோடு அர்ப்பணித்தால் போதும் ஹரண் மகிழ்ந்து விடுவான்.வேடன் கண்ணப்பனுக்கு அவனளித்த உமிழ்நீரையும்,இறைச்சியையும், அவன் காலால் செருப்படியும் பெற்றுக்கொண்டு அவனுக்கு முக்தி அளித்தநாள்.ராமானையே சிறப்பித்து வாழ்நாள் முழுவதும் பாடிய திரு.தியகராஜஸ்வாமிகள் சிவன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார். தருமமிகு சென்னக்கும் அவர் வந்திருந்தார்.சென்னை பிராட்வே அருகில் ஐகோர்ட்டுக்கு எதிரில் உள்ள பந்தர் தெருவில் உள்ள(இப்பொழுதும் உள்ளது)சத்திரத்தில் தங்கி இருந்தார்.அங்கிருந்து திருவெற்றியூர் போய் திருபுரசுந்தரியாகிய வடிவுடைய அம்மனின் மீது ஐந்து பாடல்கள் பாடியுள்ளார்.அதே மாதிரி குன்றத்தூருக்கு அருகில் உள்ள போரூரில் உள்ள சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரேஸ்வரனின்மீது ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் பந்துவராளி ராகத்தில் அமைந்த"" சம்போ மஹாதேவ சங்கர கிரிஜா "" என்ற பாடல்.
ராகம்:-பந்துவராளி. தாளம்:சாபு

பல்லவி

சம்போ மஹாதேவ சங்கர கிரிஜாரமண...(சம்போ)

அனுபல்லவி

சம்போ மஹாதேவ சரணகத ஜனரக்ஷக
அம்போ ருஹலோசன பாதம்புஜ பக்திம்....(சம்போ)

சரணம்

பரமதயாகர ம்ருகதர தரகங்கா தரதணீ
தரபூஷண த்யாகராஜ வரஹ்ருதய நிவேச

ஸுரபிருந்த கிரீடமணி வர நீராஜிதபத கோ
புரவாஸ் ஸுந்தரேச கிரீச பராத்பர பவஹர ...(சம்போ)
சம்போ மஹாதேவா! சங்கரா! மலைமகளான பார்வதியின் அழகியமணவாளா!
கமலக்கண்ணனே, உன்னைச் சரணமடைந்தவர்களை காப்பவனே எனக்கு உன் திருவடியைதொழும் பக்தியைத் தா.

நீ பக்தர்களிடம் மட்டுமல்லாது மிருகங்களிடம் கூடதயவுடையவன்.அதனால்தான் பாம்பை தலையின் மீது ஆபரணமாக அணிந்திருக்கிறாய்.சந்திரனையும் கங்கயையும் முடி மீது வைத்து ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கிறாய்.அது மட்டுமல்ல இந்த எளிய தியகராஜனின் தூய உள்ளத்திலும் நிறைந்து உறைகின்றாய்.

தேவர்களின் மணிமுடிகளில் உள்ள ரத்தினம், வைரம்,போன்ற நவரத்தினங்கள் தங்களது பாதராவிந்தங்களை சேவிப்பதால் எழும் ஒளியே தங்களுக்கு தீபராதனையாகும்,கோவூரில் கோவில் கொண்டவன்,ஸுந்தரேசனென்ற பெயருடன் விளங்குபவன்,ஆதியுமந்தமும் இல்லாத பராத்பரன்,மாயப்பிறப்பறுக்கும் மஹாதேவன்.சம்போ மஹாதேவா

பாடலை மும்பை ஜெயஸ்ரீ குரலில் இங்கே கேளுங்கள் ">

Sunday, February 08, 2009

கடல் கடந்த தியாகராஜர்

நங்க நல்லூர் சங்கீத சமாஜம் காரியதரிசி திரு. ராமனாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "சார் இந்ததடவை பிப்ரவரி 8ஆம் தேதியன்று தியகராஜ ஆரதனை வந்து நடத்திக் கொடுங்கள். மதியாணம் சாப்பாடும் உண்டு"என்றார். நான் உடனே "சார் இந்த தடவை வர முடியாது.அந்தத் தேதியில் நானும் தங்கமணியும் சிங்கபூர் மகன் வீட்டுக்கு செல்கிறோம். என்றேன். மனதுக்குள் தாங்க முடியாத வருத்தம் பஞ்ச ரத்ன கீர்தனையை கேட்கமுடியவில்லை என்றா இல்லை இல்லை நல்ல பஞ்ச பட்ச சாப்பாடு போச்சேன்னுதான்.


ஒரு நாள் சிஙகபூரில் என் புரோக்கிராம் மேனேஜெர் என் மகன் "'அப்பா 8 ஆம் தேதி பிப்ரவரி டோபிகாட் அருகில் உள்ள மியுசியம் கண்ணாடி அரங்கில் தியகராஜ உத்ஸ்வம் போகலாமா'' என்றான்.தண்ணீரில் இருந்து வெளியே தவித்துக் கொண்டு இருக்கும் மீன் போல சங்கீதம் இல்லாமல் பாலைவனத்தில் தவித்துக் கொண்டு இருக்கும் எனக்கு ஒரு பாட்டில் குளிர்ந்த மினரல் தண்ணீர் வேண்டுமா என்பது போல் இருந்தது. உடனே சரி யென்று சொல்லிவிட்டேன்.
8 ஆம் தேதி காலை 7 மணிக்கே(நம்ம ஊர் மணி 4.30) குளித்து ஜிப்பா போட்டுக் கொண்டு ரெடியாகி விட்டேன்.ரயில் வண்டி பிடித்து மியுசியம் அரங்கத்துக்குச் சென்றோம். டோபி காட்டில் இறங்கி பொடி நடையாகவே சென்றோம். வழியெல்லாம் தமிழர் கூட்டம்தான். அன்று தைப் பூசம் திருநாள். தமிழர்கள் சாரிசாரியாக டோபிகாட்டில் உள்ள முருகன் கோவிலுக்கு போய்க் கொண்டு இருந்தார்கள். பால் குடம் எடுத்துக் கொண்டு பல பேர்கள். அலகு குத்திக் கொண்டு காவடி எடுத்துக் கொண்டு பல பேர்கள், வெறு காவடி எடுத்துக் கொண்டு பல பேர்கள் இப்படி மக்கள் கூட்டம்தான் அன்று சிங்கையில். இதே மாதிரி எல்லா முருகன் கோவில்களிலும் அன்று கூட்டம்தான்.13 ஆவது ஆழ்வரின் சந்தேகமான யார் தமிழ்க் கடவுள் என்ற கேள்விக்கு விடையை அங்கே பார்க்கலாம்.
எப்படியோ இடத்தைக் கண்டுபிடித்து ஆரம்பித்து இருப்பார்களோ என்ற பயத்தில் போனால் நல்ல வேலை அப்பொழுதுதான் சுருதி கூட்டிக்கொண்டு இருந்தார்கள்.உள்ளே போனால் சிறியவர்களும் பெரியவர்களுமாய் 100 பேர்கள் குழுமியிருந்தார்கள்.சிறுவர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்ததைப் பார்த்ததில் மனதிற்கு நிறைவாக இருந்தது.கொஞ்ச நேரம் வயலின் மற்றும் வீணைக் கச்சேரிகள் நடந்தது.சரியாக 10 30 மணிக்கு மேடையில் 6 பெரியவர்கள் மற்றும் சிறியவர்களும் அமர்ந்து முதலாக ஸ்ரீ கணபதி என்ற சௌராஷ்ட்ர ராகத்தில் அமைந்த தியகராஜரின் கீர்த்தனையை பாட ஆரம்பித்த உடனே களை கட்டி விட்டது. அதன் பின்னர் ஜகதாநந்த தாரகா என்ற நாட்டை ராகத்தில் ஆரம்பித்து கடைசியில் ஸ்ரீ ராகத்தில் கடைசி கீர்த்தனையான எந்தரோ மஹானு பாவலு என்று முடிக்கும் போது மணி 11.30 ஆகிவிடது.நானும் என் மகனும் கையில் புத்தகம் எடுத்துச் சென்றதால் கூடவே பாட முடிந்தது.பாடிக் கொண்டு இருக்கும் ஒரு பெண்மணியின் கையில் ஒரு புத்தகம் இருந்தது. சற்று துல்லியமாகப் பார்த்தால் என்ன ஆச்சர்யம் அது நாங்கள் எங்கள் நங்க நல்லூர் சமஜத்தில் பாடுபவர்கள் எல்லோருக்கும் அளிக்கும் பஞ்சரத்ன கீர்த்தனை ஸ்வரத்துடன் கூடிய புத்தகம்தான் அது.மனதில் நினைத்துக் கொண்டேன் இங்கு முடிவடையும் இந்த 11.30 மணிக்கு அங்கே சரியாக 9 மணிக்கு ஆரதனை ஆர்ம்பிக்கும் என்று. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் அங்கில்லாதது இங்கு. பாட்டு ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லோரும் அமைதி காத்து ஆராதனையை முழுமைபெறச் செய்தனர். நம்மவர்கள் இதை கற்றுக் கொள்ளவேண்டும். அத்தனை ஒழுக்க உணர்வு.நடுவில் எழுந்து போவது வம்பு,கத்தல் அதெல்லாம் மூச் கிடையாது.

ஆரதனை முடிந்து விட்டது வீட்டுக்கு போகலாமா? என்றான் என்மகன். நானும் சரியென்று அரை மனதுடன் கிளம்புவதற்காக வெளியே வந்தோம். என்ன அரைமனது என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை இதே நங்க நல்லூராக இருந்தால் நல்ல சாப்பாடு இருந்திருக்கும். வெளியே வந்ததும் 'சார் பிரசாதம் வாங்கிக்கொள்ளுங்கள்"என்று ஒரு குரல் ஆறாவது கீர்தனையாக இனிமையாக ஒலித்தது.சரி எதோ சுண்டலோ லட்டோ தரப் போகிறார்கள் என்று பார்த்தால் என்ன ஆச்சர்யம் ! நல்ல தெர்மகோல் பாக்ஸில் பேக் செய்யப்பட்டு அதனுள்ளே புளியஞ்சாதம், ரவகேசரி, கொத்துக் கடலை சுண்டல், தயிர்சாதம், சோயா மில்க் ஒரு ஆரஞ்சு பழம் எல்லாம் கொடுத்தார்கள்.இப்படி காதுக்கும் வயிற்றுக்கும் உணவளித்த சிங்கை வாழ் தியாகராஜ பக்தர்கள், சங்கீத ரசிகர்கள்வாழ்க என்று வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம். தியாகராஜர் ஒருவேளை உண்ண உணவுக்கு கஷ்டப் பட்டார் என்று படித்திருக்கிறேன் ஆனால் அவர் பெயரால் இன்று லட்சோப லட்சம் பேர் உலகெங்கும் உணவு அருந்தும்படியாக அவரது நாமமும் கீர்த்தனைகளும் சிறப்பான பணியை செய்து கொண்டு இருக்கின்றன."'எந்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு"'


Wednesday, January 14, 2009

எண்ணத்தால் எழில் மிகும் வண்ணக் கோலங்கள்


மக்கள் மறந்ததால் மறைந்துவரும் கலை இது. பல குழந்தைகளுக்கு ஏன் சில பெரியவர்களுக்குக் கூட கோலங்கள் என்றால் டக்கென்று ஞாபகத்துக்கு வருவது இரவு சன் டீ.வியில் வரும் கோலங்கள் சீறீயல்தான்.ஆனால் இது அது அல்ல. கோலக்கலையைப் பற்றியது.மார்கழி மாதம் வந்துவிட்டாலே மகளிர் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காலையிலேயே எழுந்து அவரவர் வீட்டின் முன்பு அழகிய கலர்ப் பொடிகளுடன் கோலப் போட்டியில் அசத்திவிடுவார்கள். இதில் சில சமயம் ஆண்களும் கலந்து கொள்வார்கள். கோலம்போடுவதற்கு கலர்ப் பொடிகளைவிட பொறுமை,கல்பனாசக்தி,கணக்கில் திறமை,சுறுசுறுப்புபோன்றவைகள் மிக அத்தியாவசியமானது. இது பெரும்பாலும் பெண்களிடம்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அதனால்தான் இந்தக்கலையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.இபொழுது இந்தக்கலை மறைந்துவரும் நிலையில் உள்ளது.அடுக்குமாடி கட்டிடங்கள் மிகுந்துவரும் இந்நாட்களில் கோலம் போடும் பெண்களும் இடமும் தட்டுப்பாடாகிவிட்டன.இந்தக்கலை அழிந்துவிடாமல் ஆதரிக்கவேண்டியது இன்றைய சமூகத்தினரின் கடமை. பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தக்கலையை நன்கு கற்பித்து போஷித்தால் பிற்காலத்தில் சிட்னி,ஹுஸ்டன்,டொரான்டோ போன்ற இடங்களிலாவது நம் மக்கள் கோலம் போடுவார்கள்.