Sunday, February 28, 2010

பிரதோஷ மஹிமை--1சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு! வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம்! அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். நம பார்வதிபதயே! ஹரஹர மகாதேவா!!

பிரதோஷ காலம் சூரியாஸ்தமனத்தோடு தொடங்குகிறது. பிரதோஷ காலம் பரமேச் வரனைத் தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும். அதாவது ஈசுவரன் தன் வசப்படுத் திக் கொள்ளும் காலம் மிகவும் விசேஷமாகும்.
உலகம் ஒடுங்குகிறது; மனம் ஈசுவரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம். சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம்.
வில்லை விட்டு அம்பு சென்று விட்டாலும், மந்திர உச்சாரண பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வது போல ஈசுவரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொள்கிறான்.

பிரதோஷ காலத்தில் ஈசுவரன் எல்லாவற் றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால் வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அது அமையும்.
உதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. இராத்திரி ஆரம்பத்தைத் தான் பிரதோஷ காலம் என்கி றோம். அதனால் தான் இரவு நித்திய பிரளய காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நித்திய சிருஷ்டியும், நித்திய பிரளயமும் நடக்கின்றன. பறவைகள், பசுக்கள் முதற்கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள் கூட, தம் விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஒடுங்கிக் கொள்கின்றன.

அந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்குத் தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்திய பிரளய நேரத்தில், நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம் அதில் லயித்து விடுகின்றன.

பிரதோஷ வேளைகளில், பரமேசுவரன் உலக சக்தி முழுவதையும் தன் வசம் ஒடுக்கிக் கொண்டு நர்த்தனம் செய்யும் வேளையில், நாம் ஈச்வரனையே வழிபடவேண்டும்.

பிரதோஷ கால மகிமையை விளக்கும் புராண வரலாற்றுக் கதையைப் பார்ப்போம்.

ஒரு முறை திருப்பாற்கடலில் அமரர்களும், அசுரர்களும் ஒன்று திரண்டனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம் பைக் கயிறாகவும் பூட்டி அமிர்தம் பெற பாற் கடலைக் கடைந்தனர்.
ஸ்ரீமந் நாராயணனின் தந்திரப்படி சர்ப்பத் தின் வாலைத் தேவர்களும் தலையை அசுரர் களும் பிடித்துக் கொண்டு அமிர்தம் எடுக்க கடைந்து கொண்டிருந்தனர்.
விஷாக்கினி ஜுவாலையுடைய வாசுகியின் பெருமூச்சுக் காற்றினால் அசுரர்கள் தேஜஸ் குறைந்து, பராக்கிரமமும் மறைந்து பலவீனர்கள் ஆயினர்.
அதே சமயம், வாசுகியின் சுவாச வேகத் தினால் மேகங்கள் அங்குமிங்குமாக அடித்துத் தள்ளப்பட்டு வால் பக்கம் பெரு மழையைப் பொழிந்தன. அப்பொழுது கடல் பொங்கியது. அனைவரும் அஞ்சினர். மந்திர மலை உள்ளே அழுந்தத் தொடங்கியது.
ஸ்ரீமந் நாராயணன் கூர்மாவதாரம் எடுத்து குவலயம் காத்தார். அமரர்களுக்கு அரும்பெரும் சகாயம் செய்தார்.
ஸ்ரீயப்பதியின் திருவருளால் திருப்பாற் கடலிலிருந்து சகல தேவர்களும், முனிவர்களும் பூஜித்து வரும் காமதேனு உதயம் ஆயிற்று. பின்னர் வாருணி தேவி வந்தாள். பரிமளமான பாரிஜாத வ்ருக்ஷம் தோன்றியது. ஜகன் மோகன ரூபலாவண்ய அப்சரஸ் பெண்கள் வந்தனர். குளிர்ச்சி தரும் சந்திரன் வந்தான்.
கங்கையைத் திருச்சடையில் தாங்கிய சங்கரன் சந்திரனையும் சூடிக் கொண்டு சந்திரசேகரன், சந்திரமௌலி என்று பெயர்க்கீர்த்தியும் பெற்றார்

இத்தருணத்தில், கயிறாக அப்படியும், இப்படியுமாக இழுக்கப்பட்ட வாசுகி வேதனை தாளாமல் விஷத்தைக் கக்கியது.
அந்த ஆலகால விஷம் கார் காலம் போல் கருமை நிறம் சூழ்ந்து மலைபோல் ஓங்கி உயர்ந்து வடமுகாக்கினியைப் போல் சீறிப் பாய்ந்து மேலும் மேலும் எழுந்தது.
அமரர்கள் அஞ்சி நடுங்கினர். அபயம் தேடி நாரணனையும், நான்முகனையும் நாடினர். அவர்களும் விஷத்தின் கொடுமையைக் கண்டு வியந்தனர். அனைவரும் ஒன்று கூடி கயிலாய மலைக்குப் புறப்பட்டனர்.
“மகா தேவா! கங்காதரா! சர்வலோக ரக்ஷகா சரணம்! சரணம்! அருள் தரும் அண்ணலே அபயம்! அபயம்!” என்று பெரு முழக்கமிட்டுக் கொண்டு, திருக்கயிலைத் திருமாமலையை வந்தடைந்தனர்.
பனிமலை போல் விளங்கும் சிவன் கோவிலில் நவரத்தின மணிபீடத்தில் சிவபெருமான் அருட்பெரும் ஜோதியாக ஆதியும் அந்தமும் அற்ற பெருந்தகையாய் முழுமுதற் பரம்பொருளாய் இமயவல்லி அம்மையுடன் எழுந்தருளியிருந்தார்.

சிவக் கோவிலின் திருவாயிலிலே நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி காவல் புரிந்து நின்றார்.
கடல் போல் திரண்டு வந்த தேவர்கள் நந்திதேவரை வணங்கினர்.
“நந்தி தேவா! நமஸ்கரிக்கின்றோம். திருப்பாற்கடலில் விஷம் பொங்கி வந்துள்ளது. அதனை அணுக இயலாத நாங்கள் அச்சமுறுகிறோம். அதற்கு ஒரு மார்க்கம் காண சர்வலோக ரக்ஷகரான சர்வேஸ்வரனைக் காண வேண்டும்.”
இவ்வாறு அமரர்கள் வேண்டுகோள் விடுத்ததும் நந்திதேவர் அவர்களை திருவாயி லின் முன்னே நிறுத்திவிட்டு, சிவபெருமானி டம் சென்றார்.
நந்திதேவர், உள்ளே சென்று எம்பெருமானி டம் திருவாயிலில் தேவர்கள் காத்திருப்பதையும் திருப்பாற் கடலில் விஷம் பொங்கி எழுந்துள்ள தால் உடனே ஐயனைத் தரிசிக்க வேண்டும் என்று விண்ணப்பித்ததாகவும் கூறினார். சிவபெருமான் தேவர்களை உடனே உள்ளே அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

நந்திதேவர் ஐயனை நமஸ்கரித்து வெளியே வந்தார். தேவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். தேவர்கள் சென்னி மீது கரம் உயர்த்தி நமஸ்கரித்து நாதனைப் போற்றித் துதித்தனர்.
“லோக நாயகா! விடையேறும் பெரு மானே! விஷம் பொங்கி வருகிறது திருப்பாற் கடலில். காத்தருளுவீர் கயிலை வாசா!”
சிவபெருமான் அமரர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டார்.
தொண்டர்களுக்காக இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கும் கருணாமூர்த்தியல்லவா சிவபெருமான்!
நொடிப் பொழுதில் அவ்விஷத்தைத் திருக் கரத்திலே வாங்கிக் கொண்ட எம்பெருமான் “தேவர்களே! இவ்விஷத்தை யாம் உண்டு விடவா? அல்லது விட்டுவிடவா?” என்று வினவினர்.
விஷத்தின் உக்கிரத்தால், அஞ்சி நடுங்கி யவாறு நின்று கொண்டிருந்த அமரர்கள் “தேவர் இதனை விட்டுவிட்டால் இவ்விஷம் உலத் தையே அழித்து விடும். அதனால் ஐயன் உகந்த வழி செய்க” என்று வேதனையுடன் விண்ணப் பித்தனர்.

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாமா

Thursday, February 25, 2010

ஸ்ரீ சனீஸ்வரர் 6


எல்லோரையும் நடுங்க வைக்கும் சனீஸ்வர பகவானையே, திருவாரூர் தியாகேசப் பெருமானை வணங்கி வென்றவர் தசரத மகாராஜா. அந்தக் கதையை இங்கு பார்ப்போம்.தசரத மகாராஜாவிற்கு சனி தசை ஆரம்பிக்கின்ற வேளை.... அப்போது மன்னரின் குலகுருவான வசிஷ்டர் அவரிடம், "உங்களின் குலதெய்வம் சிவபெருமான் உள்ள திருவாரூர் சென்று சிவபெருமானை வழிபட்டால் உங்களை சனி நெருங்கமாட்டார்' என்றார். அவ்வாறே தசரத மகாராஜாவும், திருவாரூர் வந்து கமலாலயத் திருக்குளத்தில் நீராடினார்; ஆரூர் சிவபெருமானை வழிபட்டார். அப்போது சனிபகவான், தசரத மகாராஜாவைப் பற்ற வந்தார்.சிவபெருமானை வணங்கியதால் ஏற்பட்ட துணிவினால் சனி பகவானை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார் தசரதர். தன்னுடைய வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைக் கண்ட சனி பகவானும் தசரதனிடம், "என்ன வரம் கேட்டாலும் தருகிறேன்... கேள்!' என்றார். உடனே தசரதர், "சனீஸ்வரனே! நீ உனது கடமையைச் செவ்வனே செய்கின்றாய். உலக உயிர்களுக்கு, சுக துக்கங்களின் வேறுபாட்டை உணர்த்தும் வகையிலே நீ செயல்படுகின்றாய். ஆனாலும் நீ அவர்களைப் பற்றுகின்ற காலத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அண்ட சராசரங்களையும் படைத்து, காத்து, இறுதியில் சம்ஹாரமும் செய்யும் முழுமுதற் கடவுள் திருவாரூரிலே வீற்றிருக்கும் சிவபெருமான். அவரை "தஞ்சம்' என்று சரணடைந்த பின்னாலே என்னை நீ துன்புறுத்த விரும்பினாய். அதனால்தான் உன்னோடு நான் போரிட்டேன்; சிவனருளால் வென்றேன்.எனவே, திருவாரூர் வந்து, கமலாலயத்தில் நீராடி, தியாகேசப் பெருமானையும் உன்னையும் எவர் ஒருவர் வணங்கினாலும் அவர்களுக்கு நீ நல்லதே செய்ய வேண்டும்; தீங்கு செய்யக்கூடாது' என்று கேட்டார். சனீஸ்வர பகவானும் திருவாரூர் வருவோரை தன்னுடைய கண்ட சனி, பாத சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி என்று எந்தக் காலமானாலும் துன்புறுத்தாமல் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார். அதனால்தான் திருநள்ளாறில் வழிபாட்டை முடித்த நளச் சக்ரவர்த்தியும் திருவாரூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்; "தன்னை இனியும் நவக்கிரகங்கள் துன்பப்படுத்தக்கூடாது' என வேண்டிக் கொண்டார். இதையொட்டிதான், "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே!' என்னும் பழமொழி சொல்லப்பட்டு வருகின்றது

தசரதர் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்திரம்


க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பவ நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய ச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம : பெளருஷகாத்ராய ஸ்தூலரோக்ணே ச தே நம :
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம :
நமோ கோராய ரெளத்ராய பீஷணாய கராளிநே
நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்க்ஷ்ட்ர நமோஸ்து தே
நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம :
நமஸ்தே ஸர்வபக்ஸாய வலீமுக நமோஸ்து தே
ஸூர்யபுத்ர நமோஸ்தேஸ்து பாஸ்கர பயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ராய நமோ நம :
தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச
ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹராஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா :
த்வயாவலோகிதா : ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே
ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய : ஸப்த தாரகா :
ராஜ்யப்ரஷ்டா : பதந்தீஹ தவ த்ர்ய்ஷ்ட்யாவலோகிதா :
த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத :
ப்டஸாதம் குரு மே
ஸெளரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித :
***************************************************************
"சனிக் கிழமை அன்று இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி பூஜை
செய்பவருக்கு எந்த இன்னலும் தர மாட்டேன். அது மட்டுமின்றி கோசாரம் ,
ஜன்ம லக்னம் , தசைகள் , புக்திகள் ஆகியவற்றில் வேறு ஒரு கிரகத்தால்
ஏற்படும் பீடைகளில் இருந்தும் காப்பாற்றுவேன் . அனைத்து உலக
இன்னல்களையும் களைந்து இன்பமுறச் செய்வேன் ! " என்றும் உறுதி அளித்தார்

சனி பகவான் .

Wednesday, February 24, 2010

ஸ்ரீ சனீஸ்வரர் 5

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி மஹேந்திர மலையில் இலங்கை செல்ல தயாராக இருந்தார், அப்போழுது அங்கு வந்து சேர்ந்த ஸ்ரீசனிபகவான் "ஆஞ்சநேயா, தாங்களுடன் ஏழரை ஆண்டு காலம் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது." என்றார். "சூர்ய புத்திரரே, நான் சூர்ய வம்ச ரகுகுல திலகன் ராமபிரானின் கார்யமாக செல்கிறேன்,ஆதலால் நான் இலங்கையிலிருந்து திரும்பிய உடன் என்னை பிடித்துக் கொள்ளவும், நானே தாங்களிடம் வருகிறேன்" என்று ஆஞ்சநேயர் கூறினார். சனி பகவான் ஒப்புதலுடன் அவர் இலங்கை நேக்கி ஆகாய மார்க்கமாக செல்லலானார்.

ஸ்ரீ ராமகார்யத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் இலங்கையில் தேவியை தர்சித்தார். ஸ்ரீ ராமனுக்கு உதவியாக இராவணனை அழிக்க இலங்கை செல்ல சேதுகரையில் வானரங்களுடன் இருந்த போழுது சனிபகவான் அங்கு வந்து "ஆஞ்சநேயா, நீ என்னை ஏமாற்றிவிட்டாய்." என்றார். "பகவானே மன்னிக்கவும், ராமகார்யத்தில் இருந்ததால் மறந்துவிட்டேன். இங்கு பாருங்கள் சின்ன அணில் கூட தன்னால் ஆன கைங்கரியத்தை ஸ்ரீராமபிரானுக்காக செய்கிறது. அது போல் தாங்கள் ராமகைங்கரியம் செய்த வண்ணமே தாங்கள் கடமையும் செய்யலாம். மலைபிஞ்சுகளை எடுத்துக் கொண்டு என் தலையில் ஏறிக் கொள்ளுங்கள். என்னிடம் தாங்கள் வாசத்தை இப்பொழுதே தொடங்கலாம்" என்றார் ஆஞ்சநேயர். சனியும் சில மலைபிஞ்சுகளுடன் ஆஞ்சநேயரின் தலையில் ஏறி அமர்ந்தார். அதனால் ஆஞ்சநேயருக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. ஆஞ்சநேயர் மேலும் சில மலைகளை எடுத்து தன் தலையில் இருந்த சனியின் மேல் வைத்துக் கொண்டு ராமநாமத்தை பாடிய வண்ணம் கடல் நோக்கி ஓடினார். மலைகளின் நடுவில் மாட்டிக் கொண்ட சனியின் பாடு திண்டாட்டமானது. "பகவானே, என்ன செய்கிறீர்கள்? நான் இங்கு நசுங்கிவிடுவேன்" என்று அலறினார்.

"அவரவர் கடமையை செய்கிறோம், இதில் என்ன கஷ்டம்" என்றார் ஆஞ்சநேயர். "பகவானே நான் உங்கள் காலை பிடித்துக் கொள்கிறேன், தலையிலிருந்து என்னை தயவு செய்து இறக்கி விட்டுவிடுங்கள்" என்று அலறினார் சனிபகவான். ஆஞ்சநேயர் காதில் விழாதது மாதிரி ஸ்ரீராம கைங்கரியத்தில் ஈடுப்பட்டிருந்தார்

சனிபகவானின் குரல் கேட்டு ஸ்ரீராமர், ஆஞ்சநேயரிடம் "ஆஞ்சநேயா, அவரும் சூரிய வம்சியப்பா, தலையிலிருந்து விடுவித்து விடு" என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

யோசித்தார் ஆஞ்சநேயர், பிறகு சனிபகவானிடம் "ஸ்ரீராமபிரானின் ஆணைப்படி தாங்களை தலையிலிருந்து இறக்கி விடுகிறேன், ஆனாலும் தாங்கள் கடமையை ஸ்ரீராமகைங்கரியத்துக்கு இடஞ்சலாக இருக்குமே, என்ன செய்ய" என்று கூறியவர் சனிபகவானை தலையிலிருந்து விடுவித்தார். இறங்கிய சனிபகவான் ஆஞ்சநேயரின் கால்களை பிடிக்க வந்தார். ஆஞ்சநேயர் அவரை ஒரே மிதியில் தன் கால்களுக்கு அடியில் மிதித்தார். தீனமான குரலில் "பகவானே, என்னை விட்டுவிடுங்கள், ஸ்ரீராமரிடைய நாமத்திற்க்கு என்ன பலம், ஸ்ரீராமபக்தனுக்கு என்ன பலம் என்பது புரிந்து விட்டது. ஸ்ரீராமா, உன் நாமாவையோ, ஆஞ்சநேயரின் நாமாவையோ, யார் கூறுகிறார்களோ அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்" என்று சனிபகவான் கூற ஆஞ்சநேயர் அவரை விடுவித்தார்.
யோ வக்திராம தே நாம மாருதே: அபிவா ஸ்வயம்
க்ஷணம் தத்ர ந திஷ்டேயம் ஸத்யம் ப்ரதி ஸ்ருணோமிதே


ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்
ஆஞ்சநேயரின் மஹிமைகளைப் பற்றிக் கூறும்போது
.....ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, வினயத்தில் உச்சநிலை - இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் என்று உண்டு என்றால் அது ஆஞ்ஜனேய ஸ்வாமிதான். .....பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம்.(ஐடியல்) .....ஆஞ்ஜனேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசித்து விடும். பரம வினயத்தோடு பகவத் கைங்கர்யம் செய்து கொண்டு எல்லாருக்கும் நல்லது செய்வோம்அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனைம்மை அளித்துக் காப்பான்

Tuesday, February 23, 2010

ஸ்ரீ சனீஸ்வரர்--4


ஒருசமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு, ""நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன்; என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று கேட்க, ""என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப் பதிலளித்தார் சனி பகவான். ""அப்படியானால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு'' என்று தேவேந்திரன் வேண்ட, சனி பகவான் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினைப்பு அவனுக்கு! அந் நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்ட பெருமையை அளக்க, சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, ""நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால்தான்!'' என்றார்
இப்படிப்பட்ட சனீஸ்வரர் ஒருவரை பிடித்து பட்ட பாடு இருக்கிறதே அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

Thursday, February 18, 2010

ஸ்ரீ சனீஸ்வரர் 3
இராவணன் தன் பராக்கிரமத்தால் நவ கிரகங்களைப் பிடித்துத் தன் சிம்மாசனத்துப் படிகளாகப் போட்டுவிட்டான். அவர்கள் முதுகில் கால் வைத்து அரியணை ஏறுவது அவன் வழக்கம். அதை ஒரு நாள் நாரதர் கண்டு, ""சனி பகவானே! எல்லாரையும் நீர் பிடிப்பீர். இப்பொழுது இராவணன் உம்மைப் பிடித்து விட்டானே?'' என்று பரிகசித்ததும் சனீஸ்வரன், ""என்ன செய்வது? என்னைக் குப்பு றப் போட்டு விட்டான். அதனால் அவனைப் பார்த்துப் பிடிக்க முடியவில்லை'' என்றார். அவ்வளவுதான். நாரதர் நேராக இராவணனிடம் சென்று, ""இராவணா! உன்னுடைய கீர்த்திக்கு சனியைக் குப்புறப் போட்டு முதுகிலா மிதிப் பது? மார்பின் மீதல்லவா அடிவைக்க வேண்டும்?'' எனக் கூற, உடனே இராவணன் அப்படியே மாற்றி விட்டான். அவன் படிகளில் ஏறும்பொழுது சனி திருஷ்டி ஏற்பட்டு விட்டது. பலன் யாவர்க்கும் தெரியும்.ராவணனுக்கு அழிவு அந்த நாள் முதல் ஆரம்பம்.

சரி திவாகர தனுஜம் பாட்டை இப்பொழுது பார்த்து கேட்டு ரசிக்கலாம்தொடரும்