Thursday, December 09, 2010

நினைவெல்லாம் ரகுராமன்1980 இந்த வருடம்தான் முதன்முதலாக ரகு என்கிற ரகுராமனை சந்தித்த வருடம்    என்  மனைவியின்  தங்கையை .பெண்பார்க்க வந்தார் அப்பாஅம்மாவுடன் . என்பீல்ட் மோட்டார் சைக்கிளில் வந்ததைப் பார்த்தவுடனேயே எனக்கு பிடித்துவிட்டது.என் வண்டியும் என்பில்ட் தான்.கண்களுக்கு சற்று கருத்த நிறம்தான் முதலில் தெரிந்தது ஆனால் உள்ளே இருக்கும் வெளுத்தமணம் தெரிவதற்கு பல வருடங்கள் ஆயிற்று.எந்தவித பந்தாவும் இல்லாமல் சரி என்று சொல்லிவிட்டார்.கடைசியாகப் பார்த்தது இல்லை இல்லை புருஷனாகப் போனவரை வெள்ளைப் பொட்டலத்தில் கருப்பு பெட்டியில் கண்டது 20 ஆம் தேதி நவம்பரில்.முப்பது வருஷ பிணைப்பு தங்கமணியின் தங்கையின் கணவராக மட்டும் அல்ல தங்கமான மனிதராக.எதையும் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் குணமே அவரையும் எடுத்துக்கொண்டது கடைசியாக. நான் இப்போது சொல்லப்போகும் மனிதர் ரகுராமன் என்றும் ரகு என்று செல்லமாக அழைக்கப்பட்டு 1951 ஜுன் 1ஆம் தேதி பிறந்து ,2010 நவம்பர் 19 ஆம் தேதி மறைந்தவர் திரைப்பட இயக்குனர் திரு . சுசிகணேசனுடன் இருப்பவர்தான் மஞ்சள் சட்டை அணிந்த  ரகுராமன்
நினைவுகள் தொடரும்

Friday, October 15, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 15 10 2010
இன்றைய நாமம்சிந்தூர திலகாஞ்சிதா


அம்பாளின் முகத்தில் திலகம் இருக்கிறதே அது எங்கே இருக்கிறது தெரியுமா இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது. அதுவும் அது இளம் சிவப்பு வண்ணமான சிந்தூரத்தினால் ஒளி பெற்று விளங்குகிறது.சூரியன் உதிக்கும் முன்பு அருணந்தான் முதலில் தோன்றுவான் அதுவும் இளம் சிவப்பாகத்தான் இருக்கும் அதே மாதிரி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போதும் இளம் சிகப்பு வண்ணமான சிந்தூர நிறம்தான்.எப்படி சூரியன் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் இளம்  சிகப்பு  நிறத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிகின்றானோ அது மாதிரிதான் தேவியும் சிந்தூர திலகத்துடன் எல்லாஇடங்களிலும் எல்லா நேரத்திலும் பிரகாசிக்கிறாள்.

லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன.  வானவில்லின்  நிறங்களை வரிசைப் படுத்தும் போது VIGBOYR  ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் அதனால்தான் அபிராமி  பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்துர திலகாஞ்ச்சிதா என்கிற இளம் சிகப்பு நிறம்    


நாளை இன்னுமொரு நாமத்தைப் பார்க்கலாமா?

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 14 10 2010இன்றைய நாமங்கள் 

திரிபுரா

படைத்தல்  காத்தல் அழித்தல் என்கிற முன்றுவகையான தொழில்களைச் செய்யும் பிரும்மா விஷ்ணூ, சிவன் ஆகிய மூவர்க்கும் மூத்தவள். சரி இவர்களே மிகவும் வயதானவர்கள் அவர்களுக்கும் மூத்தவள் என்றாள் மிகவும் வயதானவளா அம்மா நீ என்றால் அபிரமி பட்டரைக் கேட்கவேண்டும்.
"மூத்தவளே மூவாமுதல்வர்க்கும் மூத்தவளே பின் கரந்தவளே இளையவளே"
அம்மா நீ எல்லோருக்கும் மூத்தவளாக இருந்தாலும் இளயவளாகத்தான் எங்களுக்குக் காட்சியளிக்கிறாய்.
Thursday, October 14, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 13 10 2010இன்றைக்கு  எடுத்துக் கொள்ளும் நாமங்கள்

 
ரதிப்பிரியா


ரதிதேவியின் பிரியத்துக்கு உரியவள். அப்படி என்ன ரதிதேவிக்கு பிரியம் லலிதா தேவியின் மீது?.சிவனால் ஸ்ம்கரிகப்பட்டு ரதியின் கணவரான மன்மதன் சாம்பலாகிவிட்டான். ரதிதேவி அம்பாளை வேண்டி அவனை மறுபடியும் உயிர்ப்பித்து தருமாறு வேண்டினாள். அம்பாள் மன்மதனை எங்கு எந்த உருவத்தில் ஆவாஹானம் செய்யலாம் என்று தேடி சரியான இடம் கிடைக்காமல் தன்னுடைய முகத்திலேயே அவனுக்கு இடம் கொடுத்து ரதிதேவியை திருப்த்திப் படுத்தி அவளின் பிரியத்துக்கு பாத்திரமானாள். இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்மத ரதம் "என்று புகழ்கிறார்
அபிராமபட்டரும் "அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது" என்று அதிசயப் படுகிறார். இன்றைய சுண்டல் சிகப்பு அவல்
நாளை சந்திப்போம்

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 12 10 2010இன்று எடுத்துகொள்ள இருக்கும் நாமங்கள்


நாமபாராயணப் பீரிதா

லலிதா பரமேஸ்வரிக்கு மிகவும் பிடித்தது நாம பாராயணம்தான். அவளைவிட அவளது நாமப் பெருமையை நமக்கு உணர்த்துவதற்காகவே ஏற்பட்டது இது.கடவுளைவிட அவரது நாமம்தான் பெரியது என்பதற்கு சிறந்த உதாரணம் ராமரும் ஹனுமானும்தான்.சேது சமுத்ரத்தைக் கடப்பதற்கு ராமருக்கு தேவைபட்டது பெரிய வானரசேனை, கல் போன்றவைகள். ஆனால் ஹனுமானுக்கோ இவை ஒன்றும் தேவைப் படவில்லை.அவருக்கு கடலை சுலபமாக கடக்க உதவிசெய்தது அந்த ராம நாமம் மட்டும்தான்.அதுபோல்தான் எங்கெல்லாம் அம்பிகையின் நாமம் உச்சரிக்கப் படுகிறதோ அம்பிகை அந்த இடங்களிலெல்லாம் ஆனந்தமாக அமர்ந்திருப்பாள்.
 
 
இச்சாசக்தி ஞானசக்தி கிரியாசக்தி ஸ்வரூபிணி


ஆசைப்படும் சக்தியாகவும் அதற்கு வேண்டிய ஞானத்தைத் தரும் சக்தியாகவும் பின்பு அந்த ஆசையை பூர்த்தி செய்ய அவசியமான ஒன்றான செயப்பாடு சக்தியாகவும் விளங்குபவள்.மூன்று சக்திகளுக்கும் அவள்தான் தலைவி.வள்ளியை இச்சாசக்தியாகவும், தெயவயாணையை கிரியாசக்தியாகவும் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு சக்திகளும் சேர்ந்தால் அது ஞானத்தில் சென்று முடியும். அந்த சக்திதான் முருகன் என்ற ஞனபண்டிதன்
 
சர்வாதாரா


எல்லாவற்றுக்கும் அவள்தான் ஆதாரமாகவும் இருக்கிறாள். இந்த பூமிதான் நமக்கெல்லாம் ஆதாரம் ஆனால் அந்த பூமியை உற்பத்தி செய்தவள் அம்பிகைதான் எனவே அதற்கும் ஆதாரமாக இருப்பதால் அவள்  ஸர்வாதராவாக இருக்கிறாள். இந்த உலகத்தை படைக்கும் நான்முகனுக்கும் அவளே ஆதாரம். மற்றும் அழிக்கும் தொழில் செய்யும் சிவனுக்கும் காக்கும் தொழில் செய்யும் மாதவனுக்கும் அவளேதான் ஆதாரம் அதனாலும் அவள் சர்வாதாரா என்று அழைக்கப் படுகிறாள்.இதயே அபிராம பட்டர் வாயிலாகப் பார்த்தால் நன்கு புரியும்.

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும்நாரணனும்,அயனும் பரவும் அபிராமவல்லிஅடியிணையைப் பயன் என்று கொண்டவர். முத்தொழில் புரியும் மூவரும் தங்களது தொழில் சிறப்பாக நடைபெற உனது அடியயைத்தான் பற்றி இருக்கிறார்கள்நாளை சந்திக்கலாம், இன்றைய சுண்டல் காரமணி

Monday, October 11, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 11 10 2010


   பராசக்தி


மிகப்பெரிய சக்தியாக நிலைத்திருப்பவள்.அவளுடையபரிவார தேவதைகளுக்கும் சக்திகொடுப்பவள் அதனாலும் பராசக்தியாக விளங்குபவள்.பரம் என்று அழைக்கப்படும் சிவனுக்கே சக்தி அளிப்பவளாக இருப்பதாலும் பராசக்தி.இது நமக்கே புரிந்த ஒன்று.சக்தி இல்லாமல் சிவனால் ஒன்றும் செய்ய முடியாது.பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள் உனக்குத்தான் சக்தியில்லையே பேசாமே சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே என்று.
 
கலிகல்மஷநாசினிகலிகாலத்தில் ஏற்படும் கஷ்டங்களை போக்குபவள். கலிகாலத்தில்தான் அழிவுகளும் கஷ்டங்களும் அதிகம்.ஆனாலும் அந்த கஷ்டங்களையும் போக்கும் சக்தி படைத்தவள்தான் பராசக்தி.

நிஷ்பிரபஞ்சா.


இந்த பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டவள். உலகத்தைப் படைத்தவள் அவள்தான் இருந்தாலும் பிரபஞ்சகட்டுப்பாட்டுக்குள் அவள்தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டாள்.கடவுள் என்ற பதம் மாதிரி. கடந்தும் இருப்பவள் உள்ளும் இருப்பவள் அதன்னால்தான் கடவுளென்று பெயர் வந்தது.அதுபோல பிரபஞ்சத்துக்கு உள்ளேயும் இருப்பாள் அதைக் கடந்தும் இருப்பாள்.அபிராமபட்டரும் இந்த தத்துவத்தை விட்டுவைக்கவில்லை. "பூத்தவளே பூத்தவண்ணம் பதிநான்கு உலகத்தையும் காத்தவளே, பின் கரந்தவளே" என்று புகழ்ந்தார்
நாளை சந்திப்போம் பட்டாணி சுண்டல் எடுத்துக்கொண்டு செல்லுங்கள் 

 

Sunday, October 10, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10 10 10

இன்றைய பெயர்கள்
நித்யதிருப்தா
                                                 
எப்பொழுதும் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பவள். ஆன்மாக்களாகிய தன் பக்தர்களிடத்தில் குறைகள் இருந்தாலும் அதை மனதில் கொள்ளாது அவர் செய்யும் வழிபாடுகளால் சாஸ்வதமாக திருப்தி அடைபவள்.அவளுக்கென்று எந்த ஆசைகளும் இல்லாததால் மட்டும் நித்ய திருப்தாவாக இருப்பவள்.அது மட்டுமல்ல அவளது அடியார்களின் ஆசைகளையும் தீர்த்து வைத்து அவர்களையும் நித்யதிருப்தாவாகச் செய்பவள்.அவள் அதற்குமேலும் அடியயார்களுக்கு ஆசையே வரதாவண்ணம் அவர்களை வழிப்படுத்தி அவர்களையும் வசப்படுத்துபவள். ஆசையை தீர்த்து வைப்பதைவிட ஆசையே ஏற்படமல் செய்வது மிகவும் உத்தமம். திருமூலர் அதனால்தான் அடித்து கூறினார்" ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடுயாயினும் ஆசை அறுமின்"    இன்றைய காலகட்டத்தில் அப்படி நித்யதிருப்தாவாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?


ஆம் இருந்தார் ஒருவர் நம்முடைய காலகட்டத்திலேயே. அவர்தான் மஹாகவி பாரதியார்.நாம் இன்றைக்கு எந்த விஷயங்கள் எல்லாம் சந்தோஷம் என்று நினைத்து திருப்தி அடைவது போல் நினைக்கிறோமோ அவைகள் ஒன்றுமே இல்லாமல் இருந்தும் நித்யதிருப்தாவாக இருந்தார் . வீடு வாசல் கிடையாது, உனவுக்கு வசதி கிடையாது உடுக்க துணிவகைகள் கிடையாது ஆங்கிலேயன் தொல்லை தாங்காமல் பாண்டிச் சேரிக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார் . . இருந்தாலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா" எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்.அம்பிகையை முழுவதும் நம்பிவிட்டாவர்களுக்குத்தான் இது சாத்தியம்

                                          


  பக்தநிதி
    


பக்தர்களுக்கு மிகப்பெரிய நிதியாக விளங்குபவள். அடியவர்கள் எதை கேட்டாலும் அதை அவர்களுக்கு அளித்து என்றும் குறையாத நிதியாக விளங்குபவள்.மற்ற நிதிகள் எல்லாம் ஒருகாலத்தில் அழிந்துவிடும் திருப்தியளிக்காமல் போனாலும் போகலாம் ஆனால் பக்தர்களுக்கு அவள் அளிக்கும் பக்தி என்ற நிதி இருக்கிறதே அது அள்ள அள்ள குறையாது திருப்தியளிக்காமலும் போகாது.  
நிகிலேஸ்வரி

இந்த அண்ட சராசரத்துக்கும் ஈஸ்வரியாக இருப்பவள். அகிலமென்றால் உலகம். நிகிலம் என்றால் இந்த உலகத்தையும் சேர்த்து உள்ள ஈரேழு பதிநான்கு உலகத்திற்கும் ஈஸ்வரியாகவும் தலைவியாகவும் இருந்து காப்பவள்.மனித வர்கம்மட்டுமல்லாமல் புல், பூண்டு,புழு,மரம்,செடி, கொடி,பறவைகள்,பாம்பு,கல்,கணங்கள்,அசுரர்கள்,முனிவர்கள் மற்றும் ஒரு செல் உள்ள தாவரங்கள் ஆகிய எல்லாப் பதிநான்கு பிறப்புக்களுக்கும் அவள்தான் தாயாக இருந்து காக்கும் நிகிலேஸ்வரி.
 
சரி இன்றைய சுண்டலான கடலைபருப்பு சுண்டலை எடுத்த்க்கொண்டு நாளை  சந்திக்கலாம்
 

Saturday, September 11, 2010

வராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன்


விநாயகரைப் பற்றிய நினைப்பு வந்தாலே இந்த ஸோத்திரமும் நினைவுக்கு வரும். ஆதி சங்கரரால் புனையப்பட்ட எளிமையான ஸ்லோகங்களுள் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டிய ஸ்லோகம் இது.சிறுவயதில் பழக்கப்படுத்திக்கொண்டால் நாக்கு நன்கு புரளும் வார்த்தைகள் தெளிவாக வரும்..பக்கவாத நோய் வந்து நாக்கு பேச வராதவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்லப் பழகி பேசும் திறன் பெற்றவர்களும் உண்டு. இந்த புனித விநாயக சதுர்த்தியன்று விருப்பமுள்ளவர்கள் சொல்லிப் பழகுங்கள். எம் ஸ் அம்மாவின் குரலில் சேர்ந்து சொல்லிப்பாருங்கள்
கணேஷ பஞ்ச ரத்னம்
முதா கராத்த மோகம் ஸதா விமுக்தி சாதகம்
(சந்தோஷத்துடன் கையினில் மோதகத்தை வைத்திருப்பவரும் தன்னை அண்டியவருக்கு எப்பொழுதும் மோக்ஷத்தை கொடுப்பவரும்)
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
( பாலசந்திரனை விரும்பி அணிந்துகொண்டவரும்,அன்புள்ளம் கொண்டோரை காத்து ரக்ஷிப்பவரும்)
அநாய்கைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

(ஆதரவுஅற்றவர்களுக்கு நாயகனாய் இருப்பவரும் அடியவர்களின் குறைகளைத் தீர்ப்பவரும்)
நதாஸுபா பாசுரம் நாமாமிதம் விநாயகம்
(கஜமுகாஸுரனை கொன்றவருமான விநாயகனை நான் வணங்குகிறேன்)
நதேத்ராதி பீகரம் நவோதி துர்க்க பாஸ்வரம்

(வணங்காதவருக்கு பீதியைக் கொடுப்பவரும்,உதய சூரியனுக்கு ஒப்பானவரும்)
நம்த் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்
(தேவர்களால் வணங்கப்படுபவரும், வணங்கியவர்களின் துக்கத்தைப்போக்குபவரும்)
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்
(தேவர்களுக்கு தலைவரும்,அஷ்டநிதிகளை தருபவரும்,கஜமுகாசுரனுக்கும் தேவகணங்களுக்கும் தலைவராகவும்))
ஹேஸ்வரம் ஸ்மாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம்
(பரம்பொருளுக்கு நிகரானவரும், சாஸ்வதமாக வீடுபேறு அளிக்கவல்லவருமான விநாயகரை வணங்குகிறேன்)
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்
(கஜமுகாஸுரனை அழித்து உலகுக்கு நன்மை செய்தவரும்)
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்

(அழகிய யானை முகமும் பெருத்ததொந்தியும் உடையவரும்)
கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஷ்கரம்
(கருணை நிறைந்தவரும், குற்றங்களை மன்னிப்பவராகவும், மகிழ்ச்சியையும் புகழையும் அளிப்பவராகவும்)
மனஸ்கரம் நமஸ்கிருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
(தன்னை மனதால் வணங்குபவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவரை வணங்குகிறேன்)
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
(வறியவர்களின் துன்பத்தை களைபவரும்,உபநிஷதங்களில் உயர்வாகச்சொல்லப்பட்டவரும்)
புராரி பூர்வபுரா நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
(சிவனின் தலைமகனாய் அஸுரர்களின் கர்வத்தை அடக்கியவரும்)
ப்ரஞ்சநாச பீஷணம் தன்ஞ்ஜயாதி பூஷணம்
(உலகத்தைக் காப்பவரும் நன்கு அலங்கரிக்கப்பட்டவரும்)
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்
( மதஜலத்தால் மிளிர்கின்றவரும் புராணங்களுக்கு நாயகருமானவரைத் துதிக்கிறேன்)
நிதந்த காந்த தந்த காந்தி மந்தகாந்த காத்மஜம்

(முகத்திலிருக்கும் தந்தத்தின் ஒளியினால் முகமெல்லாம் பிரகாசிப்பவரும்)
அசிந்த்ய ரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்

(எண்ணத்தில் பதிக்கவொண்ணா உருவம் கொண்டவரும் யமனை அடக்கிய சிவனின் புதல்வரும்)
ஹிருதந்த்ரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
(முனிவர்களின் மனதை ஆனந்தநிலயமாக கொண்டவரும்)

தமேக தந்த மேவதம் விசிந்தாயாமி ஸ்ந்ததம்
(ஒற்றைக் கொம்பனான கணபதியை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்)
மஹா கணேச பஞ்ச ரத்ன மாதரேயோன் வஹம்(இப்படிப்பட்ட மஹா கணேச ஐந்து ரதனங்கள் போன்ற ஸோஸ்த்திரத்தை)
பிரஜல்பதி ப்ரபாதிகே ஹிருதி ஸ்மரன் கணேஸ்வரம்
(எவனொருவன் பக்தியுடன் காலைவேளையில் கணபதியை நினைத்து
சொல்லுகிறானோ)
அரோகத மதோஷதாம் ஸூஸாகிதீம் ஸுபுத்ரதாம்
(அவன் நோய் நொடி இலா வாழ்வும்,கலையாத கல்வியும்,தவறாத சந்தனாமும்,மாறாத கீர்த்தியும் மற்றும்)ஸ்மாஹிதாயுரஷ்ஸ்ட பூதி மப்யுபைதி ஸோசிராத்
(எல்லாச்செல்வங்களையும் வளங்களயும் பெற்று என்னச்சேர்ந்தவன் ஆகிறான்.)
இப்போது வீடியோவில் எம் ஸ் அம்மாவின் குரலில் காண்டும் கேட்டும் ரஸியுங்கள். பாட்டைக் கேட்டுக்கொண்டே படங்களையும் ரஸியுங்கள்.


கொசுறு: இதே ராகத்தில் ஒரு சினிமா பாட்டு உண்டு. எஸ்.பி.பாலு பாடியது. சொல்லுங்கள் பார்க்கலாம்

சரி எல்லோரும் பூஜை முடிந்து கொழுக்கட்டை, வடை,எல்லாம் சாப்பிட்டுவிட்டு மாலை இந்த பஜனையில் கலந்துகொண்டு வேழமுகத்தானின் ஆசியைப் பெற வாருங்கள். இதில் பக்தி பாடல்களை பாடுபவர்என்நண்பர்திரு.கணேஷ்குமார்அவர்கள். மும்பையில் மிகப் பெரிய தொழில் அதிபர்.மராத்திய அபங்கம்களைப் பாடுவதில் விற்பன்னர். நல்ல சாரீரவளமுடையவர். அதென்ன ஐய்யா அப்படி ஒரு சுருதி சுத்தம். பத்து செகண்டுக்குள் பஞ்சமத்தைப் பிடித்து விட்டு அதில் அப்படியே ஐந்து நிமிடங்களுக்கு மேல் சஞ்சாரிக்கும் வளம் உடனே ஐந்து

செகண்டுக்குள் ஷட்சமத்தை நோக்கி விர்ர்ர்ர் என்று இறங்கும் வண்ணத்தைக் காணலாம்.ஹார்மோனியத்தில் கைவண்ணம் பார்க்கவேண்டுமே விரல்களில் அனல் பறக்கும் போட்டி போட்டு குரலும் கையும் நம்மை அப்படியே தூக்கிச்செல்லும்.இதோ அவருடைய கணேசே கானங்களை கேட்டுவிட்டு சொல்லுங்கள். சொல்ல மறந்து விட்டேனே இவ்வளவு இருந்தும் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்.கூடப் பாடுபவர்களும் மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்.
கணபதி பூஜை என்றால் மஹாரஷ்ட்ராதான் நினைவுக்கு வரும். அதுவும் மும்பை சித்தி விநாயக் மந்திர் அழகே அழகு.வாருங்கள் பிரபாதேவிக்கு போய் மந்திரில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்து கொண்டே
பாடல்களை பார்த்து கேட்டு அனுபவியுங்கள்.


சரி விநாயகரிடம் எப்படி வேண்டிக்கொள்ளவேண்டும்<"எம்.ஸ்.அம்மாவின் வேண்டுதலை இங்கே கேட்கவும்">


வராது வந்த நாயகன் வரம் தரும் வினாயகன்
தந்தம் கொண்டு பாரதத்தை சந்தமாக எழுதியவன்


மூலமாக வந்தவன் ஆதிமூல நாயகன்
தடைகள் நீக்கி வரங்கள் அருளும் தயாபரன்
ஏழை எளிமை மக்களும் எளிதில் வணங்கும் உமாசுதன்
யானை முகமும் பானை வயிரும் கொண்டு ஞலம் காக்க வந்தவன்


விஸ்வக்ஷேணன், விக்னராஜன், எனப்பெயரும் கொண்டு
தனவருக்கும், வானவருக்கும்,நம்மவருக்கும்
தரணிதன்னில் பாலசந்திரனாக வந்து காத்து அருளும்
சக்தி தந்த சாதகன்


அகத்தியருக்கு அருள் புரிந்து காவிரி கவிழ்த்த கஜானனன்
அழகன் திருத்தணி முருகனுக்கு வள்ளியை மணம் முடிக்க
யானை வடிவில் வந்த அண்ணனை போற்றூவோம்
ஆழமான பக்திசெய்து அன்புடனே வணங்குவோம்


இந்த நன்னாளில் எளியேன் செய்த கவிதையை அவனுக்கே அர்ப்பணிக்கிறேன்

Wednesday, June 09, 2010

சோலைவனம் முதல் பாலைவனம்வரை 19 நாட்கள் பயணம்
Dear Friends I have some trouble in applying Tamil fonts in Dubai. So this time in English.my recent visit to Europe will make me to write about what I have seen there. I will reach Chennai on 10 th June and commence on the head given here. But why buildup here today 9th June. This is an important day in my life.Rest in next post.

Sunday, March 07, 2010

பிரதோஷ மஹிமை-- 4


அன்று பிரதோஷதினம் மாலை நேரம் நெருங்கியதால் நரஹரிக்கு சிவ பூஜைக்கு நேரமாகிறதே என்ற கவலைவேறு வந்து விட்டது.வாடிக்கையாளரின் கெஞ்சலும் அதிகமாகியது.நரஹரிக்கு தொழில்மீது மிகுந்த பக்தி உண்டு. அப்போது அந்த தனிகர் சொன்னார் நரஹரியே கோவிலூக்கு வந்து பாண்டுரங்கனின் இடுப்பின் அளவை எடுத்து செய்தால் சரியாக வரலாம் என்று.அதைக்கேட்டவுடன் எப்படியாவது சிவபூஜைக்கு இடர் வராமல் இருந்தால் சரி என்று நரஹரியும் ஒரு நிபந்தனையுடன் அரைமனதுடன் ஒத்துக்கொண்டார்.

அந்த நிபந்தனை கோவிலுக்குள் வந்தாலும் கண்களை ஒரு கறுப்புத்துணியால் இறுக்கக் கட்டிக்கொண்டு வந்து சில நிமிடங்களே இருந்து அளவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவபூஜைக்கு திரும்பிவிடுவேன்.பாண்டுரங்கணை கண்களால் பார்க்கமாட்டேன்.சரியென்று எல்லோரும் ஒத்துக்கொண்டனர். நரஹரியும், விட்டல பக்தரும், மற்றும் ஊர் ஜனங்களும் பண்டரிநாதன் கோவிலுக்கு கிளம்பினார்கள்

கோவில் வாசலை அடைந்ததும் நரஹரி தனது கண்களை ஒரு கறுப்பு வஸ்த்திரத்தால் இறுகக் கட்டிகொண்டார்.அவரை விட்டல பக்தர் அழைத்துக்கொண்டு பாண்டுரங்கனின் விக்கிரகத்துக்கு அருகில் நிற்க வைத்து நரஹரி விட்டலனனின் இடுப்பு அளவை எடுத்துக்கொள்ளூங்கள் என்றார்.நரஹரியும் வேண்டா வெறுப்புடன் பண்டரிநாதன் மீது கைகளால் தடவி இடுப்பின் அளவை ஒரு கயிற்றின் மூலமாக எடுக்க முற்பட்டார்.

முதலில் இடுப்பை தடவும் போதுநரஹரியின் கைகளுக்குபுலித்தோல் தென்பட்டது. நரஹரி ஆச்சர்யத்துடன் தன்னை மறந்து மேலே கைகளை கொண்டு சென்று மேலும் தடவினார். இப்போது விக்கிரஹத்தின் கழுத்தில் ருத்ராக்ஷமாலை பட்டது.பின்னர் தேடும்போது வழ வழவென்று பாம்பு போன்ற வஸ்து பட்டது, மேலும் கைகளின் ஒரு புறம் டமருகம்மும், திரிசூலமும் பட்டது, மறுபுறம் மானும்,மழுவும் பட்டது.மேலும் ஆச்சர்யத்துடன் உணர்ச்சியின் மிகுதியாலும் தலையின்மீது தடவும்போது கங்கையும், பாலாசந்திரனும்,ஜடாமுடியும் பட்டது

கூடியுருந்தவர்களுக்கு ஆச்சர்யம் நரஹரி எதற்காக பண்டுரங்கனின் உடம்பு முழுவதும் தேடுகிறார் என்று.நரஹரிக்கோ வேறு விதமான நிலை. கையில் தென்பட்டதெல்லாம் சாக்ஷாத் சிவனின் அம்சங்கள் ஆனால் இவர்களோ இவனை ராமச்சந்திரனாக அவதாரம் எடுத்த
விஷ்ணு என்று சொன்னார்கள். ஒருவேளை இப்போது பிரதோஷ சமயம் அதனால் தனக்கு சிவனின் மீது உள்ள அபார பிரேமையால் மனப்பிரமையோ என்று நினைத்து மீண்டும் ஒருமுறை தடவிப்பார்க்கலாம் என்று பாண்டுரங்கனை தடவினார். ஆனல் இந்த முறையும் ருத்திரனனின் அம்சங்களே கைகளில் பட்டது.என்ன தோன்றியதோ என்னவோ நரஹரிக்கு திடீரென்று தன் கைகளினால் கண்ணைக்கட்டியிருந்த கறுப்புத்துணியை விலக்கி விக்கிரஹத்தைப் கண்களால் உற்றுப் பார்த்தார்.

என்ன ஆச்சர்யம் அவர்கண்களில் தென்பட்டவர் சாக்ஷாத் உமாதேவியுடன் சந்திரசேகரனா இல்லை இல்லை. இடுப்பில் கைவைத்துக்கொண்டு,கைகளில் சங்கம், சக்ரம், கதை, சார்ங்கம் ஏந்திக்கொண்டு கழுத்தில் வைஜயந்தி துளசி மாலையையும் அணிந்துகொண்டு ரகுமாயியுடன் பாண்டுரங்க விட்டலன் காட்சி கொடுத்தான். நரஹரிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மறுபடியும் கண்களை கட்டிக்கொண்டு விட்டலனைத் தடவினார். இப்பவும் அதே ருத்ர அம்சங்களுடன் சிவன்னாகவே விட்டலன் நரஹரிக்கு காட்சி கொடுத்தார். அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களும் கீழே உள்ள வீடியோ படத்தில் பாருங்கள் மெய்சிலிர்க்க வைக்கும்.
இப்பொழுதுதான் நரஹரிக்கு புரிந்தது பாண்டுரங்க விட்டலந்தான் தனக்காக பிரதோஷ வேளையில் ருத்திரனாகக் காட்சி அளித்தான் என்பது. கண்கட்டுகளை அவிழ்த்தெறிந்துவிட்டு தரையில் விழுந்து புரண்டு அழுதார். ஆஹா அறியாமையினால் பாண்டுரங்கன் வேறு சிவன் வேறு என்று நினைத்து பாண்டு ரங்கனை காணாமல், வணங்காமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டேனே.நான் பாவி என்று அலறினார்.
உடனே பாண்டுரங்கன் அசிரீரியாக நரஹரி உன்மூலமாக உலகத்துக்கு நான் வேறு சிவன் வேறு இல்லை என்பதை உணர்த்தவே இந்த என்னுடைய லீலையை நடத்தினேன்.. நீ சிவனுக்கு என்று நினைத்து செய்த பூஜை எல்லாம் என்னிடத்தில் வந்து சேர்ந்து விட்டது. எனக்குச் செய்யும் பூஜையும் சிவனுக்குப் போய்சேரும் என்றருளினார்.

(இதை எழுதுபோதுதான் அர்த்தமே சரியாகத் தெரியாமல் தினம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் திக்தேவதா வந்தனத்தில் வரும் ச்லோகத்தின் பொருள் புரிந்தது. "ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி" எப்படி ஆகாயத்திலிருந்து வரும் தண்ணீரானது சமுத்திரத்தை சென்று அடைகிறதோ அதே மாதிரி எல்லா தெய்வங்களுக்குச் செய்யும் நமஸ்காரங்கள் கேசவனைச் சென்று அடையும் என்பதுதான் அது)உடனே அவர் செய்த அரைஞாண்கயிறு விட்டலன் விக்கிரஹத்தில் சரியாகக் பொருந்தியது.நரஹரியும் விட்டலனனின் பரம பக்தனாகி விட்டார்.பாண்டு ரங்கன் மீது நெறைய அபங்கங்கள் பாடினார். ஒரு அபங்கத்தில் கூறுகிறார் "இந்த விக்கிரஹத்தில் நீ சிவனா விஷ்ணுவா என்ற கவலையெல்லாம் எனக்கு கிடையாது எல்லா ஐஸ்வர்யங்களும் எனக்கு வேண்டாம் எனக்கு வேண்டுவதெல்லாம் உன்னுடைய அளவற்ற கருணயும் அபிமானமும் மட்டும்தான்".கீழே பாருங்கள் நரஹரி பாண்டுரங்க பக்தனாகி அபங்களைக் பாடுகிறர்


நாமும் அதே மாதிரி பாண்டுரங்கணையும் சிவனையும் போற்றும் பாடல்களைக் கேட்கலாம். முதலில் திரு. ஓ. ஸ் அருண் பாடிய பக்தஜன வத்ஸலே என்கிற நாமதேவரின் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த அபங்கம்இதோ மஹாதேவ சிவசம்போ என்ற ரேவதி ராகத்தில் அமைந்த தஞ்ஞாவூர் சங்கரன் எழுதியபாடல்.Friday, March 05, 2010

பிரதோஷ மஹிமை-3

பிரதோஷப் பதிவில் அம்பி ஒரு கேள்வி கேட்டிருந்தார். பிரதோஷவேளை சமயத்தில்தானே நரசிமஸ்வாமியும் அவதரித்தார் என்று. நானும் ஆமாம் என்று சுருக்கமாக சொல்லியிருந்தேன்.பின்பு யோசித்துப் பார்த்ததில் அதற்கு பதில் ஒரு பதிவாகவே போட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு.
இஷ்டத் தெய்வத்தை உபாசிப்பவர்கள் அந்த வழிபாட்டையே சிலாகித்துப் போற்றலாம். ஆனால் மற்ற தெய்வங்களை தூஷிக்கலாகது.உற்றுப்பார்த்தால் ஹரியும் ஹரனும் ஒன்றுதான் என்ற உண்மை புலப்படும் .

பிரதோஷகாலத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சம உரிமை உண்டு.இதை நாம் புரிந்து கொண்டு கடை பிடிக்கவேண்டுமென்றால் பண்டர்பூரில் அவதரித்த மஹான் நரஹரி சோனாரின் வாழ்க்கையை படித்தால் போதும்


நரஹரி என்பவர் விட்டல பாண்டுரங்கன் இருக்கும் பண்டர்பூரில் தங்க நகைகள் செய்யும் குலத்தில் பிறந்தவர்.அவரை எல்லோரும் நரஹரி சோனார் என்று அழைப்பார்கள்.அந்தத் தொழிலில் அவரை யாரும் மிஞ்சமுடியாத அளவு கீர்த்தி பெற்றிருந்தார்.அவர் வசித்த இடமோ பாண்டுரங்கன் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ள மாஹத்துவாரம் எனப்படும் இடம்.நரஹரியோ தீவீர சிவ பக்தர்.சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடமாட்டார். இவ்வளவு ஏன் பண்டர்பூருக்கு ஏராளமான பேர் வந்து விட்டலனை தரிசனம் செய்தாலும் இவர் மட்டும் கோவிலுக்கு சென்றதோ பாண்டுரங்கனை வழிபட்டதோ கிடையாது.பாண்டுரங்கனுக்கு விழா நடைபெரும் நாட்க்களில் ஊரைவிட்டே சென்றுவிடுவார் விட்டலா விட்டலா என்ற நாமம் காதில் விழக்கூடாதாம்.ஊரில் உள்ளோர் யவருக்கும் இது தெரியும்.

ஒரு சமயம் வெளியூரிலிருந்து ஒரு பணக்கார பாண்டுரங்க பக்தர் வந்தார். அவர் வந்த விஷயம் நெடுநாட்களாக அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து விட்டலனின் அருளால் ஒரு மகன் பிறந்தான்.அவருக்கு வேண்டுதல் மகன் பிறந்தால் பாண்டுரங்கனுக்கு கேசாதி பாதம் தங்க நகைகள் செய்து போடுவதாய்.ஊரில் விசாரித்ததில் எல்லோரும் நரஹரியின் பேரைத்தான் சொன்னார்கள். அவரும் நரஹரியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். உள்ளே நரஹரி நமச்சிவாய நமச்சிவாய என்று பஞ்சாட்ஷர மந்திரத்தை செபித்துக்கொண்டு இருந்தார்.வந்த விட்டல பக்தரும் என்ன என்ன நகைகள் செய்ய வேண்டும் என்று பட்டியலைக் கொடுத்தார்.அதை வாங்கிப் பார்த்த நரஹரியும் யாருடைய அளவிற்குச் செய்ய வேண்டும் என்றார்.

பக்தர் சொன்னார் நகைகள் யாவும் பாண்டுரங்கனுக்கு என்றும் தன்னுடைய வேண்டுதலையும் எவ்வளவு வேண்டுமனாலும் பணம் தருவதாகவும் சொன்னார். கேட்டவுடனே நரஹரி மிகுந்த கோபத்துடன் வந்தவரை வெளியே போகச் சொல்லி பாண்டுரங்கனின் பேரைகூடச் சொல்லமாட்டேன் அவனுக்கு நான் நகை பண்ணுவதா என்றார்.பக்தரோ விடுவாதாக இல்லை. அவர் காலைப் பிடித்துகொண்டு கதறி எப்படியாவது நகைகள் செய்து தரவேண்டும் இல்லையென்றால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத பாவியாகிவிடுவேன் என்று கெஞ்சினார்.

நரஹரியும் மனது இரங்கி போனால் போகட்டும் நான் கோவிலுக்கு வரமாட்டேன் பாண்டுரங்கனையும் பார்க்கமாட்டேன் என்வீட்டிலேயே இருந்துகொண்டு என்னுடைய தொழில் அனுபவத்தின் துணையோடு நகைகள் செய்து தருகிறேன் நீயே பாண்டுரங்கனுக்கு சாத்தவேண்டும் என்று கூறி விட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அளவுடனும் நகைகளைச் செய்து கொடுத்தார்.

பக்தரும் அதை அப்படியே வாங்கிக்கொண்டு பாண்டுரங்கன் கோவிலுக்கு வந்து நகைகளை விட்டலனுக்கு சாத்தினார். எல்லா நகைகளும் சரியாக நேராக வந்து அளவெடுத்துச் செய்தமாதிரியே இருந்தது ஒரு நகையைத்தவிர. அதுதான் விட்டலனின் அரைஞாண்கயிறு. அதைச் சாத்தியபோது இரண்டு விரக்கடை அளவு கம்மியாக இருந்தது. பக்தரும் மறுபடியும் நரஹரிவீட்டுக்கு ஓடிச் சென்று அரைஞாண் கயிறு அளவு போதவில்லை என்று கூறினார்.நரஹரிக்கு நம்பிக்கையில்லை இருந்தாலும் உடனே இரண்டு விரக்கடை அளவு கூட வைத்து செய்து போட்டுப் பார்க்கச் சொன்னார்.

அதனை எடுத்துக்கொண்டு மறுபடியும் கோவிலுக்குச் சென்று விட்டலனுக்கு அணிவித்துப் பார்த்தார். என்ன ஆச்சர்யம் இந்த முறை அரைஞாண் கயிறு இரண்டு விரக்கடை கூட இருந்தது. மறுபடியும் நரஹரி வீட்டுக்கு திரும்பி வந்து நடந்ததை சொன்னார். நரஹரிக்கு நம்ம முடியவில்லை. அவரது தொழில் திறமை மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கை. ஏன் ஊர் ஜனங்களே நம்ப வில்லை.என்ன செய்வது என்று அவருக்கும் புரியவில்லை. தன்னை நம்பிய பக்தரையும்கைவிட மனமில்லை. என்ன செய்யலாம் என்று யோஜிக்கலானார். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர் ஜனங்களும் நரஹரியின் வீட்டு வாசலில் நரஹரி கோவிலுக்குள் செல்லாமல் பாண்டுரங்கனைத் தொட்டு அளவெடுக்காமல் எப்படி சரி செய்யப் போகிறார் என்பதைக் காண குழுமி விட்டனர்

மறுபகுதியை அடுத்த போஸ்டில் பார்க்கலாமா?Tuesday, March 02, 2010

பிரதோஷ மஹிமை--2

அருகே எழுந்தருளியிருந்த பரமேசுவரி பக்தர்களுக்காக ஐயன் காட்டும் பரிவைக் கண்டு பயமும், பக்தியும் கொண்டார்.
எம்பெருமான், பிரளயகாலத்து அக்னியைப் போல் தீக்ஷண்யமுள்ள கொடிய விஷத்தை உண்ணும் தருணத்தில் விஷம் கண்டத்தருகே வந்ததும் அனைவரும் அலறினர்.
“தேவாதி தேவா! எங்களைக் காத்தருளும் சகலதேவ பூஜிதரான தேவரீர் இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தாங்கிக் கொள்ள வேண்டும். அகில உலகங்களும் தேவருள் அடக்கம் தானே? அதனால் இவ்விடம் ஐயனின் உடலுள் சென்றாலும் அகில லோகங்களும் அழிந்து போவதென்பது திண்ணம்” என்று பிரார்த்தித்தனர்.

அது சமயம் அருகே அமர்ந்திருந்த அன்னபூரணி - அண்டமெல்லாம் காத்தருளும் கற்பகத் தருவாக விளங்கும் கற்பகவல்லி - திரிபுரசுந்தரி,உமாதேவி தம் திருக்கரத்தால் எம்பெருமா னின் கண்டத்தை மெதுவாகத் தடவி சற்று அழுத்தினார்.
மறுகணம் விஷம் கண்டத்திலேயே தங்கியது. அம்பாளின் திருக்கர ஸ்பரிசத்தினால் நஞ்சும் அமுதமாகி நாயகனின் கண்டத்தில் கருமணி போல் தங்கியது.
எம்பெருமான் ‘திருநீலகண்டர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

பிரம்மாதி தேவர்கள் தேவராக்ஷஸ பைசாச கணங்கள் முதலியோர் கரங்குவித்து, “ஷட்குண ஐச்வரிய சம்பன்னரும், எங்களுக்கெல்லாம் ஆதிமூலமான பெருமானே! தேவரீருடைய வல்லமையும், வீரியமும், பராக்கிரமமும், மகிமையும் ஈடிணையற்றவை. தாங்களே சராசரங்களுக்குப் பிரபுவும், பிராண கோடி களைப் படைத்தும், காத்தும், அழித்தும், அருளும் முத்தொழில் மூர்த்தி” என்றெல்லாம் பலவாறு தோத்திரம் செய்தனர்.
இவ்வாறு விஷத்தால் அமரர்களுக்கும், அடியார்களுக்கும் தோஷம் எதுவும் ஏற்படாமல் காத்தருளிய சிவனுக்கு உகந்த காலம் தான் பிரதோஷகாலம். அக்காலத்தில் அண்ட சராசரங்களும் பகவானின் நமச்சிவாய மந்திரத் தைச் சிந்தையிலே கொண்டு ஏகாந்தத்தில் அடங்கி ஒடுங்கும்.
பொன்னார் மேனிதனில் புலித்தோலை அணிந்த அண்ணல் மானும், மழுவும், சூலமும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன், தண்டை சிலம்பணிந்த சேவடி கிண்கிணி ஓசை எழுப்ப நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே ஆனந்த நர்த்தனம் புரியும் வேளை!
இச் சுபயோக சுபமுகூர்த்த வேளை தான் பிரதோஷ காலம்!
நம்மை எல்லாம் ஆட்டி வைப்பவன் தானும் ஆடுகின்றான். அவன் ஆடுவதால் உலகமே ஆடி ஒடுங்குகிறது.
இப்பிரதோஷ கால வேளையில் ஐயன் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனத்தை பிரம்மாதி தேவர்களும், வசிஷ்டாதி முனிவர்களும் கண்டு களிக்கின்றனர்.
எங்கும் தேவகானங்களும் வாத்திய கோஷங்களும், மந்திர ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மண்ணுலகத்தோரும் கண்டு களித்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி மிதப்பர்.

எம்பெருமான் விடமுண்ட நாள் சனிக் கிழமை எனப்படுகிறது. அதனால் சனிக்கிழமை நந்நாளில் வரும் பிரதோஷம் மிக்க சிறப்பும், மகிமையும் பொருந்தியதாகும்.
பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.
1.நித்திய பிரதோஷம்,
2.பக்ஷப் பிரதோஷம்,
3.மாதப் பிரதோஷம்,
4.மஹாப் பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்
.
அனுதினமும் சூரியாஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நக்ஷத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள காலகட்டம் நித்திய பிரதோஷம் எனப்படும், சந்தியா காலமாகும்.
சுக்லபக்ஷ சதுர்த்தி மாலைக் காலம் பக்ஷ பிரதோஷம் எனப்படும்.
கிருஷ்ண பக்ஷ திரயோதசி மாதப் பிரதோஷம் என வழங்கப்படும்.
கிருஷ்ண பக்ஷ திரயோதசி-ஸ்திரவாரமாகிய சனிக்கிழமை தினம் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹா பிரதோஷம் எனப்படும்.
பிரளய காலத்தில், எல்லாம் சிவனிடம் ஒடுங்கும் அதுவே பிரளய பிரதோஷமாகும்.
இந்த ஐந்து பிரதோஷ காலங்களில் எம்பெருமான் ஆனந்த நடனம் புரிந்து அகில லோகங்களுக்கும் அருள் பாலிக்கிறார்.
பேசப் பேசப் பெருகிக்கொண்டே போகும் சிவனார் திருப்புகழ். தென்னாடுடைய சிவன். எந்நாட்டவர்க்கும் பரமசிவன். சிவபெருமானை சிவப்ரதோஷமான சிவப்பெருநாளில் வழிபடுகின்றவர்கள் சிவனையொத்த வடிவம் பெறுவார்கள்.
சிவத்தலங்களில் சிவப் பெருநாளான பிரதோஷ காலங்களில் சிவனடியார்கள் கூடி 'மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!' என்று போற்றுவார்கள். மற்றவர்களால் போற்றப்படுவார்கள்.
'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்.

வாயாரத்தன்னடியே பாடும் தொண்டர் எனத்தகத்தான்' என்று ஏற்றுகின்றவர்கள் மற்றவர்களால் ஏற்றப்படுவார்கள். சிவனைப் பூஜிக்கின்றவர்கள் யோகசாலிகள். அளவற்ற செல்வச் செழிப்பில் வாழ்வார்கள்.
'சிவசிவ' என்று சிவத்தையே செபித்து 'சிவசிவ' என்று −ருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள். சிவனே சித்தன், சித்தனே சிவன், சிவத்துக்குள் சித்தனையும் சித்தனுக்குள் சிவத்தையும் பார்க்கத் தெரிந்தவர்கள் பூத்துப் பொலிந்தவர்கள்.
சிவபெருமானை எப்பொழுதும் நினையுங்கள். அவன் திருவடியை பாடுங்கள். நீங்கள்தான் கைலாயத்தின் நிரந்தரவாசிகள்.
சிவ சிவ சங்கர
ஹர ஹர சங்கர
. இங்கே பாருங்கள் எத்தனை விதமான நந்திகள்
.சாயங்காலம் ஐந்து மணிக்குகெல்லாம் ஆபீஸ் இருக்குது எங்களாலே பிரதோஷ பூஜைஎல்லாம் பாக்க முடியாதுன்னு சொன்ன இதோ உங்களுக்காக பூஜை வலையிலேயே போட்டாச்சு. பாருங்க.
இந்த பிரதோஷத்துக்கு சிங்கபூரில் எங்கள் வீட்டு அருகில் உள்ள செங்காங் முருகன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பாருங்கள். சிவன் எப்படி அலங்காரத்தில் தகதகவென்று மின்னுகிறான்.தலையில்கங்கையுடன், சந்திரசேகரனாக காக்ஷி தருகிறார். முருகனும்கூட இருந்து அருள்பாலிக்கிறான்.

Sunday, February 28, 2010

பிரதோஷ மஹிமை--1சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு! வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம்! அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். நம பார்வதிபதயே! ஹரஹர மகாதேவா!!

பிரதோஷ காலம் சூரியாஸ்தமனத்தோடு தொடங்குகிறது. பிரதோஷ காலம் பரமேச் வரனைத் தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும். அதாவது ஈசுவரன் தன் வசப்படுத் திக் கொள்ளும் காலம் மிகவும் விசேஷமாகும்.
உலகம் ஒடுங்குகிறது; மனம் ஈசுவரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம். சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம்.
வில்லை விட்டு அம்பு சென்று விட்டாலும், மந்திர உச்சாரண பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வது போல ஈசுவரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொள்கிறான்.

பிரதோஷ காலத்தில் ஈசுவரன் எல்லாவற் றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால் வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அது அமையும்.
உதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. இராத்திரி ஆரம்பத்தைத் தான் பிரதோஷ காலம் என்கி றோம். அதனால் தான் இரவு நித்திய பிரளய காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நித்திய சிருஷ்டியும், நித்திய பிரளயமும் நடக்கின்றன. பறவைகள், பசுக்கள் முதற்கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள் கூட, தம் விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஒடுங்கிக் கொள்கின்றன.

அந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்குத் தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்திய பிரளய நேரத்தில், நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம் அதில் லயித்து விடுகின்றன.

பிரதோஷ வேளைகளில், பரமேசுவரன் உலக சக்தி முழுவதையும் தன் வசம் ஒடுக்கிக் கொண்டு நர்த்தனம் செய்யும் வேளையில், நாம் ஈச்வரனையே வழிபடவேண்டும்.

பிரதோஷ கால மகிமையை விளக்கும் புராண வரலாற்றுக் கதையைப் பார்ப்போம்.

ஒரு முறை திருப்பாற்கடலில் அமரர்களும், அசுரர்களும் ஒன்று திரண்டனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம் பைக் கயிறாகவும் பூட்டி அமிர்தம் பெற பாற் கடலைக் கடைந்தனர்.
ஸ்ரீமந் நாராயணனின் தந்திரப்படி சர்ப்பத் தின் வாலைத் தேவர்களும் தலையை அசுரர் களும் பிடித்துக் கொண்டு அமிர்தம் எடுக்க கடைந்து கொண்டிருந்தனர்.
விஷாக்கினி ஜுவாலையுடைய வாசுகியின் பெருமூச்சுக் காற்றினால் அசுரர்கள் தேஜஸ் குறைந்து, பராக்கிரமமும் மறைந்து பலவீனர்கள் ஆயினர்.
அதே சமயம், வாசுகியின் சுவாச வேகத் தினால் மேகங்கள் அங்குமிங்குமாக அடித்துத் தள்ளப்பட்டு வால் பக்கம் பெரு மழையைப் பொழிந்தன. அப்பொழுது கடல் பொங்கியது. அனைவரும் அஞ்சினர். மந்திர மலை உள்ளே அழுந்தத் தொடங்கியது.
ஸ்ரீமந் நாராயணன் கூர்மாவதாரம் எடுத்து குவலயம் காத்தார். அமரர்களுக்கு அரும்பெரும் சகாயம் செய்தார்.
ஸ்ரீயப்பதியின் திருவருளால் திருப்பாற் கடலிலிருந்து சகல தேவர்களும், முனிவர்களும் பூஜித்து வரும் காமதேனு உதயம் ஆயிற்று. பின்னர் வாருணி தேவி வந்தாள். பரிமளமான பாரிஜாத வ்ருக்ஷம் தோன்றியது. ஜகன் மோகன ரூபலாவண்ய அப்சரஸ் பெண்கள் வந்தனர். குளிர்ச்சி தரும் சந்திரன் வந்தான்.
கங்கையைத் திருச்சடையில் தாங்கிய சங்கரன் சந்திரனையும் சூடிக் கொண்டு சந்திரசேகரன், சந்திரமௌலி என்று பெயர்க்கீர்த்தியும் பெற்றார்

இத்தருணத்தில், கயிறாக அப்படியும், இப்படியுமாக இழுக்கப்பட்ட வாசுகி வேதனை தாளாமல் விஷத்தைக் கக்கியது.
அந்த ஆலகால விஷம் கார் காலம் போல் கருமை நிறம் சூழ்ந்து மலைபோல் ஓங்கி உயர்ந்து வடமுகாக்கினியைப் போல் சீறிப் பாய்ந்து மேலும் மேலும் எழுந்தது.
அமரர்கள் அஞ்சி நடுங்கினர். அபயம் தேடி நாரணனையும், நான்முகனையும் நாடினர். அவர்களும் விஷத்தின் கொடுமையைக் கண்டு வியந்தனர். அனைவரும் ஒன்று கூடி கயிலாய மலைக்குப் புறப்பட்டனர்.
“மகா தேவா! கங்காதரா! சர்வலோக ரக்ஷகா சரணம்! சரணம்! அருள் தரும் அண்ணலே அபயம்! அபயம்!” என்று பெரு முழக்கமிட்டுக் கொண்டு, திருக்கயிலைத் திருமாமலையை வந்தடைந்தனர்.
பனிமலை போல் விளங்கும் சிவன் கோவிலில் நவரத்தின மணிபீடத்தில் சிவபெருமான் அருட்பெரும் ஜோதியாக ஆதியும் அந்தமும் அற்ற பெருந்தகையாய் முழுமுதற் பரம்பொருளாய் இமயவல்லி அம்மையுடன் எழுந்தருளியிருந்தார்.

சிவக் கோவிலின் திருவாயிலிலே நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி காவல் புரிந்து நின்றார்.
கடல் போல் திரண்டு வந்த தேவர்கள் நந்திதேவரை வணங்கினர்.
“நந்தி தேவா! நமஸ்கரிக்கின்றோம். திருப்பாற்கடலில் விஷம் பொங்கி வந்துள்ளது. அதனை அணுக இயலாத நாங்கள் அச்சமுறுகிறோம். அதற்கு ஒரு மார்க்கம் காண சர்வலோக ரக்ஷகரான சர்வேஸ்வரனைக் காண வேண்டும்.”
இவ்வாறு அமரர்கள் வேண்டுகோள் விடுத்ததும் நந்திதேவர் அவர்களை திருவாயி லின் முன்னே நிறுத்திவிட்டு, சிவபெருமானி டம் சென்றார்.
நந்திதேவர், உள்ளே சென்று எம்பெருமானி டம் திருவாயிலில் தேவர்கள் காத்திருப்பதையும் திருப்பாற் கடலில் விஷம் பொங்கி எழுந்துள்ள தால் உடனே ஐயனைத் தரிசிக்க வேண்டும் என்று விண்ணப்பித்ததாகவும் கூறினார். சிவபெருமான் தேவர்களை உடனே உள்ளே அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

நந்திதேவர் ஐயனை நமஸ்கரித்து வெளியே வந்தார். தேவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். தேவர்கள் சென்னி மீது கரம் உயர்த்தி நமஸ்கரித்து நாதனைப் போற்றித் துதித்தனர்.
“லோக நாயகா! விடையேறும் பெரு மானே! விஷம் பொங்கி வருகிறது திருப்பாற் கடலில். காத்தருளுவீர் கயிலை வாசா!”
சிவபெருமான் அமரர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டார்.
தொண்டர்களுக்காக இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கும் கருணாமூர்த்தியல்லவா சிவபெருமான்!
நொடிப் பொழுதில் அவ்விஷத்தைத் திருக் கரத்திலே வாங்கிக் கொண்ட எம்பெருமான் “தேவர்களே! இவ்விஷத்தை யாம் உண்டு விடவா? அல்லது விட்டுவிடவா?” என்று வினவினர்.
விஷத்தின் உக்கிரத்தால், அஞ்சி நடுங்கி யவாறு நின்று கொண்டிருந்த அமரர்கள் “தேவர் இதனை விட்டுவிட்டால் இவ்விஷம் உலத் தையே அழித்து விடும். அதனால் ஐயன் உகந்த வழி செய்க” என்று வேதனையுடன் விண்ணப் பித்தனர்.

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாமா

Thursday, February 25, 2010

ஸ்ரீ சனீஸ்வரர் 6


எல்லோரையும் நடுங்க வைக்கும் சனீஸ்வர பகவானையே, திருவாரூர் தியாகேசப் பெருமானை வணங்கி வென்றவர் தசரத மகாராஜா. அந்தக் கதையை இங்கு பார்ப்போம்.தசரத மகாராஜாவிற்கு சனி தசை ஆரம்பிக்கின்ற வேளை.... அப்போது மன்னரின் குலகுருவான வசிஷ்டர் அவரிடம், "உங்களின் குலதெய்வம் சிவபெருமான் உள்ள திருவாரூர் சென்று சிவபெருமானை வழிபட்டால் உங்களை சனி நெருங்கமாட்டார்' என்றார். அவ்வாறே தசரத மகாராஜாவும், திருவாரூர் வந்து கமலாலயத் திருக்குளத்தில் நீராடினார்; ஆரூர் சிவபெருமானை வழிபட்டார். அப்போது சனிபகவான், தசரத மகாராஜாவைப் பற்ற வந்தார்.சிவபெருமானை வணங்கியதால் ஏற்பட்ட துணிவினால் சனி பகவானை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார் தசரதர். தன்னுடைய வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைக் கண்ட சனி பகவானும் தசரதனிடம், "என்ன வரம் கேட்டாலும் தருகிறேன்... கேள்!' என்றார். உடனே தசரதர், "சனீஸ்வரனே! நீ உனது கடமையைச் செவ்வனே செய்கின்றாய். உலக உயிர்களுக்கு, சுக துக்கங்களின் வேறுபாட்டை உணர்த்தும் வகையிலே நீ செயல்படுகின்றாய். ஆனாலும் நீ அவர்களைப் பற்றுகின்ற காலத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அண்ட சராசரங்களையும் படைத்து, காத்து, இறுதியில் சம்ஹாரமும் செய்யும் முழுமுதற் கடவுள் திருவாரூரிலே வீற்றிருக்கும் சிவபெருமான். அவரை "தஞ்சம்' என்று சரணடைந்த பின்னாலே என்னை நீ துன்புறுத்த விரும்பினாய். அதனால்தான் உன்னோடு நான் போரிட்டேன்; சிவனருளால் வென்றேன்.எனவே, திருவாரூர் வந்து, கமலாலயத்தில் நீராடி, தியாகேசப் பெருமானையும் உன்னையும் எவர் ஒருவர் வணங்கினாலும் அவர்களுக்கு நீ நல்லதே செய்ய வேண்டும்; தீங்கு செய்யக்கூடாது' என்று கேட்டார். சனீஸ்வர பகவானும் திருவாரூர் வருவோரை தன்னுடைய கண்ட சனி, பாத சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி என்று எந்தக் காலமானாலும் துன்புறுத்தாமல் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார். அதனால்தான் திருநள்ளாறில் வழிபாட்டை முடித்த நளச் சக்ரவர்த்தியும் திருவாரூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்; "தன்னை இனியும் நவக்கிரகங்கள் துன்பப்படுத்தக்கூடாது' என வேண்டிக் கொண்டார். இதையொட்டிதான், "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே!' என்னும் பழமொழி சொல்லப்பட்டு வருகின்றது

தசரதர் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்திரம்


க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பவ நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய ச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம : பெளருஷகாத்ராய ஸ்தூலரோக்ணே ச தே நம :
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம :
நமோ கோராய ரெளத்ராய பீஷணாய கராளிநே
நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்க்ஷ்ட்ர நமோஸ்து தே
நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம :
நமஸ்தே ஸர்வபக்ஸாய வலீமுக நமோஸ்து தே
ஸூர்யபுத்ர நமோஸ்தேஸ்து பாஸ்கர பயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ராய நமோ நம :
தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச
ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹராஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா :
த்வயாவலோகிதா : ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே
ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய : ஸப்த தாரகா :
ராஜ்யப்ரஷ்டா : பதந்தீஹ தவ த்ர்ய்ஷ்ட்யாவலோகிதா :
த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத :
ப்டஸாதம் குரு மே
ஸெளரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித :
***************************************************************
"சனிக் கிழமை அன்று இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி பூஜை
செய்பவருக்கு எந்த இன்னலும் தர மாட்டேன். அது மட்டுமின்றி கோசாரம் ,
ஜன்ம லக்னம் , தசைகள் , புக்திகள் ஆகியவற்றில் வேறு ஒரு கிரகத்தால்
ஏற்படும் பீடைகளில் இருந்தும் காப்பாற்றுவேன் . அனைத்து உலக
இன்னல்களையும் களைந்து இன்பமுறச் செய்வேன் ! " என்றும் உறுதி அளித்தார்

சனி பகவான் .

Wednesday, February 24, 2010

ஸ்ரீ சனீஸ்வரர் 5

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி மஹேந்திர மலையில் இலங்கை செல்ல தயாராக இருந்தார், அப்போழுது அங்கு வந்து சேர்ந்த ஸ்ரீசனிபகவான் "ஆஞ்சநேயா, தாங்களுடன் ஏழரை ஆண்டு காலம் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது." என்றார். "சூர்ய புத்திரரே, நான் சூர்ய வம்ச ரகுகுல திலகன் ராமபிரானின் கார்யமாக செல்கிறேன்,ஆதலால் நான் இலங்கையிலிருந்து திரும்பிய உடன் என்னை பிடித்துக் கொள்ளவும், நானே தாங்களிடம் வருகிறேன்" என்று ஆஞ்சநேயர் கூறினார். சனி பகவான் ஒப்புதலுடன் அவர் இலங்கை நேக்கி ஆகாய மார்க்கமாக செல்லலானார்.

ஸ்ரீ ராமகார்யத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் இலங்கையில் தேவியை தர்சித்தார். ஸ்ரீ ராமனுக்கு உதவியாக இராவணனை அழிக்க இலங்கை செல்ல சேதுகரையில் வானரங்களுடன் இருந்த போழுது சனிபகவான் அங்கு வந்து "ஆஞ்சநேயா, நீ என்னை ஏமாற்றிவிட்டாய்." என்றார். "பகவானே மன்னிக்கவும், ராமகார்யத்தில் இருந்ததால் மறந்துவிட்டேன். இங்கு பாருங்கள் சின்ன அணில் கூட தன்னால் ஆன கைங்கரியத்தை ஸ்ரீராமபிரானுக்காக செய்கிறது. அது போல் தாங்கள் ராமகைங்கரியம் செய்த வண்ணமே தாங்கள் கடமையும் செய்யலாம். மலைபிஞ்சுகளை எடுத்துக் கொண்டு என் தலையில் ஏறிக் கொள்ளுங்கள். என்னிடம் தாங்கள் வாசத்தை இப்பொழுதே தொடங்கலாம்" என்றார் ஆஞ்சநேயர். சனியும் சில மலைபிஞ்சுகளுடன் ஆஞ்சநேயரின் தலையில் ஏறி அமர்ந்தார். அதனால் ஆஞ்சநேயருக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. ஆஞ்சநேயர் மேலும் சில மலைகளை எடுத்து தன் தலையில் இருந்த சனியின் மேல் வைத்துக் கொண்டு ராமநாமத்தை பாடிய வண்ணம் கடல் நோக்கி ஓடினார். மலைகளின் நடுவில் மாட்டிக் கொண்ட சனியின் பாடு திண்டாட்டமானது. "பகவானே, என்ன செய்கிறீர்கள்? நான் இங்கு நசுங்கிவிடுவேன்" என்று அலறினார்.

"அவரவர் கடமையை செய்கிறோம், இதில் என்ன கஷ்டம்" என்றார் ஆஞ்சநேயர். "பகவானே நான் உங்கள் காலை பிடித்துக் கொள்கிறேன், தலையிலிருந்து என்னை தயவு செய்து இறக்கி விட்டுவிடுங்கள்" என்று அலறினார் சனிபகவான். ஆஞ்சநேயர் காதில் விழாதது மாதிரி ஸ்ரீராம கைங்கரியத்தில் ஈடுப்பட்டிருந்தார்

சனிபகவானின் குரல் கேட்டு ஸ்ரீராமர், ஆஞ்சநேயரிடம் "ஆஞ்சநேயா, அவரும் சூரிய வம்சியப்பா, தலையிலிருந்து விடுவித்து விடு" என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

யோசித்தார் ஆஞ்சநேயர், பிறகு சனிபகவானிடம் "ஸ்ரீராமபிரானின் ஆணைப்படி தாங்களை தலையிலிருந்து இறக்கி விடுகிறேன், ஆனாலும் தாங்கள் கடமையை ஸ்ரீராமகைங்கரியத்துக்கு இடஞ்சலாக இருக்குமே, என்ன செய்ய" என்று கூறியவர் சனிபகவானை தலையிலிருந்து விடுவித்தார். இறங்கிய சனிபகவான் ஆஞ்சநேயரின் கால்களை பிடிக்க வந்தார். ஆஞ்சநேயர் அவரை ஒரே மிதியில் தன் கால்களுக்கு அடியில் மிதித்தார். தீனமான குரலில் "பகவானே, என்னை விட்டுவிடுங்கள், ஸ்ரீராமரிடைய நாமத்திற்க்கு என்ன பலம், ஸ்ரீராமபக்தனுக்கு என்ன பலம் என்பது புரிந்து விட்டது. ஸ்ரீராமா, உன் நாமாவையோ, ஆஞ்சநேயரின் நாமாவையோ, யார் கூறுகிறார்களோ அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்" என்று சனிபகவான் கூற ஆஞ்சநேயர் அவரை விடுவித்தார்.
யோ வக்திராம தே நாம மாருதே: அபிவா ஸ்வயம்
க்ஷணம் தத்ர ந திஷ்டேயம் ஸத்யம் ப்ரதி ஸ்ருணோமிதே


ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்
ஆஞ்சநேயரின் மஹிமைகளைப் பற்றிக் கூறும்போது
.....ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, வினயத்தில் உச்சநிலை - இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் என்று உண்டு என்றால் அது ஆஞ்ஜனேய ஸ்வாமிதான். .....பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம்.(ஐடியல்) .....ஆஞ்ஜனேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசித்து விடும். பரம வினயத்தோடு பகவத் கைங்கர்யம் செய்து கொண்டு எல்லாருக்கும் நல்லது செய்வோம்அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனைம்மை அளித்துக் காப்பான்

Tuesday, February 23, 2010

ஸ்ரீ சனீஸ்வரர்--4


ஒருசமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு, ""நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன்; என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று கேட்க, ""என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப் பதிலளித்தார் சனி பகவான். ""அப்படியானால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு'' என்று தேவேந்திரன் வேண்ட, சனி பகவான் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினைப்பு அவனுக்கு! அந் நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்ட பெருமையை அளக்க, சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, ""நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால்தான்!'' என்றார்
இப்படிப்பட்ட சனீஸ்வரர் ஒருவரை பிடித்து பட்ட பாடு இருக்கிறதே அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

Thursday, February 18, 2010

ஸ்ரீ சனீஸ்வரர் 3
இராவணன் தன் பராக்கிரமத்தால் நவ கிரகங்களைப் பிடித்துத் தன் சிம்மாசனத்துப் படிகளாகப் போட்டுவிட்டான். அவர்கள் முதுகில் கால் வைத்து அரியணை ஏறுவது அவன் வழக்கம். அதை ஒரு நாள் நாரதர் கண்டு, ""சனி பகவானே! எல்லாரையும் நீர் பிடிப்பீர். இப்பொழுது இராவணன் உம்மைப் பிடித்து விட்டானே?'' என்று பரிகசித்ததும் சனீஸ்வரன், ""என்ன செய்வது? என்னைக் குப்பு றப் போட்டு விட்டான். அதனால் அவனைப் பார்த்துப் பிடிக்க முடியவில்லை'' என்றார். அவ்வளவுதான். நாரதர் நேராக இராவணனிடம் சென்று, ""இராவணா! உன்னுடைய கீர்த்திக்கு சனியைக் குப்புறப் போட்டு முதுகிலா மிதிப் பது? மார்பின் மீதல்லவா அடிவைக்க வேண்டும்?'' எனக் கூற, உடனே இராவணன் அப்படியே மாற்றி விட்டான். அவன் படிகளில் ஏறும்பொழுது சனி திருஷ்டி ஏற்பட்டு விட்டது. பலன் யாவர்க்கும் தெரியும்.ராவணனுக்கு அழிவு அந்த நாள் முதல் ஆரம்பம்.

சரி திவாகர தனுஜம் பாட்டை இப்பொழுது பார்த்து கேட்டு ரசிக்கலாம்தொடரும்

Friday, January 01, 2010

திருவாதிரைத் திருநாளும் திருநாளைப்போவாரும்


அன்பர்கள் அனைவர்க்கும் 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்
இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியது

வீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள். ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.

நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.
திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.
சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லை
வாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான். கோபலகிருஷ்ண பாரதியாரும் ஒரு அடிமையின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கருணாரசம் பொங்கும் மாஞ்சி ராகத்தை சமயத்திற்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளார்.

ராகம்:- மாஞ்சி தாளம் :- மிஸ்ர சாபு

பல்லவி

வருகலாமோ ஐய்யா--- நான் உந்தன் அருகில்
நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ

அனுபல்லவி

பரமகிருபாநிதி அல்லவோ----நீ
இந்த நந்தன் உபசாரம் சொல்லவோ
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)

சரணம்

பூமியில் புலையனாய் பிறந்தேனே-- நான்
ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)


திரு தண்டபாணி தேசிகர் நந்தனாராக நடித்து பாடும் பாட்டைக் கேளுங்கள்

கண்களில் கண்ணீரை பெருகச்செய்யும் பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் உருகி உருகி பாடியிருப்பதைக் கேளுங்கள்.
கிளிக் <"இங்கே">


சரி நம் தமிழ்த்தியாகைய்யா திரு பாபநாசம் சிவன் மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன. ஆருத்ரா தரிசனத்தன்று நடராசன் ஆடும் ஆட்டத்தையே தன் பாட்டில் அழகான தமிழில் கொஞ்சவைக்கும் யதுகுலகாம்போதியில் குழைந்தும் குழைத்தும் அளிக்கிறார். பாட்டை முதலில் பார்த்துவிட்டு பிறகு கேட்போம்.

ராகம்:-யதுகுலகாம்போதி தாளம்:- ஆதி

பல்லவி

காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே---
என்னை கைதூக்கி ஆட்கொள் தெய்வமே ஒரு....................(காலைத்தூக்கி)

அனுபல்லவி

வேலைத்தூக்கும் பிள்ளைதனைப் பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு..(காலைத்தூக்கி)

சரணம்

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கம் சேர் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)

நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க
அஹா என்ன ஒரு வர்ணனை.பாட்டைக் கேட்கும்போதே நடராஜரை முழுமையாகப் பார்த்துவிடலாம்.ஏம்பா நடராஜா நீ காலைத்தானே தூக்கிக் கொண்டு இருக்கிறாய் கை சும்மாதானே இருக்கு என்னை அதாலே தூக்கிவிடேன் என்கிறார்.முருகனைப் பெற்றதால்தான் உனக்கு பெருமை என்கிறார்.உடம்பெல்லாம் என்ன இருக்கு தெரியுமா கையில் மான் மற்றொரு கையில் நெருப்பு, கருத்த சடையில் கங்கை,சந்திரன் இதெல்லாம் போறாதுன்னு உன்னோடு இரண்டறக்கலந்து இருக்கும் பார்வதியை சதாசர்வகாலமும் தூக்கிக்கொண்டு இருக்கிறாயே. எந்தகாலைதூக்கி ஆடுகிறாய் தெரியுமா பிரும்மாவும் விஷ்ணுவும் தேடித் தேடி பாதளத்திற்கும் ஆகயத்திற்கும் இங்கும் அங்குமாய் ஓடி கண்டு பிடிக்க காண முடியாமல் இருக்கும் அந்தக் கால் அல்லவா அது. ஹரி ஐயனும் காணா அரிய ஜோதி ஆதி அந்தம் இல்லாத பழமனாதி.

சரி இத்தனையும் தூக்கிகொண்டு சும்மாவாய் இருக்கிறாய். இல்லையே நந்தியின் தாளத்திற்கும் நாரதரின் யாழிசைக்கும் தோம் தோம் என்று என்னுடய (பாபநாசம் சிவனுடைய) தாளம் சுருதியோடு தூக்க உன்னுடைய அஜபா நடனத்தின் தன்மையை அறிந்த தேவர்கள் மகிழ்ச்சியோடு தாங்கள் தலைக்குமேல் இருகைகளையும் தூக்கிக்கொண்டு இருக்க உன்காலின் கீழ் அகப்பட்டுக் கொண்டு இருக்கும் அரக்கனான முயலகன் வலியோடு உன்னைத்தூக்க நீ ஆடும் ஆட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? என்று மகிழ்ந்து போகிறார். சிறிது ஹாஸ்யபாவத்தையும் இங்கே காட்டுகிறார்.மான், மழு,கங்கை,சந்திரன்,பார்வதி இத்தனை பேரை தூக்குகின்றாயே என்னை கைதூக்கி ஆட்கொள்ளுவது உனக்கு ஒரு பெரிய விஷயமா என்றும் கேட்பதுபோல் உள்ளது

சரி இப்போது திருமதி. சுதா ரகுநாதன் அனுபவித்து பாடிய பாட்டைக் கேட்கலாமா?
கிளிக்<"இங்கே">
சிதம்பரத்துக்குப் போய் திரும்பாதவர்கள் மூவர் நந்தனார், அப்பைய தீக்ஷதர் மற்றும் ராமலிங்க சுவாமிகள் . இவர்கள் மூவரும் தில்லை நடராஜனை சிதம்பரத்தில் தரிசனம் செய்து இரண்டறக் கலந்து முக்தி அடைந்தவர்கள்