Friday, June 29, 2007

எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே

எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே என்று நினைத்து என்னை அழைத்த கீதா மேடம் மற்றும் எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் கேஆர்ஸ் அழைப்பிற்கும் நன்றி. எல்லாம் என் 71/2 யின் விதி. இதோ எட்டு

1) 8 வயதனிலே


என் வாழ்க்கையில் மறக்கமுடியாத வயது எட்டுதான்.எட்டு வயது வரைதான் நான் என் தந்தையுடன் வாழ்ந்தகாலம்.சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் என் தந்தையின் கைபிடித்துக்கொண்டு ராஜகணபதி கோவிலுக்கு சென்றதும்,சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் வலம் வந்ததும் அதன் காரணமாக என் அண்ணனுக்கும் அக்காவிற்கும் சுகவனம் என்றும் சொர்ணாம்பாள் பெயர் வைத்ததும்,பிறகு அக்காவையும்,அப்பாவையும் அக்னிக்கு தானம் செய்துவிட்டு,கையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல் சென்னைக்கு அம்மாவுடன் இரண்டு அண்ணன்களுடன் வந்ததையும் மறக்கமுடியுமா?


2)8,தமோதர ரெட்டித் தெரு


சென்னையில் இருந்த இருக்கப்போகும் நாட்களில் மறக்கமுடியாத நாட்கள் இந்தத் தெருவில் இருந்தபோதுதான்.இல்லாமை என்ற குறைதவிர வேறு எந்தக்குறையும் இல்லாத நாட்கள்.தி நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்தது, பின்பு ஜைன் கல்லூரியில் பி.காம் படித்து முதல் வகுப்பில் தேறியது,பிறகு சி.ஏ படித்தது எல்லாமே 8 ஆம் நம்பர் வீட்டில் மூலையில் இருந்த சிறிய 20x8 அடி 160 அடி உள்ள கார் செட்டில்தான்.வீட்டில் மொத்தம் 5 உருப்படிகள்.எப்படித்தான் 200 ரூபாயில் அம்மா ஒரு மாதத்தை ஓட்டினாளோ,கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டேன். எனக்கு நாரதகானசபா கச்சேரிக்கு போய்வரவே 200 ரூபாய் ஆட்டோ சார்ஜ்.இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று. அண்ணனும் அண்ணியும் வாழ்ந்தவீடும் இதுதான் பின்பு அம்மாவுடன் அவர்கள் மறைந்ததுவும் 8 ஆம் நம்பர் வீடுதான். ஆகவே மறக்கமுடியுமா இந்த 8 ஆம் நம்பர் வீட்டை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த 8 ஆம் நம்பரை காலி செய்துவிட்டு சென்ற நங்கநல்லூர் வீடும் 8 ஆம் நம்பர்தான்.


3) வங்கியில் பார்த்த 8 வேலைகள்


வங்கியில் சிறப்புஅதிகாரியாக வேலைபார்த்த 30 வருடங்களில் பார்த்த வேலைகளும் 8 தான். ஆயிரம் விளக்கு கிளையில் பயிலும் அதிகாரியாகத் தொடங்கி,ஹார்பர்கிளையில் வெளிநாட்டுசெலவாணிபிரிவிலதிகாரி,தணிக்கை பிரிவிலதிகாரியாக இருந்து பாரத் தர்ஷன் பட்டம் 3 முறை பெற்றதும்,பொது கணக்குத் துறையில் உதவி முக்கிய மேலாளாராகவும்,மியுச்சுவல் பண்டில் உதவி தலைமை அதிகாரியாகவும்,தணிக்கை மற்றும் கண்க்கு பிரிவில் முக்கிய அதிகாரியாகவும்(இங்குதான் 1000 த்துக்கும் மேற்பட்ட சார்ட்டர்டு அக்கௌண்டன்டுகளுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது), ஒருங்கிணைப்பட்ட கணினித் துறையில் உதவி பொது மேலாளர்ராகவும்,கடைசியாக வணிக வங்கித்துறையின் சேவை மையத்தில் இயக்குனர் ஆகவும் இருந்து ஓய்வு பெற்றது.(இங்குதான் ஆரம்பகாலத்தில் இலவசகொத்தனார் பணியில் இருந்தார்). இந்தப் பதவிகளில் நான் சிறப்பாக பணியாற்றினேனா அல்லது இந்த சிறப்பு பணிகளில் நான் இருந்தேனா என்பது கேள்விக் குறிதான். இருந்தாலும் பட்டயக் கணக்காளராக வங்கியில் புகுந்து இந்த 8 பணிகளில் இருந்தும் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து எந்தவிதமான விசாரணயும் இல்லாது 30 வருடங்கள் முழுச்சேவையையும் முடித்து முழு ஓய்வுதிய சலுகைகளுடன் வங்கியின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஓய்வு பெற்ற முதல் பட்டயக் கணக்காளர் அடியேன் என்பது பெருமைக்குரிய விஷயம்தான்.


4) 8 மார்க்

பள்ளிநாட்களில் எனக்கு வராத பாடமே கணக்குத்தான். ஆனால் பின்னால் நான் எப்படி கணக்கில் புலியாக மாறினேன் என்பது வேடிக்கைதான். 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது கணக்கில் வாங்கிய மார்க்கும் அதற்காக என் அண்ணன் என்னை பின்னி பெடலெடுத்த அடியும்தான் காரணம். பிறகு ஒரு வெறியுடன் படிக்க ஆரம்பித்து கணக்கை கைவசப்படுத்திக்கொண்டு C .A. வை முடித்தேன். அப்படி கணக்கில் நான் வாங்கிய மார்க்குதான் என்ன? வேறு ஒன்றுமில்லை எட்டும் வரை எட்டுதான்


5)8 விபத்துக்கள்



வாழ்க்கையே ஒரு விபத்து என்றான் ஒருவன்.. ஆனால் விபத்தே ஒருவனுக்கு வாழ்க்கையாக முடியுமா? முடியும் என்பதற்கு நானே சாட்சி.

இதுவரை நடந்த விபத்துக்கள் எட்டு . 1972 வில் மதுரையில் மோட்டர்சைக்கிளில்கீழே விழுந்து வலது கால் முட்டிகாலி. .1982இல் சென்னையில் தி' நகரில் மோட்டர் சைக்கிளிலிருந்து விழுந்து இடதுகால் முட்டியும் தொடை எலும்பும் அடி. 1986இல் ஸ்கூட்டர் மோதி கையில் அடி.1992 நங்க நல்லூரில் ஸ்டேஷன் பிளட்பாரத்திலிருந்து கீழே குதித்து மறுபடியும் கால் எலும்பு முறிவு. 1997 இல் மாடிப்படியில் இரண்டுபடிகளை ஒரே தாவலில் தாவியதால் கணுக்கால்எலும்பு முறிவு.1999இல் வீட்டில் குழாய் பள்ளத்தில்கால் வைத்து வலது முட்டி மறுபடியும்பிளவு. 2002இல் பீச் ரோடில்ஸ்கூட்டரின் மீது இரவு2 மணிக்கு வேன் வந்து மோதியதால் தலை மற்றும் கால்களில் அடி.உயிர்பிழைத்தது முருகன்அருள்.2006இல் வீட்டில் ஈரமான கோலத்தில்கால்வைத்து விழுந்து இடது கைஇரண்டு துண்டாகஉடைந்து மெடல் பிளேட் வைத்துஇன்னும்சரியாகமல் தவிப்பு.போதுமடா முருகா
இனி தாங்க முடியாது விபத்து போதுமென்று ஓய்வளிக்க உன்னைஅல்லால் வேறே கதி இல்லையப்பா.

6) பிடித்த 8 ஊர்கள்

(1)உலிபுரம்: நான் பிறந்த ஊர். சேலத்திற்கு அருகில் ஆத்தூரின் அருகில் தம்பம்பட்டி அதற்கு அருகில்தான் உலிபுரம்.திண்ணைப்பள்ள்ளிகூடத்தில் மண்லில் பயின்றது(எல்.கே.ஜி,யு. கே.ஜி) இங்கேதான் (2) குருவாயூர்: எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத குழந்தை கிருஷ்ணன் ஊர்.ஆனால் இப்போது இங்கும் திருப்பதிமாதிரி ஆகிவிட்டடது.(3) சாங்லி: மஹராஷ்ட்ரா மானிலத்தில் உள்ள அமைதியான அழகான ஊர்.(4) திரியம்பகபுரி: நாசிக் அருகே உள்ள ஊர். கோதவரி நதி பசுமாட்டின் குளம்பு போன்ற இடத்திலிருந்து உற்பத்தியாகும் இடம்.இயற்கை அழகு கொஞ்சும் இடம்.(5) ரோதங்பாஸ்: குளு மணாலிக்கு அருகில் உள்ள குளிர் நடுக்கும் இடம்.பனிப்பாறைகளால் நிறைந்த இடம்.இங்கு இருக்கும்போது தங்கமணிமுன்னால் இருப்பதுபோன்ற உணர்வு,கை கால்கள் உதறும்.(6) ஜோத்பூர்: ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள அழகான கோட்டைகளும் வெய்யில் வாட்டி எடுக்கும் ஊர்(7) தலைநகர் டெல்லி:சென்னையைத் தவிர்த்து நிறைய நாட்கள் தங்கியிருந்த ஊர்.மாதம் ஒருமுறையாவது சென்றுவருமூர். இருந்தாலும் இன்னும்வழி பிடிபடாத ஊர்.(8) சென்னை: சொர்கமே என்றாலும் அது நம்ம சென்னை அக்னிகுண்டம்போலாகுமா.


7) நிறைவேறாத 8 ஆசைகள்

சிறுவயதில் வக்கீலுக்கு படிக்க வேணடும் என்ற ஆசை

சென்னையை விட்டு வெளியூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை

ஸ்விஸ்ர்லாந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை

முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை

கீதா மேடத்திடமிருந்து ஆப்பு வங்காத அம்பியை பார்க்கும் ஆசை

தாய் தந்தையருக்கு வேஷ்டி,புடைவை எல்லாம் வாங்கிக் கொடுத்து
பிறந்த நாள் அன்றுஅவர்களிடம் ஆசீர்வதம் வாங்கும் ஆசை

பணத்தை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்ட நண்பனை ஒரு முறை பார்க்கும் ஆசை

தங்கமணியிடம்யிருந்து எப்படியாவது இவரும் நல்லவர்தான் நாம் நினைக்கிற மாதிர் அவ்வளவு கெட்டவர் இல்லைஎன்று நல்லபேர் வாங்கும் ஆசை

8) எட்டு

இந்த எட்டு எண் இருக்கிறதே இது நல்ல எண் இல்லை என்பது கணித மற்றும் ஜோஸியத்தின் கணிப்பு.(அதுதான் எட்டில் கீதாமேடத்துகிட்டே மாட்டிகிட்டே போதே தெரிகிறதே) ஒன்பதுதான்
நல்லஎண்ணாம்.ஹைய்யா நம்ப பிறந்த தேதி 9). எட்டுஎன்பது வாழ்க்கையில்
மேல்நிலையிலிருந்து கீழ் நிலைக்கு கூட்டிச் செல்லுமாம்
உதாரணமாக 8x1=8 ,8x2=16=7,8x3=24=6,8x4=32=5,8x5=40=4 இப்படியே குறைந்து கொண்டே வருமாம். ஆனால் 9 என்பது ஸ்திரமான எண்ணாம்.என்ன செய்தாலும் நிலையாக இருக்குமாம். சுக துக்கங்களை சமமாக பாவிப்பார்களாம்.உதாரணமக 9x1=9=9,9x2=18=9,9x3=27=9,9x4=36=9,
45-9=36=9,81-9=72=9