கீதா மேடம்(பொற்கொடி கவனிக்க) தன் பதிவில் மிக அழகாக சிதம்பர ரகஸியத்தைப் பற்றியும் தில்லை நடராஜரைப் பற்றியும் ஓர் சிறப்பு பதிவு
போட்டிருந்தார்.பின்னுட்டத்தில் நான் அதற்கு ஏற்ப ஒரு பாடல் போடுவதாகச் சொல்லியிருந்தேன்.சபாபதியின் பாடல்தான் இந்தப் பதிவின் சபாநாயகன்.
பதிவு போட ஆரம்பித்து இது 61ஆவது பதிவு.இது என்ன பெரிய விஷயம்
நாங்க எல்லாம் 350/300/100 பதிவுகள் போட்டாச்சு என்று கீதா மேடம்(Grrrrrr),
கார்திக்,அம்பி எல்லோரும் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் என் விஷயம்
கொஞ்சம் வேறு. இன்று எனக்கு 61 வருடங்கள் முடிந்து பிறந்தநாள். இரண்டும்
சேர்ந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு.
நல்ல குடும்பத்தில் பிறப்பு, நல்ல உயர் கலவி, கல்விகேற்ற வேலை,வேலையில் உயர் பதவி,ஓய்வு பெற்ற பின்பும் மறுபடியும்
நல்ல பதவி, கௌரவம்,இனிய இல்லாள்,பணிவான மகன்கள்,மகள்,பாசம் மிக்கமருமகள், உறவினர்கள்,நண்பர்கள்,எல்லாவற்றிற்கும் மேலாக என்னை தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மரியாதை செலுத்தும் பதிவுலக நண்பர்கள்.
இவற்றை இங்கனமே யான் பெறவே என்ன புண்ணியம் செய்து விட்டேன் என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே செய்யவில்லை என்பது நிதர்சனமாக
தெரிகிறது.ஆனால் இத்தனைக்கும் காரணமானவன் யார் என்று மட்டும் தெரிகிறது. அது வேறு யார்/ என் குலதெய்வமான திருத்தணி முருகன்தான்.
அவனுக்கு வணக்கமும் நன்றியுமாக இந்தப் பாடலை அவன் தாள்களில்
சமர்ப்பணம்.
ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி
பல்லவி
திருத்தணி முருகன் திருவருள் புரிவான்
திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)
அனுபல்லவி
அறுபடை வீட்டின் நாயகனே
குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)
சரணம்
குறுநகை புரிந்திடும் அருள்முகமும்
பரிவுடன் உதவும் பன்னிருகரமும்
வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்
என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)
இதோ கீதாமேடத்துக்காக இட்ட பாடல்
ராகம்:- ஆபோஹி தாளம்:-ரூபகம்
பல்லவி
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா
தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா( சபாபதிக்கு)
அனுபல்லவி
கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ
இந்த தரணி தன்னில் (சபாபதிக்கு..)
சரணம்
ஒருதரம் சிவசிதம்பரம் என்றால் சொன்னால் போதுமே
பரகதிக்குயடைய வேறே புண்ணியம் செய்யவேண்டாமே
அரிய புலையர் மூவர் பதம் அடைந்தார்
என்றே புராணம் சொல்லக்கேட்டோம்
கோபலகிருஷ்ணன் பாடும் (சபாபதிக்கு)
'இதே பாடலை பிரியா சகோதரிகளின் குரலில் இங்கே கேளுங்கள்">
கோபலகிருஷ்ண பாரதியார் முதலில் பாடல் எழுதும்போது
ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமா?
பரகதிக்கு அடைய வேறே புண்ணியம் பண்ண வேண்டாமா?
என்றுதான் எழுதினார்.தியகராஜரும் பாரதியும் சமகாலத்தவர்கள்.
ஒருமுறை சந்தித்தபோது தியாகராஜர் இந்தப் பாட்டைக் கேட்ட பிறகு
இறைவன் நாமத்தை ஒரு தரம் சொன்னாலே போதுமே வேறே புண்ணியம் ஏதாவது பண்ண வேண்டுமா என்ன. நாமத்திற்கு அவ்வளவு மகிமை உண்டே என்று சொன்னதாகவும்அதன் பிறகுதான் மாற்றி எழுதினார்.தியகராஜரும் ஆபோகி ராகப் பாட்டில் மகிழ்ந்து பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் " மனசு நில்ப சக்திலேகபோதே" என்ற ஒரு பாட்டை இயற்றினார்
என்ற ஒரு சொல் வழக்கும் உண்டு.