Saturday, December 27, 2008

ஸ்ரீ ஹனுமனை துதி மனமே தினமே




ஸ்ரீ ராம ஜெயம்


மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)



ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)
ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான்.. மாதவம்)
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)
நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்

இன்று ஹனுமத் ஜயந்தி
வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு கூடவெ இருப்பினும்,விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.
மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி, கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,இணயில்லாத பலம் மிக்கவரும்,அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகபேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.வெறும் புஜ வலிமை போதாது.
மனித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான். தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.
ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவெ கீ நாயீ
-ஹனுமனின் மீது ஒரு பாடல் கிளிக் செய்யுங்கள் W/

Tuesday, December 23, 2008

காஞ்சி மாமுனியின் கருணை



மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரோடு இருந்த நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்க முடியவில்லை. வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம்.பேசமாட்டார்கள். வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று. மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். ""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது . நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு
முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""
.
இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்