Friday, January 01, 2010

திருவாதிரைத் திருநாளும் திருநாளைப்போவாரும்


அன்பர்கள் அனைவர்க்கும் 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்




இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியது

வீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள். ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.

நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.
திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.
சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லை
வாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான். கோபலகிருஷ்ண பாரதியாரும் ஒரு அடிமையின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கருணாரசம் பொங்கும் மாஞ்சி ராகத்தை சமயத்திற்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளார்.

ராகம்:- மாஞ்சி தாளம் :- மிஸ்ர சாபு

பல்லவி

வருகலாமோ ஐய்யா--- நான் உந்தன் அருகில்
நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ

அனுபல்லவி

பரமகிருபாநிதி அல்லவோ----நீ
இந்த நந்தன் உபசாரம் சொல்லவோ
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)

சரணம்

பூமியில் புலையனாய் பிறந்தேனே-- நான்
ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)






திரு தண்டபாணி தேசிகர் நந்தனாராக நடித்து பாடும் பாட்டைக் கேளுங்கள்





கண்களில் கண்ணீரை பெருகச்செய்யும் பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் உருகி உருகி பாடியிருப்பதைக் கேளுங்கள்.
கிளிக் <"இங்கே">


சரி நம் தமிழ்த்தியாகைய்யா திரு பாபநாசம் சிவன் மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன. ஆருத்ரா தரிசனத்தன்று நடராசன் ஆடும் ஆட்டத்தையே தன் பாட்டில் அழகான தமிழில் கொஞ்சவைக்கும் யதுகுலகாம்போதியில் குழைந்தும் குழைத்தும் அளிக்கிறார். பாட்டை முதலில் பார்த்துவிட்டு பிறகு கேட்போம்.

ராகம்:-யதுகுலகாம்போதி தாளம்:- ஆதி

பல்லவி

காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே---
என்னை கைதூக்கி ஆட்கொள் தெய்வமே ஒரு....................(காலைத்தூக்கி)

அனுபல்லவி

வேலைத்தூக்கும் பிள்ளைதனைப் பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு..(காலைத்தூக்கி)

சரணம்

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கம் சேர் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)

நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க
அஹா என்ன ஒரு வர்ணனை.பாட்டைக் கேட்கும்போதே நடராஜரை முழுமையாகப் பார்த்துவிடலாம்.ஏம்பா நடராஜா நீ காலைத்தானே தூக்கிக் கொண்டு இருக்கிறாய் கை சும்மாதானே இருக்கு என்னை அதாலே தூக்கிவிடேன் என்கிறார்.முருகனைப் பெற்றதால்தான் உனக்கு பெருமை என்கிறார்.உடம்பெல்லாம் என்ன இருக்கு தெரியுமா கையில் மான் மற்றொரு கையில் நெருப்பு, கருத்த சடையில் கங்கை,சந்திரன் இதெல்லாம் போறாதுன்னு உன்னோடு இரண்டறக்கலந்து இருக்கும் பார்வதியை சதாசர்வகாலமும் தூக்கிக்கொண்டு இருக்கிறாயே. எந்தகாலைதூக்கி ஆடுகிறாய் தெரியுமா பிரும்மாவும் விஷ்ணுவும் தேடித் தேடி பாதளத்திற்கும் ஆகயத்திற்கும் இங்கும் அங்குமாய் ஓடி கண்டு பிடிக்க காண முடியாமல் இருக்கும் அந்தக் கால் அல்லவா அது. ஹரி ஐயனும் காணா அரிய ஜோதி ஆதி அந்தம் இல்லாத பழமனாதி.

சரி இத்தனையும் தூக்கிகொண்டு சும்மாவாய் இருக்கிறாய். இல்லையே நந்தியின் தாளத்திற்கும் நாரதரின் யாழிசைக்கும் தோம் தோம் என்று என்னுடய (பாபநாசம் சிவனுடைய) தாளம் சுருதியோடு தூக்க உன்னுடைய அஜபா நடனத்தின் தன்மையை அறிந்த தேவர்கள் மகிழ்ச்சியோடு தாங்கள் தலைக்குமேல் இருகைகளையும் தூக்கிக்கொண்டு இருக்க உன்காலின் கீழ் அகப்பட்டுக் கொண்டு இருக்கும் அரக்கனான முயலகன் வலியோடு உன்னைத்தூக்க நீ ஆடும் ஆட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? என்று மகிழ்ந்து போகிறார். சிறிது ஹாஸ்யபாவத்தையும் இங்கே காட்டுகிறார்.மான், மழு,கங்கை,சந்திரன்,பார்வதி இத்தனை பேரை தூக்குகின்றாயே என்னை கைதூக்கி ஆட்கொள்ளுவது உனக்கு ஒரு பெரிய விஷயமா என்றும் கேட்பதுபோல் உள்ளது





சரி இப்போது திருமதி. சுதா ரகுநாதன் அனுபவித்து பாடிய பாட்டைக் கேட்கலாமா?
கிளிக்<"இங்கே">
சிதம்பரத்துக்குப் போய் திரும்பாதவர்கள் மூவர் நந்தனார், அப்பைய தீக்ஷதர் மற்றும் ராமலிங்க சுவாமிகள் . இவர்கள் மூவரும் தில்லை நடராஜனை சிதம்பரத்தில் தரிசனம் செய்து இரண்டறக் கலந்து முக்தி அடைந்தவர்கள்