Monday, April 07, 2008

ஒளிமயமான எதிர்காலம்

ஏஸியானெட் டி வியில் சங்கீத தொடர் நிகழ்ச்சி ஒன்று வந்தது. எத்தனை பேர் பார்த்தார்களோ தெரியாது.அருமையான தொடர்.நிகழ்ச்சியை அளித்தவர்கள் ஐடிஏ போன் நிறுவனத்தார். கலந்துகொண்டவர்கள் அத்தனை பேரும் தங்கள் முழுத்திறமையையும் பலவேறு போட்டிகளான கர்னாடக,மெல்லிசை,திரைஇசை போன்ற நிகழ்ச்சிகளில் காண்பித்தார்கள். நடுவர்களாக வந்திருந்தவர்களும் பாரபட்சமில்லாமல் தகுதிக்கு ஏற்றபடி எண்ணிக்கைகளை வழங்கினார்கள். சும்மாவாது "செம, செமசெம, செமசெமசெம" இதெல்லாம் கிடையாது. பாடும்போது எந்த இடத்தில் பாடுபவர்கள் தவறு செய்தார்கள்,சுருதி எங்கு விலகியது,ராகம் எங்கு வெளிப்படவில்லை,தாளம் எங்கு வேதாளமாகியது.வரிகள் எங்கு விடப்பட்டது போன்ற விவரங்களை துல்லியமாக கவனித்து பாடுபவர்களிடம் சொல்லி அதை எப்படி திருத்திக் கொள்வது போன்ற ஆலோசனைகளையும் வழங்கத் தவறவில்லை. இதில் சோடனை போனது இங்கிருந்து போனவர்கள்தான்.
இனி நம்ப நிகழ்ச்சிக்கு வரலாமா? டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கேரளாவிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார் வாலிபன் இசை உலகை வெற்றி வலம் வரபோகிறான்.அவர் பெயர் "துஷார்".துடிப்பும்,வேகமும்,இசைஞானமும் உள்ளவர். தன் பாட்டுத் திறத்தால் அரங்கைமட்டும் இல்லாது நடுவர்களையும் நெகிழ்வோடு கண்கலங்க வைத்தவர்.
அடாடா இந்த சிறிய வயதில் என்ன ஒரு ஞானம்,உழைப்பு. அதுதிரைஇசையாகவோ,மெல்லிசையாகவோ, கர்னாடக இசையாகவோ,இந்துஸ்தானிசையாகவோ இருக்கட்டும் எல்லாம் அவருக்கு வசப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கடைசி கர்நாடக இசைச் சுற்றில் துஷார் வழங்கிய சங்கராபரணம் ராகம் அந்த நிகழ்ச்சிக்கு மணி மகுடமாக விளங்கியது.முதலில் அவர் சங்கராபரண ராகத்தை விரிவாக ஆலாபனை செய்து அதன் நெளிவு சுளிவுகளை வெளிப்படுத்தினார். பின்னர் கீர்த்தனையிலும் தன் முத்திரையை பதித்து நிரவலின் போது தன் திறமையை வெளிப்படுத்தியபோது நடுவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.அத்துடன் முடியவில்லை ஸ்வரப்ப்ரஸ்தாரம் ஆரம்பித்தார் பாருங்கள் அவ்வளவுதான் அவையோர்கள் தங்கள்: இருக்கையின் விளிம்புக்கே வந்து விட்டார்கள். டி வி திரையில் பார்த்துக்கொண்டு இருந்த மக்களின் நிலையும் அதே.ஸ்வரப்ப்ரஸ்தாரத்தின் போதுதான் என்ன ஒரு வேகம்,அசாத்திய தாளக்கட்டுப்பாடு, ஸ்ருதி சுத்தம். குரு சுப்புடு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் "தீர்க ஆயுஷ்மான் பவ".


பாடிமுடித்ததும் துஷார் அப்படியே தலையைக் குனிந்து 5 நிமிடங்கள் கண்ணீர் மல்க ஆனந்த பரவசத்தில் இருந்தார். மூன்று நடுவர்களும் கைகூப்பிய நிலையில் என்ன சொல்வது என்று புரியாமல் உன்னதமான சங்கீதத்தின் பிடியில் சிக்கியிருந்தார்கள் பார்வையாளர்கள் நிலையைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்.இதற்கு பின் நடந்த வற்றை எழுதவதைவிட பார்த்தும் கேட்டும் அனுபவிக்க வேண்டியவை. மொழி மலயாளம்தான் ஆனாலும் புரியும் உணர்ச்சிகளுக்கு மொழி தேவையில்லை.

இதோ ராக ஆலாபனையைக் கேளுங்கள் பாருங்கள்



-
இங்கே கீர்த்தனையைபாடும் சிறப்பை பார்த்து கேட்டு ரஸியுங்கள்.



-
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக விளங்கிய ஸவரப்பிரஸ்தாரம் இங்கே




-

இப்பொழுது பாருங்கள் துஷார் உணர்ச்சிவசப்பட்டு பரவச நிலையில், அவையோர்,நடுவர்கள் அனைவரும் ஒரே உணர்ச்சிவயத்தின் பிடியில். துஷாரின் தன்னிலை விளக்கம் அளித்த பின்னர் நடுவர்கள் தங்களுடைய எகோபித்த பாரட்டு மழையை பொழிந்தனர்.கடைசியாக ஏகமனதாக அனைவரும் மிக அதிகமான மார்க்காக 24/25 அளித்தனர். அதில் ஒருவர் சொன்னார் 25/25 கொடுக்க ஆசைதான் ஆனால் கண்பட்டு விடும் என்ற காரணத்தால் கொடுக்கவில்லை என்று.





-

"எனக்கு "வளர ஸ்ரேஷ்டமாயிட்ட சந்தோஷம்" கேட்டு பார்த்த பின்னர் உங்களுடைய கருத்துக்களையும் கூறலாம்.உங்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணத்தில்

கடைசியாக வந்த செய்திகளின்படி திரு. துஷார் அவர்கள் மொத்தமாக 67% எண்ணிக்கையும் 47500 ஸ் எம் ஸ் பதிவும் பெற்று முதலாவது ஸ்டார் பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.