Sunday, March 07, 2010

பிரதோஷ மஹிமை-- 4


அன்று பிரதோஷதினம் மாலை நேரம் நெருங்கியதால் நரஹரிக்கு சிவ பூஜைக்கு நேரமாகிறதே என்ற கவலைவேறு வந்து விட்டது.வாடிக்கையாளரின் கெஞ்சலும் அதிகமாகியது.நரஹரிக்கு தொழில்மீது மிகுந்த பக்தி உண்டு. அப்போது அந்த தனிகர் சொன்னார் நரஹரியே கோவிலூக்கு வந்து பாண்டுரங்கனின் இடுப்பின் அளவை எடுத்து செய்தால் சரியாக வரலாம் என்று.அதைக்கேட்டவுடன் எப்படியாவது சிவபூஜைக்கு இடர் வராமல் இருந்தால் சரி என்று நரஹரியும் ஒரு நிபந்தனையுடன் அரைமனதுடன் ஒத்துக்கொண்டார்.

அந்த நிபந்தனை கோவிலுக்குள் வந்தாலும் கண்களை ஒரு கறுப்புத்துணியால் இறுக்கக் கட்டிக்கொண்டு வந்து சில நிமிடங்களே இருந்து அளவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவபூஜைக்கு திரும்பிவிடுவேன்.பாண்டுரங்கணை கண்களால் பார்க்கமாட்டேன்.சரியென்று எல்லோரும் ஒத்துக்கொண்டனர். நரஹரியும், விட்டல பக்தரும், மற்றும் ஊர் ஜனங்களும் பண்டரிநாதன் கோவிலுக்கு கிளம்பினார்கள்

கோவில் வாசலை அடைந்ததும் நரஹரி தனது கண்களை ஒரு கறுப்பு வஸ்த்திரத்தால் இறுகக் கட்டிகொண்டார்.அவரை விட்டல பக்தர் அழைத்துக்கொண்டு பாண்டுரங்கனின் விக்கிரகத்துக்கு அருகில் நிற்க வைத்து நரஹரி விட்டலனனின் இடுப்பு அளவை எடுத்துக்கொள்ளூங்கள் என்றார்.நரஹரியும் வேண்டா வெறுப்புடன் பண்டரிநாதன் மீது கைகளால் தடவி இடுப்பின் அளவை ஒரு கயிற்றின் மூலமாக எடுக்க முற்பட்டார்.

முதலில் இடுப்பை தடவும் போதுநரஹரியின் கைகளுக்குபுலித்தோல் தென்பட்டது. நரஹரி ஆச்சர்யத்துடன் தன்னை மறந்து மேலே கைகளை கொண்டு சென்று மேலும் தடவினார். இப்போது விக்கிரஹத்தின் கழுத்தில் ருத்ராக்ஷமாலை பட்டது.பின்னர் தேடும்போது வழ வழவென்று பாம்பு போன்ற வஸ்து பட்டது, மேலும் கைகளின் ஒரு புறம் டமருகம்மும், திரிசூலமும் பட்டது, மறுபுறம் மானும்,மழுவும் பட்டது.மேலும் ஆச்சர்யத்துடன் உணர்ச்சியின் மிகுதியாலும் தலையின்மீது தடவும்போது கங்கையும், பாலாசந்திரனும்,ஜடாமுடியும் பட்டது

கூடியுருந்தவர்களுக்கு ஆச்சர்யம் நரஹரி எதற்காக பண்டுரங்கனின் உடம்பு முழுவதும் தேடுகிறார் என்று.நரஹரிக்கோ வேறு விதமான நிலை. கையில் தென்பட்டதெல்லாம் சாக்ஷாத் சிவனின் அம்சங்கள் ஆனால் இவர்களோ இவனை ராமச்சந்திரனாக அவதாரம் எடுத்த
விஷ்ணு என்று சொன்னார்கள். ஒருவேளை இப்போது பிரதோஷ சமயம் அதனால் தனக்கு சிவனின் மீது உள்ள அபார பிரேமையால் மனப்பிரமையோ என்று நினைத்து மீண்டும் ஒருமுறை தடவிப்பார்க்கலாம் என்று பாண்டுரங்கனை தடவினார். ஆனல் இந்த முறையும் ருத்திரனனின் அம்சங்களே கைகளில் பட்டது.என்ன தோன்றியதோ என்னவோ நரஹரிக்கு திடீரென்று தன் கைகளினால் கண்ணைக்கட்டியிருந்த கறுப்புத்துணியை விலக்கி விக்கிரஹத்தைப் கண்களால் உற்றுப் பார்த்தார்.

என்ன ஆச்சர்யம் அவர்கண்களில் தென்பட்டவர் சாக்ஷாத் உமாதேவியுடன் சந்திரசேகரனா இல்லை இல்லை. இடுப்பில் கைவைத்துக்கொண்டு,கைகளில் சங்கம், சக்ரம், கதை, சார்ங்கம் ஏந்திக்கொண்டு கழுத்தில் வைஜயந்தி துளசி மாலையையும் அணிந்துகொண்டு ரகுமாயியுடன் பாண்டுரங்க விட்டலன் காட்சி கொடுத்தான். நரஹரிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மறுபடியும் கண்களை கட்டிக்கொண்டு விட்டலனைத் தடவினார். இப்பவும் அதே ருத்ர அம்சங்களுடன் சிவன்னாகவே விட்டலன் நரஹரிக்கு காட்சி கொடுத்தார். அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களும் கீழே உள்ள வீடியோ படத்தில் பாருங்கள் மெய்சிலிர்க்க வைக்கும்.




இப்பொழுதுதான் நரஹரிக்கு புரிந்தது பாண்டுரங்க விட்டலந்தான் தனக்காக பிரதோஷ வேளையில் ருத்திரனாகக் காட்சி அளித்தான் என்பது. கண்கட்டுகளை அவிழ்த்தெறிந்துவிட்டு தரையில் விழுந்து புரண்டு அழுதார். ஆஹா அறியாமையினால் பாண்டுரங்கன் வேறு சிவன் வேறு என்று நினைத்து பாண்டு ரங்கனை காணாமல், வணங்காமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டேனே.நான் பாவி என்று அலறினார்.
உடனே பாண்டுரங்கன் அசிரீரியாக நரஹரி உன்மூலமாக உலகத்துக்கு நான் வேறு சிவன் வேறு இல்லை என்பதை உணர்த்தவே இந்த என்னுடைய லீலையை நடத்தினேன்.. நீ சிவனுக்கு என்று நினைத்து செய்த பூஜை எல்லாம் என்னிடத்தில் வந்து சேர்ந்து விட்டது. எனக்குச் செய்யும் பூஜையும் சிவனுக்குப் போய்சேரும் என்றருளினார்.

(இதை எழுதுபோதுதான் அர்த்தமே சரியாகத் தெரியாமல் தினம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் திக்தேவதா வந்தனத்தில் வரும் ச்லோகத்தின் பொருள் புரிந்தது. "ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி" எப்படி ஆகாயத்திலிருந்து வரும் தண்ணீரானது சமுத்திரத்தை சென்று அடைகிறதோ அதே மாதிரி எல்லா தெய்வங்களுக்குச் செய்யும் நமஸ்காரங்கள் கேசவனைச் சென்று அடையும் என்பதுதான் அது)உடனே அவர் செய்த அரைஞாண்கயிறு விட்டலன் விக்கிரஹத்தில் சரியாகக் பொருந்தியது.நரஹரியும் விட்டலனனின் பரம பக்தனாகி விட்டார்.பாண்டு ரங்கன் மீது நெறைய அபங்கங்கள் பாடினார். ஒரு அபங்கத்தில் கூறுகிறார் "இந்த விக்கிரஹத்தில் நீ சிவனா விஷ்ணுவா என்ற கவலையெல்லாம் எனக்கு கிடையாது எல்லா ஐஸ்வர்யங்களும் எனக்கு வேண்டாம் எனக்கு வேண்டுவதெல்லாம் உன்னுடைய அளவற்ற கருணயும் அபிமானமும் மட்டும்தான்".கீழே பாருங்கள் நரஹரி பாண்டுரங்க பக்தனாகி அபங்களைக் பாடுகிறர்


நாமும் அதே மாதிரி பாண்டுரங்கணையும் சிவனையும் போற்றும் பாடல்களைக் கேட்கலாம். முதலில் திரு. ஓ. ஸ் அருண் பாடிய பக்தஜன வத்ஸலே என்கிற நாமதேவரின் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த அபங்கம்



இதோ மஹாதேவ சிவசம்போ என்ற ரேவதி ராகத்தில் அமைந்த தஞ்ஞாவூர் சங்கரன் எழுதியபாடல்.



Friday, March 05, 2010

பிரதோஷ மஹிமை-3

பிரதோஷப் பதிவில் அம்பி ஒரு கேள்வி கேட்டிருந்தார். பிரதோஷவேளை சமயத்தில்தானே நரசிமஸ்வாமியும் அவதரித்தார் என்று. நானும் ஆமாம் என்று சுருக்கமாக சொல்லியிருந்தேன்.பின்பு யோசித்துப் பார்த்ததில் அதற்கு பதில் ஒரு பதிவாகவே போட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு.
இஷ்டத் தெய்வத்தை உபாசிப்பவர்கள் அந்த வழிபாட்டையே சிலாகித்துப் போற்றலாம். ஆனால் மற்ற தெய்வங்களை தூஷிக்கலாகது.உற்றுப்பார்த்தால் ஹரியும் ஹரனும் ஒன்றுதான் என்ற உண்மை புலப்படும் .

பிரதோஷகாலத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சம உரிமை உண்டு.இதை நாம் புரிந்து கொண்டு கடை பிடிக்கவேண்டுமென்றால் பண்டர்பூரில் அவதரித்த மஹான் நரஹரி சோனாரின் வாழ்க்கையை படித்தால் போதும்


நரஹரி என்பவர் விட்டல பாண்டுரங்கன் இருக்கும் பண்டர்பூரில் தங்க நகைகள் செய்யும் குலத்தில் பிறந்தவர்.அவரை எல்லோரும் நரஹரி சோனார் என்று அழைப்பார்கள்.அந்தத் தொழிலில் அவரை யாரும் மிஞ்சமுடியாத அளவு கீர்த்தி பெற்றிருந்தார்.அவர் வசித்த இடமோ பாண்டுரங்கன் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ள மாஹத்துவாரம் எனப்படும் இடம்.நரஹரியோ தீவீர சிவ பக்தர்.சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடமாட்டார். இவ்வளவு ஏன் பண்டர்பூருக்கு ஏராளமான பேர் வந்து விட்டலனை தரிசனம் செய்தாலும் இவர் மட்டும் கோவிலுக்கு சென்றதோ பாண்டுரங்கனை வழிபட்டதோ கிடையாது.பாண்டுரங்கனுக்கு விழா நடைபெரும் நாட்க்களில் ஊரைவிட்டே சென்றுவிடுவார் விட்டலா விட்டலா என்ற நாமம் காதில் விழக்கூடாதாம்.ஊரில் உள்ளோர் யவருக்கும் இது தெரியும்.

ஒரு சமயம் வெளியூரிலிருந்து ஒரு பணக்கார பாண்டுரங்க பக்தர் வந்தார். அவர் வந்த விஷயம் நெடுநாட்களாக அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து விட்டலனின் அருளால் ஒரு மகன் பிறந்தான்.அவருக்கு வேண்டுதல் மகன் பிறந்தால் பாண்டுரங்கனுக்கு கேசாதி பாதம் தங்க நகைகள் செய்து போடுவதாய்.ஊரில் விசாரித்ததில் எல்லோரும் நரஹரியின் பேரைத்தான் சொன்னார்கள். அவரும் நரஹரியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். உள்ளே நரஹரி நமச்சிவாய நமச்சிவாய என்று பஞ்சாட்ஷர மந்திரத்தை செபித்துக்கொண்டு இருந்தார்.வந்த விட்டல பக்தரும் என்ன என்ன நகைகள் செய்ய வேண்டும் என்று பட்டியலைக் கொடுத்தார்.அதை வாங்கிப் பார்த்த நரஹரியும் யாருடைய அளவிற்குச் செய்ய வேண்டும் என்றார்.

பக்தர் சொன்னார் நகைகள் யாவும் பாண்டுரங்கனுக்கு என்றும் தன்னுடைய வேண்டுதலையும் எவ்வளவு வேண்டுமனாலும் பணம் தருவதாகவும் சொன்னார். கேட்டவுடனே நரஹரி மிகுந்த கோபத்துடன் வந்தவரை வெளியே போகச் சொல்லி பாண்டுரங்கனின் பேரைகூடச் சொல்லமாட்டேன் அவனுக்கு நான் நகை பண்ணுவதா என்றார்.பக்தரோ விடுவாதாக இல்லை. அவர் காலைப் பிடித்துகொண்டு கதறி எப்படியாவது நகைகள் செய்து தரவேண்டும் இல்லையென்றால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத பாவியாகிவிடுவேன் என்று கெஞ்சினார்.

நரஹரியும் மனது இரங்கி போனால் போகட்டும் நான் கோவிலுக்கு வரமாட்டேன் பாண்டுரங்கனையும் பார்க்கமாட்டேன் என்வீட்டிலேயே இருந்துகொண்டு என்னுடைய தொழில் அனுபவத்தின் துணையோடு நகைகள் செய்து தருகிறேன் நீயே பாண்டுரங்கனுக்கு சாத்தவேண்டும் என்று கூறி விட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அளவுடனும் நகைகளைச் செய்து கொடுத்தார்.

பக்தரும் அதை அப்படியே வாங்கிக்கொண்டு பாண்டுரங்கன் கோவிலுக்கு வந்து நகைகளை விட்டலனுக்கு சாத்தினார். எல்லா நகைகளும் சரியாக நேராக வந்து அளவெடுத்துச் செய்தமாதிரியே இருந்தது ஒரு நகையைத்தவிர. அதுதான் விட்டலனின் அரைஞாண்கயிறு. அதைச் சாத்தியபோது இரண்டு விரக்கடை அளவு கம்மியாக இருந்தது. பக்தரும் மறுபடியும் நரஹரிவீட்டுக்கு ஓடிச் சென்று அரைஞாண் கயிறு அளவு போதவில்லை என்று கூறினார்.நரஹரிக்கு நம்பிக்கையில்லை இருந்தாலும் உடனே இரண்டு விரக்கடை அளவு கூட வைத்து செய்து போட்டுப் பார்க்கச் சொன்னார்.

அதனை எடுத்துக்கொண்டு மறுபடியும் கோவிலுக்குச் சென்று விட்டலனுக்கு அணிவித்துப் பார்த்தார். என்ன ஆச்சர்யம் இந்த முறை அரைஞாண் கயிறு இரண்டு விரக்கடை கூட இருந்தது. மறுபடியும் நரஹரி வீட்டுக்கு திரும்பி வந்து நடந்ததை சொன்னார். நரஹரிக்கு நம்ம முடியவில்லை. அவரது தொழில் திறமை மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கை. ஏன் ஊர் ஜனங்களே நம்ப வில்லை.என்ன செய்வது என்று அவருக்கும் புரியவில்லை. தன்னை நம்பிய பக்தரையும்கைவிட மனமில்லை. என்ன செய்யலாம் என்று யோஜிக்கலானார். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர் ஜனங்களும் நரஹரியின் வீட்டு வாசலில் நரஹரி கோவிலுக்குள் செல்லாமல் பாண்டுரங்கனைத் தொட்டு அளவெடுக்காமல் எப்படி சரி செய்யப் போகிறார் என்பதைக் காண குழுமி விட்டனர்

மறுபகுதியை அடுத்த போஸ்டில் பார்க்கலாமா?



Tuesday, March 02, 2010

பிரதோஷ மஹிமை--2

அருகே எழுந்தருளியிருந்த பரமேசுவரி பக்தர்களுக்காக ஐயன் காட்டும் பரிவைக் கண்டு பயமும், பக்தியும் கொண்டார்.
எம்பெருமான், பிரளயகாலத்து அக்னியைப் போல் தீக்ஷண்யமுள்ள கொடிய விஷத்தை உண்ணும் தருணத்தில் விஷம் கண்டத்தருகே வந்ததும் அனைவரும் அலறினர்.
“தேவாதி தேவா! எங்களைக் காத்தருளும் சகலதேவ பூஜிதரான தேவரீர் இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தாங்கிக் கொள்ள வேண்டும். அகில உலகங்களும் தேவருள் அடக்கம் தானே? அதனால் இவ்விடம் ஐயனின் உடலுள் சென்றாலும் அகில லோகங்களும் அழிந்து போவதென்பது திண்ணம்” என்று பிரார்த்தித்தனர்.

அது சமயம் அருகே அமர்ந்திருந்த அன்னபூரணி - அண்டமெல்லாம் காத்தருளும் கற்பகத் தருவாக விளங்கும் கற்பகவல்லி - திரிபுரசுந்தரி,உமாதேவி தம் திருக்கரத்தால் எம்பெருமா னின் கண்டத்தை மெதுவாகத் தடவி சற்று அழுத்தினார்.
மறுகணம் விஷம் கண்டத்திலேயே தங்கியது. அம்பாளின் திருக்கர ஸ்பரிசத்தினால் நஞ்சும் அமுதமாகி நாயகனின் கண்டத்தில் கருமணி போல் தங்கியது.
எம்பெருமான் ‘திருநீலகண்டர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

பிரம்மாதி தேவர்கள் தேவராக்ஷஸ பைசாச கணங்கள் முதலியோர் கரங்குவித்து, “ஷட்குண ஐச்வரிய சம்பன்னரும், எங்களுக்கெல்லாம் ஆதிமூலமான பெருமானே! தேவரீருடைய வல்லமையும், வீரியமும், பராக்கிரமமும், மகிமையும் ஈடிணையற்றவை. தாங்களே சராசரங்களுக்குப் பிரபுவும், பிராண கோடி களைப் படைத்தும், காத்தும், அழித்தும், அருளும் முத்தொழில் மூர்த்தி” என்றெல்லாம் பலவாறு தோத்திரம் செய்தனர்.
இவ்வாறு விஷத்தால் அமரர்களுக்கும், அடியார்களுக்கும் தோஷம் எதுவும் ஏற்படாமல் காத்தருளிய சிவனுக்கு உகந்த காலம் தான் பிரதோஷகாலம். அக்காலத்தில் அண்ட சராசரங்களும் பகவானின் நமச்சிவாய மந்திரத் தைச் சிந்தையிலே கொண்டு ஏகாந்தத்தில் அடங்கி ஒடுங்கும்.
பொன்னார் மேனிதனில் புலித்தோலை அணிந்த அண்ணல் மானும், மழுவும், சூலமும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன், தண்டை சிலம்பணிந்த சேவடி கிண்கிணி ஓசை எழுப்ப நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே ஆனந்த நர்த்தனம் புரியும் வேளை!
இச் சுபயோக சுபமுகூர்த்த வேளை தான் பிரதோஷ காலம்!
நம்மை எல்லாம் ஆட்டி வைப்பவன் தானும் ஆடுகின்றான். அவன் ஆடுவதால் உலகமே ஆடி ஒடுங்குகிறது.
இப்பிரதோஷ கால வேளையில் ஐயன் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனத்தை பிரம்மாதி தேவர்களும், வசிஷ்டாதி முனிவர்களும் கண்டு களிக்கின்றனர்.
எங்கும் தேவகானங்களும் வாத்திய கோஷங்களும், மந்திர ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மண்ணுலகத்தோரும் கண்டு களித்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி மிதப்பர்.

எம்பெருமான் விடமுண்ட நாள் சனிக் கிழமை எனப்படுகிறது. அதனால் சனிக்கிழமை நந்நாளில் வரும் பிரதோஷம் மிக்க சிறப்பும், மகிமையும் பொருந்தியதாகும்.
பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.
1.நித்திய பிரதோஷம்,
2.பக்ஷப் பிரதோஷம்,
3.மாதப் பிரதோஷம்,
4.மஹாப் பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்
.
அனுதினமும் சூரியாஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நக்ஷத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள காலகட்டம் நித்திய பிரதோஷம் எனப்படும், சந்தியா காலமாகும்.
சுக்லபக்ஷ சதுர்த்தி மாலைக் காலம் பக்ஷ பிரதோஷம் எனப்படும்.
கிருஷ்ண பக்ஷ திரயோதசி மாதப் பிரதோஷம் என வழங்கப்படும்.
கிருஷ்ண பக்ஷ திரயோதசி-ஸ்திரவாரமாகிய சனிக்கிழமை தினம் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹா பிரதோஷம் எனப்படும்.
பிரளய காலத்தில், எல்லாம் சிவனிடம் ஒடுங்கும் அதுவே பிரளய பிரதோஷமாகும்.
இந்த ஐந்து பிரதோஷ காலங்களில் எம்பெருமான் ஆனந்த நடனம் புரிந்து அகில லோகங்களுக்கும் அருள் பாலிக்கிறார்.
பேசப் பேசப் பெருகிக்கொண்டே போகும் சிவனார் திருப்புகழ். தென்னாடுடைய சிவன். எந்நாட்டவர்க்கும் பரமசிவன். சிவபெருமானை சிவப்ரதோஷமான சிவப்பெருநாளில் வழிபடுகின்றவர்கள் சிவனையொத்த வடிவம் பெறுவார்கள்.
சிவத்தலங்களில் சிவப் பெருநாளான பிரதோஷ காலங்களில் சிவனடியார்கள் கூடி 'மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!' என்று போற்றுவார்கள். மற்றவர்களால் போற்றப்படுவார்கள்.
'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்.

வாயாரத்தன்னடியே பாடும் தொண்டர் எனத்தகத்தான்' என்று ஏற்றுகின்றவர்கள் மற்றவர்களால் ஏற்றப்படுவார்கள். சிவனைப் பூஜிக்கின்றவர்கள் யோகசாலிகள். அளவற்ற செல்வச் செழிப்பில் வாழ்வார்கள்.
'சிவசிவ' என்று சிவத்தையே செபித்து 'சிவசிவ' என்று −ருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள். சிவனே சித்தன், சித்தனே சிவன், சிவத்துக்குள் சித்தனையும் சித்தனுக்குள் சிவத்தையும் பார்க்கத் தெரிந்தவர்கள் பூத்துப் பொலிந்தவர்கள்.
சிவபெருமானை எப்பொழுதும் நினையுங்கள். அவன் திருவடியை பாடுங்கள். நீங்கள்தான் கைலாயத்தின் நிரந்தரவாசிகள்.
சிவ சிவ சங்கர
ஹர ஹர சங்கர




. இங்கே பாருங்கள் எத்தனை விதமான நந்திகள்
.



சாயங்காலம் ஐந்து மணிக்குகெல்லாம் ஆபீஸ் இருக்குது எங்களாலே பிரதோஷ பூஜைஎல்லாம் பாக்க முடியாதுன்னு சொன்ன இதோ உங்களுக்காக பூஜை வலையிலேயே போட்டாச்சு. பாருங்க.




இந்த பிரதோஷத்துக்கு சிங்கபூரில் எங்கள் வீட்டு அருகில் உள்ள செங்காங் முருகன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பாருங்கள். சிவன் எப்படி அலங்காரத்தில் தகதகவென்று மின்னுகிறான்.தலையில்கங்கையுடன், சந்திரசேகரனாக காக்ஷி தருகிறார். முருகனும்கூட இருந்து அருள்பாலிக்கிறான்.