Tuesday, June 12, 2012

சங்கீத ஜாதி முல்லை

 சங்கீதத்தைப் பற்றி எழுதி ரொம்ப நாள் ஆச்சு.எனக்கு பிடித்த ராகங்களில் இரட்டை பிறவியான லலிதா வசந்தாவைபற்றி பார்க்கலாம். முன்பெல்லாம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தால் வைக்கும் பெயராக மட்டும் இருந்த ராகம் இது.இரண்டுக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பது சற்று கடினமான விஷயம்
முதல் ராகம்  லலிதா
 இதன்
 ஆரோஹனம்    ஸ ரி க ம த நி ஸ
 அவரோஹனம்   ஸ நி த ம க ரி ஸ


அருமையான வர்ஜ்ய ராகம் இது.பாடும் போது சுகமாக இருக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தம் தரும்.இதில் வசந்தா ராக சாயல் இல்லாமல் பாடுவது கஷ்டம். இதுனாலேயே ரொம்பபேர் "ரிஸ்க்" எடுக்கத் த்யங்கும் ராகம்.
இதில் மிகவும் பிரபலமாக இருக்கும் கீர்த்தனை ஹிரண்மயீம் லக்ஷிமீம் என்ற முத்துஸ்வாமி தீக்ஷதருடையது.

ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்
ராகம்: லலிதா தாளம்: ரூபகம்

பல்லவி

ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி

ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)

அனுபல்லவி

கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்

ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்

கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)
சரணம்
ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்
பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்
மாதராம் அப்ஜமாலினீம்
மாணிக்ய ஆபரணாதராம்
சங்கீத வாத்ய விநோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்
சீதகிரண நிபவதனாம்
ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்
குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)


ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.
பல்லவி
தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்
அனுபல்லவி
அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்
பாற்கடல் பெற்று எடுத்தவளும்
மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்
கோவில் கொண்டு இருப்பவளும்
இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்
தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்
நான் எப்பொழுதும் பாடுவேன்
சரணம்
வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்
பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்
சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்
தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்
உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்
மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்
சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்
சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்
அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்
குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்
என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்
முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்

Saturday, June 09, 2012

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் 2


அடுத்தது மஹாலக்ஷ்மி தாயார்.அதான் நீயே சொல்லிட்டே மஹா விஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்து மன்மதனை ஈன்ற தயார்.விஷ்ணுவதஸ்தல்ஸ்திதாம் விஷ்ணுபத்னீம்ன்னு ஆதி சங்கரரே பாடி இருக்கார். கண்ணாலே பாத்தாலே விஷ்ணு அம்சமும் மஹாலக்ஷ்மி தயாரும் தெரியும் வேறே நிருபணம்தேவையில்லை
 பரமசிவன் அம்சம் வைஷ்ணவ ஸ்வாமிகிட்டேயான்னு சந்தேகம் வரலாம். பெருமாளுக்கு எந்த பத்ரத்தாலே பூஜை செய்யனும்
துளசி.
சிவனுக்கு பிரீதியாண புஷ்பம் எது
வில்வதளம்
விஷ்ணுவுக்கு வில்வதளத்தாலே பூஜை பண்ணுவாளா
மாட்டார்கள்
அப்போ வில்வதளத்தாலே பூஜை பண்ணா அந்த ஸ்வாமி சிவாம்சம் உள்ளவர்தானே
ஆமாம்
திருபதிலே மார்கழி மாசத்திலே 30 நாளும் காத்தாலே வெங்கடரமணருக்கு வில்வதளத்தாலே பூஜை பண்ணுவா அப்போ சிவாம்சமமும் இருக்குன்னு நிரூபணம் ஆகிறது

சிவ வைஷ்ணவ பேதமே இருக்கக்கூடாதுன்னுதான் நம்ப பெரியவா செஞ்ச முறை இது.அதுனாலதான் பரமேஸ்வர் பிரீத்தயத்ரம்ன்னு ஆரம்பிச்சு நாராணாயேதி சமர்ப்பயாமின்னு சந்தி பண்ணும்போது முடிக்கிறோம்.

 சரி பார்வதிதேவி அமசம் எங்கே இருக்குன்னு பார்த்தா.சிவனை விட்டு அம்பாள் எபோதும் பிரியவே மாட்டா அது ஒன்னே போதும். ச்ரி வித்யாம் சிவவாமபாக நிலயாம்ன்னு அம்பாளை ஆதி சங்கரர் மீனாக்ஷி பஞ்சரத்னதிலே சொல்லாராறே சிவனோட உடம்புலே வலது பக்கம் இருப்பவள்.அது மாத்திரம் போறாது நீ நம்பறதுக்கு. திருப்பதி வெங்கடசலபதி கோயில்லே உண்டியல், ஸ்வாமி இருக்கிற மண்டப பிரகாரத்துலே பாத்தேன்னா மேலே நாலு  மூலையிலும் சுவத்துமேலே சிம்ஹத்தோட சிலை இருக்கும் அம்பாள் கோவில்லேதான் சிம்ம வாஹனம் இருக்கும் அவள்தான் ச்ரிமத்சிம்ஹாசனேஸ்வரி.அது மாத்ரம் இல்லை அபிஷேகம் முடிஞ்ச அப்பறம் அலங்காரம் செய்யும் போது பெருமாளுக்கு வஸ்த்ரம் சாத்துவாளே பாத்தியா?
பாத்தேன்
அது என்ன வஸ்த்ரம்
பட்டு வஸ்த்ரம்
அது பட்டு மட்டுமில்லை சரியாபாத்தா தெரியும். அது மஞ்சள் நிற பட்டு புடவை. இங்கேதான் காஞ்சிபுரத்துலே தனியா தறி போட்டு நல்லி செட்டியார்தான் அனுப்பிவெக்கிறா பெருமாளுக்க்காக. அம்பாளுக்குத்தானே புடவை அலங்காரம். அதை நிரூபணம் செய்யறா  மாதிரி அந்த வஸ்த்ரம் 


இன்னும்  ஒன்ணே ஒன்ணுதான் பாக்கி. அதான் உன்னோட(எனக்கு குல தெய்வம் திருத்தணி முருகன்) சுப்ரமண்ய ஸ்வாமி. அவரோட அம்சம் எங்கே இருக்குன்னு பாக்கலாமா. பொதுவா மலை மேலே எந்த ஸ்வாமி இருக்கும் 
முருகன்
திருப்பதி மலை மேலே இருக்கிற பெருமாளும் அவர்தான் அதான் அவரோட அம்சம் இருக்கு. அருணகிரிநாதர் பாடல்கள் எல்லாம் சுப்ரமணியஸ்வாமிமேலேதான் ஆனா அதுலே அவரோட மாமாவானே விஷ்ணுவோட புராணம் நிறையா வரும் அதோட மட்டும் இல்லாம திருப்புகழை முடிக்கும்போது ஆதி அருணாசலம் அமர்ந்த "பெருமாளே"ன்னுதான் முடிப்பார்.
சுப்ரமணியஸ்வாமிக்கு திருமலையில் வெங்கடேஸ்வரன்னு பேரு. இது போதாது வேறே நிரூபணம்வேணுமா.உனக்குத்தான் சங்கீதம் ஞானம் உண்டே. பரம முருகபக்தரான முத்துஸ்வாமி தீக்ஷதர் சுத்த தன்யாசிலே ஒரு கீர்த்தனை பண்ணியிருக்காரே தெரியுமா?
தெரியும்" "சுப்ரமண்யேன ரக்ஷிதோஹம்"
அதான் அதுலே சரணத்துலே ஒரு இடம் வருமே அதைச் சொல்லு
"வெங்கடெஸ்வரேனே நாம ரூபேண"
 நிறுத்து. போதுமா தீக்ஷதரே சொல்லிட்டார் சுப்ரமண்யருக்கு திருமலையிலே "வெங்கடேஸ்வர்ன்னு பேரு.

இந்த ஐந்து அம்சங்களும்தான் காரணம் கூட்டம் வருவதற்கு ஒருத்தர்சிதரிசனம் பண்ணா ஐந்துபேரை தரிசனம் பண்ண புண்ணியம் வரும்.

பரமாச்சார்யார் கனகாபிஷேகத்தும்போது எடுத்த போட்டோவிலே அந்த இரண்டு பசங்களுக்கு மேலே நெத்தி நிறையா விபூதி அரைகுடுமியுடன் ஒரு பையன்பெரியவாளையே பாத்துண்டு நிக்கிறானே யார் அது தெரியுதா. அது வேறு யாருமில்லை இன்னிக்கி சூட் கோட் போட்டுண்டு பேஸ் புக்கிலே இந்த கட்டுரையை எழுதரானே அந்த
தான்


கதை இதோட முடியலை இனிமேதான் கிளைமேக்ஸ்.
நான் வியழக்கிழமை கிளம்பும்போது சென்னையில் என்னுடைய பேங்கிலே சீனியர் மேனேஜர் பதவிக்கு (1987) இன்டெர்வியு  முடித்துவிட்டு திருப்பதி சென்று விட்டேன்சரி அவா இரண்டு பேரையும் பிரசாதம் எடுத்துண்டு கிளம்பச்சொல்லு. போகும்போதுஉங்க பாங்க் கிளைக்கு போயிட்டு போ என்று ஆர்டர்

எப்பவும் நான் மடத்துக்கு போனாலும் மடத்துலேயே ஒரு கிளை உண்டு அங்கே போய் கை கால் அலம்பிவிட்டு வஸ்த்ரம் மாத்திக்கொண்டுதான் செல்வேன் இது மஹா பெரியவாளுக்கும் தெரியும். அதன் பெயர் அப்போது "சாலைத் தெரு" என்று பெயர். இப்போது சங்கர மடம் கிளை என்று மாற்றியாகிவிட்டது.
அங்கே போனவுடன் பிராஞ்ச் மேனேஜர் விஸ்வானாதன் சார் உங்களுக்கு சென்னை ஹெட் ஆபீஸ்லேந்து போன் வந்தது உடனே உங்களை பேசச் சொன்னா  போன் போட்டு எம் டி பீஏ கிட்டெ பேசினேன்.டி ஆர் சி கன்கிரஜுலேஷன்ஸ் உனக்கு சீனியர் மேனேஜர் பிரமோஷன் கிடைத்தாகிவிட்டது இப்போதான் லிச்ட் போட்டா. மறுபடியும் பெரியாவாள் கிட்டே ஓடி நமஸ்காரம் பண்னி வாயடைத்து நின்றேன். பெரியவா கேட்டா என்ன பாலாஜி அபிஷெக தர்சன பலம் கிடைச்சுடுத்தா
எனக்கு இன்றுவரை சந்தேகம் பாலஜி அபிஷேக தர்சன பலனா ?இல்லை பெரியவா தர்சன பலனா? இல்லை ஐந்து அம்ச உபன்யாச பலனா?






ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்


ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்று கண்னதாசன் சொன்னது நினவுக்கு வருகிறது. அப்படி என்ன இன்று கேட்கிறீர்களா. வேறு ஒன்றுமில்லை இன்றோடு என் வாழ்க்கையில் 66 ஆண்டுகள் பூர்த்தியாகி 67 ஆம் ஆண்டு பிறக்கிறது.வயது என்ற எண்ணிக்கை ஒரு கணக்குதானே ஒழிய அதுவே நம்மைப் பற்றிச் சொல்லும் நிர்ணயம் ஆகிவிடாது.அது சரி இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தோமே எதாவது நல்லது செய்து இருக்கோமா என்ற  ஆராய்ச்சியில் இறங்கப்போவதில்லை. ஏனென்றால் ஒன்றுமில்லை என்ற உண்மை கொஞ்சம் சுடும். சரி இந்த மாதிரி பிறந்த நாட்களில் எதாவது நல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறதா என்று பார்த்தால் ஒரு விஷய்ம் நினைவுக்கு வருகிறது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் உன்று மட்டும் நிச்சியம் எந்த நல்ல விஷயமாக இருந்தாலும் என்னைப் பொருத்த வரையில் அது பரமாசாரியார் சம்பந்தபட்ட விஷ்யமாகத்தான் இருக்கும்
 ஒருமுறை திருப்பதி சென்று பாலஜியின்  அபிஷேக தரிசனம்  தரிசனம் செய்து  விட்டு நானும் என் ஆடிட்டர் நண்பரும் வரும் வழியில் காஞ்சி சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்யும் எண்ணத்துடன்  காலை 11 மணிக்கு காஞ்சிமடத்துக்கு சென்றோம்.  அன்று வெள்ளிக்கிழமை பக்தர் கூட்டம் அவ்வளவாக இல்லை. மஹாபெரியாவாள்,  கார்யம் பாலு, மற்றும் இரண்டு பேர்கள் மட்டும் இருந்தார்கள்.பெரியாவளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு தோடாகாஷ்டகம் சொல்லி வணங்கிணேன்.(எனக்கு பெரியவா இட்ட கட்டளை எப்பொதும் இதை சொல்லித்தான் வணங்க வேண்டும் என்பது.சிறுவயதில் இதைச் சொல்லி அவர்களிடம் பரிசு வாங்கிய நாள் முதல் இந்த ஏற்பாடு) இனி அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே கேட்கலாம்.
   இவா எங்கே இருந்து வரா ? திருப்பதிலே பாலாஜி அபிஷேகம் பாத்துட்டு பெரியவாளையும் தரிசனம் பண்ணிட்டு போலாம்னு வந்தோம். ஓ அபிஷேகமா இன்னிக்கி. சரி நல்லா பாத்தியா. ஆமாம்  நல்லா பாத்தேன் என்று தலயாட்டினேன். என்ன எல்லாம் பண்ணா சொல்லு. ஸ்வமிக்கு சாதரணமா எப்பவும் போட்டு ஸ்வாமியையே  முழுக்க மறைத்திருக்கும் நகைகள், வஸ்த்ரம்,பூ மாலைகள் எல்லவற்றையும் எடுத்து கலைத்துவிட்டு வெறும் சிலா ரூபமாக அபிஷேகம் செய்தார்கள். மறுபடியும் எல்லாத்தையும் எடுத்துட்டாளா நல்லா பாத்தேங்கிறயே சரியாச் சொல்லு. அப்போதே  மனம் சொல்லியது பெரியவாஇன்னிக்கி நமக்கு அனுகிரஹம் பண்ணப்போறான்னு.
பெருமாளோட மார்புலே தாயார் மஹலக்ஷ்மி மட்டும் இருந்தா. அவ்வளவுதானா அப்போ நீ சரியா பாக்கலை. கைகள் இரண்டிலும் மேலே சங்கு சக்ரம் இருக்குமே அது தெறிஞ்சுதா. பெரியாவா ஞானக்கண் கொடுத்த அப்பறம்தான் ஞயாபகத்து வந்தது இரண்டு கைகளில் சங்கு சக்கிரம் இருக்கும் இடத்திலும் பித்தளை கேடயம் போட்டு மூடி இருந்தது.(அது ஏன் மூடி இருக்கும் என்பதை பெரியாவாளே அப்பறம் கடைசியில் சொல்லுவார்.)

அது சரி ஏன் திருப்பதிக்கு மட்டும் கோடானுகோடி ஜனங்கள் அடிக்கடி வந்து தரிசனம் பண்ணீட்டு போறா தெரியுமா உனக்கு?.
தெரியாது
ஆதி சங்கரர் பல கோயிலுக்குப் போய் சக்ர பிரதிஷ்டை பண்ணியிருக்கார். அவர் திருமலை வந்த போது ஸ்வாமிக்கு ஆகர்ஷண யந்திரம் பிரதிஷ்டை செஞ்சு இருக்கார் அதான் கோடானு கோடி ஜனங்களை ஆகர்ஷணம் பண்ணி இழுக்கிறது. திருப்பதிக்கு வந்து ஸ்வாமியைப் பாத்தூட்டு பாத்தது போறும்னு திருப்தி பட்டு போகவே முடியாது. அவா ஜருகண்டி ஜருகண்டின்னு தள்ளினாலும் விடாம இருந்து பாக்கனும்கிற மனோபாவம் இருக்கிறதுக்கு காரணமே ஆசார்யளோட அந்த ஆகர்ஷ்ண யந்திரம்தான்.இன்னும் ஒரு காரணமும் இருக்கு அது தெரியுமா?
இன்று பரமாச்சாரியார் எனக்கு அனுக்கிரஹம் செய்யப் போறார்ன்னு மனம் சொல்லித்து எனவேதெரியாது பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்.
வெங்கடாசலபதி கிட்டே ஐந்து அம்சங்கள் நிறைந்து இருக்கு அதுவும் ஒரு காரணம்.

அது என்னான்னா மஹா விஷ்ணு, மஹாலக்ஷ்மி தாயர், மஹாதேவனான பரமசிவன், ஈஸ்வரியான பார்வதி தேவி,தேவசேனாபதியான சுப்ரமண்யர்.இத்தனைபேரோட அமசம் இருக்கிறதாலேதான் கூட்டம் குவியறது.

சரி நான் சொன்னா ஒத்துகிறயா

பெரியவா சொன்னா அப்படியே ஒத்துகிறேன்

நீதான் ஆடிட்டர் ஆச்சே எல்லாத்துக்கும் அத்தாச்சி, தடயம் கேட்டுதானே நிர்ணயம் பண்ணனும். யார் சொன்னாலும் கேட்டுக்கலாமா.

பெரியாவாளே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தேன்

முதல்லே மஹாவிஷ்ணு அதுக்கு எந்த தடயமும் தேவை இல்லை அதான் சசங்க சக்ரம் சபீரிடித குண்டலம் சஹார வத்ச்சலஸ்தலோபி கௌஸ்த்துபம்ன்னு சேவை சாதிக்கிறாறே அதுபோதும்


நாளை தொடரும்.......


  

Monday, June 04, 2012

காஞ்சி மகான்


தலைமுறை தலைமுறையாக இந்த பாரத புண்ணிய பூமியில் பல மஹான்கள் இறைவனின் அவதாரமாக தோன்றி இருக்கிறார்கள். எப்போதெல்லாம் தர்மம் நலியுமோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்று பகவான் கீதையில் கூறிய வாக்குப் படி இன்றும் எண்ணற்ற மஹான்கள் நம்மிடையே மனித உருவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மஹா உன்னதமான மகான் நம் கூடவே 100 வருடங்கள் மனித உருவிலே வாழ்ந்து நமக்கு வழி காட்டினார். கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் மஹாபெரியவரைப் பற்றி சொல்லி மாளாது. அவர் பல நூறு வருடங்களோ அல்லது பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தியோ வாழ்ந்த மஹான் அல்ல. நம்முடன் மனித உருவில் வாழ்ந்த சம காலத்தவர். அவரை அறிந்து அவரின் அருளும், ஆசீர்வாதமும் பெற்ற ஆயிரக் கணக்கானோர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் அந்த நடமாடும் தெய்வத்துடன் நடந்த சம்பவங்களை மயிர்க் கூச்செறிய, மெய் சிலிர்க்க, ஆனந்தக் கண்ணீருடன் சொல்கிறார்கள்.

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சுப்பிரமணியம் ஸ்வாமி, பால் ப்ருண்டன், ராபர்ட் வால்செர், தலாய் லாமா, . வெங்கடராமன், நேபால் ராஜா ராணி, கிரீசின் ராணி, MS சுப்புலக்ஷ்மி, அடல் பிஹாரி வாஜ்பாய், பல இஸ்லாமிய பிரமுகர்கள் போன்ற எண்ணற்ற தலைவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும் அவர் செய்த அற்புதங்களும், அருளும் கணக்கில் அடங்காது.

பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள்,   துன்பத்தைத் துரத்துபவர்கள்
தர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல் கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள். காஞ்சி மகாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றி வந்தார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. குடும்ப நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், ‘சாஸ்திரத்தை மீறிவிட்டோமோஎன்ற உறுத்தல், பக்தரை வாட்டியது. தனது மனக்கலக்கத்துக்கு மருந்தாகமகாபெரியவாளை அனுதினமும் தியானித்து வந்தார்! அவருக்கு காஞ்சி மகான் திருவருள் புரிந்த சம்பவத்தை உள்ளம் உருக விவரித்தார் அகிலா கார்த்திகேயன்
ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசை ஆசையாகச் செய்தார். குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்பதைவிட, வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சி மகானைத் தரிசிக்கப் போகிறோம் என்ற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது
. சென்னை வந்ததும், விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து காஞ்சிபுரம் சென்றார். காஞ்சி மடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார் மகா பெரியவா. தரிசனத்துக்காக வந்திருந்த அடியவர்களுக்கு வியப்பு. ‘சமையல் இன்னின்ன மாதிரியெல்லாம் இருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு பெரியவா சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியெல்லாம் சொன்னது கிடையாதேஎன்ற ஆச்சரியம் அவர்களுக்கு. இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்து சேர்ந்தார் பக்தர். மகா பெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளை அழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோஎன்றார். வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படி பெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர் களுக்குப் புரியவில்லை. ஆனால், கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிசிக்க ஓடி வந்துவிட்டான். எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத் தெரியாதா?! வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மகா பெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார். அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்னஉன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?” என்றார் கருணையும் கரிசனமும் பொங்க. அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்து வார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவாபெரியவா…’ என்று திருப்பித் திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது! மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மகான், ”நானே சொல்லி டறேன்!” என்று ஆரம்பித்தார்… ”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கே புறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கற வரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமா இருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்ன நான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார். அவ்வளவுதான்தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்துபோனார்கள். எனில், அந்தப் பக்தரை கேட்கவும் வேணுமாநெக்குருகி நின்றார் அவர்! இதற்கு நடுவில் இன்னொரு சம்பவமும் நடந்தது. அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்த நேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த மற்ற அன்பர்களிடம்,”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரேஅவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோஎன்று கேட்டாராம். இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், எவரிடமும்இதைக் கொடு, அதைக் கொடுஎன்று எதையும் கேட்டறியாதவர் பெரியவர். ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள். இந்த வேளையில்தான்சாப்பிட்டு முடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்! அவரையும் சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்த மகாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமே சொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்
சரி சரிஇவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண்ணாக்கையும் தையல் இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!” என்றார்
. அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். ‘தெய்வத்துக்கு நிகரான காஞ்சி மகான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரேஎன்று நெகிழ்ந்தார்..ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்று தவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்! இதையெல்லாம் உணராமல் இருப்பாரா பெரியவா. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், ”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். எங்கிட்ட இருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படறார். ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும் வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. இருந்தாலும் எனக்கு என்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை நோகவிட்டுட முடியுமா?” என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்து பேசினார்.
இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிற பசு மாட்டுக்குக் கொடுங்கோ அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிற பாலை எனக்குக் கொடுங்கோ. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கற பாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? பசு மாட்டு வழியா வந்தா எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும். அதனால அவர் மனசுல நெனச்சபடி,எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. அதை நான் ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?” என்றார் விளக்கம் சொல்வது போல
! இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்

 இன்று அந்த மஹானின் அவதார தினம் காலடியும் மூன்று வார்த்தைகள்தான் காஞ்சியும் மூன்று வார்த்தைகள்தான் எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.  
அனனவருக்கும் அந்த மஹானின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும். லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து