Saturday, December 22, 2012

சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் கேட்கப்போனேன் 2




சந்திரஜோதி ராகத்தில் அமைந்த இந்த பாடல் மெலடி வர்க்கத்தை சேர்ந்தது . தியாகய்யர் பாடல் எல்லாமே ராமனிடத்தில் கெஞ்சுவது போல்தான் இருக்கும் . அதற்காகவே சஹானா,ஆஹிரி,நீலாம்பரி ,பைரவி போன்றராகங்களை மிகுதியாக கையாண்டார் . கம்பீரமான ராகமான அடாணா, காம்போதி போன்ற ராகத்திலும் பாடல்கள் மென்மையாக ஏலா நீ தயராது....(அடாணா ) எவரிமாட வினாவோ (காம்போதி)என்று இருக்கும் .இதே இவருடைய சமகாலத்தவரான கோபலக்ரிஷ்ண பாரதி அடாணாவில் பாடும்போது கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணேன்னு மிலிடரி கமேண்டர் ஆர்டர்போல்  அதிகாரமா ஒலிக்கும்.பாகாயனையா பாட்டில் தியகராஜர் கூறுகிறார் " பிரும்மாதி தேவர்களுக்கும்கூட உன்னுடைய மாயங்கள் தெரியாது என்று எனக்குநல்லா தெரியும் " இந்தபாட்டின் போதே கரகோஷம் வானைப் பிளந்தது .

அடுத்தது வந்தது ஆனந்த பைரவி . இன்னிக்கி ஜெய்ஸ்ரீயின் "சூப்பர் ஸ்பெஷல் ரவுண்டில் " எல்லாமே "மெலடி ரவுண்டு"தான். திருவாசகத்துக்கு உருகார் கூட இன்னிக்கி இவருடைய ஆனந்த பைரவிக்கு உருகிருக்கணும் , அப்படி ஒரு ராக விளக்கம் ஒருதடவை போட்ட சங்கதி மறு படி கிடையாது.கார் வைகளும் , கோர்வைகளும், நாதாஸ்வரபிடிகளும் சமானமாக் கலந்து அவையை அதிரவைத்து விட்டார்.

எடுத்த பாட்டோ " ஜகதம்பா" என்ற ஸ்யமாசாஸ்த்ரி கிருதி . கேட்கவா வேண்டும் மெலடிக்கு .சபையில் பூரண நிசப்தம் ,ஆனால் மேடையில் சம்பூர்ணநாத சப்தம். சப்த பிரும்ம மயீம் பராபரமயீம் ஆனந்தபைரவிமயீம்தான்.என்ன ஒரு சமர்ப்பணம் . சிட்ட ஸ்வரங்களும் கல்பனா ஸ்வரங்களும் சேர்த்து கலக்கு கலக்கிவிட்டார். பாடல் முடிந்ததும் சபையோரின் கரகோஷம் முடியவே 5 நிமிஷம் ஆச்சுன்னா எப்படி இருந்து இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள் . பக்கத்தில் இருந்த சிகப்பு டி ஷர்டைப் பார்த்தேன் . இவ்வளவு கைதட்டலுக்கும் மரியாதை கொடுக்காமல் நல்ல டீப் மெடிடேஷன்

மத்திய நிதி மந்திரி கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு போக வேண்டும் எனவே நாளைக்கும் வாருங்கள் மீதி கச்சேரியைக் கேட்க !!!!!!!!!

சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் கேட்கப்போனேன் 1




வீட்டில் எல்லோரும் ஒரிஸ்ஸா மாநில சுற்றுப்பயணம் போய் 3 நாள் ஆகிவிட்டது . எனக்கு மும்பையில் ஒரு மீட்டிங்க் இருந்ததால் போக முடியவில்லை. திடீரென்று மீட்டிங்க் ஒத்திவைக்கபட்டது என்ற செய்தி இன்றுதான் தெரிந்தது . எனவே சமையல் வேலையும் சேர்ந்து கொண்டது. சமையல் செய்வது கூட எளிது ஆனால் இந்த காய் நறுக்குகிற வேலைதான் ரொம்ப போர். சரி இந்த சங்கடமான சமையலில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் யோசித்த போது கண்ணில் பட்டது கிருஷ்ண கான சபையின் சங்கீத விழாவின் டிக்கெட் பிரிக்கப்படாமல் புதிதாக இருந்தது . பிரித்துப்பார்த்தால் விழ ஆரம்பித்து 10 நாள் ஆகிவிட்டது.சரி இன்றைக்கு யார் கச்சேரி என்று பார்த்ததில் 4.30 க்கு மும்பை ஸ்ரீ மதி ஜெயஸ்ரீ என்று போட்டிருந்தது . சரி சங்கடமான சமையலில் இருந்து விடுபட்டு சங்கீதம் கேட்கக் கிளம்பினேன்.

4.15 மணிக்கு சபையை சென்றடைந்தேன் . சபாவில் முன்றாவது வரிசையில் நல்ல இடமாக உட்கார்ந்து கொண்டு மொபைலை சுத்தமாக அணைத்துவிட்டு திரை விலகக் காத்திருந்தேன் . சரியாக 4.30க்கு திரை விலகியது.மேடையில் திருமதி . மும்பை ஜெயஸ்ரீ பாட்டு,ஹெச் என் பாஸ்கர் வயலின், வி வி ராமமுர்த்தி மிருதங்கம், வி. அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா.ஜெய்ஸ்ரீயைப்பற்றி ஒருசிலவார்த்தைகள் .சுருதி சுத்தம் , வக்செபெஷ்டம், கீர்த்தணை செறிவு,காலப்பிரமாணம், பாவம் ததும்பும் பாணி, அபார மனோதர்மம், இவை அனைத்தும் ஒன்றாக பக்கபலமாகக் கொண்டு மற்றும் பாடல் மறந்துவிட்டால் உதவி செய்ய எதிரில் பேப்பர், புத்தகம், லேப்டாப் , ஐபேட்போன்ற எதுவும் இல்லாமல் மேடையை ஆட்சி செய்யும் சக்ரவர்த்தினி .மூன்று ஸ்ருதிகள் அவர் மட்டும் தனி  சங்கீத உலகில் உலவுவார். இனி கச்சேரிக்குப் போகலாம்

ஆரம்பமே சஹானா வில் "வந்தனமு ரகு நந்தனா" என்ற தியாகய்யாவின் பாட்டு.சாதாரணமாகவே யார் பாடினாலும் உருக்கும் . ஆனால் இவர் அளித்த விதம் அதுவும் ராகத்தை இரண்டே ஆலாபனையில் மொத்த உருவத்தையும் கோடி காண்பித்துவிட்டு கீர்த்தனையை அளித்தவிதம் சபையை மெய்மறக்கச்செய்தது . ஆமாம் உண்மைதான் என் அருகில் இருந்த சிகப்பு டி  ஷர்ட் மனிதர் நன்றாக தூங்க ஆரம்பித்துவிட்டார் முதல் பாட்டுக்கே. அவரைப்பற்றிய விவரம் கட்சியில் பார்க்கலாம்.ஜெய்ஸ்ரீயிடம் ஒரு பிடித்த விஷயம் பாடும்போது அவரே கண்களை மூடி ஸ்வய அனூபூதியாகி தானும் அனுபவித்து நம்மையும் அனுபவிக்கச் செய்யும் வல்லமை பெற்றவர் பாடும்போது சஹானாவில் அவர் கீர்த்தனையை உருகவிட்டு ஸ்வரம் போடும்போது அதன் ஜீவகளையை உணரவைத்தார்.

அடுத்தபடியாக எடுத்த உருப்படி சந்த்ரஜோதி ராகம் . இந்தமாதிரி அபூர்வராகங்களை மறைந்த திரு ராஜம் அவர்கள்தான் பாடுவார். ராகத்தின் லக்ஷணத்தை விரிவாக மெதுவாக கீழே இருந்து ஆரம்பித்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி மேலே போய் புஸ்வானம் போல பூவாக கொட்டி பின்பு அவுட்டாக மேலே சஞ்சாரம் செய்து கலர் கலராக வானவேடிக்கை செய்து மத்தாப்புகளும் கொட்டியது.பாடல் தியாகய்யாவின் பாகையநயா நீ மயலெந்தோ . இந்தப் பாட்டிலும் ஸ்வரபிரச்தாரம் அருமை. அவர் மிகப் பெரிய ஸ்வரக் கோர்வைகளை பெரிம்பாலும் உபயோகிப்பதே இல்லை . எல்லாம் பொடுசு ஸ்வரம் அதை ராகத்தோடு படும்போது சிறிய வைரத்தால் செய்த வைரமாலை ஜ்வலிப்பதுபோல் மின்னியது.

அடுத்த பகுதி நாளை