சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
Monday, December 31, 2007
Thursday, December 27, 2007
நடராஜனின் தரிசனமே....
நடராஜனது ஐந்து சபைகள்தான் மேலேயுள்ளது. மதுரையில் பாருங்கள் வலது பாதம் தூக்கி ஆடுகிறார். அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.
திரு. மௌளி அவர்கள் போனபதிவுக்கு போட்ட பின்னுட்டத்தில் "இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவோமே"என்ற பாட்டை தருமாறு கேட்டிருந்தார். இதோ படமும் கருத்தும் முன்னே பாடல் பின்னே.
சென்னைக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு திருத்தலம். கரைக்கால் அம்மையாருக்கு சிவபதவி அளித்த இடம். நடராஜர் எட்டு கரங்களுடன் நடனம் ஆடும் தலம் ( ரவி எட்டுகைகள் இருக்கிறதா இல்லையா எண்ணிப்பார்த்து சொல்லுங்கள்)அபய கரம்,அருள் கரம்,அதிரமுழங்கும் உடுக்கை ஒரு கரம், திரிசூலம் ஒரு கரம், மான் ஒரு கரம் அக்னி ஒரு கரம், நாகபாசம் ஒரு கரம் மற்றும் நாட்டிய முத்திரையுடன் ஒர் கரம் ஆக எட்டு கரம்
உலகத்தின் சுழற்சிதான் நடராஜரின் நடனம்.அஜபா நடனம் என்றும் கூறுவார்கள். ஐயனின் வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது. நம் பாபநாசம் சிவன் அவர்கள்
அவனது நடனத்தை இப்படி வர்ணிக்கிறார்:-
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)
நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க"
மேலும் கூறுகிறார்
கஞ்ஜ மலரிதழின் விழியாள்-ஓயாக்காதலுடன் சிவகாமி மணாளநின்
சரணம்கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென
குழவி இளம் பிறை பளீர் பளீரென
நஞ்சம் தவழும் நீல கண்டமும் மின்ன
ஒருநங்கை கங்கை சடையில் குலுங்க-நடமாடும் ஆடல் அரசே.
இந்தப்பின்னனியில் மேலே உள்ள ஆடலரசனின் படத்தை இந்த பாடலுடன்/<"இங்கே">"> கேட்டுப் பாருங்கள். மனதில்அவனது ஆனந்த நடனம் தெரியும்.
திருவாலங்காட்டில்தான் தன்காதிலிருந்த குண்டலம் கீழே விழுந்ததாக
பாவனையுடன் சிவன்அதை இடது காலால் எடுத்து அணிய அதுபோன்று செய்ய முடியாமல் சிவகாமி தோல்வியோடு தலை குனிந்தாளாம். ஆனால் நம் சிவனின் பார்வையோ வேறு மாதிரி இருக்கிறது.காளியுடன் ஆடும்போது தோற்றுவிடும் நிலையை அடையும் தருணத்தில் எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தினால் காதிலிருக்கும் குண்டலம் கீழே விழுவதுபோல விழவைத்து (அழுகுணி ஆட்டம் ஆடி) இடது காலால் எடுத்து பின்பு உயரத்தூக்கி அதை காதில் அணிந்ததாக இப்படி கூறுகிறார்
"சுபஞ்சேர் காளியுடனாடிப் படு தோல்வி யஞ்சி திருச்செவியிலணிந்த-மணித்தோடு விழுந்ததாக மாயங்காட்டியும் தொழும்பதம் உயரத்தூக்கியும்-விரிப்ரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின்திருப் பதம்தஞ்சமென உனை அடைந்தேன் பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும்துரையே சபை நடுவில் தத்திமி என்று ஆடும்
சரி இனி திரு. மௌளி கேட்ட பாடலுக்கு வருவோம்.திரு. சிவன் அவர்களின் அருமையான பாடல்களுள் ஒன்று.கமாஸ் ராகத்தில் அமைந்த இடது பதம் தூக்கி என்ற பாடல்.
இறைவன் எப்படி ஆடுகின்றான் என்பதை எவ்வளவு விவரமாக வர்ணிக்கின்றார். புன்னகையோடு இடது காலை தூக்கி தில்லையிலே ஆடுகிறானாம். அவன் மட்டும் ஆடவில்லை அவனுடன் இந்தப் பூமியும் ஆடியது(சுழற்சி), தலைமேல் இருந்த கார்க்கோடகன் என்ற கொடிய பாம்பும் ஆட,பக்தர்கள்ஜெயஜெயவெனகோஷிக்க,புலிப்பாதமுனிவர்கண்குளிர்ந்து
கொண்டாட ஆடினார். ஆடியபோது ஆண்டவனின் கால் சிலம்புகள் கலீர் கலீர்என்று முழக்கமிட,தலையில் இருக்கும் பிறைச் சந்திரன் தலை இந்த பக்கமும் அந்தபக்கமும் ஆடும் போது பளீர் பளீர் என்று மின்ன, மைத்துனாரன திருமால் மத்தளம் வாசிக்க, சிவகாமி மணாளன் திருசிற்றம்பலத்தில் மகிழ்ச்சியோடு ஆடுகின்றான்
ராகம் கமாஸ தாளம் ஆதி 1 களை
பல்லவி
இடது பதம் தூக்கி ஆடும்
நடராஜனடி பணிவையே நெஞ்சே (இடது)
அனுபல்லவி
பட அரவாட புவியத ளாட
பக்தர்கள் ஜய ஜய எனவே
புலி பதஞ்ஜலி இரு கண் குளிர தில்லையிலே (இடது)
சரணம்
திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென
திருமுடி இளமதியொளி பளீர் பளீரென
திமிதக தரிகிடதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம் பலந்தனில் புன்னகையோ (இடது
திரு வி ஆர் கிருஷ்ணன் அவர்களின் பாடலைகேட்க /<"இங்கே"> செல்லவும்
திருமதி. சுதா ரகுநாதன் படிய பாடலைக் கேட்க/<"இங்கே">"> செல்லவும்.
Sunday, December 23, 2007
தில்லை நடராஜனின் தரிசனமே....
இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியதுவீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள்.
ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.
நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.
கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்
நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான்.
ராகம்:சாமா தாளம்: ஆதி
பல்லவி
வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே எப்போது.....(வருவாரோ)
அனுபல்லவி
திருவருந் தென்புலியூர் திருச்சிற்றம்பலவாணர்குருநாதனாக வந்து குறைதீர்க்கக் கனவு கண்டேன்
இருவினை பிணிகளைக் கருவறுத்திடுகிறேன்பயப்படாதே என்று சொல்ல.....(வாருவாரோ)
சரணம்
மறையாலும் வழுத்தறியா மகிமை பெறு ந்டராஜன்நறியூறுஞ்சேவடியை நம்பினவனல்லவா
அனுதினஞ்சிவ சிதம்பரமென்ற அடிமையென்றருள் புரிந்திடவிங்கே......(வாருவாரோ)
தனக்கு வாக்கு கொடுத்தபடி தில்லை பொன்னம்பலவாணன் வருவனோ மாட்டானோ. அப்படியே வந்தாலும் தன்னோடு ஐக்கியமாக்கிக்கொள்கிறேன் என்று வாக்களித்தபடி வரம் தந்து தன்னைச் சேர்த்துக்கொள்வானோ அல்லது தான் தாழ்ந்த குலத்தவன் என்று எண்ணி தவிர்த்துவிடுவானோ என்றெல்லாம் நினைத்து அவரது மனம் சஞ்சலப்படுகிறது. குருநாதனாக வந்து எனது இந்தப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் உண்டான பிணிகளான பாவங்களைத் போக்கி இனி எனக்கு பிறவியே இல்லாத ஸாஸ்வதநிலையை அளிப்பேன் பயப்படாதே என்று கனவிலுறுதி மொழி அளித்த பொன்னம்பலவாணன் வருவானோ மாட்டானோ...?ஆனாலும் என்மனம் அப்படி வராமல் இருக்கமாட்டான் என்று கூறுகிறது. ஏன் தெரியுமா கனவில் சொன்னவன் யாரோ அல்ல. நான்கு வேதங்களாலும் அறுதியிட்டு உறுதியாக விளக்கமுடியாதவுனுமாகிய அந்த கனகசபாபதியின் பாதங்களை நம்பினவன் நான்.அதுவும் எப்பேர்ப்பட்ட பாதம் அது.தில்லை மூவாயிரம் முனிவர்கள் தினமும் பூசித்திடும் பாதம்,சிற்சபையில் திந்திமிதிமிதோம் என்று ஆடியபாதம்,பார்க்கப் பார்க்க திகட்டாத பாதம், எல்லையில்லாத இன்பம் அருள் செய்திடும் பாதம்.நான் தினந்தோறும் சிவ சிதம்பரம் என்றுஎப்போதும் கூறி வணங்கின அவன் அடிமை என்று என்மேல் கருணை கொண்டு அருள் புரிந்திட வராமல் இருக்கமாட்டான் என்று தன்னை தனே சமாதான்ப்படுத்திக்கொண்டு இரக்கம் குணத்தை வெளிப்படுத்தும் ராகமான சாமாவில்இந்தகீர்த்தனையை போட்டு இருப்பது கேட்பவர் மனத்தை உருகச் செய்யும்.
கீழே சென்று பாடலை கேட்டு பார்த்து மகிழுங்கள்.
திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்
Friday, December 14, 2007
விட்டல..... விட்டல.....
யார் வேண்டுமானாலும் எந்த ஊருக்கும் வேண்டுமானாலும் போங்கள். ஆனால் தப்பித் தவறிகூட பணடர்பூர் போய்விடாதீர்கள்.அப்படியே போனாலும் சந்திராபாகா நதிக்கரையில் இருக்கின்ற விட்டோபா பாண்டுரங்கணை மாத்திரம் பார்த்துவிடாதீர்கள். இடுப்பில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறானே யார் தெரியுமா அவன். "படா சித்தச் சோர மனமோஹன்' அவன் தொழிலே மனங்களை கொள்ளையடிப்பதுதான். அவனை நீங்கள் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்
"மேரா சித்தசோர விரஜமோஹன்" உங்களுடைய மனத்தையும் அபஹரித்துவிடுவான். ஓ.ஸ் அருணின் இந்த அபங்கம் "விட்டல.... விட்டல...'மிக அருமையானது.பாண்டுரங்கனின் கோவிலில் 24 மணிநேரமும் விட்டல விட்டல என்று நாமசங்கீர்த்தனம்தான்.கேட்டுத்தான்,பார்த்துத்தான் ரசியுங்களேன்.
Tuesday, December 11, 2007
மஹாகவியின் பிறந்தநாள்.
இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் புதுவையில் பாரதியுடன் இருக்கும்போது, ""மகான்கள் தீர்க்காயுசா யில்லாமல் போய்விடுகிறார்கள்? பாரதியாரே, அதற்குக் காரணம் என்ன?"" என்று கேட்டேன்.""மகான்கள் பூலோகத்திற்குத் தேவ தூதர்கள். ஜனோபகாரார்த்தமாக அவர்கள் உதிக்கிறார்கள். பூலோகத்தில் அவர்கள் வந்த காரியம் ஆனதும் அவர்கள் இவ்வுலகத்தில் நிற்க மாட்டார்கள். மறைந்துவிடுவார்கள்"" என்றார். அவர் வாக்கையும் அனுபவத்தையும் கவனித்தால், அது சரியென்றே தோன்றுகிறது.ஏனென்றால், ஸ்ரீ விவேகானந்தர் நாற்பதாவது வயதில் காலமானார். அவருடைய சிஷ்யையும் வேத புத்திரியுமான சகோதரி நிவேதிதா தேவி, தமது நாற்பதாவது வயதில் காலமானார். நிவேதிதாவுக்குச் சிஷ்யரான பாரதியும் நாற்பதாவது வயதில் காலமானார். இவ்விதம் குரு பரம்பரை காலமான விஷயம் அதிசயமாக இருக்கிறது.புதுவையில் அவர் எங்கேனும் நடந்து செல்லும்போது, பாரதியாருடன் நானும் போக விரும்பி நடந்தால், அவருக்குச் சரியாக என்னால் நடக்க முடியாது. அவருக்கு வீதிகளில் மெதுவாக நடக்கத் தெரியாது; எனக்கு அவசரமாக நடக்க முடியாது. எனவே, என் ஓட்டம் அவர் நடைக்குச் சரியாக இருக்கும்.புதுவையில் அவர் எழுதிய "பாஞ்சாலி சபத"த்தின் முதல் பாகத்தை ஒரு ஜமீன்தாரிடம் படித்துக் காட்டினேன். அவர் அதிசயமாக கேட்டுக்கொண்டிருக்கையில், அவருடன் இருந்த அவரது காரியதரிசி, என்னை, ""இந்தப் புத்தகம் யார் எழுதியது?"" என்று கேட்டார். அதற்கு நான், ""பாரதியார் பாடியது"" என்று சொன்னேன்.அவர், ""பாரதி எந்த ஊர்?"" என்றார்.""அவர் எட்டையபுரம்"" என்றேன்.""இப்படிப்பட்ட பாடல் எழுதியவர் எட்டையபுரம் அல்ல"" என்று அவர் சொன்னார்.காரியதரிசி அப்படிச் சொன்னதற்கு, நான் ""இல்லை ஐயா, அவரே பல தடவைகளில் தாம் எட்டையபுரம் என்று சொல்லி யிருக்கிறாரே?"" என்றேன்.""கிடையாது; அவர் எட்டையரும் இல்லை. வேண்டுமானால் நீர் நேராகப் போய் இந்தத் தர்க்க சந்தர்ப்பத்தைச் சொல்லி, இன்னொருதரம் கேளும்; என்ன சொல்கிறார், பாரும். இருந்தாலும் நான் சொல்லுகிறேன், கேளும். இப்படிப்பட்ட பாட்டு எழுதியவரின் ஊர், பாஞ்சாலங் குறிச்சியாகத்தான் இருக்க வேண்டும். பாஞ்சாலங் குறிச்சி தவிர, மற்ற ஊர்களில் பிறந்தவர்களால் இப்படிப்பட்ட வீரப் பாட்டு எழுத முடியாது"" என்றார்.அந்தக் காரியதரிசியின் சொல்லில் கொஞ்சம் சந்தேகப்பட்டு நான் பாரதியாரிடம் சென்று, ""ஐயா, தாங்கள் எந்த ஊர்?"" என்று கேட்டேன்.""என்ன கிருஷ்ணா, அடிக்கடி எந்த ஊர் என்று கேட்கிறாய்? எட்டையபுரம், எட்டையபுரம் என்று எத்தனை தடவை சொல்லுவது!"" என்றார். அதன் பேரில் நான் மேற்படி ஜமீன்தார் வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னேன். பிறகு புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே, ""அந்த ஓரந்தான்"" என்றார் பாரதியார். எட்டையபுரம் ஓரந்தானாம் பாஞ்சாலங்குறிச்சி.ஒரு நாள் பாரதியாரை, ""ஐயா, இந்த ஊரில் நல்ல மடு ஒன்று கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. தாங்கள் தினம் அங்கு ஸ்நானத்திற்கு வர முடியுமா?"" என்று கேட்டேன்.""எங்கே? எங்கே?"" என்று அவர் பரபரப்புடன் கேட்டார்.""நமது வீட்டிற்கு மேற்கே சுமார் இரண்டு மைல் தூரத்தில், அந்த மடுவிற்கு விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் சென்றால்தான், நிம்மதியாகக் கும்பலில்லாமல் ஸ்நானம் செய்யலாம்"" என்றேன்.""விடியற்காலம் நீ எப்பொழுது வந்து எழுப்பினாலும், உன்னுடன் வருகிறேன். தப்பாமல் விடியற்காலையில் வீட்டில் வந்து என்னை எழுப்பு"" என்றார் பாரதி.அவர் சொன்னபடி மறுநாட் காலையில் நாலு மணிக்கு அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன்.""யார்?"" என்றார் பாரதியார். ""ஏன்?"" என்றேன். உடனே சந்தோஷமாக எழுந்து வந்து கதவைத் திறந்து என் கூடவே மடுவுக்குக் கிளம்பினார். போகும் மார்க்கத்தில், இவர் வீட்டிற்கும் மடுவிற்கும் இடையில் ரஸ்தாவிற்கு இரு புறத்திலும் நஞ்சை வயல்களும் தென்னந் தோப்புகளும் இருந்தன. இவற்றின் செழுமையையும், பிரகிருதீய அழகு ஆனந்தங்களையும் ---பிறப்பிலேயே வரகவியாதலால் எனக்குத் தெரியாமலேயே தாம் கவனித்து கவனித்து, குயில் பாட்டுக்கு அடிப்படை தேடிக்கொண்டார்.அன்று அவரும் நானும் ஒரு மடுவில் ஸ்நானம் செய்தோம். இவ்வாறு இரண்டு நாள் ஆயிற்று. மூன்றாம் நாள், நான் அவர் வீட்டிற்குப் போகாமையால் அவர் என் வீட்டிற்கு விடியற்காலையில் நடந்துவந்து கதவைத் தட்டி எழுப்பினார். உடனே நான் விழித்து, குரலிலிருந்து பாரதி என்று தெரிந்து, என் தாயாரிடம் அம்மா, ""இவர்தானம்மா பாரதி"" என்றேன்.என் தாயார் உடனே கதவைத் திறந்து, பாரதியை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னாள். பிறகு, ""பையா! பாரதி, பாரதி என்றாயே, அவரைச் சுப்பிரபாதம் சொல்லச் சொல்லு, பார்ப்போம்"" என்றாள்.அதற்குப் பாரதியார், ""சுப்பிரபாதம் என்றால் என்ன?"" என்று கேட்டார்.உடனே என் தாயார், ""சுப்பிரபாதம் என்றால் என்ன என்கிறாரே! இவ்வளவுதானா உன் பாரதி!"" என்றாள்.இதனிடையே நேரமாகவே, நாங்களிருவரும் மடுவுக்குப் புறப்பட்டோம். பாரதியாருக்கு மனதில் நிம்மதியில்லாமல் "சுப்பிரபாதத்திற்கு" என்னை அர்த்தம் கேட்டார்.""சமஸ்கிருத சுப்பிரபாதம், தமிழில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி"" என்றேன். திருப்பள்ளியெழுச்சியில் ஒரு பாட்டுச் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன். அதைக் கேட்டு, அதே மாதிரியாகப் "பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி"யை எழுதி, என் தாயாரிடம், அந்தப் பாடல்களை நேராக முதல் முதலில் பாடிக் காட்டினார்.பாதியார் வீட்டில் நான் நாலாயிரப் பிரபந்தம் பாராயணம் செய்வதுண்டு. அவர் மெ?5;மாக ஆழ்ந்த கவனத்துடன் பத்திரிகைகளுக்கு வியாசங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சமயம், என்னை மெ?5;மாகப் பாராயணம் செய்து கொள்ளும்படியாகச் சொன்னார்.அதற்கு நான், ""ஐயா, எழுதும் காரியம் தங்களுடையது. படிக்கும் காரியம் என்னுடையது. அவாளவாள் காரியத்தை அவாளவாள் ஏககாலத்தில் கவனத்துடன் செய்துவந்தால், யாருக்கு என்ன நஷ்டம்?"" என்றேன்.அதற்கு அவர், ""நீ சத்தம் போட்டுப் படிப்பதால், நான் எழுதும் காரியத்துக்குத் தடையாக இருக்கிறது"" என்றார்.அதற்கு நான், ""ஐயா, நீங்கள் மற்ற மனிதர்கள் மாதிரி சாதாரண மனிதராக என் புத்தியில் படவில்லை. ஆகையால்தான், தாங்கள் எழுதும் போது நானும் கூசாமல் பாராயணம் செய்து வருகிறேன். ஏககாலத்தில் ஒரு காரியத்திற்கு மேல் காரியங்கள் செய்யவல்ல சக்தி தங்களிடம் இருப்பதாக எண்ணி நான் படித்து வருகிறேன்"" என்றேன்.உடனே அவர், ""நான் உன் வழிக்கு வருவதில்லை. நீ எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்"" என்றார்.ஒரு நாள் பாரதியார், ""கிருஷ்ணா, இந்த நாலாயிரம் எத்தனை ஆழ்வார்கள் சேர்ந்து பாடியது?"" என்று கேட்டார்.""பத்து ஆழ்வார்களின் பாடல்களெல்லாம் சேர்ந்து ஒரு நாலாயிரப் பிரபந்தம்"" என்றேன்.""பத்து ஆழ்வார்கள் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களே! நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன், பார்!"" என்றார்.""உங்கள் ஒருத்தரால் ஆறாயிரம் பாட முடியாது. ஏனெனில், கலி முற்ற முற்ற மனிதனுக்கு ஆயுசு குறைவு. கலி முற்றிய காலத்துச் சிறிய மனிதர்கள் நாம். ஆகையினால் முடியாது"" என்று நான் சொன்னேன்.""நல்லது பார்"" என்ற அவர், பாரதி ஆறாயிரம் என்று ஒரு நூல் எழுத ஆரம்பித்தார். இதனிடையில் குடும்பக் கவலை, சள்ளை, வறுமை, வியாதி, முடிவில் மரணம். ஆறாயிரம் பாடல்கள் பூர்த்தியாகவில்லை. அறுபத்தாறுதான் பாடி முடிந்தன. அவர் காலத்திற்குப் பின் இதை அச்சிட்டவர்கள் பாடல்களைக் கணக்கிட்டு இந்த நூலுக்கு "பாரதி அறுபத்தாறு" என்று பெயரிட்டு அச்சிட்டார்கள் போலும்.""ஐயா, பாரதியாரே! உங்கள் கொள்கைகள், கருத்துக்கள் எல்லாம் எனக்குத் திருப்திகரமாக இருக்கின்றன. தாங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்வதும், நான் சொல்வதைத் தாங்கள் ஒப்புக்கொள்வதும் நமக்குள் இயல்பாக இருக்கிறது. ஜனங்களில் பலர் நாம் தப்பிதமான கொள்கைகளை வைத்திருப்பதாகச் சொல்லுகிறார்களே. அதற்கென்ன சொல்லுகிறீர்கள்?"" என்று நான் ஒரு சமயம் கேட்டேன்.""நாம் இப்போது சொல்லுபவற்றையெல்லாம் நானூறு வருஷங்கள் கழித்து உலகம் ஒப்புக்கொள்ளும். நாம் இன்னும் நானூறு வருஷங்களுக்குப் பின்னாலே தோன்றவேண்டியவர் முன்னாலேயே தோன்றிவிட்டோம். அதற்கென்ன செய்வது?"" என்று பதிலளித்தார் பாரதியார். அவர் இவ்வாறு சொல்லி 25 வருஷந்தான் ஆகிறது!(பாரதியாரின் ஆப்த நண்பர் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், "ஹிந்துஸ்தான்" வாரப்பதிப்பின் 1938ஆம் ஆண்டு பாரதி மலரில் எழுதிய சில குறிப்புகள்.)
Friday, December 07, 2007
Wednesday, November 07, 2007
தீபமங்கள ஜோதியும் தீபாவளியும்
கெட்டது என்பதே மனதில் புகாதபடி
நல்லது முழுவதும் நிரம்பியிருந்தால்தான்
சீலம் வரும்.கண்ணாடியைப் பார்க்கிறோம்.
அழுக்கு இருந்தால் பார்க்கமுடிகிறதா?
சுத்தமாகத் துடைத்து விட்டுப் பார்த்தால்
நன்றாகத் தெரியும். கண்ணாடி சுத்தமாக
இருப்பதுடன் அசையாமல், நிலையாகவும் இருக்க
வேண்டும்.அப்போதுதான் உண்மை பிராகாசிக்கும்
சித்தமென்பது ஒரு கண்ணாடிபோன்றது.
பரம்பொருள்தான் உண்மை! உலகைப் படைத்த
ஆண்டவனைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால்,
நம்முடையசித்தத்தைஅழுக்கில்லாமல்,ஆடாமல்,
அசையாமல்,நிலையாக வைத்துக்
கொள்ளவேண்டும்.
காஞ்சி பரமாசாரியார் வாக்கு
எல்லோருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.தலைதீபாவளி கொண்டாடும் அம்பிக்கும்,இன்னும் தலை தீபாவளியை தனியே கொண்டாடும் அருணுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.தீபாவளி என்றாலே புதுத்துணிகள்,பட்டாசுகள், வண்ணமலர் மத்தாப்புகள், இனிப்பு மற்றும் காரவகைகள், குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம்,பெரிசுகளின் கலகலப்பும் மிகுந்த நாள். நாங்கள் இந்தியாவில் இல்லையே பட்டாசு வெடிக்க முடியவில்லையே என்று வருத்தம் வேண்டாம் இதோ பட்டாசுடன் கொண்டாடுங்கள்
முந்தி முந்தி விநாயகனைத் தொழுது கும்பிடுங்கள்
என்ன சார் என்னை மாதிரி குழந்தைக்கு பட்சணம்கிடையாதா என்று கேட்கப்போகும் அம்பிக்கு இதோ
வாணவேடிக்கை போதாது என்பவர்களுக்கு மேலும் சிறப்பு கீழேபார்த்து ரசியுங்கள்.
Sunday, October 28, 2007
காற்றினிலே வந்து காற்றினிலே கலந்த கீதம்..........
இந்த பதிவுக்கு விளக்கம் தேவையில்லை
A post that needs no elobration
Sunday, October 21, 2007
கொலு முடிந்தது (10)
மேலே உள்ள மூன்று படங்களும்தான் என்வீட்டு சுடாத கொலு
எருமை உருவம் கொண்ட அசுரன் மகிஷன். அவனது தொல்லை தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனது மிருகத்தன்மை கண்டு மும்மூர்த்திகளும் அஞ்சினர். தேவலோக தலைமைப் பதவிக்கு குறி வைத்து அசுரகுல அரசன் மகிஷன் போரிட்டான். மிருகபல சேனையிடம் தேவர்படை தோல்வியுற்றது. தோல்வியடைந்த இந்திரனும்இ தேவாதி தேவர்களும் பிரம்மனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூட்டிச் சென்றார். அனைவரும் சிவபெருமானை சந்தித்தனர்.மகிஷனின் கொடுமைகளை மும்மூர்த்திகளிடம் விளக்கினர். தேவர்கள் கொடுமைகளை பற்றி கேட்ட சிவபெருமானுக்கு கோபம் பொங்கியது. சாந்த ஸ்வரூபியான மாலவனுக்கும் மகிஷனின் கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்து கோபாவேசமாக காணப்பட்ட இரு மூர்த்திகளுடன் பிரம்மனும் சேர்ந்து நின்றார். அந்த கோபக் கனல்களும் சாதுக்களின் வயிற்றிலிருந்து புறப்பட்ட தீபமும் ஜோதிவடிவாய் இணைந்து ஒன்றுபட்டது. அனைத்துமாக தேவியாக உருவம் பெற்றது.
நாமும் ஆரத்தியுடன்(நன்றி டி டி) முடிப்போம்
Saturday, October 20, 2007
கொலுவுக்கு வாருங்கள் (9)
வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.
வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.
கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசைதோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்தமேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.
வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல்
தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)
வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க செல்லவும் இங்கே
இன்று கொண்டகடலை சுண்டல்.
Thursday, October 18, 2007
கொலுவுக்கு வாருங்கள்( 7)
வாணி நீ அருள்வாய்! சரஸ்வதிக்கு உகந்த மலர் வெள்ளைத் தாமரை. சரஸ்வதிக்கு 'தூயாள்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. வெண்மை தூய்மைக்கு சான்று. சரஸ் என்றால் பொய்கை, நீர். வெள்ளம் போன்று கல்வியைப் பெருக்குவதால் சரஸ்வதி என்று அழைக்கப் பட்டாள். சரஸ் என்றால் அறிவு, ஒளி என்றும் பொருள். சூரியனுக்கு 'சரஸ்வான்' என்று பெயருண்டு
வட இந்தியாவில் கங்கையைப் போன்று சரஸ்வதி என்ற நதிஒன்று ஓடியதாக வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. பின்பு அந்த நதி திசை மாறி எங்கோ மறைந்துவிட்டது.அந்த சரஸ்வதிஆறு எங்கே தோன்றியது? எங்கெல்லாம் ஓடி, எப்போது மறைந்தது என்பதைக் கண்டறிய நிபுணர்களைக் கொண்ட 'சரஸ்வதி ஆராய்ச்சிக் குழு' அமைக்கப்பட்டிருக்கிறது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் தலத்தில் கங்கை யமுனையோடு சரஸ்வதி ஊற்றுப்போன்று அந்தர் முகமாய் கலக்கின்றது என்றுநம்பப்படுகின்றது.
குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையின் முதற்பாடல்
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே
பொருள்
உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றைஅழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும்கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கேஅல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதிஇல்லையோ?
சங்கீத பாடம் ஆரம்பிக்கும் போது இந்தப்பாடலைத்தான் முதலில் கற்றுத்தருவார்கள்.ஆரபி ராகத்தில் அமைந்த முத்துஸ்வாமி தீக்ஷதரின் பாடல்
ராகம்:- ஆரபி தாளம்:- ரூபகம்
பல்லவி
ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே பரதேவதே அம்ப .....(ஸ்ரீ சரஸ்வதி..)
(அனனை சரஸ்வதியேநமஸ்காரம் சகலதேவதைகளும் வணங்கும்அம்பாளே)
அனுபல்லவி
ஸ்ரீபதி கௌரிபதி குருகுஹவினுதே விதியுவதே..(ஸ்ரீ சரஸ்வதி)
(லக்ஷ்மியின் பதியான திருமாலும், உமாவின் பதியான சந்திரசேகரனும்,முருகனும் வணங்கும் எப்பொழுதும் இளமையாய் இருப்பவளே)
சரணம்
வாஸனாத்திரய விவர்ஜிதே வரமுனிவரவித மூர்த்தே
(அறம் பொருள் இன்பம் அளிப்பவளே,நாரதமுனிவருக்கு தாயே)
வாஸவாத்ய கிலனீசர வரவிதரன பகுகீர்த்தே
(எல்லாவித வாத்யங்களுக்கும் ஆதாரமாக இருந்துகொண்டும், பல சிறப்புகளையும் கொண்டவளே )
தரஹாஸ்யயுதமுகாம்புருகே அத்புதசராணம்புருகே
(எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்தவளே,அதிசயிக்கும் சரணங்களை உடையவளே)
ஸ்மசாரவித்யாபகே ஸகலமந்த்ராக்ஷ்ர குஹே ...(ஸ்ரீ சரஸ்வதி..)
(உலக வாழ்க்கையில் கல்விக்கு அதிபதியே, எல்லாமந்திரங்களுக்கும் உட்பொருளாய் உறைபவளே ஸ்ரீ சரஸ்வதியே வணக்கம்)
<"மும்பைஜெயஸ்ரீ பாடுகிறார் இங்கே"> "
இன்று பிரசாதம் கடலை பருப்பு சுணடல்
Wednesday, October 17, 2007
கொலுவுக்கு வாருங்கள் ( 6 )
இன்று ஆறாவது நாள் லக்ஷ்மிக்கு உரிய நாள்.
ஆறாம் நாளன்று மஹாலக்ஷ்மி இந்திராணியாகத் தோன்றுவதால் அன்று செம்பருத்திப் பூக்களால் அம்பாளை அலங்காரம் செய்து, நீலாம்பரி ராகம் பாடி, தேங்காய் சாதம் படைத்து வழிபட மனக் கவலைகள் எல்லாம் நீங்கும், விரோதங்கள் அகலும், வெற்றிகள் பல கிட்டும். நீலாம்பரி ராகம்மனதை சாந்தப்படுத்தும் ராகம்.அதில் மீனாக்ஷி அம்பாள் பேரில் உள்ள இந்தப்பாடலைக் கேளுங்கள்.
<"நித்யஸ்ரீயின் நீலாம்பரி"> ">
ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு
பல்லவி
மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)
அனுபல்லவி
மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)
சரணம்
பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)
இந்தப் பாடலை மிக இளம் வயதிலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">
கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.
Monday, October 15, 2007
கொலுவுக்கு வாருங்கள்(4)
எனது முன்பதிவுகளிலிருந்து எடுத்தது ஆனால் இதற்கும் பொருந்துகிறது.
ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்
சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்
ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்
பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்
மாதராம் அப்ஜமாலினீம்
மாணிக்ய ஆபரணாதராம்
சங்கீத வாத்ய விநோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்
சீதகிரண நிபவதனாம்
ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்
குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)
பல்லவி
தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்
அனுபல்லவி
அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்
பாற்கடல் பெற்று எடுத்தவளும்
மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்
கோவில் கொண்டு இருப்பவளும்
இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்
தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்
நான் எப்பொழுதும் பாடுவேன்
சரணம்
வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்
பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்
சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்
தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்
உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்
மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்
சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்
சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்
அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்
குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்
என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்
முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்
இனி பாடலை திருமதிகள் ராதா ஜெயலெட்சுமி அவர்களின் குரலின் மூலமாக <" இங்கே கேட்டு ரசியுங்கள்>"
Sunday, October 14, 2007
கொலுவுக்கு வாருங்கள்(3)
பல்லவி
ஸ்ரீசக்ராதிபதியாகவும் இருப்பவளுமவளே.
எல்லோருக்கும் தெரிந்த பிடித்த அகத்திய கீதமான "ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி" பாடல் இதே
ராகம்: செஞ்சுருட்டி தாளம்:- ஆதி
Saturday, October 13, 2007
கொலுவுக்கு வாருங்கள்(2)
ஈஸ்வரிதான் பிரதானம்.இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியை மூன்று
மூன்று நாட்களாக பிரித்து முறையே துர்கா, லக்ஷ்மி,சரஸ்வதியாக வழிபாடு.
ஈஸ்வரி என்றாலே ஜகதீஸ்வரி,அகிலாண்டேஸ்வரிதான் ஞாபகத்துக்கு வரும். திருச்சிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் கோவிலில் குடிகொண்டு இருப்பவள்.அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; இரு காதுகளிலும் ஆதி சங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரத்தை தாடங்கம்என்கிற காதணிகளைஅணிந்து எதிரில்அமர்ந்து இருக்கும் ஆனை முகத்தோனுக்கும்,அடியவருக்கும் அருள்பாலிப்பவள். பார்க்கப் பார்க்க திகட்டாத ஜ்வலாமுகி அவள். ஸ்ரீ வித்யா உபாஸகரானதிரு.முத்துஸ்வாமிதீக்ஷ்தர்அவர்கள்திருவானைக்காவல்
உறைஅகிலாண்டேஸ்வரியின் மீது த்விஜாவந்திராகத்தில்அருமையானகீர்த்தனையைவழங்கியுள்ளார்.
இந்தப்பாட்டைக் கேட்டாலேஅம்மனை நேரில் பார்த்தஉணர்வு வரும். அதுவும் மும்பை ஜெயஸ்ரீ குரலில் கேட்டால் . கேட்டுப் பார்த்துதான் சொல்லுங்களேன்
<"அகிலாண்டேஸ்வரீம் ரக்ஷமாம் "> ">(மும்பை ஜெயஸ்ரீ)
<"திரு.சேஷகோபாலன் பாட்டை இங்கே கேட்கவும்">">
சரி பட்டைக் கேட்டாச்சா சுண்டல் பிரசாதம் வாங்கிச் செல்லுங்கள் .
சுண்டலைப் பற்றிய ஒரு வெண்பா
விருப்புடன் உண்ணவே வெந்த பருப்பில்
துருவிக் கலந்திட்ட தேங்காய் மிளகாயும்
உப்பும் கடுகுமிட்ட சுண்டலில் உண்டாம்
உடலுக் குற்ற புரதம்
Sunday, September 30, 2007
கந்தசாமி(2)
நானும்தங்கமணியும்விழாவுக்கு5.30 மணிக்கேகிளம்பிவிட்டோம்.தேவி பராடைஸ் அரங்கமே அதிர்ந்து கொண்டு இருந்தது.கணேசனின் குடும்பத்தினரோடு எங்களுக்கு இருக்கை. அமர்ந்து கொண்டு வந்தவர்களை கணக்கெடுத்துக்கொண்டு இருந்தேன்.வந்தவர்கள் டைரெக்டர்கள் ஷங்கர்,ஸ் ஏ சந்திரசேகர்,கே ஸ் ரவிகுமார், ராமநாரயாண்,மற்றும் வைரமுத்து,ஒய் ஜி மஹேந்திரா,அப்பாஸ், அருண்விஜய்,திரையுலக பிரமுகர்கள் கூட்டம்தான்.சுசி. கணேசன் டென்ஷனோடு பரபரப்போடு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தார். சரியாக 6.30 மணிக்கு ஆனந்த கண்ணனும் சுப்பிரியாவும் சன் டி வி சார்பில் வணக்கம் சொன்னார்கள்.
கந்தசாமி என்று பலத்த சப்தத்துக்கு இடையில் வ்ந்தார் கதாநாயகன் விக்ரம் சூட்டும் கோட்டும் அணிந்து மிகவும் இளையவராக டெரைலர் பாட்டை பாடியவண்ணம். பின்பு ஷெரேயாவும் ஒருபாடலுக்கு ஆடினார்.டிஜிடல் பானரில் விக்ரம் வானத்துக்கும் பூமிக்குமாக பல வேடங்களில் தூள் கிளப்பினார்.
இந்த விழாவில் பேசும்போது சுசி. கணேசன் கூறினார். படத்தின் சிறப்பு அம்சமே ஏழை பணக்காரன் வித்தியாசத்தின் விளவுகளை புதிய பார்வையில் சொல்லுவதுதான்.இதில் சிறப்பாக நடிக்கவும் பாத்திரத்தோடு ஒன்றி இருப்பதாற்கும் மிகக்கடுமையாக கட்டுப்பாட்டுடன்இருந்து தனது எடையில் 15 கிலோவைக் குறைத்தாராம் விக்ரம்(Professional commitment). மற்றும்ஒரு பாரட்டுக்குரியவிஷயம் கந்தசாமி படப்பிடிப்புக் குழுவினர் உசலம்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் சங்கம்பட்டி- காந்திநகர் ஆகிய கிராமங்களைத் தத்துஎடுத்துக்கொண்டுஅவர்களுக்கு நல்ல ரோடு, பள்ளிக்கு சமையல்கூடம்,வசதியான மயானம் ஆகியவற்றை செய்து கொடுத்தார்கள்.பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் கிராமத்தை மறந்து நகரத்துக்கு வந்த மனிதர்களை மறுபடியும் கிராமத்துக் கூட்டிக்கொண்டு போனார். ஆனால் எதயும் புதுமையாகச் செய்யும் சுசி கணேசனோஒரு கிரமத்து மக்களையே தேவி பரடைஸுக்கு கூட்டிக்கொண்டு வந்தார். ஆமாம் சங்கம்பட்டி-காந்திநகர் மக்களையே கொண்டு வந்துவிட்டார் நன்றி சொல்லுவதற்கு.கிரமசேவையைப்பற்றி எல்லோரும் பேசுவார்கள் ஆனால் சிலரே செய்வார்கள்.
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" ..........வள்ளுவன் சொன்னது.
விக்ரம்பலவேடங்களில்வந்தாலும் பெண்மணியாக நடித்த வேடம் மிகவும் பொருந்துகிறது.படத்தைப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்
இனி விக்ரம் பெண்களிடம் மாத்திரம் அல்ல ஆண்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
மிகப் பிரபலமான டைரெக்டரான மணிரத்தினத்தின் மிகச் சிறந்த படைப்புக்களில் சில மௌனராகம்,நாயகன்,தளபதி,மற்றும் திரு. சுசி கணேசன் என்றெல்லாம் வந்தவர்கள் பேசினார்கள்ஆனால் ஆசானைக் காணவில்லை.
All that begins well must also end well.
படப்பிடிப்பு பூஜைக்கே இந்த பில்டப்ன்னா 100 ஆவது வாரம் பட விழாவுக்கு எப்படி இருக்குமோ?
Welldone Susi Ganesan Best of Luck