Showing posts with label சிவார்ப்பணம் 2. Show all posts
Showing posts with label சிவார்ப்பணம் 2. Show all posts

Tuesday, March 02, 2010

பிரதோஷ மஹிமை--2

அருகே எழுந்தருளியிருந்த பரமேசுவரி பக்தர்களுக்காக ஐயன் காட்டும் பரிவைக் கண்டு பயமும், பக்தியும் கொண்டார்.
எம்பெருமான், பிரளயகாலத்து அக்னியைப் போல் தீக்ஷண்யமுள்ள கொடிய விஷத்தை உண்ணும் தருணத்தில் விஷம் கண்டத்தருகே வந்ததும் அனைவரும் அலறினர்.
“தேவாதி தேவா! எங்களைக் காத்தருளும் சகலதேவ பூஜிதரான தேவரீர் இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தாங்கிக் கொள்ள வேண்டும். அகில உலகங்களும் தேவருள் அடக்கம் தானே? அதனால் இவ்விடம் ஐயனின் உடலுள் சென்றாலும் அகில லோகங்களும் அழிந்து போவதென்பது திண்ணம்” என்று பிரார்த்தித்தனர்.

அது சமயம் அருகே அமர்ந்திருந்த அன்னபூரணி - அண்டமெல்லாம் காத்தருளும் கற்பகத் தருவாக விளங்கும் கற்பகவல்லி - திரிபுரசுந்தரி,உமாதேவி தம் திருக்கரத்தால் எம்பெருமா னின் கண்டத்தை மெதுவாகத் தடவி சற்று அழுத்தினார்.
மறுகணம் விஷம் கண்டத்திலேயே தங்கியது. அம்பாளின் திருக்கர ஸ்பரிசத்தினால் நஞ்சும் அமுதமாகி நாயகனின் கண்டத்தில் கருமணி போல் தங்கியது.
எம்பெருமான் ‘திருநீலகண்டர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

பிரம்மாதி தேவர்கள் தேவராக்ஷஸ பைசாச கணங்கள் முதலியோர் கரங்குவித்து, “ஷட்குண ஐச்வரிய சம்பன்னரும், எங்களுக்கெல்லாம் ஆதிமூலமான பெருமானே! தேவரீருடைய வல்லமையும், வீரியமும், பராக்கிரமமும், மகிமையும் ஈடிணையற்றவை. தாங்களே சராசரங்களுக்குப் பிரபுவும், பிராண கோடி களைப் படைத்தும், காத்தும், அழித்தும், அருளும் முத்தொழில் மூர்த்தி” என்றெல்லாம் பலவாறு தோத்திரம் செய்தனர்.
இவ்வாறு விஷத்தால் அமரர்களுக்கும், அடியார்களுக்கும் தோஷம் எதுவும் ஏற்படாமல் காத்தருளிய சிவனுக்கு உகந்த காலம் தான் பிரதோஷகாலம். அக்காலத்தில் அண்ட சராசரங்களும் பகவானின் நமச்சிவாய மந்திரத் தைச் சிந்தையிலே கொண்டு ஏகாந்தத்தில் அடங்கி ஒடுங்கும்.
பொன்னார் மேனிதனில் புலித்தோலை அணிந்த அண்ணல் மானும், மழுவும், சூலமும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன், தண்டை சிலம்பணிந்த சேவடி கிண்கிணி ஓசை எழுப்ப நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே ஆனந்த நர்த்தனம் புரியும் வேளை!
இச் சுபயோக சுபமுகூர்த்த வேளை தான் பிரதோஷ காலம்!
நம்மை எல்லாம் ஆட்டி வைப்பவன் தானும் ஆடுகின்றான். அவன் ஆடுவதால் உலகமே ஆடி ஒடுங்குகிறது.
இப்பிரதோஷ கால வேளையில் ஐயன் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனத்தை பிரம்மாதி தேவர்களும், வசிஷ்டாதி முனிவர்களும் கண்டு களிக்கின்றனர்.
எங்கும் தேவகானங்களும் வாத்திய கோஷங்களும், மந்திர ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மண்ணுலகத்தோரும் கண்டு களித்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி மிதப்பர்.

எம்பெருமான் விடமுண்ட நாள் சனிக் கிழமை எனப்படுகிறது. அதனால் சனிக்கிழமை நந்நாளில் வரும் பிரதோஷம் மிக்க சிறப்பும், மகிமையும் பொருந்தியதாகும்.
பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.
1.நித்திய பிரதோஷம்,
2.பக்ஷப் பிரதோஷம்,
3.மாதப் பிரதோஷம்,
4.மஹாப் பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்
.
அனுதினமும் சூரியாஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நக்ஷத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள காலகட்டம் நித்திய பிரதோஷம் எனப்படும், சந்தியா காலமாகும்.
சுக்லபக்ஷ சதுர்த்தி மாலைக் காலம் பக்ஷ பிரதோஷம் எனப்படும்.
கிருஷ்ண பக்ஷ திரயோதசி மாதப் பிரதோஷம் என வழங்கப்படும்.
கிருஷ்ண பக்ஷ திரயோதசி-ஸ்திரவாரமாகிய சனிக்கிழமை தினம் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹா பிரதோஷம் எனப்படும்.
பிரளய காலத்தில், எல்லாம் சிவனிடம் ஒடுங்கும் அதுவே பிரளய பிரதோஷமாகும்.
இந்த ஐந்து பிரதோஷ காலங்களில் எம்பெருமான் ஆனந்த நடனம் புரிந்து அகில லோகங்களுக்கும் அருள் பாலிக்கிறார்.
பேசப் பேசப் பெருகிக்கொண்டே போகும் சிவனார் திருப்புகழ். தென்னாடுடைய சிவன். எந்நாட்டவர்க்கும் பரமசிவன். சிவபெருமானை சிவப்ரதோஷமான சிவப்பெருநாளில் வழிபடுகின்றவர்கள் சிவனையொத்த வடிவம் பெறுவார்கள்.
சிவத்தலங்களில் சிவப் பெருநாளான பிரதோஷ காலங்களில் சிவனடியார்கள் கூடி 'மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!' என்று போற்றுவார்கள். மற்றவர்களால் போற்றப்படுவார்கள்.
'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்.

வாயாரத்தன்னடியே பாடும் தொண்டர் எனத்தகத்தான்' என்று ஏற்றுகின்றவர்கள் மற்றவர்களால் ஏற்றப்படுவார்கள். சிவனைப் பூஜிக்கின்றவர்கள் யோகசாலிகள். அளவற்ற செல்வச் செழிப்பில் வாழ்வார்கள்.
'சிவசிவ' என்று சிவத்தையே செபித்து 'சிவசிவ' என்று −ருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள். சிவனே சித்தன், சித்தனே சிவன், சிவத்துக்குள் சித்தனையும் சித்தனுக்குள் சிவத்தையும் பார்க்கத் தெரிந்தவர்கள் பூத்துப் பொலிந்தவர்கள்.
சிவபெருமானை எப்பொழுதும் நினையுங்கள். அவன் திருவடியை பாடுங்கள். நீங்கள்தான் கைலாயத்தின் நிரந்தரவாசிகள்.
சிவ சிவ சங்கர
ஹர ஹர சங்கர




. இங்கே பாருங்கள் எத்தனை விதமான நந்திகள்
.



சாயங்காலம் ஐந்து மணிக்குகெல்லாம் ஆபீஸ் இருக்குது எங்களாலே பிரதோஷ பூஜைஎல்லாம் பாக்க முடியாதுன்னு சொன்ன இதோ உங்களுக்காக பூஜை வலையிலேயே போட்டாச்சு. பாருங்க.




இந்த பிரதோஷத்துக்கு சிங்கபூரில் எங்கள் வீட்டு அருகில் உள்ள செங்காங் முருகன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பாருங்கள். சிவன் எப்படி அலங்காரத்தில் தகதகவென்று மின்னுகிறான்.தலையில்கங்கையுடன், சந்திரசேகரனாக காக்ஷி தருகிறார். முருகனும்கூட இருந்து அருள்பாலிக்கிறான்.