Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Sunday, February 08, 2009

கடல் கடந்த தியாகராஜர்

நங்க நல்லூர் சங்கீத சமாஜம் காரியதரிசி திரு. ராமனாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "சார் இந்ததடவை பிப்ரவரி 8ஆம் தேதியன்று தியகராஜ ஆரதனை வந்து நடத்திக் கொடுங்கள். மதியாணம் சாப்பாடும் உண்டு"என்றார். நான் உடனே "சார் இந்த தடவை வர முடியாது.அந்தத் தேதியில் நானும் தங்கமணியும் சிங்கபூர் மகன் வீட்டுக்கு செல்கிறோம். என்றேன். மனதுக்குள் தாங்க முடியாத வருத்தம் பஞ்ச ரத்ன கீர்தனையை கேட்கமுடியவில்லை என்றா இல்லை இல்லை நல்ல பஞ்ச பட்ச சாப்பாடு போச்சேன்னுதான்.


ஒரு நாள் சிஙகபூரில் என் புரோக்கிராம் மேனேஜெர் என் மகன் "'அப்பா 8 ஆம் தேதி பிப்ரவரி டோபிகாட் அருகில் உள்ள மியுசியம் கண்ணாடி அரங்கில் தியகராஜ உத்ஸ்வம் போகலாமா'' என்றான்.தண்ணீரில் இருந்து வெளியே தவித்துக் கொண்டு இருக்கும் மீன் போல சங்கீதம் இல்லாமல் பாலைவனத்தில் தவித்துக் கொண்டு இருக்கும் எனக்கு ஒரு பாட்டில் குளிர்ந்த மினரல் தண்ணீர் வேண்டுமா என்பது போல் இருந்தது. உடனே சரி யென்று சொல்லிவிட்டேன்.
8 ஆம் தேதி காலை 7 மணிக்கே(நம்ம ஊர் மணி 4.30) குளித்து ஜிப்பா போட்டுக் கொண்டு ரெடியாகி விட்டேன்.ரயில் வண்டி பிடித்து மியுசியம் அரங்கத்துக்குச் சென்றோம். டோபி காட்டில் இறங்கி பொடி நடையாகவே சென்றோம். வழியெல்லாம் தமிழர் கூட்டம்தான். அன்று தைப் பூசம் திருநாள். தமிழர்கள் சாரிசாரியாக டோபிகாட்டில் உள்ள முருகன் கோவிலுக்கு போய்க் கொண்டு இருந்தார்கள். பால் குடம் எடுத்துக் கொண்டு பல பேர்கள். அலகு குத்திக் கொண்டு காவடி எடுத்துக் கொண்டு பல பேர்கள், வெறு காவடி எடுத்துக் கொண்டு பல பேர்கள் இப்படி மக்கள் கூட்டம்தான் அன்று சிங்கையில். இதே மாதிரி எல்லா முருகன் கோவில்களிலும் அன்று கூட்டம்தான்.13 ஆவது ஆழ்வரின் சந்தேகமான யார் தமிழ்க் கடவுள் என்ற கேள்விக்கு விடையை அங்கே பார்க்கலாம்.
எப்படியோ இடத்தைக் கண்டுபிடித்து ஆரம்பித்து இருப்பார்களோ என்ற பயத்தில் போனால் நல்ல வேலை அப்பொழுதுதான் சுருதி கூட்டிக்கொண்டு இருந்தார்கள்.உள்ளே போனால் சிறியவர்களும் பெரியவர்களுமாய் 100 பேர்கள் குழுமியிருந்தார்கள்.சிறுவர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்ததைப் பார்த்ததில் மனதிற்கு நிறைவாக இருந்தது.கொஞ்ச நேரம் வயலின் மற்றும் வீணைக் கச்சேரிகள் நடந்தது.சரியாக 10 30 மணிக்கு மேடையில் 6 பெரியவர்கள் மற்றும் சிறியவர்களும் அமர்ந்து முதலாக ஸ்ரீ கணபதி என்ற சௌராஷ்ட்ர ராகத்தில் அமைந்த தியகராஜரின் கீர்த்தனையை பாட ஆரம்பித்த உடனே களை கட்டி விட்டது. அதன் பின்னர் ஜகதாநந்த தாரகா என்ற நாட்டை ராகத்தில் ஆரம்பித்து கடைசியில் ஸ்ரீ ராகத்தில் கடைசி கீர்த்தனையான எந்தரோ மஹானு பாவலு என்று முடிக்கும் போது மணி 11.30 ஆகிவிடது.நானும் என் மகனும் கையில் புத்தகம் எடுத்துச் சென்றதால் கூடவே பாட முடிந்தது.பாடிக் கொண்டு இருக்கும் ஒரு பெண்மணியின் கையில் ஒரு புத்தகம் இருந்தது. சற்று துல்லியமாகப் பார்த்தால் என்ன ஆச்சர்யம் அது நாங்கள் எங்கள் நங்க நல்லூர் சமஜத்தில் பாடுபவர்கள் எல்லோருக்கும் அளிக்கும் பஞ்சரத்ன கீர்த்தனை ஸ்வரத்துடன் கூடிய புத்தகம்தான் அது.மனதில் நினைத்துக் கொண்டேன் இங்கு முடிவடையும் இந்த 11.30 மணிக்கு அங்கே சரியாக 9 மணிக்கு ஆரதனை ஆர்ம்பிக்கும் என்று. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் அங்கில்லாதது இங்கு. பாட்டு ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லோரும் அமைதி காத்து ஆராதனையை முழுமைபெறச் செய்தனர். நம்மவர்கள் இதை கற்றுக் கொள்ளவேண்டும். அத்தனை ஒழுக்க உணர்வு.நடுவில் எழுந்து போவது வம்பு,கத்தல் அதெல்லாம் மூச் கிடையாது.

ஆரதனை முடிந்து விட்டது வீட்டுக்கு போகலாமா? என்றான் என்மகன். நானும் சரியென்று அரை மனதுடன் கிளம்புவதற்காக வெளியே வந்தோம். என்ன அரைமனது என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை இதே நங்க நல்லூராக இருந்தால் நல்ல சாப்பாடு இருந்திருக்கும். வெளியே வந்ததும் 'சார் பிரசாதம் வாங்கிக்கொள்ளுங்கள்"என்று ஒரு குரல் ஆறாவது கீர்தனையாக இனிமையாக ஒலித்தது.சரி எதோ சுண்டலோ லட்டோ தரப் போகிறார்கள் என்று பார்த்தால் என்ன ஆச்சர்யம் ! நல்ல தெர்மகோல் பாக்ஸில் பேக் செய்யப்பட்டு அதனுள்ளே புளியஞ்சாதம், ரவகேசரி, கொத்துக் கடலை சுண்டல், தயிர்சாதம், சோயா மில்க் ஒரு ஆரஞ்சு பழம் எல்லாம் கொடுத்தார்கள்.இப்படி காதுக்கும் வயிற்றுக்கும் உணவளித்த சிங்கை வாழ் தியாகராஜ பக்தர்கள், சங்கீத ரசிகர்கள்வாழ்க என்று வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம். தியாகராஜர் ஒருவேளை உண்ண உணவுக்கு கஷ்டப் பட்டார் என்று படித்திருக்கிறேன் ஆனால் அவர் பெயரால் இன்று லட்சோப லட்சம் பேர் உலகெங்கும் உணவு அருந்தும்படியாக அவரது நாமமும் கீர்த்தனைகளும் சிறப்பான பணியை செய்து கொண்டு இருக்கின்றன."'எந்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு"'






Friday, February 16, 2007

தமிழ்த் தியாகைய்யா திரு. பாபநாசம் சிவன்(6)

)






இன்று சிவராத்திரி. சந்திரசேகரனான சிவனைப் பற்றி பேசுவது நினைப்பது அல்லது அவனுடைய சமபாதியான உமாவைப் பற்றிய பாடல்களை கேட்பது நல்லது.

பாபநாசம் சிவனுக்கு பிறந்த ஊர் நாகப்பட்டினம். அந்த ஊர்க்கோயிலின் அம்மன் பெயர் நீலாயாதாக்ஷி. அந்தச்சொல்லைத் தன் பாடல்களில் நிறைய இடங்களில்உபயோகித்து இருக்கிறார். கல்யாணி ராகத்தில் அமைந்த இந்த "உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா. உலகெலாம் ஈன்ற அன்னை" பாடலில்
அருமையாக உருகி பாடியுள்ளார்.கல்லும் கரையும் இந்தப்பாட்டை திரு. சஞ்சய்சுப்ரமணியன் தன் இனிய இளமையான குரலில் அள்ளிவழங்கியிருக்கிறார்.பாட்டின் வரிகளைப் பார்ப்போமா

ராகம்:- கல்யாணி தாளம் :- ஆதி.

பல்லவி

உன்னை அல்லால் வேறேகதி இல்லை அம்மா உலகெலாம் ஈன்ற அன்னை(உன்னை)


அனுபல்லவி

என்னையோர் வேடமிட்டு உலக நாடக அரங்கினில் ஆடவிட்டாய்
என்னால் இனி ஆடமுடியாது திருவுளமிரங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னை)


சரணம்

நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாட்க்ஷி
எனப் பல பெயருடன்
எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலிலும் எழுந்தருளிய தாயே
திருமயிலை வளர் (உன்னை அல்லால்)


கல்யாணி ராகத்தின் ஆரோகணம் ஸ ரி க ம ப த நி ஸ
அவரோகணம் ஸ நி த ப ம க ரி ஸ
ரொம்ப சங்கீதமா இருக்குன்னு பயப்படவேண்டம். அறிந்து கொள்வதில் தவறு இல்லை. இதில் கல்யாணியின் ஜீவஸ்வரம் நி . இதை வைத்துகொண்டு சிவன் இந்தக்கீர்த்தணையில் சரணத்தில் விளையாடியிருக்கிறார்
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாட்க்ஷி என்ற வரிகளில் நிஷாதத்தை உயர்த்தி நி த ம க ரி ச என்று ஷட்சமத்தை கடைசியில் இறக்கி முடிக்கிறார்.

இன்னொறு சிறப்பு இதில் நீ என்று ஆரம்பித்து மீனாக்ஷி காமாக்ஷி தரிசனத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய பிறந்த ஊரின் நாயகியான
நீலயதாட்க்ஷியின் பாதாரவிந்தங்களில் சரணமாகி ஷட்சமத்தில் முடிப்பது அவருடையமேதா விலாசத்தையும்அபரிமிதமான சங்கீத ஞானத்தையும் புலப்படுத்துகிறது.

அதற்காக தன்னைஆதரித்தகற்பகாம்பளையும்மறக்கவில்லை. கடைசியில் மேலே சொன்ன மூன்றுபேரும் வேறு யாரும் இல்லை திரு மயிலை வளர் கற்பகாம்பாள்தான் என்று முடிக்கிறார்.பாடல் வரிகளையும் பாட்டையும் சேர்த்து மறுமுறை கேளுங்கள் சிறப்பாக இருக்கும். திரை இசையிலும் கல்யாணியை விட்டு வைக்கவில்லை.மன்னவன் வந்தானடி தோழி எனற பாடல் திருஅருட்ச்செல்வர் படத்தில் சக்கை போடு போட்டது. அதேமாதிரி அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையினிலே (பாவம் அம்பி பாடமுடியாது) தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் மனத்தை அள்ளும்.

மன்னவன் வந்தானடி பாடல் கேட்க'><"இங்கே க்ளிக் செய்யவும்">

அமுதும் தேனும் எதற்கு பாடல் கேட்க'><"இங்கே க்ளிக் செய்யவும்">

இத்துடன் பாபநாசம்சிவன் தமிழ்த்தியகைய்யா முடிவுபெறுகிறது.

Friday, January 19, 2007

பாபநாசம் சிவன் தமிழ்த்தியாகய்யா(5)

Papanasam Sivan: The Tamil Tyagarajar (5)




பாபநாசம் சிவனின் வாழ்க்கையே மிகவும் எளிமையானது. மயிலை மாடவீதிகளில் 75 வயதிலும் மார்கழிமாத குளிரில்
கபாலியைப்பற்றியும் கற்பகாம்பாள் பேரிலும் படல்களை பாடிக்கொண்டு பஜனை செய்வார்.
அவருடன் அந்தகாலத்து பெரிய வித்வான்களும் கூடவே பாடிக்கொண்டு வருவார்கள்.
அவருக்கு சதாபிஷேக விழா நடந்தது.சென்னையில் கிருஷ்ணகான சபாவின் சார்பில் அது 1971வில் நடைபெற்றது.
எனக்கும் அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்து. பிரபல வித்துவான்களும், நீதிபதிகளும் அதில் கலந்து கொண்டார்கள்.
விழா மாலை 6.. மணிக்கு ஆரம்பித்து இரவு 10.00 வரை சென்றது. அன்று நல்ல மழை. விழாமுடிந்ததும் எல்லோரும் அவரவர்
வாகனங்களில் ஏறிக்கொண்டு சென்று விட்டார்கள்,ஆனால் சிவனுக்கு வண்டி வரவில்லை. நான்தான் அவருடன் அவரை
வழிஅனுப்புவதற்காக இருந்தேன்.
"என்ன மாமா வண்டி வருமா இல்லை நான்வேனா வேறூ கார் ஏற்பாடு செய்யட்டுமா" என்றேன்
"இல்லை அம்பி வண்டி வந்துவிடும் கொஞ்சம் இரு" என்றார்.
மழையும் விடவில்லை. அந்த கொட்டும் மழையிலும் ஒரு சைக்கிள்ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிகொண்டு வந்துகொண்டிருந்தான்.
கிட்டே வந்தவுடன் "ஐய்யா போலாமுங்களா" என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை
"என்ன மாமா கார்வரவில்லயா" என்றேன்.
"இல்லை அம்பி இவன்தான் எனக்கு எங்கே போனாலும் வந்து இருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டு போகிறான்.
காருக்கு 50ரூபாய் குடுத்தால் 5 நிமிஷத்தில் மயிலை கொண்டு விட்டுவிடுவான்.
ஆனால் அதே 50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்.அந்த அளவுக்கு கருணையும்.எளிமையும் கொண்டவர்.

இந்த பகுதியில் சிவனின் இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்/கேட்கலாம்.
ஒன்று திருவாரூர் கோவிலில் உள்ள வாதாபி கணபதியின் மீது படப்பெற்ற பாடல்.
திருவாரூர் கோவிலின் அமைப்பே வானவெளியிலிருந்து பார்த்தால் ஸ்ரீ சக்ர மேரு வடிவில் இருக்கும்.
40 வேலி கோவில் 40 வேலி குளம்.பார்ப்பதற்கு மிக கம்பீரமாக இருக்கும்
ஸ்ரீசக்ரத்தின் மத்யபாகத்தில் கமலாம்பாள் வலதுபக்கத்தில் வாதாபி கணபதி.
சஹானா ரகத்தில் அமைந்தது இந்தப்பாடல்.
இரக்ககுணத்தை பிரதிபலிக்கும் ராகம் சஹனா.
மிகவும் அழகாக அமைந்த பாடல் இது
இதில் காவேரி வருவதற்கு காரணமாக இருந்த அகஸ்தியரையும் முருகப்பெருமானையும் புகழ்கிறார்.

ராகம்:- சஹானா தாளம் :- ஆதி.

பல்லவி

ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் (ஸ்ரீ)

அனுபல்லவி

தேவாதி தேவன் தியாகேசன் திருவிளயாடல் செய் திருவாரூர் வளர் (ஸ்ரீ)

சரணம்

நம்பினபேர்க் கிஹபரமிரண்டிலும் நல் வாழ்வும் பேரின்பமும் நல்கும்

தும்பிமுகப் பெருமானே அடி தொழும் தொண்டர்கள் வேண்டும் வரம்தருவோனே

சம்புவுடன் கமலாம்பிகை மகிழும் தனயனே தயாகரனே ஜகம் புகழும்

கும்ப முனிக் கருள் குமரன் முன்தோன்றிய கோமானே ராமதாசன் உளம் வளர் (ஸ்ரீ}

இத்துடன் மீரா படத்தில் எம்.ஸ். அம்மா படியபாடலும் நந்தனார் என்ற படத்தில் எம். எம் தண்டபாணி தேசிகர் பாடிய என்னப்பனல்லவா என்தாயுமல்லாவா பொன்னம்பலத்தவா பாட்டும் உள்ளது

Sunday, January 14, 2007

சிக்கல் இல்லாத சிக்கில்....

சங்கீத ஞானம் எனக்கு அவளவாக என்ன அவளவும் போதாது, எனவே சிக்கலே இல்லாத ஒரு முழுமையான சங்கீதம் கேட்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை.Deserve before you desire(முதலில் தகுதி பின்புதான் ஆசை) என்பார்கள் ஆங்கிலத்தில். சரி நமக்கு என்றுதான் அந்தத்தகுதி வருமோ என்று காத்திருந்தேன். அன்று வந்தது. வேறு எங்கே 12ஆம் தேதியன்று மாலை நங்கநல்லூர் நம்ம தியகராஜ சங்கீத சமாஜத்தில்தான்.இந்தச் சபாவில்தான் என்னையும் ஒரு உபயோகமுள்ள மனிதனாக மதித்து காரியக் கமிட்டியில் சேர்த்துக்கொண்டார்கள் அதனால்தான் நம்ப என்ற அடைமொழி.


சமாஜம் காரியதரிசி திரு. ராமநாதன் தொலைபேசியில் அழைத்து "சார் இன்னிக்கு சிக்கில் குருசரன் கச்சேரி இருக்கு சாயங்காலம் வாங்கோ" என்றார்.நானும் உடனே "நிச்சியம் வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் "டிமிக்கி" கொடுத்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனால் அவர் அதற்கப்பறம் சொன்ன வார்த்தைகள் என் மனத்தின் எண்ணங்களை அடியோடு மாற்றி சங்கீதத்தின் மீது அபார பக்தி கொள்ளச் செய்து விட்டன. அப்படி என்னதான் சொன்னார் அவர் சங்கீதத்தை பற்றி. அவர் சொன்னது இதுதான்"சார் இன்னிக்கி கச்சேரி முடிந்ததும் பிரசாதம் சாம்பார் சாதமும்,தயிர்சாதமும்" அது போதாதா நான் குடும்பத்துடன் நங்கநல்லூரில் மாலை ஆறு மணிக்கே "டேரா" போடுவதற்கு.

அன்றைய நிகச்சி

திரு. சிக்கில் குருசரண்---வாய்பாட்டு
திரு. மைசூர் ஸ்ரீகாந்த்----வயலின்
திரு. ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ்- மிருதங்கம்
திரு. ஸ்.வி.ரமணி-----------கடம்

சிக்கில் குருசரண் வயதில் இளையவர், அபாரமான குரல் வளம், இனிமையான சரீரம் இளமையான சாரீரம் எல்லோரையும் கவரும் வசீகரமான தோற்றம்.வேய்குழல் விற்பன்னர்களான சிக்கில் சகோதரிகளின் பேரன், அதனால் நல்ல சங்கீத பரம்பரை வழி. குல வித்தை கல்லாமல் பாகம் படும். அன்று பட்டது . எப்படி என்று பார்க்கலாமா? வயலின் வாசித்த ஸ்ரீகாந்த்தும்,கடம் வாசித்த ரமணியும் முன்னிலை வித்வான்கள். மிருதங்கம் வாசித்த ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவோ அந்த வாத்தியத்தில் ஜாம்பவான்.கச்சேரி களை கட்ட வேறு என்ன வேண்டும். இனி கச்சேரிக்கு போகலாமா?

400 பேர்களேஅமரும் ஹாலில் கச்சேரி ஆரம்பம் ஆவதற்கு முன்பே கூட்டம்
நிறைந்து வெளியில் ரசிகர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். சாவேரி ராக வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம். நல்ல கச்சிதமான ஆரம்பம் All that begins well must end well நல்ல ஆரம்பம் நல்ல முடிவைநோக்கித்தான் செல்லும் என்பார்கள். அன்று அதுதான் நடந்தது.அடுத்து வந்தது முத்துஸ்வாமி தீக்ஷ்தரின் ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்த சித்தி விநாயகம் என்ற கிருதி.ராகத்தின் பரிமாணத்தை கொஞ்சம் காட்டிவிட்டு கிருதியின் உச்சரிப்பில் கவனம் செலுத்தி பாடியது அதுவும் ஸவரப்பிரஸ்த்தாரத்தில் ஒரு மினி 1000வாலவை கொளுத்திப் போட்டது போல ஸ்வரங்களை விளாசியது அற்புதம். தீக்ஷதர் கிருதிகளை கொஞ்சம் மடியுடன் வார்த்தை சேதமில்லாமல் பாடினால்தான் ரசிகர்களை சென்று அடையும். அதேமாதிரி அன்று சென்று அடைந்ததை ரசிகர்கள் தங்கள் கரகோஷத்தின் மூலம் தெரியப்படுத்தினார்கள். உடனே சுருசுறுப்புடன் பிலஹரி ராகத்தில் "வா மயூரமீதில் ஏறி வா என்னை ரக்ஷிக்க வா" என்ற பாடலால் மேலும்
மெருகூட்டினார். கச்சேரி நடைபெற்ற இடம் "ரஞ்சனி ஹால்" அதனால்தானோ என்னவோ ரஞ்சனி ராகத்தை எடுத்த குருசரண் அதை அலசி அதன் முழுஸ்வரூபத்தையும் தோரணமாக கட்டித் தொங்கவிட்டார்,அதிலும் தியாகராஜரின் "துன்மார்க்க சராதமுலெனு" கீர்த்தனத்தை எடுத்து வல்லின மெல்லின பிரயோகங்களுக்கு மதிப்பு கொடுத்து ஸ்வரபிரஸ்தாரங்களுடன் மென்மையாக வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.நிரவலின்போதும் ஸ்வரப்ரஸ்தாரத்தின்போதும் ஸ்ரீ முஷ்னம் ராஜா ராவ் பாடகருடன் கூடவே தொடர்ந்து வாசித்து காலப்ரமாணத்துடன், வாசித்த வாசிப்பு "சூப்பர்". மிருதங்கம் பேசுமா? பாடுமா? என்றால் அன்று அவர் வாசிப்பை கேட்டப்பிறகு முடியும் என்றுதான் கூறவேண்டும். என்ன வாசிப்பைய்யா அது! கைலாயத்தில் உள்ள நந்திதேவரே கேட்டு மகிழ்ந்திருப்பார். இதுவே இப்படி யென்றால் தனி ஆவர்தனத்தைப் பற்றி தனியாகச் சொல்லவேண்டுமா என்ன?

அன்று மொத்தம் 11 பாடல்களை வழங்கினார். எல்லாவற்றையும் விவரிக்கமுடியாது. அநுபவித்துதான் அறியமுடியும்.இருந்தாலும் அன்று கேட்ட இரண்டு முக்கிய உருப்படிகளைப் பற்றி சொல்லாமல் இருந்தால் விமரிசனம் முற்றுப்பெறாது. காம்போதி ராகத்தை எடுத்துக்கொண்டு விரிவாக ராக ஆலபனை செய்தார் காம்போதியில் அன்று அவர் வழங்கிய ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே என்ற காஞ்சி பரமாசாரியாருக்கு பிடித்த பாடலை .(இதை அவரே தன்னுடைய குரலில் அரியக்குடி ராமனுஜ ஐய்யங்காருக்கு பாடி பதம் பதமாக அர்த்தம் சொல்லி விளக்கியதாக கூறுவார்கள்) பாடியவிதம் அருமையிலும் அருமை. இந்தப்பாடலை ஒரு ஆறுமாசக் குழந்தையை துங்கச்செய்யும் தாயைப் போல அரவணைத்துப் பாட வேண்டும் ஏதோ ஆறுவயசு அடம் பிடிக்கும் குழந்தையை அடித்து கூட்டிச் செல்வதுபோல் பாடக் கூடாது. குருசரண் அருமையாக வழங்கினார்.

அடுத்து சொல்ல வேண்டியது "மெய்ன்' உருப்படியான ராகம் தானம் பல்லவியில் வழங்கிய சங்கராபரணம் ராகம்.ராகத்தை அஸ்த்திவாரத்திலிருந்து மெதுவாக ஆரம்பித்து கோர்வையாக் கார்வையுடனும் பிருகாக்களுடனும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே சஞ்சாரித்து ஸுஸ்வரத்துடன் கச்சிதமாக தானத்தையும் இரண்டறக் கலந்து அவர் அன்று வழங்கியது ரசிகர்களை சொர்க்கலோகத்துக்கே கொண்டு சென்றது.கச்சேரி "ஸ்வர ராக சுதா"வாகத்தான் இருந்தது. ஆமாம் அன்று அவர் வழங்கிய கிருதியும் தியாகராஜரின் "ஸ்வர ராக சுதா" தான்
கச்சேரி முடிந்ததும்தான் இந்த உலகுக்கே வந்தேன். ஆமாம் நிஜமாகவே ரசிகர்களை பயமுறுத்தாமல் இனிமையாகப் பாடிய சிக்கல்இல்லாத சிக்கில் குருசரண் தான்.

நங்கநல்லூர் ரசிகர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக டி'நகர்,மயிலை,திருவல்லிகேணி போன்ற இடங்களில் பிரபல வித்துவான்களின் கச்சேரியைக் கேட்டு அனுபவித்து இப்பொழுது இங்கே வசிப்பவர்கள். கச்சேரி முடிந்ததும் ரசிகர்களே ஐந்துநிமிடம் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கடைசியாக சமாஜத்தைப் பற்றி ஒரு வார்த்தை. எந்தவிதமான மாதாந்திர கட்டணமும் இன்றி ரசிகர்களுக்கு மாதா மாதம் கச்சேரியும் இந்த வருஷம் ஜனவரி மாதம் முழுவதும் கச்சேரிகள் வைத்து அனைத்துத் தரமக்களுக்கும்
இலவசமாகத் தரும்ஒரே சபா இதுதான். இதை முன்னின்று நடத்திவரும் திரு.ராமனாதன் அவர்களை எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை.ஆனால் அவருக்கு புகழைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது இந்தத் தொண்டில் அவர் ஒரு தியாகராஜராகவே மாறிவிட்டார். சமாஜத்திற்கு தன் உடல், பொருள், இடம் எல்லாவற்றையும் வழங்கிவிட்டு பின்னனியில் அமைதியாக இருப்பவர் திரு.ஸ்.வி.ரமணிஅவர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்கும் திரு. சுந்தரராஜன் இவர்களின் பணி மகத்தானது. ஏதோ நானும் இவர்களுடன் இராமபிரானுக்கு அணில் சேவை செய்ததுபோல ஈடுபடுத்திக் கொள்ளும் பாக்கியம் கிடைத்தது பூர்வ ஜென்மாவில் செய்த புண்ணியம்தான்.

Friday, January 12, 2007

கோலங்கள்



மக்கள் மறந்ததால் மறைந்துவரும் கலை இது. பல குழந்தைகளுக்கு ஏன் சில பெரியவர்களுக்குக் கூட கோலங்கள் என்றால் டக்கென்று ஞாபகத்துக்கு வருவது இரவு சன் டீ.வியில் வரும் கோலங்கள் சீறீயல்தான்.ஆனால் இது அது அல்ல. கோலக்கலையைப் பற்றியது.மார்கழி மாதம் வந்துவிட்டாலே மகளிர் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காலையிலேயே எழுந்து அவரவர் வீட்டின் முன்பு அழகிய கலர்ப் பொடிகளுடன் கோலப் போட்டியில் அசத்திவிடுவார்கள். இதில் சில சமயம் ஆண்களும் கலந்து கொள்வார்கள். எங்களது வங்கியில் நவராத்திரியின் போது கோலப்போட்டிவைத்து பரிசுகள் தருவோம். அப்பொழுது மறக்காமல் ஸ்ர்குலரில் ஆண்கள் கலந்து கொள்ளாக்கூடாது என்று குறிப்பிடுவோம்.
கோலம்போடுவதற்கு கலர்ப் பொடிகளைவிட பொறுமை,கல்பனாசக்தி,கணக்கில் திறமை,சுறுசுறுப்பு
போன்றவைகள் மிக அத்தியாவசியமானது. இது பெரும்பாலும் பெண்களிடம்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அதனால்தான் இந்தக்கலையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இபொழுது இந்தக்கலை மறைந்துவரும் நிலையில் உள்ளது.அடுக்குமாடி கட்டிடங்கள் மிகுந்துவரும் இந்நாட்களில் கோலம் போடும் பெண்களும் இடமும் தட்டுப்பாடாகிவிட்டன.இருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற நம்ப மயிலாப்பூர் விழாவில் வடக்கு மாடவீதியில் ஒரு பெரிய கோலாஹலமான கோல வீதியே படைத்து விட்டார்கள். நம்மவர்களும் அயல்நாட்டினரும் கண்டு களித்தனர்.
இந்தக்கலை அழிந்துவிடாமல் ஆதரிக்கவேண்டியது இன்றைய சமூகத்தினரின் கடமை. பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தக்கலையை நன்கு கற்பித்து போஷித்தால் பிற்காலத்தில் சிட்னி,ஹுஸ்டன்,டொரான்டோ போன்ற இடங்களிலாவது நம் மக்கள் கோலம் போடுவார்கள்.

Friday, November 03, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 5 )


அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே
பெருமாளை அருகில் சென்று களியுங்கள்.வண்ணமலர்மாலைகளின் நடுவே மதுர மதுர வேணுகீத மதன சுகுமார நாயகனாக வீற்று இருக்கிறான் நாராயணன்.வெள்ளை மல்லிகை மலர்க்கூட்டத்தின் நடுவே தங்கமென ஜ்வலிக்கும் கருடாழ்வாரைப் பாருங்கள்.இருகைகளாலும் பெருமாளைத் தாங்கிக்கொண்டு முகத்தில் பரிபூரண ஆனாந்தம் பொங்க காட்சிஅளிக்கிறார்.
இந்த ஆனந்தத்திற்கு காரணம் என்னவாக இருக்கலாம் என்பதற்கு ஒரு பட்டி மண்டப தலைப்பு கொடுத்து திரு ஜி.ரா,திரு.ராமநாதன் ஆகிய இருவரையும் ஒரு அணியிலும் ,மற்றொரு அணியில் திரு ஸ்.கெ,மற்றும் கே.ஆர் ஸ் அவர்களையும் வாதிடுமாறு அழைக்கிறேன். தலைப்பு இதுதான். கருடன் முகத்தில் ஆனந்ததிற்கு காரணம் "அகில உலகங்களையும் தங்கி நிற்க்கும் பெருமாளையே நாம் தங்கிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காகவா" அல்லது" ஈசனும், பிரும்மாவும், மற்ற தேவர்களும் வணங்கும் பாதத்தை தன் தலை மீது வைத்துக்கொண்டு சேவைசாதிக்கும் பாக்கியம் கிடைத்ததினாலா". நானே நடுவராக இருந்து கடைசியில் தீர்ப்பு வழங்குகிறேன்.
கண்ணனை கண்ணார கண்டுவிட்டீர்களா.போதுமா முடிந்தால் கண்ணிமைக்காமல் பாருங்கள்.கண்ணிமைத்து காண்பார்தாம் கண் என்ன கண்ணே.........தொடரும்