
ஒரு ஆறுமாதமாக எந்த வேலை எடுத்தாலும் தடங்கல், முனைப்பு இல்லை உடம்பு மிகவும் மோசமான நிலை, அலுவலக காரியங்களும் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போனது. போதாக்குறைக்கு பொன்னியம்மா குறைவேறு என்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று 30௦, 600 என்று தங்கம் விலை மாதிரி ஏறிக்கொண்டு இருந்தது .
அப்பாடா அவ்வளவுதான் என்ற நினைப்பில மண்ணை அள்ளிப்போட்டது மருத்துவ அறிக்கை. உணவுக்குழாயில் இதயத்திற்கு அருகில் மூச்சுக்குழலுக்குமேல் ஒரு சிறிய பை போன்ற குழி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதுபாட்டுக்கு இருந்து விட்டு போகட்டுமே என்றால் சாப்பிடும் போது சில சமயம் உணவு அதில் மாட்டிக்கொண்டு மூச்சுக்குழலை மூடி மயக்கம் வந்து கீழேவிழுந்து கிருஷ்ணாம்பேட்டையா பெஸண்ட் நகரா என்ற கேள்விக்கு விடை காணும்படி ஆகிவிடுகிறது. இதனால் என்ன நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை(வீட்டில் இருப்பவர்களுக்குத்தனே அதெல்லாம்) பையன்,மாட்டுப்பெண், பேரன், மாப்பிள்ளை, பெண் என்று எல்லோரும் வந்து பார்த்துவிட்டு போயகிவிட்டது. பிளாக் உலக நண்பர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் விசாரித்தார்கள்.இவ்வளவு ஆகியும் நம்மிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு மட்டும் போகவில்லை.
என்னுடைய மைத்துனியின் கணவர் காசியில் வேதம் படித்து என்னை மாதிரி லௌகிகத்தில் இல்லாமல் புனிதமான வைதீகத்தில் இருப்பவர்.ஆஸ்பத்திரிக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு கேட்டார்'என்ன அத்திம்பேரே இவ்வளவு சீரியாசாக இருந்தும் எனக்கு சொல்லவே இல்லையே என்றார். நான் சொன்னேன் "அப்படியொன்றும் சீரியஸ்சாக இல்லை அப்படியிருந்தால் முதல் தகவல் உங்களுக்குத்தான் வந்திருக்கும்."
சரி வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள் இன்னும் ஏன் நிலைமை சரியாகவில்லை என்று பார்த்தால் வந்தவர்களில் ஒருவர் போகவில்லையாம்
சரி இவ்வளவு தூரம் நம்மை ஆட்டிப்படைப்பவர் யார் என்று விசாரித்தால் அவர் ஒன்பதில் ஒருவர். கடந்த சிலமாதங்களாகவே என்னுடன் என் வீட்டிலேயே தங்கியுள்ளார் என்றும் அவர் பெயர் சனீஸ்வரர் என்றும் தெரிய வந்தது
சரி நாம் கூப்பிடாமலேயே அழையாத விருந்தாளியாக வந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று எண்ணம் வந்தது. அதை வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.சனீஸ்வரரைப்பற்றி யார் நமக்கு கூறுவார்கள் என்று பார்த்த பொழுது என் தாயரின் நினவு வந்தது. அவள் குளித்துவிட்டு சமையல் செய்யும்போது சொல்லும் ஒரு பாடலில் சில வரிகள் ஞாபகம் வந்தது. " கடன் வேண்டி காத வழி போனாலும் கடனும் இல்லை என்று சொல்லி காலை உடையவைப்பேன் இன்றை வா நாளை வா என்றே இழுக்கடிப்பேன் இப்படியாகப் பட்ட சனீஸ்வர பகாவானின் ஸோத்திரத்தை ஒருநாளும் மறாவாமல் இருதரம் சொன்னவர்க்கு சனியொன்றும் வாரமல் சகலமும் காத்திடுவேன் பசியாது நித்தியம் பார்வதியாள் படியளப்பாள் என்று முடியும்.
இது போதவில்லை வேறு யார் இவரைப்பற்றி துல்லியமாக கூறியிருப்பார்கள் என்று யோசித்தபோது முத்துஸ்வாமி தீக்ஷதர் ஞாபகம் வந்தது. அவரையுமா சனிபகவான் விடவில்லை.
மீதி அடுத்த பதிவில்