Saturday, December 27, 2008

ஸ்ரீ ஹனுமனை துதி மனமே தினமே




ஸ்ரீ ராம ஜெயம்


மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)



ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)
ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான்.. மாதவம்)
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)
நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்

இன்று ஹனுமத் ஜயந்தி
வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு கூடவெ இருப்பினும்,விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.
மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி, கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,இணயில்லாத பலம் மிக்கவரும்,அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகபேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.வெறும் புஜ வலிமை போதாது.
மனித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான். தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.
ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவெ கீ நாயீ
-ஹனுமனின் மீது ஒரு பாடல் கிளிக் செய்யுங்கள் W/

Tuesday, December 23, 2008

காஞ்சி மாமுனியின் கருணை



மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரோடு இருந்த நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்க முடியவில்லை. வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்

ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம்.பேசமாட்டார்கள். வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று. மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். ""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது . நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு
முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""
.
இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்

Thursday, November 27, 2008

தங்கள் இன்னுயுர் ஈந்தும் தாய் நாட்டினைக் காப்பர்

மக்களாய்ப் பிறந்தோர் மடிவது
திண்ணம்தாய்த் திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை
அழித்திடும் முயற்சியில்மும்பையில் தீவிரவாதிகளுக்கு எதிராக தன்னுயிர் ஈந்த
பாரத தேவியின் புதல்வர்களுக்கு வீர வணக்கம்
அவர்தம் ஆன்மா சாந்தியடைய மோக்ஷதீபம் ஏற்றுவோம்

Saturday, October 18, 2008

.கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் . அவருடைய கிருதிகளை பாடம் செய்வது பாடுவதும் மிகக் கடினம். ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதியான இது மிகவும் விசேஷம் வாய்ந்தது.நம்மவர்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் இந்த அயல்நாட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர்.எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷ்ணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண்.என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, ..அக்ஷரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டு விட்டு என்னுடன் அனுசரித்துப் போவீர்கள் இது சிறந்தது என்பதில்.
ராகம்: ஸ்ரீ தாளம்: கண்ட
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹிமாம் லலிதே

ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே
சரணம்:
ராகா சந்த்ரமுகீ ரக்ஷித கோலமுகீ
ரமா வாணி ஸகி ராஜயோக ஸுகீ
ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி
ஸங்கரி ஸங்கர குருகுஹ பக்தவஸங்கரி
ஏகாக்ஷரி புவனேஸ்வரி ஈஸப்ரியகரி s
ஸ்ரீ -சுககரி ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி!!
தமிழாக்கம்
திருவாரூர் எனும் கமலாலயத்தில் வாழும் கமலாம்பிகையே. லக்ஷ்மியின் கணவனான விஷ்ணுவினால் வணங்கப்படுபவளே. வெண்மை, கருமை ஆகிய இரண்டு நிறங்களுக்கு உரிய கௌரி துர்கையாய் காட்சித் தருபவளே. சிவபிரானோடு இரண்டறக் கலந்தவளே. லலிதா தேவியே.ஸ்ரீ கமலாம்பிகையே. மங்களங்களை அருள்பவளே. என்னைக் காப்பற்றுவாயாக.

பௌர்ணமி நிலவைப் போன்ற முகத்தை உடையவளே. வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே. லக்ஷிமியும் ஸரஸ்வதியும் உனக்கு தோழியிராக விளங்கும் பெருமை பெற்றவளே. ராஜ யோகம் எனும் உன்னத சுகத்தில் ஆழ்ந்து திளைப்பவளே. சாகம்பரீ என அழைக்கப்படும் வன துர்கைஅன்னையே. மெல்லிய இடையைக் கொண்டவளே. சந்திரனுடைய இளம் பிறையை ஆபரணமாகத் தரித்தவளே. சங்கரன், குழந்தை முருகன், மற்றும் உனது அடியார்களுக்கு வசப்படுபவளே. ஹ்ரீம் என்னும் ஓரெழுத்தில் உறைபவளே. உலகத்தின் ஒரே ஒப்பற்ற தலைவியே. கையிலைநாதனுக்கு பிரியமானவளே. சகல ஐஸ்வர்யங்களையும் மட்டில்லா சுகத்தையும் அருளும்படி செய்பவளே. ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே ஸ்ரீ கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று தாயே.

-

இதே பாடலை திரு டி கே ஜெயராமனின் சிஷ்யர்பாலாஜியின் கணீரென்ற குரலில் நன்றாகப் பாடியுள்ளார் . ஏன் என்று தெரியவில்லை இந்த இளம் கலைஞர் இளம் வயதில் நல்ல புகழ் உச்சியில் இருக்கும்போதே பாடுவதை நிறுத்திவிட்டார்.சங்கீத அரசியல்தான் காரணமோ?

திரு பாலாஜி சங்கர் அவர்கள் குரலில் இங்கே கேளுங்கள்">

Wednesday, October 15, 2008

கல்யாணமே வைபோகமே

. அன்பர்களே நண்பர்களே இந்த மாதம் 31 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் எனது மகளின் திருமணம் ஆண்டவனின் அருளோடு நடக்க இருக்கிறது . இடம்: ஸ்ரீ மத ஸ்ரீ ரங்கம் ஆண்டவன் -ஸ்வாமிகள் ஆ-சரமம் -சர் தேசிகாச்சாரி ரோடு ஆழ்வார்பேட் மயிலை . முழு விவரமும் அன்பர்களுக்கு இ மெயில் முலமாக அனுப்பியுள்ளேன் . சென்னையில் உள்ளவர்கள் நேரில் வந்து அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். 30 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் 9. 00 மணிவரை நடக்க இருக்கும் வரவேற்பிற்கும் வருமாறு கேட்டுக்கொள்கிறேன் விவரம் வேண்டுவோர் மெயில் அனுப்புங்கள் அனுப்பிவைக்கிறேன்
அன்பன்
திராச

Thursday, October 09, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10



.




ஸிஞ்ஜான மணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதம்புஜா !
மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:!!
அம்பாளுடைய பாதமும் அவளுடைய நடை அழகயையும் வர்ணிக்கும் வரிகள்.அவள் மிகவும் மெதுவாக அன்னப்பட்சியைப் போல் நடந்து செல்கிறாள். அப்படி நட்ந்து செல்லும்போது பாதங்களில் இருக்கும் கொலுசுகளில் இருக்கும் மணிகள் கிணி கிணி என்று ஓசை எழுப்புகிறது.அந்தப் பாதங்களை வணங்குவோம்.
ஸ்ரீ சக்ரராஜ நிலயா ஸ்ரீ மத் திருபுரசுந்தரி!!
அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கடைசியாக முடிவது அவள் யார் என்ற விளக்கத்துடன். அவள்தான் திருபுரசுந்தரி.இதையே"" அபிராமி பட்டரும் திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே" என்கிறார். எந்த திருபுர சுந்தரி பிரும்மத்தையும் இந்த ஜீவனையும் ஒன்றாக சேர்க்கக்கூடியவள். அவள் எங்கு இருப்பாள். ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவள் அப்படிபட்ட 

லலிதாவை வணங்கி இப்பொழுது விடைபெறுவோம் பின்பு ஒரு சமயம் அம்பாளின் அருளோடு தொடருவோம்
இதுவரை வந்து படித்தவர்களுக்கு நன்றி.குறிப்பாக மின்னலுக்கு. இன்று ஸ்பெஷல் சுண்டல் இல்லை. அதற்கு பதில் சாப்பாடு


















Wednesday, October 08, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் (11)









நக தீதிதி ஸ்ஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா !


பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா !!


இன்னும் இரண்டு நாள்தான் உள்ளது எனவே நேராக பாதத்துக்கு வந்து விடலாம்.அம்பாளுடைய பாதத்தில் எல்லோரும் வந்து வணங்குகிறார்கள். யார் யார் வந்து வணங்கினார்கள்?தேவேந்திரன்,மும்மூர்த்திகள்,தேவாதி தேவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் வந்து வணங்கினார்கள்.அப்படி வண்ங்கியவர்களில் சிலருக்கு தமோ குணம் இருந்ததாம்.அந்த குணங்கள் எல்லாம் அம்பாளின் கால்களில் உள்ள பத்து விரல் நகங்களிலிருந்து வந்த பிரகாசமான ஒளியின் தன்மையால் நீக்கப் பட்டு விட்டன.இதைத்தான் அபிராமி பட்டரும்""மனிதரும் தேவரும், மாயா முனிவரும், வந்து சென்னி குனிதரும் கோமளமே "" கமலாலயனும் மதியுறுவேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் என்கிறார்.



அப்படிப்பட்ட பாதங்களை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள்.எனினும் அது பொருந்தாது.ஏனெனில் தாமரையின் குணம் பகலில் மலர்ந்து இரவிலோ அல்லது பனிமிகுதியாலோ கூம்பி விடும்.ஆனால் உனக்கு பிறந்த வீடோ ஹிமவான் புத்ரி இமயமலை. புகுந்த இடமோ கைலாச மலை. இரண்டும் சதா சர்வகாலமும் பனியிலேயே உறைந்துகிடக்கும் இடம். அப்படியிருந்தும் உன்பாதத் தாமரைகள் கூம்புவதே இல்லை.வாடுவதும் இல்லை."நின் புது மலர்த்தாள் பகலும் தொழுவார்க்கே""என்கிறார் அபிராமி பட்டர்
.















Tuesday, October 07, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10







பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!
மூக்கு வர்ணனைக்குப் பிறகு கன்னம். அம்பாளின் கன்னம் எப்படி இருக்கிறது.பத்மராகக் கல் என்று ஒன்று உண்டு. அதனுடைய குணம் எதிரில் உள்ள பொருளை அப்படியே பிர்திபலிக்கும். இபொழுது இருக்கும் கண்ணாடியைப் போல். ஆனால் அம்பாளின் கன்னம் அந்த பத்மராகக் கல்லை ஒன்னுமே இல்லாமல் செய்யக்கூடிய காந்தி படைத்தது.
அந்த இரண்டு உதடுகளும் மேலும் கீழும் சிகப்பாக இருக்கும். எதைப்போல என்றால்.ஒரு உதடு செங்காந்தாள்(பிம்ப)மலர் போல சிகப்பாக இருக்குமாம். மற்றொரு இதழோ புத்தம் புதிதாக உருவெடுத்த பவழத்தின் சிகப்பு நிறத்தை ஒத்து இருக்குமாம்.பாட்டுக்கோட்டை பாடினானே முகத்தில் முகம் பார்க்கலாம் அதரத்தில் பவளத்தின் நிறம் சேர்க்கலாம் அந்த மாதிரி.
பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!

சரி இன்னிக்கி ஸ்பெஷல் சக்கரைப் பொங்கல். மொத்தமும் உனக்குதான்





Sunday, October 05, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்(10)



































































நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம்.அதுவும் இளம் சிவப்பு நிறம்தான். அப்படிப் பட்ட மூக்கில் அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டிஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம்.மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும்.கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம்.முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது. மறுமுறை படியுங்கள் நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
தேவியின் முகம் தெரியும்
சுண்டல் ஆறிக்கொண்டு இருக்கிறது சாபிடுங்கள் நாளை மற்றுமொரு நாமாவளியைப் பார்க்கலாம்



Saturday, October 04, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் (7)






இன்று வணங்கப் போகும் வரிகள்

முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா

வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா

அடுத்தபடியாக அம்பாளின் முகத்தைப் பற்றிய வர்ணனை. அவள் முகம் எப்படி இருக்கிறதாம்.முகம் பூர்ண சந்திரன் போல இருக்கும் உன் முகத்தில், எப்படி சந்திரனில் ஒரு சிறு களங்கம் தென்படுமோ அதுபோல உன்நெற்றியில் கஸ்தூரி மானிடமிருந்து பெற்றகஸ்தூரியால் திலகமிட்டு அழகாக ஜ்வலிக்கும் உன் முகம்.இதுதான் முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா

அங்கதன் மன்மதன் இருக்கிறானே அவ்னுக்கு உருவம் கிடையாது. மனதில் மட்டும்தான் இருக்கிறான்.அவன் மேல் உள்ள கருணையினால் அவனுக்கு ஒரு விலாஸம் அட்ரஸ் வேண்டுமே அதற்காக தன்னுடைய முகத்தையே அவனுக்கு வீடாக அளித்தாளாம்.வீடு என்றால் வாயில் இருக்க வேண்டும் தோரணம் இருக்க வேண்டும் அல்லவா? அம்பாளுடைய இரு புருவங்களும் தான் அந்த வீட்டின் வாயில் தோரணங்கள்.அம்பாளின் முகம் மன்மதனைப் போல அழுகு படைத்தது புருவங்கள் இரண்டும் வாயில் தோரணம் போன்று இருக்கிறதாம். இதுதான் வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா

வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
அடுத்தது கண்களைப் பற்றிய வர்ணனை
அவளுடைய முகத்திலிருந்து வரும் அழகு இருக்கிறதே அது அப்படியே பிரவாகமாகிய நதி போல அதுவும் ஒரு நதி அல்ல இரண்டு நதிகள் பெருக்கெடுத்து ஓடிவந்து இரு கண்களாக மாறி விடுகிறதாம். ஒரு நதியின் பெயர் தயா.நாம் எவ்வளவு தப்பு செய்தாலும் தாயினும் சாலப் பரிந்து நம்மை மன்னிக்கும் தயாநதி போன்ற கண்கள். மூககவி காமட்சி அம்மன் பேரில் 100 ஸ்லோகங்கள் தயா சதகம் என்ற பெயரில் பாடியுள்ளார். மற்றோரு நதி கருணா.பக்தர்கள் மீது எப்பொழுதும் கருணை கொண்டவள்.ஆக இரண்டு கண்களும் இரண்டு தடாகங்கள் என்றால் அதில் மீன்கள் இருக்க வேண்டாமா? லலிதா தேவியினுடைய கருவிழியில் உள்ள கரு மணிகள்தான் மீன்கள். அது இரண்டும் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடிக்கொண்டே இருக்குமாம். இதைத்தான் ஆதி சங்கரர் அப்படியே எடுத்து"" வதன சௌந்தர்ய லஹரி"" என்கிறார் சௌந்தர்ய லஹரியில்.காளிதாஸரும் ""லலிதா கடக்ஷவீக்ஷ் ஐஸ்வர்ய அவ்யாஹ்த"" லலிதாவின் கடைக்கண்னின் ஒரு ரேகை பட்டாலும் கூடசெல்வம் கொழிக்குமாம்.இதுதான் அர்த்தம் என்பதற்கு இந்த உவமைகள் எல்லாம் என் கற்பனையே ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
சரி இப்போது சுண்டல் நேரம் நெருங்கி விட்டது. நாளை வேறு ஒரு நாமாவளியைப் பார்க்கலாமா!






Thursday, October 02, 2008

அம்பிகைக்குஆயிரம் நாமங்கள் ( 5 )




இன்று முதல் ஸ்லோகமான

ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "

சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'

அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே !சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே! தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான். ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது
ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ

எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.
சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா
சித் என்பது உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்பது அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம். "சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம்,அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார் அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.
தேவ கார்ய சமுத்பவா
தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றியவள்.

நாளை பார்க்கலாமா





Wednesday, October 01, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் ( 4)






சிந்தூ அருண விக்ரஹாம்
இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அபொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? ""தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்

என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்

நாளை இன்னுமொரு நாமத்தைப் பார்க்கலாமா?


Monday, September 29, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் (3)

அம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் மட்டும்தானா என்ன ! அவள்தானே நாமரூபா. எல்லா வார்த்தைகளும் அவளிடமிருந்துதான் உருவாகின.காளிதாசன் கூறும் போது வாகர்த்தாவி வசம் விருக்த்தவ் வாகர்த்த பிரபத்தியே, வார்த்தைகளும் அதிலிருந்து வரும் பொருளும் நீதான் என்கிறார்.இருந்தாலும் இந்த நவராத்ரி திருநாளில் எனக்குத் தெரிந்த வரை லலிதா ஸ்ஹஸ்ரநாமத்திலிருந்து சில நாமக்களை பற்றி எழுத எண்ணி அவளின் அருளோடு முயல்கிறேன் கொலுவும் உண்டு சுண்டலும் உண்டு. தினமும் வாருங்கள் வந்து அம்பிகையின் அருளுக்கு பாத்திரமாகுங்கள். முதல் நாமவாக உதயத்பானு ஸ்கஸ்ராபா என்ற நாமத்தை எடுத்துக்கொள்ளலாம்.அம்பிகையின் முகத்தைவர்ணிக்கும் எல்லோரும் இதை கையாண்டு இருக்கிறார்கள். அம்பாளுடைய முகாரவிந்தம் எப்படி இருக்கும் தெரியுமா? ஆயிரம் சூரியர்கள் விடிகாலையில் உதிக்கும் போது அதன் கிரணங்கள் எப்படி சிவப்பு வர்ணமாக இருக்குமோ அப்படி இருக்குமாம்.பின்னர், வேறு ஒரு இடத்தில் அவளது முகம் சரஸ்சந்திர நிபானனா சரத்காலத்தில் உதிக்கும் குளுமைபொருந்திய சந்திரனைப் போல் இருக்குமாம். இதென்ன எப்படி சூரியனைப் போலும் சந்திரனைப் போலும் இருக்குமா ஒருவரது முகம் முரன்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? மகிஷாசுரன், மதுகைடபன், போன்ற அசுரர்களை வதைக்கும்போது உக்கிரமாக சிவந்து உத்யத்பானு ஸ்காஸ்ராபாவாக இருக்கும்.அபிராமி பட்டர்,போன்ற அடியார்களை காக்கும் போது ஸ்ரஸ்ச்ந்திர நிபானனாவாக இருக்கும்.ஒரு புலி காட்டில் தன் உணவுக்காக இரையை வேட்டையாடும்போது அதனுடைய முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி தன்கோரப்பற்களினால் கடித்து குதறி உக்கிரமாக உதயசூரியன்போல இருக்கும். அதுவே பிறந்து 2 நாட்களே ஆனா தன் குட்டிகளை காப்பதற்காக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு தூக்கிக்கொண்டுபோகும்போது அதே பற்களைத்தான் உப்யோகித்து அதற்கு வலியில்லாமல் வாயில்கவ்விக் கொண்டு போகும். ஒரு சாதரண மிருகத்திற்கே வித்தியாசமான மறுபட்ட முகத்தோற்றம் கொண்டு வரும்போது அகிலாண்ட நாயகிக்கு இது ஒரு பெரிய விஷயமா?
இந்த உதயத்பானு ஸகஸ்ராபாவைத்தான் ஆதிசங்கரரும் மதுரை மீனாக்ஷியம்மனின் முகத்தை வர்ணிக்கும்போதும் உப்யோகப் படுத்துகிறார்.""உத்யத்பானு ஸஹ்ஸ்ர கோடி ஸதிர்ஸாம்"". மீனாக்ஷியம்மனின் முகம் எப்படி இருக்கிறதாம் ஆயிரம் உதயசூரியன் உதிக்கும் போது ஏற்படும் பிராகாசமாக இருக்குமோ அப்படி.
அபிராமபட்டரும் லேசுபாட்டவரா அம்பிகையின் மீது அந்ததாதி பாடுபோது முதல் படலிலேயே முதல் வரியே""உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமுடையாய்"", அபிராமியின் முகத்தில் இருக்கும் திலகம் எப்படி இருக்கிறதாம் தெரியுமா? காலையில் உதிக்கின்ற கதிரவன் எப்படி சிவந்து சிவப்பாகாக இருக்குமோ அதுபோன்று அவளுடைய திலகம் ஒளிர்விடுகிறதாம் அப்படியென்றாள் அம்பாளின் முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்
நாளைக்குத்தான் நவராத்திரி அதலால் சுண்டல்(அம்பி)நாளைக்குத்தான்
.

Sunday, September 28, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்(2 )

அபிராமி அவள்"" அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லியாகவும் மின்னாயிரம்
ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற தண்ணாளாகவும் "' திகழும் அபிராமியை போற்றி மாறாத பக்தியுடன் வணங்கியவர் சுப்பிரமணிய சர்மா.அவருக்கு காணும் பெண்கள் எல்லாரும் அபிராமிதான்.ஆனால் இவர்மீது பொறாமை கொண்ட சிலர் இவரைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பினார்கள்.
தை அமாவாசையன்று காவிரிப்பூம்பட்டினத்தில் கடலாடி , திருக்கடவூருக்கு வருகிறார்.அப்போது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்,அபிராமியின் சந்நிதியில் அமர்ந்து அவளது சந்திர பிம்ப வதனத்தின் ஒளித்தியானத்தில் கட்டுண்டு கிடந்த சுபிரமணிய சர்மா மன்னன் வருகையை உணரவில்லை.மாங்காய் உண்டு மலைமேல் இருப்பவர்க்கு தேங்காய் பால் ஏதுக்கடி என்ற நிலயில் இருந்தார்.மன்னனை வணங்கவும் இல்லை. இதுதான் சமயம் என காத்திருந்த இவர்பால் பொறாமை கொண்டவர்கள் மன்னனிடம்""அரசே உங்களையும் மதிக்காது அமர்ந்திருக்குமிவரது திமிரைப் பாருங்கள். இவர் நடைமுறைச் சிந்தனை கூட இல்லாதவர். இவரிடம் இன்று என்ன திதி என்று கேட்டுப்பாருங்கள் அது கூட அவருக்கு நிச்சியமாகத் தெரியாது"" என்று கூற அரசனும் அவ்வாறே சுபிரமணிய சர்மாவைக் கேட்டார். அபிராமியின் நிறைமதி முகதரிசனம் கண்டு கொண்டிருந்த சர்மாவும்""இன்று பௌர்ணமி"" என்றுகூறிவிடுகிறார்.கோபமுற்ற அரசன் அமாவசையான இன்று பௌர்ணமியை சந்திரனைக் காட்ட வேண்டும் இல்லையேல் உன் தலை தரையில் உருளும் என்றார்
தன்னிலைக்கு வந்த சர்மாவும் விபரீதத்தின் தன்மையை உணர்ந்தார் .ஆனால் பயப்படவில்லை.கேட்டவனோ மன்னன் என்னை பதில் சொல்லச் சொல்லியதோ அபிராமி..என்னைக்காப்பது அவள் கடமை என்று கூறிவிட்டு அம்மையின்மீது பக்திச் சுவையும் தமிழ்ச் சுவையும் சொட்டும் அந்தாதி 100 பாடல்களைப் பாடத்தொடங்கினார். 79 ஆவது பாடலான
"விழிக்கே அருளுண்டு, அபிராமவல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்க,
பழிக்கே சுழன்று,வெம்பாவங்களே செய்து,பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே""
என்ற பாடலைப் பாடியதும் அந்த அதிசயவல்லி தன் தாடங்கத்தைசுழற்றி வானில் வீசினாள்.ஈஸ்வரியின் இரு காதுகளில் இருக்கும் தாடங்கள்தான் சூர்யனும் சந்திரனும் என்று ஆதிசங்கரர் அம்பாளை வர்ணித்ததுபோல அந்தத் தாடங்கம் வானவீதியில் பௌர்ணமி சந்திரனாக ஒளிவீசியது.அமவாசையன்று முழுமதியைக் கண்ட குறைமதி மன்னனும் தன் தவற்றை உணர்ந்து சர்மாவிடம் மன்னிப்பு கேட்டு அவர் பெருமையை உலக அறியச் செய்கிறன். அபிராமி அந்தாதியை பாடி முடித்த சுபிரமணிய சர்மாவும் ""அபிராமி பட்டர்""ஆனார்.

-
அபிராமி அந்தாதியின் முதல் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்
என்ற அம்பாளின் நாமத்தை எப்படி பட்டரும்,சங்கரரும் லலிதா ஸகஸ்ரநாமத்திலும் அனுபவித்தார்கள் என்று நாளை பார்க்கலாமா

Saturday, September 27, 2008

அம்பிகையின் ஆயிரம் நாமங்கள்

இது நூறாவது பதிவு கௌசிகத்தில்

திருகடவூரில் காலசம்ஹாரமூர்த்தியின் சக்தியாகத் திகழ்பவள்பாலம்பிகை. அமுதகடேஸ்வரரின் ஷக்தியாக்த் திகழ்பவள் அபிராமி.திருக்கடவூர் என்பதுஅஷ்ட விரட்டத் தலங்களுள் ஒன்று. சிவன் வீரச்செயல் புரிந்த இடங்கள் எட்டு. அவற்றுள் காலனை காலால் உதைத்து அவனுடைய மமதையை ஸ்ம்ஹரித்துக் காலஸம்ஹார மூர்த்தியாக வடிவெடுத்த தலம் திருக்கடவூர். பாற்கடலைக் கடைந்து எடுத்து அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகத் தேவர்களும் அசுரர்களும் மாஹேஸ்வரனிடம் விண்ணப்பிக்க மஹாதேவனும் அமிர்தகடத்தை மானும் புலியும் பகையின்றி நட்புறவோடு நீர் உண்ணும் நிலையில் வைத்துப் பின்ண்ணக் கட்டளையிட , அவர்களும் அவ்வாறே பிஞ்சிசிலவனம் எனும் தலத்தில் அதனை வைத்துவிட்டு அனுஷ்டானத்திற்காகச் சென்றனர். திரும்ப வந்து பார்த்தபோது அமிர்தகடமானது சிவலிங்கமாக உருவெடுத்துப் பிஞ்சில வனத்திலேயே அமிர்தகடசே மூர்த்தியாகப் பிரதிஷ்டையானது
அமுதம் தேவர்களும் அசுரர்களுக்கும் மட்டுமின்றி பக்தியுடன்வந்து தொழும் அடியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே அவன்நோக்கம்.பிஞ்சிலம் என்றால் ஜாதிப் பூ என்று பொருள். இதுவே அமிர்தகடம் ஸ்தாபனம் ஆனதால் திருகடவூர் என்று ஆனது.
மிருகண்டு முனிவருக்கு பல காலம் மகப்பேறு இல்லாமல் இருக்க அவர் சிவனிடம் வேண்டியபோது 16 ஆண்டுகளே வாழக்கூடிய மார்க்கண்டேயரைப் மகனாகப் பெற்றார். அமுதகடேஸ்வரரிடம் அகலாத பக்திகொண்ட மார்கண்டேயரைப் பதினாறு வயதான பின்பு இழுத்துச்செல்ல காலதேவன் வந்தபோது மார்கண்டேயர் அமிர்தகடேஸ்வரரை கட்டிக்கொண்டார்.பாலகன் மீது காலன் பாசக்கயிற்றை வீச அது அமிர்தகடேஸ்வரரையிம் சேர்த்து பிணத்தது.அதனால் வெகுண்டெழுந்த சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் தமது இடது காலால் காலனை உதைத்து ஸ்ம்ஹாரம் புரிந்து மார்க்கண்டேயரைக் காத்தார். மார்க்கண்டேயருக்கு "என்றும் பதினாறு" என்ற சிரஞ்சீவி வரன் அளித்த தலம் திருக்கடவூராகும்.
காலன் தனக்கிட்ட கட்டளையைத்தான் செய்தான் பின்பு அவனுக்கேன் இந்த முடிவு.அவன்செய்த தவறு பாசக்கயிற்றை மார்கண்டேயன் மட்டுமல்லாது சிவனின் மீதும் பினைத்ததால் வந்த துன்பம் அது.அதிகார துஷ்பிரயோகத்தால் வந்த வினை.சுப்ரமணிய சர்மாவின் கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Thursday, August 14, 2008

61st Independence Day

This is our 61st Independence Day!

Freedom is not a Right but a Feeling!

Let's be proud to feel the Freedom!
Let's say loud we are INDIANS!!!


ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று




கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை





ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மா மனிதன்





மலர்ந்த முகத்துடன் தாய் நாட்டுக்காக மரணத்தை முத்தமிட்ட மாவீரன்.ஆயிரம் காந்திக்கு சமம்.

-





பாரதநாடு பழம்பெரும் நாடு நீர் அதன்புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்












Tuesday, August 12, 2008

விளையும் பயிர் முளையிலே(2)

ஸ்ரீ நிதி குழந்தையாக இருந்தபோது அபரா ஞானம் இருந்ததே அப்பறம் என்ன ஆச்சு பலபேர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.சங்கீதம் என்பது ரத்ததில் கலந்து விட்டால் நம்மைவிட்டு போகவேபோகாது.இதோ கீழே பாருங்கள் இப்போதைய ஸ்ரீ நிதியை. இன்னும் விடவில்லை சங்கீதத்தை. தியகராஜரின் பிந்துமாலினி ராக கீர்த்தனையை வெறும் குரலில் பாடுகிறார்.



-
நம்முடைய உத்துகாடு வெங்கடசுப்பையரின் அலைபாயுதே பாட்டை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்து அருமையாக பாடுகிறார் ஸ்ருதி பெட்டியுடன்.





Tuesday, July 08, 2008

விளையும் பயிர் முளையிலே

கிட்ட தட்ட 48 வருடங்களாக கர்நாடக சங்கீதம் கேட்டு வந்தாலும் எனக்கு சில சமயங்களில் ராகம் என்ன வென்று தெரியாமல் அல்லது மாற்றிச் சொல்லும் நிலை வந்து விடுகிறது.ஆனால் இந்தக் குழந்தை ச்ரீ நிதியைப் பாருங்கள். வயது இதனைக்கும் நான்குதான் ஆகிறது. அடேயப்பா என்ன ஒரு சங்கீத ஞானம். எல்லா ராகத்தையும் கோடி காட்டியவுடனே சொல்லிவிடுகிறது.அதுவும் கேள்வி கேட்பது சங்கீத உலகின் முதன்மை பாடகி திருமதி. மும்பை. ஜெயச்ரீ அவர்கள் அதுமட்டுமா பாடிய ஸ்வரத்தையும் கூட பட்டென்று கூறுகிறது.அதுவும் எந்த சிரமும் இல்லாமல்.

அம்மா போட்ட இரண்டு செயின்களையும் மாற்றி மாற்றி விளையாடிக்கொண்டே சரியாகச் சொல்லுகிறது. வயலின் வித்துவான் ஒரு ராகத்தின் ஒரு ஸ்வரத்தை ஆரம்பிக்கும் முன்னமேயே "" அடாணா"" என்று தெறிக்கிறது வார்த்தை. இன்னும் மழலைகூட மாறவில்லை.வாழையடி வாழையென வளரும் சங்கீதம் என்பது இதுதானோ. குழந்தைக்கு ஆசிகள் வளமான சங்கீத எதிர்காலத்திற்கும் தீர்காய்சுக்கும். நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்

அது சரி, அம்பிக்கு ஒரு போட்டி. முதல் வீடியோவில் பார்வையாளர்கள் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு பெண்மணி கைதட்டுகிறாரே அது யாரென்று கண்டுபிடித்தால் உனக்கு தங்கமணி கையால் பரிசு கொடுக்கப்படும்.





-

Monday, April 07, 2008

ஒளிமயமான எதிர்காலம்

ஏஸியானெட் டி வியில் சங்கீத தொடர் நிகழ்ச்சி ஒன்று வந்தது. எத்தனை பேர் பார்த்தார்களோ தெரியாது.அருமையான தொடர்.நிகழ்ச்சியை அளித்தவர்கள் ஐடிஏ போன் நிறுவனத்தார். கலந்துகொண்டவர்கள் அத்தனை பேரும் தங்கள் முழுத்திறமையையும் பலவேறு போட்டிகளான கர்னாடக,மெல்லிசை,திரைஇசை போன்ற நிகழ்ச்சிகளில் காண்பித்தார்கள். நடுவர்களாக வந்திருந்தவர்களும் பாரபட்சமில்லாமல் தகுதிக்கு ஏற்றபடி எண்ணிக்கைகளை வழங்கினார்கள். சும்மாவாது "செம, செமசெம, செமசெமசெம" இதெல்லாம் கிடையாது. பாடும்போது எந்த இடத்தில் பாடுபவர்கள் தவறு செய்தார்கள்,சுருதி எங்கு விலகியது,ராகம் எங்கு வெளிப்படவில்லை,தாளம் எங்கு வேதாளமாகியது.வரிகள் எங்கு விடப்பட்டது போன்ற விவரங்களை துல்லியமாக கவனித்து பாடுபவர்களிடம் சொல்லி அதை எப்படி திருத்திக் கொள்வது போன்ற ஆலோசனைகளையும் வழங்கத் தவறவில்லை. இதில் சோடனை போனது இங்கிருந்து போனவர்கள்தான்.
இனி நம்ப நிகழ்ச்சிக்கு வரலாமா? டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கேரளாவிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார் வாலிபன் இசை உலகை வெற்றி வலம் வரபோகிறான்.அவர் பெயர் "துஷார்".துடிப்பும்,வேகமும்,இசைஞானமும் உள்ளவர். தன் பாட்டுத் திறத்தால் அரங்கைமட்டும் இல்லாது நடுவர்களையும் நெகிழ்வோடு கண்கலங்க வைத்தவர்.
அடாடா இந்த சிறிய வயதில் என்ன ஒரு ஞானம்,உழைப்பு. அதுதிரைஇசையாகவோ,மெல்லிசையாகவோ, கர்னாடக இசையாகவோ,இந்துஸ்தானிசையாகவோ இருக்கட்டும் எல்லாம் அவருக்கு வசப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கடைசி கர்நாடக இசைச் சுற்றில் துஷார் வழங்கிய சங்கராபரணம் ராகம் அந்த நிகழ்ச்சிக்கு மணி மகுடமாக விளங்கியது.முதலில் அவர் சங்கராபரண ராகத்தை விரிவாக ஆலாபனை செய்து அதன் நெளிவு சுளிவுகளை வெளிப்படுத்தினார். பின்னர் கீர்த்தனையிலும் தன் முத்திரையை பதித்து நிரவலின் போது தன் திறமையை வெளிப்படுத்தியபோது நடுவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.அத்துடன் முடியவில்லை ஸ்வரப்ப்ரஸ்தாரம் ஆரம்பித்தார் பாருங்கள் அவ்வளவுதான் அவையோர்கள் தங்கள்: இருக்கையின் விளிம்புக்கே வந்து விட்டார்கள். டி வி திரையில் பார்த்துக்கொண்டு இருந்த மக்களின் நிலையும் அதே.ஸ்வரப்ப்ரஸ்தாரத்தின் போதுதான் என்ன ஒரு வேகம்,அசாத்திய தாளக்கட்டுப்பாடு, ஸ்ருதி சுத்தம். குரு சுப்புடு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் "தீர்க ஆயுஷ்மான் பவ".


பாடிமுடித்ததும் துஷார் அப்படியே தலையைக் குனிந்து 5 நிமிடங்கள் கண்ணீர் மல்க ஆனந்த பரவசத்தில் இருந்தார். மூன்று நடுவர்களும் கைகூப்பிய நிலையில் என்ன சொல்வது என்று புரியாமல் உன்னதமான சங்கீதத்தின் பிடியில் சிக்கியிருந்தார்கள் பார்வையாளர்கள் நிலையைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்.இதற்கு பின் நடந்த வற்றை எழுதவதைவிட பார்த்தும் கேட்டும் அனுபவிக்க வேண்டியவை. மொழி மலயாளம்தான் ஆனாலும் புரியும் உணர்ச்சிகளுக்கு மொழி தேவையில்லை.

இதோ ராக ஆலாபனையைக் கேளுங்கள் பாருங்கள்



-
இங்கே கீர்த்தனையைபாடும் சிறப்பை பார்த்து கேட்டு ரஸியுங்கள்.



-
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக விளங்கிய ஸவரப்பிரஸ்தாரம் இங்கே




-

இப்பொழுது பாருங்கள் துஷார் உணர்ச்சிவசப்பட்டு பரவச நிலையில், அவையோர்,நடுவர்கள் அனைவரும் ஒரே உணர்ச்சிவயத்தின் பிடியில். துஷாரின் தன்னிலை விளக்கம் அளித்த பின்னர் நடுவர்கள் தங்களுடைய எகோபித்த பாரட்டு மழையை பொழிந்தனர்.கடைசியாக ஏகமனதாக அனைவரும் மிக அதிகமான மார்க்காக 24/25 அளித்தனர். அதில் ஒருவர் சொன்னார் 25/25 கொடுக்க ஆசைதான் ஆனால் கண்பட்டு விடும் என்ற காரணத்தால் கொடுக்கவில்லை என்று.





-

"எனக்கு "வளர ஸ்ரேஷ்டமாயிட்ட சந்தோஷம்" கேட்டு பார்த்த பின்னர் உங்களுடைய கருத்துக்களையும் கூறலாம்.உங்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணத்தில்

கடைசியாக வந்த செய்திகளின்படி திரு. துஷார் அவர்கள் மொத்தமாக 67% எண்ணிக்கையும் 47500 ஸ் எம் ஸ் பதிவும் பெற்று முதலாவது ஸ்டார் பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.