Monday, December 04, 2006

வாழு.....வாழவிடு....


உலகத்தில் மிக வேகமாக அழிந்துவரும் விலங்கினத்தில் புலிதான் முதலிடம் வகிக்கிறது.வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி சீறிப்பாயும் இந்தப் புலி இனம் இப்படியே போயிக்கொண்டு இருந்தால் 2020யில் பார்க்கவே முடியாது என்று புலி இயல் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
1920களில் ஒரு லக்ஷ்மாக இருந்த இதன் எண்ணிக்கை இப்போது5000 முதல் 7000வரைதான் உள்ளது.முதலில் எட்டுவகை புலிகள் இருந்தது அதில் பாலி,கேப்சிகன்,ஜாவன் வ்கைகள் அறவே அழிந்த நிலையில் பெங்கால்,சைபீரியன்,இந்தோசைனா,சுமத்ரான்,தெற்குசைனா இந்த ஐந்து வகைகளும் வாழ்வதற்குப் போராடிக் கொண்டு இருக்கின்றன
இப்போது இந்தியாவில்600 முதல் 800வரைஎண்ணிக்கையில் புலிகள் இருந்து வருகின்றன.மனிதனின்சந்தோஷத்திற்காகவும்,விளையாட்டிற்காகவும் அதன் தோலுக்கவும் புலிகள் திருட்டுத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.புலிகளின் உணவுபெரும்பாலும் மான்,காட்டெருமை,மாடு,பன்றிதான்.ஆனால் வயதான வேட்டைக்குச் செல்ல முடியாத புலிகள்தான் மனிதனைத்தின்னும்.புலிகள் மனிதனைகண்டு அஞ்சி ஒடி ஓளிந்து கொள்ளும்.புலியினுடைய தோலை கள்ள மார்கெட்டில் USS$ 10000(Rs.4,50,00)க்கு விற்கப் படுகிறது.

வெள்ளைப் புலிகள் இந்தியாவில் மட்டும்தான் உருவக்கப்படுகின்றன.இயற்கையிலேயே கருப்பு வரிகளும் நீல நிறக்கண்களும் பார்க்க மிக அழகாகவும் அருகில் சென்றால் ஆபத்தை விளைவிக்கும் குணமும் கொண்டவை.தவிர்க்கப்பட்ட இனச்சேர்க்கையின் மூலமாகத்தான் இவைகள் உருவாகின்றன.
இந்த அரிய இனத்தை பாதுகாக்க வேண்டிய முயற்சிகளைச் செய்யுவோம்.இந்த அழகில் புலி இந்தியாவின் தேசிய மிருகம் வேறு.அதென்னவோ தெரியவில்லை நமக்கு தேசிய விலங்கு(புலி)தேசியப் பறவை(மயில்),தேசியத்தந்தை(மஹாத்மா காந்தி)இதெல்லாம் கொல்லுவதற்காத்தான் என்ற எண்ணம். அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு நாமும் வாழ்வோம் புலியையும் வாழவைப்போம்

Thursday, November 16, 2006

நினைத்துப் பார்க்கிறேன்......

இன்றோடு 31 வருடங்கள் முடிவடைந்து விட்டது. இந்த மாதிரியான தினத்தை கொண்டாடும் வழக்கம் இல்லை என்றாலும் நினைத்துப் பார்ப்பதில் சில உண்மைகள் தெரியவருகிறது.
நாம் இதுவரை ஒரு பணம் முதலீடு செய்த பங்குதாரராக மட்டும்தான் இருந்தோம் என்பது.அது மட்டும் இல்லை கூட்டு வியாபாரத்தில் சேர்த்துக் கொண்ட "மைனர்" பங்குதாரர் மாதிரிதான் இருந்தோம் என்பதும் தெரியவருகிறது.அதில்"மைனருக்கு' லாபத்தில் மட்டுமே பங்கு உண்டு,நஷ்டம் வந்தால் அதை மற்ற "மேஜர்' பார்ட்னர்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் சட்டம்.
அது என்னவோ என்வரை உண்மைதான்.எனக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது இந்த குடும்ப வியாபாரத்தில்.வீட்டை கவனிப்பது,குழந்தைகளை வளர்ப்பது,படிக்க வைப்பது,காலேஜில் சேர்ப்பது எல்லாம் "மேஜர்" பார்ட்னர் வேலைதான். வேலைக்கும் போய்க்கொண்டு, வீட்டயும் கவனித்துக் கொள்வது மிகவும் சிரமமான வேலை.இதில் என் உபஹாரமாக எனக்கு ஐந்துஆக்சிடென்ட்,இரண்டு தடவை இதயக்கோளாறு ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் அலைச்சல்,கவலை,எல்லாம் போனஸாகக் கொடுத்ததுதான்.

இதையெல்லாம் பார்க்கும்போது நினைவுக்கு வருவது நம் பாரதியின் கவிதை வரிகள்தான் சில மாற்றங்களுடன்.
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன் வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்; தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்! கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
இதில் கண்ணனுக்குப் பதிலாக நம்ப 'மேஜர் பார்ட்னர்" பெயரைபோட்டுவிட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
இந்த நாள் இனிய நாள்தானே.

இந்த நாளுக்காக என்மகனும் மருமகளும் சிங்கப்பூரிலிருந்து வாழ்த்தி அனுப்பித்த விநாயகரைப் பார்த்ததும் எழுந்த நினைவு அலைகள்.......

Wednesday, November 08, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 6 )





அகத்தியர் அருவி குளியளோடு இந்தப் பதிவுக்கு ஒரு முழுக்கு போட்டுவிடலாம். மறுநாள் காலை 6.00 மணிக்கெல்லாம் எழுந்து நம் கைடு சொல்படி கிளம்பியாகி விட்டது. பஸ் ஸ்டாப்ப்புக்குப் போய் பாபநாசம் பஸ்சைப் பிடித்து அங்கே இறங்கினோம்.மணி 6.30 என்பதால் மலை அருவிக்குப் போக பஸ் வசதி இல்லை. எட்டு மணிக்குத்தான் அடுத்த பஸ் என்றார்கள்.

" சார் நடந்தே போய் விடலாம் ஒரு 1 கி.மீ தான் இருக்கும்'இது கணேஷ்.எனக்கு உடனே மனத்திரையில் வீட்டில் சொல்லி அனுப்பிய அறிவுறைகள் ஞாபகத்துக்கு வந்தது.இதயக்கோளாறு உள்ளதால் மாடி முக்கியமாக மலை ஏறக்கூடாது. சரி வந்தது வரட்டும் என்று அவனுடன் மலை ஏறத்துடங்கினேன். 2 கி. மீ தூரம் அதுவும் ஏற்றம். பாதி தூரம் போவதற்குள் அடைபட்ட ரத்தக்குழாய் வேலையை காட்டத்துடங்கி விட்டது.கணேஷ்க்குத் தெரியாமல் ஒருவாறு பேசாமல் சமாளித்தேன்.

அருவிக்கு போன பிறகுதான் உயிர் வந்தது.பாருங்கள் அருவியின் அழகை.ரம்யமான சுழ்நிலை.அருவியின் அட்டகாசமான ஓசை, குளிர்ச்சி, குரங்குகளின் ஆட்டபாட்டம்."வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும் , மந்தி சிந்தும்கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" என்ற ராசப்ப கவிராயரின் பாடல்தான் நினைவுக்கு வந்தது. அருமையாக ஒர் மணிநேரக் குளியல்.அருவித்தண்ணீர் மேலே விழும்போது என்ன சுகம் .உடம்பு வலியெல்லாம் போய்விட்டது.கஷ்டப்பட்டு ஏறி வந்ததற்கு நல்ல பலன்.


மற்றொரு படம் ஒரு அதிசயமான படம் ஒரு மரத்தை வெட்டி கருக்கியிருந்தார்கள். அதில் நடுவில் பார்த்தால் பெரிய கல் நடுவில் இருந்தது. எப்படி இந்தக் கல் உள்ளே போயிற்று,எப்படி மரத்துடன் வளர்ந்து மேலே சென்றது . எல்லாமே அதிசியம்தான்.இதுதான் கல்லிடைக்குறுச்சியோ?

தமிரபரணியை இப்போது பாருங்கள். இதுவா பேரிரைச்சலுடன் விழுந்த அருவி,எப்படி இப்பொழுது சமர்த்தாக ஓடுகிறது.இது பாபநாசத்தில் எடுத்தது.

ஊருக்கு வந்து அம்பியின் குடும்பத்திலிருந்து பிரியா விடைபெற்று திரும்பினேன்.என்ன அன்பு என்ன உபசரிப்பு. இத்தனைக்கும் நான் அவர்களுக்கு நன்கு பரிச்சியம் இல்லாதவன்.

திருநெல்வேலி வந்து கணேஷிடம் விடைபெற்று ஊர் திரும்பினேன்.அப்பா கணேஷா நீ நல்லா அமோகமா இருக்கணம். ரயிலிருந்து இறங்கியதிலிருந்து மறுபடி ஏறும் வரை என்னை என் மகனைப்போல் பார்த்துகொண்டான்.

கடைசியாக ஒரு வார்த்தை திருநெல்வேலிகாரர்கள் முதலில் அறிவோடுதான் சமாதானமாகப் பேசுகிறார்கள். அதற்கு சரிபடவில்லை என்றால்தான் அரிவாளோடு பேசுவார்கள் போலும்.அவர்களுடைய உபசரிப்புக்கு நிகரே கிடையாது. முடிந்தவர்கள் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடம். போய்வாருங்கள்.

Monday, November 06, 2006

கார்த்திகேய... காங்கேய... கௌரி...தனயா...


ஷண்முகச்செல்வர் நண்பர் திரு.இராகவன் விருப்பத்திற்கு இணங்க முருகனுக்குகந்த கிருத்திகை தினமான இன்று திரு பாபநாசம் சிவன் அவர்களின் இந்தப்பாடலை இடுகிறேன். தமிழ் கொஞ்சும் இந்தப்பாடலை பிரபலப் படுதியவர் திரு. மதுரை மணி ஐய்யர் அவர்கள். அவர் இந்தப்பாடலை பாடத கச்சேரியே கிடையாது. அதுபோல ரசிகர்கள் மறுமுறையும் அவர்களை இந்தப் பாடலை பாடச்சொல்லாத கச்சேரியே கிடையாது. முருகனை குழந்தையாக பாவித்து திரு சிவன் அவர்கள் அனுபவித்து பாடியது. நாமும் அனுபவிக்கலாமா:-


ராகம்:- தோடி தாளம்- ஆதி

கார்த்திகேய காங்கேய கௌரி தனய
கருணாலய அருள் திருக்....... (கார்த்திகேய)

கீர்த்திமேய தென்பரங்குன்று திருச்
செந்தில் பழனி ஸ்வாமிமலை மேலும் வளர் (கார்த்திகேய)

குன்றுதோரும் அழகர் கோயில் தனிலும்
குஞ்சரியும் குறக்கொடியும் தழுவுதிண்
குன்றம் அனைய ஈராறு தோள்களோடு
குஞ்சரமென உலவும் சரவன்பவ (கார்த்திகேய)

மால்மருக ஷண்முக முருக குஹா
மகபதியும் விதியும் தொழும்
மாதங்க வதன ஸஹோதர அழகா
வேல் மருவும் அமல கரகமலா
குறுநகை தவழ் ஆறுமுகா
விரைவுகொள் மயூரபரி
மேல்வரு குமரா சூரனை ஸமருக்கொள் (கார்த்திகேய)


ஆறு படை வீடுகளயும் ஒரே பாட்டில் கொண்டு வந்து விட்டார்.மகபதியும் விதியும் தொழக்கூடியவன்,மாதங்கனின் சகோதரன்,கையில் வேல்வைத்திருக்கும் அழகன்,குறுநகை தவழும் குழந்தை முகம் கொண்டவன், பக்தர்களைக் காப்பதற்காக மயிலின்மீது விரைவாகக் வரக்கூடியவன் என்றெல்லாம் புகழ்கிறார். அருமையான மனதைக் கவரும் பாட்டு என்பதில் சந்தேகமே கிடையாது இதை ராகவனும் ஒத்துகொள்வார்.

இனி நெய்வேலி திரு சந்தான கோபலன் பாடிய பாட்டைக் கேட்க கிளிக் செயவும்
">

Friday, November 03, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 5 )


அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே
பெருமாளை அருகில் சென்று களியுங்கள்.வண்ணமலர்மாலைகளின் நடுவே மதுர மதுர வேணுகீத மதன சுகுமார நாயகனாக வீற்று இருக்கிறான் நாராயணன்.வெள்ளை மல்லிகை மலர்க்கூட்டத்தின் நடுவே தங்கமென ஜ்வலிக்கும் கருடாழ்வாரைப் பாருங்கள்.இருகைகளாலும் பெருமாளைத் தாங்கிக்கொண்டு முகத்தில் பரிபூரண ஆனாந்தம் பொங்க காட்சிஅளிக்கிறார்.
இந்த ஆனந்தத்திற்கு காரணம் என்னவாக இருக்கலாம் என்பதற்கு ஒரு பட்டி மண்டப தலைப்பு கொடுத்து திரு ஜி.ரா,திரு.ராமநாதன் ஆகிய இருவரையும் ஒரு அணியிலும் ,மற்றொரு அணியில் திரு ஸ்.கெ,மற்றும் கே.ஆர் ஸ் அவர்களையும் வாதிடுமாறு அழைக்கிறேன். தலைப்பு இதுதான். கருடன் முகத்தில் ஆனந்ததிற்கு காரணம் "அகில உலகங்களையும் தங்கி நிற்க்கும் பெருமாளையே நாம் தங்கிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காகவா" அல்லது" ஈசனும், பிரும்மாவும், மற்ற தேவர்களும் வணங்கும் பாதத்தை தன் தலை மீது வைத்துக்கொண்டு சேவைசாதிக்கும் பாக்கியம் கிடைத்ததினாலா". நானே நடுவராக இருந்து கடைசியில் தீர்ப்பு வழங்குகிறேன்.
கண்ணனை கண்ணார கண்டுவிட்டீர்களா.போதுமா முடிந்தால் கண்ணிமைக்காமல் பாருங்கள்.கண்ணிமைத்து காண்பார்தாம் கண் என்ன கண்ணே.........தொடரும்

Thursday, November 02, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 4 )


கண்டோ ம் கண்டோ ம் கண்டோ ம் கண்ணுக் கினியன கண்டோ ம், தொண்டீர். எல்லீரும் வாரீர் ழுது தொழுதுநின் றார்த்தும், வண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல், பண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே.

காண்பதற்கு அரிய சேவை.இதோ வந்து விட்டார் ஆதிவராகஸ்வாமி கருட வாகனத்தில் ஏறிக்கொண்டு தன் பக்தர்களை பார்ப்பதற்கு. கடவுளைப் பார்த்தது எல்லோருக்கும் ஏதவது வேண்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும். எல்லாவற்றையும் துறந்த நம் தியாகராஜஸ்வாமிகளுக்கும் அந்த எண்ணம் வந்ததும் இப்படி வேண்டிக்கொண்டார்: "ஞனமு சகராதா கருட கமன ராதா ஞானமு சகராதா'" கருடனின் மீது எழுந்தருளியிருக்கும் பெருமாளே எனக்கு உன்னைத் தவிர வேறொன்றையும் நினைக்காத ஞானத்தை அருள்வாய்". நாமும் அதையே வேண்டிகொள்ளுவோம். இதோ மல்லாரி மிக அருகில் துல்லியமாகக் கேட்கிறது. திருப்பாதம் தாங்கிகள் அந்த இசைக்கு ஏற்ப ஆடிகொண்டு வருகிறார்கள். அவர்கள் ஆட்டுவிப்பதால் ஆண்டவனும் அதற்கேட்ப ஆடுகிறான். ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். ந்ம்மையெல்லாம் சம்சாரசாகரத்தில் இந்த ஆட்டம் ஆடுவிகின்ற ஆண்டவனயே ஆட்டுவிக்கிறார்கள் என்றால் அவர்கள் என்ன பாக்கியம் செய்தவர்கள். மல்லாரிக்கு ஒரு தனி குணம் உண்டு.அதைகேட்க்கும்போது இசை தெரியாதவர்கள் உடலிலும் தானே வரும் ஆட்டம், அதனால் தானே வரும் இறைவனின் மீது நாட்டம். நாமும் மிக அருகில் சென்று அவனைக் கண்ணாரக் காண்போம் நாளை.

Wednesday, November 01, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா... (3)

வீட்டிற்கு சென்று நல்ல சாப்பாடு அதுவும் திருநெல்வேலிச் சமையல் ருசிக்கு கேட்கவேண்டுமா?ஒரு பிடி பிடித்தேன்.அம்பியின் பெற்றோர்களின் உபசரிப்பு அபாரம்.பிறகு என்ன உண்ட களைப்பு உறக்கம்தான்.நான்கு மணிக்கு எழுந்தவுடன் " சார் தமிரபரணி ஆற்றுக்குப் போலாமா" என்றான் கணேஷ். சரி என்று கையில் துண்டை எடுதுக்கொண்டு கிளம்பி ஆற்றுக்குப் போனோம். மாலை வெய்யிலில் தமிரபரணி தங்க பரணியாக ஜொலித்துக்கொண்டு இருந்தது.என்ன ஒரு ரம்யமான காட்சி.ஆற்றுக்கு இரு புறமும் வயல்வெளிகள். இந்தப்பக்கம் கல்லிடைக்குறிச்சி(கொத்ஸ் திருப்தியா) அந்தப்பக்கம் அம்பாசமுத்ரம். ஆற்றின் நடுவே இருந்த பாறைகளில் முட்டி மோதிக்கொண்டு நிர்மலமான தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது.ஒரு பக்கெட் உப்புத்தண்ணீரில் அவசர அவசரமாக குளியலை முடிதுக்கொள்ளும் எனக்கு இது அதிசயமாக இருந்தது. "சார் பார்த்து இறங்குங்கோ பாறை இருக்கும்" என்று எச்சரிக்கை கொடுத்தானே தவிர மற்றொன்றைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை ஜிலு ஜிலு என்ற தண்ணீரில் "பார்த்து' இறங்கி சுகமான குளியல்.உடம்புக்கு எதமாக இருந்தது.முங்கி குளித்தபோது கணேஷ் சொல்லாதவர் வந்து கால்களில் கொத்த ஆரம்பித்தார்.சிறு சிறு மீன்கள் அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து கொத்தி உடம்பில் சிலிர்ப்பை ஏற்படித்தன.இருந்தாலும் குளியல் ஆனாந்தமாகத்தான் இருந்தது.இருட்டாகிவிட்டது என்று அரைகுறை மனத்துடன் குளியலை முடித்துக்கொண்டு கரை ஏறி போகும் வழியில் இருந்த சங்கரமடத்தில் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டு(நேரமின்மை காரணமாக கணேஷின் மற்ற மண்டகபடிகளை விவரிக்காமல்) வீட்டிற்க்ச் சென்று இரவு கருட சேவைக்கு ஆயுத்தமானோம். இரவு 11 மணிக்குத்தான் மாடவீதிக்குள் பெருமாள் அருள்வார் என்ற செய்தியும் கிடைதது.

இரவு 11.00 மணிக்கு மாடவீதிக்கு வந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.சுற்றி இருக்கும் இடங்களில் இருந்து கருடசேவையைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம்.எல்லார் கைகளிலும் தேங்காய், பழம், பூ இவைகளைத் தட்டில் வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.தெருவின் மூலையில் சலசலப்பு.பார்த்தால் நாதஸ்வர கோஷ்டியினர் வசித்துக்கொண்டு வந்து கொண்டு இருந்தனர்.அதுவும் "மல்லாரி'வெளுத்துவாங்கிக்கொண்டு இருந்தார்கள்.மல்லாரி ஸ்வாமி புறப்பாட்டுக்காகவே ஏற்பட்ட ராகம்.அதுவும் இரவு நேரத்தில் நிசப்த்தமான சுழ்நிலையில் கேட்கவேண்டும்.சொர்க்கலோகமே இங்கே வந்துவிடும். திடீரென்று ஒரு வெளிச்சம் தெரு மூலையில் ஆதி வராஹஸ்வாமி கருட வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பார்க்க வேண்டுமா .. நாளைவரை காத்திருங்கள் ......

Monday, October 30, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா... (2).

"ஏம்பா கணேஷ் வீட்டுக்கு எந்தப்பக்கம் போனோம்" என்று திரும்பிப் பார்த்தால் நம்ப ஆளுக்கு பயங்கர வரவேற்பு." ஹாய் கணேஷ் எப்போ வந்தே" என்று பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் கணேஸனை கலக்கிக்கொண்டு இருந்தாள். நான் ஓரமாக முன் கை நீண்டால்தான் முழங்கை நீளமுடியும் என்று நின்றேன். கணேஷும் சீக்கிரமே கணக்கை முடித்துக்கொண்டு ஒரு ஆட்டோ பார்த்து ஊருக்குள் போனோம் நானும் அவனும். போகும் வழியெல்லாம் கான்கிரீட் ரோடு போட்டு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி வீடுகள்.நேராக வீட்டிற்கு சென்றோம்.
வீட்டில் அம்பியின் அப்பாவும் அம்மாவும் நல்ல வரவேற்பு,என்னை அறிமுகபடுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தால் ஏற்கனவே அம்பி என்னைப்பற்றிய எல்லாவிவரங்களையும் சொல்லியிருந்தான்.குளித்துவிட்டு,டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம்.கல்லிடைகுரிச்சிக்கு வந்தேன் என்று சொன்னேனே ஒழிய எதற்கு என்று சொல்லவே இல்லயே. புராட்டாசி மாதம் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் அங்குள்ள ஆதி வராக ஸ்வாமிக்கு கருடோத்ஸ்வம் மிக விசேஷமாக நடக்கும். நாங்கள் சென்ற அன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபல சிமிட் கம்பெனியின் மண்டகப்படி.
கோவிலுக்குப் போகும் வழியெல்லாம் கணேஷுக்கு ஒவ்வெரு வீட்டு வாசல் படியிலும் மண்டகப்படி.தேங்கா உடைத்து கற்பூரம் காட்டாத குறைதான்.கணேசனும் ஒவ்வொரு வீட்டு வாசல் படியுலும் பஞ்சாயித்து போர்ட் குப்பைவண்டி மாடு தானாகவே நின்னு போவது மாதிரி குசலம் விசரித்துக்கொண்டு வந்தான்,"எலே கணேஷு எப்படா வந்தே,பங்களுர்லே படிக்கிறயா?இல்லே வேலைக்கு போறயா? இப்படியெல்லாம் விசரித்தது யார் என்று நினைக்கிறீர்கள்,பத்துவயது பையன்,வயசுப்பொண்கள்,மாமக்கள்,80 வயது பாட்டிகள்,கணேசனுக்கும் பெருமை வேலைக்குச் சேர்ந்தபின் முதல்தடைவையாக ஊருக்கு வந்திருக்கிறான்.சயங்காலம் நடக்கப்போகும் கருடசேவைக்கு இது ஒரு 'கர்டன் ரெய்சர்' மாதிரி இருந்தது.
ஒரு வழியாகக் கோவிலுக்குள் சென்றோம். அங்கு நுழைந்தவுடனே ஒரு 10/15 பெருசுகள் கணேசனை கட்டி அணைத்துகொண்ட காட்சி கண்கொள்ளா காட்சி. ஸ்வாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து கற்பூரம் காண்பித்தார்கள்.நல்ல தரிசனம்.வெளியே வந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தால் நம்ம ஆளை மறுபடியும் காணவில்லை. பார்த்தால் அங்கே ஒரு பெண் ஆஞ்சநேயரை சுற்றிக்கொண்டு இருந்தாள். நம்ம ஆள் அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான் ."சார் என்னோட காலேஜிலே படித்தவள்" என்றான்."சரி.... சரி".... என்றேன். முன்பு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் "அம்பியோட தம்பியேதான் இவன் சந்தேகமே இல்லை".
திரும்பிப் போகும்போதும் கிட்டதட்டே அதே மண்டகப்படிதான் வீடு போய் சேரும்வரை. என்ன இந்தத் தடவை எல்லாம் அவன் வயசுப் பசங்கள்."எலே மாப்ளே எங்கேடா வேலை...என்னா சம்பளம் ..இத்யாதி இத்யாதி .....தொடரும்

Sunday, October 29, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா....

எனது அத்யந்த சிஷ்யனும், எனது அன்புக்கும் ஆசிக்கும் உரிய,பால்வடியும் முகம் கொண்ட அம்பியின் அழைப்பை ஏற்று கல்லிடகுறிச்சிக்கு விரைந்தேன் இந்த மாத தொடக்கத்தில்.மேலே படியுங்கள்........

திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷ்னலில் ஒருவர் ஸெல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்"டி.ஆர்.சி. சார் எங்கேஇருக்கீங்க? பின்னால் ஒருவர் அவர் தோளைத்தட்டி "கணேஷ் இப்படித் திரும்பி பார் இங்கேதான் இருக்கேன்" "சார் நீங்க இங்கேயா இருக்கீங்க,என் பஸ் கொஞ்சம் லேட் வாங்க போவோம் கல்லிடைகுறிச்சிக்கி"

கணேசனைப் பற்றி சில வார்த்தை. களைததும்பும் கள்ளம் கபடு இல்லாத முகம்,அபரிமிகுந்தபக்தி,அதனால் விளைந்த பணிவு,எம்பத்திஐந்து வயது பெரியவர் முதல் எட்டுமாத குழந்தை வரை எல்லோராலும் விரும்பப்படும் பெற்றோரிடத்தில் மரியதையும் அன்பும் உள்ள நல்ல பையன்.இத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் குறை ஒன்றுமில்லை. அம்பியின் தம்பி மாதிரியே இல்லை
ஊருக்கு வெளியே இருந்த புதுப் பஸ்டாண்டுக்கு வந்து பாபநாசம் செல்லும் பஸ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். வழிநெடுகிலும் பச்சைப்பசேலென்று நெல் வயல்களும்,வாழைத்தோட்டங்களும்,மலையும் மலைச்சார்ந்த இடமும் கண்ணுக்கு ரம்யமாக இருந்தது.சிமிட்டுச்சிறையில் இருந்த என்போன்றவர்களுக்கு ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்த்தால் போலிருந்தது.

"சார் ஊர் வந்தாச்சு இறங்குங்கோ" கணேசன் என்னை மீட்டுக்கொண்டு வந்தான்.கல்லிடையில் முதல் முதலாக கால் வைத்தேன்.அந்த ஊரைப்பற்றி ஒன்றுமே தெரியாது ஏதோ அப்பளாத்துக்கு பேர்போனது என்றுதான் நினைத்தேன்.நான் நினைத்தெல்லாம் தவறு என்று தெரிய ரெண்டுநாள் ஆயிற்று.மெதுவாக ஊருக்குள் செல்ல ஆரம்பித்தோம்......தொடரும்

Friday, October 27, 2006

கோபுர தரிசனம்..... கோடி புண்ணியம்...


தமிழ்த் தியாகய்யா திரு.பாபநாசம் சிவனுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.மிக எளிமையான பக்தி பாவம் ததும்பும் பாடலகளைத் தமிழ் உலகுக்கு தந்தவர் அவர்.சினிமாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து "மன்மத லீலயை வென்றார் உண்டோ", "ராதே உனக்கு கோபம் ஆகாதடி",போன்ற பாடல்களைத் தந்தவர்.அவர் எழுதிய பாடல்கள் பலவற்றில் எனக்கு பிடித்தபாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

ராகம்= ச்ரிரஜ்ஜனி

காணவேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே ஐய்யனின் விண்ணுயர் கோபுரம்......(காண)

வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால் மேதினி போற்றும் சிதம்பர தேவனை.....(காண)

வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்.....(காண)

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்..... (காண)

இந்தப் பாடலின் ஒலி வடிவம் கேட்க கிளிக் செய்யவும் இங்கே">