Friday, September 14, 2007

வராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன்


விநாயகரைப் பற்றிய நினைப்பு வந்தாலே இந்த ஸோத்திரமும் நினைவுக்கு வரும். ஆதி சங்கரரால் புனையப்பட்ட எளிமையான ஸ்லோகங்களுள் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டிய ஸ்லோகம் இது.சிறுவயதில் பழக்கப்படுத்திக்கொண்டால் நாக்கு நன்கு புரளும் வார்த்தைகள் தெளிவாக வரும்..பக்கவாத நோய் வந்து நாக்கு பேச வராதவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்லப் பழகி பேசும் திறன் பெற்றவர்களும் உண்டு. இந்த புனித விநாயக சதுர்த்தியன்று விருப்பமுள்ளவர்கள் சொல்லிப் பழகுங்கள். எம் ஸ் அம்மாவின் குரலில் சேர்ந்து சொல்லிப்பாருங்கள்
கணேஷ பஞ்ச ரத்னம்

முதா கராத்த மோகம் ஸதா விமுக்தி சாதகம்

(சந்தோஷத்துடன் கையினில் மோதகத்தை வைத்திருப்பவரும் தன்னை அண்டியவருக்கு எப்பொழுதும் மோக்ஷத்தை கொடுப்பவரும்)

கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்

( பாலசந்திரனை விரும்பி அணிந்துகொண்டவரும்,அன்புள்ளம் கொண்டோரை காத்து ரக்ஷிப்பவரும்)

அநாய்கைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

(ஆதரவுஅற்றவர்களுக்கு நாயகனாய் இருப்பவரும் அடியவர்களின் குறைகளைத் தீர்ப்பவரும்)

நதாஸுபா பாசுரம் நாமாமிதம் விநாயகம்

(கஜமுகாஸுரனை கொன்றவருமான விநாயகனை நான் வணங்குகிறேன்)

நதேத்ராதி பீகரம் நவோதி துர்க்க பாஸ்வரம்

(வணங்காதவருக்கு பீதியைக் கொடுப்பவரும்,உதய சூரியனுக்கு ஒப்பானவரும்)

நம்த் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்


(தேவர்களால் வணங்கப்படுபவரும், வணங்கியவர்களின் துக்கத்தைப்போக்குபவரும்)


ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்


(தேவர்களுக்கு தலைவரும்,அஷ்டநிதிகளை தருபவரும்,கஜமுகாசுரனுக்கும் தேவகணங்களுக்கும் தலைவராகவும்))


ஹேஸ்வரம் ஸ்மாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம்


(பரம்பொருளுக்கு நிகரானவரும், சாஸ்வதமாக வீடுபேறு அளிக்கவல்லவருமான விநாயகரை வணங்குகிறேன்)

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்

(கஜமுகாஸுரனை அழித்து உலகுக்கு நன்மை செய்தவரும்)

தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்

(அழகிய யானை முகமும் பெருத்ததொந்தியும் உடையவரும்)

கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஷ்கரம்


(கருணை நிறைந்தவரும், குற்றங்களை மன்னிப்பவராகவும், மகிழ்ச்சியையும் புகழையும் அளிப்பவராகவும்)


மனஸ்கரம் நமஸ்கிருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்


(தன்னை மனதால் வணங்குபவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவரை வணங்குகிறேன்)


அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்


(வறியவர்களின் துன்பத்தை களைபவரும்,உபநிஷதங்களில் உயர்வாகச்சொல்லப்பட்டவரும்)

புராரி பூர்வபுரா நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்

(சிவனின் தலைமகனாய் அஸுரர்களின் கர்வத்தை அடக்கியவரும்)


ப்ரஞ்சநாச பீஷணம் தன்ஞ்ஜயாதி பூஷணம்

(உலகத்தைக் காப்பவரும் நன்கு அலங்கரிக்கப்பட்டவரும்)


கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

( மதஜலத்தால் மிளிர்கின்றவரும் புராணங்களுக்கு நாயகருமானவரைத் துதிக்கிறேன்)

நிதந்த காந்த தந்த காந்தி மந்தகாந்த காத்மஜம்

(முகத்திலிருக்கும் தந்தத்தின் ஒளியினால் முகமெல்லாம் பிரகாசிப்பவரும்)

அசிந்த்ய ரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்

(எண்ணத்தில் பதிக்கவொண்ணா உருவம் கொண்டவரும் யமனை அடக்கிய சிவனின் புதல்வரும்)

ஹிருதந்த்ரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்

(முனிவர்களின் மனதை ஆனந்தநிலயமாக கொண்டவரும்)


தமேக தந்த மேவதம் விசிந்தாயாமி ஸ்ந்ததம்


(ஒற்றைக் கொம்பனான கணபதியை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்)

மஹா கணேச பஞ்ச ரத்ன மாதரேயோன் வஹம்

(இப்படிப்பட்ட மஹா கணேச ஐந்து ரதனங்கள் போன்ற ஸோஸ்த்திரத்தை)


பிரஜல்பதி ப்ரபாதிகே ஹிருதி ஸ்மரன் கணேஸ்வரம்


(எவனொருவன் பக்தியுடன் காலைவேளையில் கணபதியை நினைத்து


சொல்லுகிறானோ)



அரோகத மதோஷதாம் ஸூஸாகிதீம் ஸுபுத்ரதாம்


(அவன் நோய் நொடி இலா வாழ்வும்,கலையாத கல்வியும்,தவறாத சந்தனாமும்,மாறாத கீர்த்தியும் மற்றும்)

ஸ்மாஹிதாயுரஷ்ஸ்ட பூதி மப்யுபைதி ஸோசிராத்



(எல்லாச்செல்வங்களையும் வளங்களயும் பெற்று என்னச்சேர்ந்தவன் ஆகிறான்.)

இப்போது வீடியோவில் எம் ஸ் அம்மாவின் குரலில் காண்டும் கேட்டும் ரஸியுங்கள். பாட்டைக் கேட்டுக்கொண்டே படங்களையும் ரஸியுங்கள்.





கொசுறு: இதே ராகத்தில் ஒரு சினிமா பாட்டு உண்டு. எஸ்.பி.பாலு பாடியது. சொல்லுங்கள் பார்க்கலாம்


சரி எல்லோரும் பூஜை முடிந்து கொழுக்கட்டை, வடை,எல்லாம் சாப்பிட்டுவிட்டு மாலை இந்த பஜனையில் கலந்துகொண்டு வேழமுகத்தானின் ஆசியைப் பெற வாருங்கள். இதில் பக்தி பாடல்களை பாடுபவர்என்நண்பர்திரு.கணேஷ்குமார்அவர்கள். மும்பையில் மிகப் பெரிய தொழில் அதிபர்.மராத்திய அபங்கம்களைப் பாடுவதில் விற்பன்னர். நல்ல சாரீரவளமுடையவர். அதென்ன ஐய்யா அப்படி ஒரு சுருதி சுத்தம். பத்து செகண்டுக்குள் பஞ்சமத்தைப் பிடித்து விட்டு அதில் அப்படியே ஐந்து நிமிடங்களுக்கு மேல் சஞ்சாரிக்கும் வளம் உடனே ஐந்து
செகண்டுக்குள் ஷட்சமத்தை நோக்கி விர்ர்ர்ர் என்று இறங்கும் வண்ணத்தைக் காணலாம்.ஹார்மோனியத்தில் கைவண்ணம் பார்க்கவேண்டுமே விரல்களில் அனல் பறக்கும் போட்டி போட்டு குரலும் கையும் நம்மை அப்படியே தூக்கிச்செல்லும்.இதோ அவருடைய கணேசே கானங்களை கேட்டுவிட்டு சொல்லுங்கள். சொல்ல மறந்து விட்டேனே இவ்வளவு இருந்தும் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்.கூடப் பாடுபவர்களும் மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்.

கணபதி பூஜை என்றால் மஹாரஷ்ட்ராதான் நினைவுக்கு வரும். அதுவும் மும்பை சித்தி விநாயக் மந்திர் அழகே அழகு.வாருங்கள் பிரபாதேவிக்கு போய் மந்திரில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்து கொண்டே
பாடல்களை பார்த்து கேட்டு அனுபவியுங்கள்.








சரி விநாயகரிடம் எப்படி வேண்டிக்கொள்ளவேண்டும்<"எம்.ஸ்.அம்மாவின் வேண்டுதலை இங்கே கேட்கவும்">


விநாயாகர் பதிவுபோட்டவுடன் ஒரு அற்புதம்நிகழ்ந்தது..பக்கத்துவீட்டில் இருக்கும் ஆன்டி கொழுக்க்கட்டை கொண்டுவந்து கொடுத்தார்கள்.இதில் என்ன அற்புதம் என்கிறீர்களா! ஆமாம் அவ்ர்கள் மதத்தால் ஏசுவை வணங்குபவர்கள் ஆனால் மனத்தால் மனிதர்களை நேசிக்கும் பண்புடையவர்கள்.இன்று எனக்கு கொழுக்கட்டை இல்லைஎன்று நினைத்தேன்உண்டு என்றுஆக்கிவிட்டா விநாயகர்

Wednesday, September 12, 2007

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே

திருச்சூர் வந்த அலுவலக வேலைமுடிய இரவு மணி 11 ஆகிவிட்டது.சரி என்ன பண்ணலாம்என்றுயோஜித்தபோதுகுருவாயூருக்குப்போகப்போகிறீர்களா என்று வல்லியம்மா கேட்டது ஞாபகம் வந்தது. உடனே என்நண்பரான ஆடிட்டர் நாராயணனைக்கேட்டேன் அவரும் சரி என்று சொன்னார். சரி காலை 1.45 க்கு கிளம்பளாமா என்று கேட்டேன். அவர் என் குடும்ப நண்பர் என்றதால் என் உடல்நிலை பற்றித் தெரியும் ஆதலால் காலை 7 மணிக்கு போகலாமேஎன்றார். நான் சொன்னேன்இந்த மாதிரி சமயம் வருவது கஷ்டம் இன்னும் ரொம்ப நாளைக்கு கிடைக்காது இது எனக்கு என்று தெரியும் ஆதலால் 3.00 மணி நிர்மால்ய தரிசனமும் தைல வாகைசார்த்தும் பார்க்கவேண்டும் என்றேன்.

காலை 1 15 க்கு எழுந்து குளித்துவிட்டு வேஷ்டி மேல்வஸ்திரத்துடன் காரில் கிளம்பி நண்பரின் வீட்டிக்குச்சென்று அவரையும் அழைத்துக்கொண்டு குருவாயூரை 2.30 க்கு அடைந்தேன். அப்பொழுதே அங்கு நல்ல கூட்டம் நல்ல வேளை கல்யாண நாள்இல்லை. வரிசையில் நின்று கொண்டோம். சரியாக

3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு ஓடியது.

முதல் நாள் செய்த அலங்காரங்களையும் மல்ர்மாலைகளியும் 15 நிமிடம்தான் வைத்து இருப்பார்கள். இரவில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வந்து அப்பனுக்கு பூஜை செய்துவிட்டு போவதாக ஐதீகம். அதனால்தான் ஒட்டம் அதைப் பார்பதற்கு.கிட்ட தட்ட திருப்பதிமாதிரிதான் கூட்டம்.நான் போகும் போது சந்தனத்தை கலைத்துகொண்டு இருந்தார்கள். நிர்மால்ய தரிசனம் முடிந்து தைல அபிஷேகம். குழந்தை கிருஷ்ணனுக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார்கள் அதையும் கண்குளிர தரிசனம் செய்தேன்.மறுபடியும் குட்டி கண்ணனுக்கு கையில் ஒரு வழைப்பழத்தைக் கொடுத்து (எண்ணை தேய்க்கும்போது குழந்தை அழுமே அதை சமாதானப்ப்டுத்த வேண்டுமே அதான் வழைப்பழம்) வெறும் சிலா ரூபமாக ஒரு சிகப்பு கௌபீனத்தைமட்டும் கட்டி

இளமுறுவலுடன் தரிசனம். பார்க்கும் போது மனதில் ஓடிய வரிகள்"கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே கண்ணிமைத்து காண்பார்தம் கண் என்ன கண்ணே. " இளங்கோவடிகள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

கண்ணிமைக்கும் நேரம் கூட பார்ப்பதை குறைத்துக்கொள்ளக் கூடாத அழகு அவ்னுடைய தரிசனம். எனக்கு பிரசாதமாக கிருஷ்ணனுக்கு சாத்திய சந்தணம், அன்று சாத்திய சிகப்பு கௌபீனம் நிர்மால்ய மலர்கள் ஆகியவைகளை என் நண்பர் கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்தார். பிரிய மனமில்லாமல் திருச்சூருக்குக் கிளம்பினோம். வரும் வழியில் கோயிலுக்கு வெளியில் ஒரு ஆலமரம், அதற்கு மல்ர்கள் சாத்தி பூஜை செய்து இருந்தார்கள். அது என்ன என்று என் நண்பரைக் கேட்டேன் அவ்ர் சொன்னது அடுத்த பதிவில்





அதற்கு முன் அம்புஜம் கிருஷ்ணா அவ்ர்களால் குருவாயூரப்பன்மேல் பாடிப்பெற்ற பாடலை மும்பை ஜெயஸ்ரீ அவர்கள் குரலில்/<"இங்கே கேட்கவும்".


இதே பாடலை திருமதி. சௌமியாவின் குரலில்<"இங்கே கேட்கலாம்'>
குருவாயூர் சென்று வந்தால் என்ன வரும் என்று அம்பி கேட்கலாம் இந்தப்பாடலையும் கேட்டுப்பாருங்கள் /<"இங்கே">

Tuesday, September 11, 2007

நெஞ்சு பொறுக்குதிலையே............


ஒரு கவியின் சகாப்தம் முடிந்த நாள் இன்று.உணர்ச்சிகளை தொட்டு சிலிர்த்து எழுப்பி கவிதை பாடியவன் கவிதையாகப் போனநாள் இன்று. வெறும் 11 பேர்கள்மட்டும் தன் சவ ஊர்வலத்தில் சங்கமித்து அக்னியோடு சங்கமித்தவன் சமூகத்திலும் நாட்டிலும் தனக்கு கிடைக்கவேண்டியமரியாதையை அளிக்காமல்போனவர்களைப் பற்றி கவலைப்படாதவன்
ஒரு பரலி நெல்லையப்பரையும்,வ ராமஸ்வாமி ஐயங்காரையும் மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டு
அவர்கள் ரசித்தது போதும் என்று எழுதிக்குவித்தவன்.தன் கவிதையை யார் ரஸிக்கிறார்கள் என்று தெரியமாலேயே அவன் பாடினான்.அதனால்தான் அவன் பாடல்கள் இறவாவரம் பெற்றது. கம்பனுக்கு பிறகு பாரதி ஒருவன்தான் அப்படி பாடினான். பின்னால் வந்த காவியங்கள் எதுவும் பரதிக்குப் பக்கத்தில்கூட நிற்கமுடியவில்லை.அந்த இடத்தை நிரப்ப ஒருவனும் வரவில்லை வரவும் முடியாது.இன்றைக்குச் சொல்லவேண்டிய பல விஷ்யங்களை பாரதி அன்றைக்கே சொன்னான்.அவனது சிந்தையில் அவ்வளவு தெளிவு.எவ்வளவு நம்பிக்கை.பாரதி ஒருஜாதி, ஒரு மதத்துக்கு சொந்தமானவன் அல்ல.அவன் சர்வசமயவாதி. அரசியல் சட்டத்தில் மதசார்பின்மை வருவதற்கு முன்பே அதை கடைபிடித்தவன்.அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு அவனுக்குத்தான் போயிருக்கும்
பாரதியைத் தமிழகம் விமரிசையாகக் கொண்டாட வேண்டும். பாரதியைக் கொண்டாடினால் பாரதத்தை கொண்டாடுகிறோம். தேசபக்தியைக் கொண்டாடுகிறோம். தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறோம்.
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறோம். பாரதியைக் கொண்டாடாதவனுக்கு
தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை கிடையாது
நன்றி: கவியரசு கண்ணதாஸன்

Saturday, September 08, 2007

லக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)


















மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால் போதுமே வேறு என்ன வேண்டும் நமக்கு.திரு. சிவன் அவர்கள் தனது சங்கராபரண ராகத்தில் அமைந்த "மஹாலக்ஷிமி ஜகன்மாதா" என்ற பாடலில் உள்ளம் உருகி அழைக்கிறார். பாடலைப் பார்ப்போமா

ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு

பல்லவி

மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)



அனுபல்லவி


மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)



சரணம்


பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)


இந்தப் பாடலை மிக இளம் வயிதேலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">

சங்கராபரணம் ராகம் சிங்கார வேலன் படத்தில் "புதுச்சேரி கச்சேரி உன்னு பிடிச்சேன்" பாட்டில் வெளுத்துக்கட்டியிருக்கிறார் திரு.SPB

சரி நாங்கள் மஹாலக்ஷ்மியின் நாலுபதிவுக்கும் வந்து கண்டும் ,கேட்டும் படித்தும் போனோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு அம்பி கேட்பான் இதோ கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.

Tuesday, August 28, 2007

லக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(3)



மும்பை நகரின் செல்வச் செழிப்புக்கு காரணம் மேலே இருக்கும் மஹாலக்ஷ்மிதான் என்று கூறுவார்கள். ஆனால் மஹாலக்ஷ்மி அவதரித்த இடங்களோ தமிழ்நாடுதான்.வில்லிப்புத்தூரில் ஆண்டாளாகவும்,நச்சியார் கோவிலில் ஸ்ரீதேவியாகவும், ஒப்பு இல்லா அப்பன்(உப்பிலியப்பன்) கோவிலில் பூதேவியாகவும் திருப்பதியில் திருச்சானூரில் பத்மாவதியாகவும் அவதாரம் எடுத்தாள். அதுபோல பசுமாட்டின் பின்புறத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாளம் என்று புராணம் கூறுகிறது


திரு. பாபநாசம் சிவன் அவர்கள் அன்னை மஹாலக்ஷ்மியின் மீது இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது.

முதல் பாடல்


ராகம்:- அடாணா தாளம்:- ஆதி


பல்லவி


நீ இரங்காயெனில் புகலேது---அம்பா


நிகில ஜகன் நாதன் மார்பில் உறை--திரு.........(நீ இரங்காயெனில்)


அனுபல்லவி


தாயிரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ?


சகல உலகிற்கும் தாயல்லவோ----அம்பா.....(நீ இரங்காயெனில்)


சரணம்


பாற்கடலில் உதித்த திருமணியே--சௌ


பாக்யலக்ஷ்மி என்னைக் கடைக்கணியே


நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும்--மெய்


ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும்.....அம்பா........(நீ இரங்காயெனில்)


சிவன் அவ்ர்கள் இந்த அடாணா ராகத்தை கையாண்டவிதமே அலாதி.அடாணா ராகம் மிகவும் கம்பீரமான ராகம். அதிகாரம் த்வனிக்கும் பாடல்களுக்கு ஏற்ற ராகம். கோபலகிருஷ்ண பாரதியார் மிகவும் அதிகாரமாக" கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே"என்று ஆர்டரே போடுவார்(சீர்காழி.சிதம்பரம் அருமையாகப் பாடி இருக்கிறார்). இது ஒரு ராஜ ராகம்.ஆனால் சிவன் அவர்கள் தெலுங்கு தியாகைய்யாவை பின் பற்றி இந்த ராகத்தில் தயாரசத்தையும் காருண்ய ரசத்தையும் கொண்டு வருகிறார். தியகராஜஸ்வாமிகள் தனக்கு ராமரின் தரிசனம் கிடைத்தபின் மறுபடியும் அதேபோல் கிடைக்க வேண்டும் என்று மிகவும் கெஞ்சலுடன் படுகிறார்"ஏலா நீ தயராது பரா குசேலா......' அண்ணல் ராமச்சந்திர மூர்த்தியே என்னிடம் ஏன் தயை காட்ட மாட்டேன் என்கிறாய் நான் ஏழை என்பதாலா.... என்று அதனுடையதாக்கத்தாலோ என்னவோ நம்தமிழ்தியாகைய்யாவானசிவனும் அதே அடாணாவில்"நீ இரங்காயெனில் புகலேது" என்கிறார். அடாணாவின் ஜீவஸ்வரமான 'நீ"யை உயர்த்தி வைத்து அரோஹணமாக மேல்ஸ்தாயியில் ஆரம்பித்து மஹாலக்ஷ்மியை மற்ற தெய்வங்களுக்கும் மேலாக உயர்த்திவிடுகிறார். நீயே இரங்கவிட்டால் வேறு யார் இரங்குவார்கள்?அவள்எங்குஇருக்கிறாள்என்று சந்தேகமறமேல் உலகத்திற்கும்



பூலோகத்திற்கும் நாயகனானதிருமாலினின் மார்பில் சதா வசம் செய்பவள் என்று "ஹரிவத்ஸசலஸ்திதாம்" என்று முன்பு லலிதா ராகப் பாடலில் தீக்ஷ்தர் சொன்னாரே அதே மதிரி சொல்கிறார்சரி இரக்கம் யாரிடம் அதிகம் இருக்கும். சந்தேகமே இல்லாமல் தாயிடம்தான்.அம்மாதான் தன் குழந்தைகளிடம் அதிக இரக்கம் காட்டுவாள். அதனால்தானே சொன்னார் "தடித்த ஒர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் அணைப்பாள்'என்று.



அதனால்தானோ என்னவோ தாயிரங்காவிடில் குழந்தை உயிர் வாழமுடியுமா என்ற கேள்வியும் கேட்டுவிட்டு சகல உயிர்களுக்கும் நீ தான் தாய் என்று ஐஸும் வைத்துவிடுகிறார். பாற்கடலில் இருந்து பிறந்த தாயே என்னை உன் முழுக்கண்ணாலும் கூட பார்க்கவேண்டாம், கடைக்கண் வைத்தென்னை ஆதரி என்று ஆதி சங்கரர் கனகதாரஸ்தவ்த்தில் சொன்னாரே அதுபோல் இறைஞ்சுகிறார்.சரஸ்வதி காடக்ஷ்த்தால் நான்குவிதமான கவிகளைமழைபோல வர்ஷிக்ககூடிய வல்லமைபடைத்தபுலவர்களுக்கும். ஸ்ரீவித்யாவான பராசக்தியை உபாசனை செய்யும் மெய் ஞானியர்களான முனிவர்களுக்கும்,எல்லா சக்திகளையும் பெற்ற வானவர்களுக்கு கூட அம்மா லக்ஷ்மிதேவியான நீ இரங்கா விட்டால் வேறு புகலிடம் கிடையாது என்று கூறுவது போல் இருக்கிறது இந்தப் பாடல்



சரி இனி பாடலை கேட்கலாமா. யார் பாடியிருக்கிறார்கள். வேறு யார் இந்த பட்டுக்கு உயிர் கொடுத்து சிவனை பட்டி தொட்டிகளில் எல்லாம் புகழ் பெறச்செய்த எம் ஸ் அம்மாவின் குரலில் இங்கேகேட்கவும்



திரு. மஹாராஜபுரம் சந்தானத்தின் குரலில்<"இங்கே கேட்கவும்"> ">



அடுத்த பாடலை அடுத்த பதிவில் பார்க்கலாம்















































Saturday, August 25, 2007

வரலக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(2)


வரலக்ஷ்மி நோன்பு அன்று எல்லார் வீட்டிலேயும் பாடும் ஒரு பாட்டு" பாக்யாத லக்ஷ்மி பாரம்மா'" என்ற புரந்தர தாசரின் கன்னட மொழியில் வரும் பாட்டு. என் அம்மாவும் இந்த பாட்டைப் பாடுவார்கள் இதை தமிழில் போட வேண்டும் என்று நினத்து தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை. பிறகு பாட்டைகேட்டுஎனக்குத்தெரிந்தவரை பாட்டையும் விளக்கத்தையும் எழுதுகிறேன் விவரம் தெரிந்தவர்கள் தவ்றுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள முடியும்

ராகம்:- மத்யமாவதி(ஸ்ரீ) தாளம்;-ஆதி
பல்லவி
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா

சரணம்
ஹெஜ்ஜேமேலே ஹெஜ்ஜேயனிகுட
கெஜ்ஜகாலனி த்வனியன டோருட
சஜ்ஸன சாது பூஜய வேளகே
மஜ்ஜிக வொளகின பெண்ணையன்டே.................(பாக்யாத)

கனகவிருஷ்டியா கரயுதபாரே
மனகே மானவ சித்திய டோரே
தினகர கோடி தேஜடி ஹெளயுவா
ஜனகராயன குமாரி வேத...............................................(பாக்யாத)


அட்டிதகலத பக்தர மனயளி
நித்ய மஹோத்ஸ்வ சுமங்கல
சத்யவடோருவ சாது சஜ்ஜன
சிட்டடி ஹோளுவ புட்டலி மொம்பே.....................(பாக்யாத)

சங்கே இல்லத பாக்யவ கொட்டு
கங்கண கைய திருவுடபாரே
குங்குமாங்கித பங்கஜ லோசன
வெங்கட ரமணன பெங்கட ராணீ ..................................(பாக்யாத)

சக்ரே துப்பர காலுவே ஹரிசுத
சுக்ரவாரதா பூஜய் வேளகே
அக்கரயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணீ.................................(பாக்யாத)

பாக்கியங்களைத் தரும் லக்ஷ்மியே வருவாய்,எங்களுடைய தாயே நீ சகல சௌபாக்கியங்களை அள்ளித்தர வருவாய் அம்மா.

இரண்டுகால்களிலும் சலங்கையும் கொலுசுவும் கலீர் கலீர் என்று ஒலிக்கும் சப்தத்துடன் நல்ல சாது ஜனங்கள் பூஜை செய்யும் வேளையில் தயிர் கடையும்போது வரும் வெண்ணயைப்போல் வருவாய் அம்மா
உன் கைகளில் தங்கமழை பொழிந்து எங்களின் விருப்பத்தைத் தீர்ப்பாய்
கோடி கோடி சூர்யனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஜனகமஹாராஜனின் மகளாக மண்ணில் அவதரித்த லக்ஷ்மிதாயே வாருவாய் அம்மா. எங்கள் வீட்டுக்கு வந்த நீ வேறு எங்கும்போகமல் இங்கேயே இருந்து தினசரி நடக்கும் மகோன்னத பூஜையில்கலந்து சாது ஜனங்ளை காத்தருள்வாய் அம்மா.கைகளில் தங்க கங்கணங்களை அணிந்து சப்தத்துடன் குங்குமத்தினால் சிவந்த முகத்தில் சிவந்த தாமரை புஷ்பங்கள் பூத்திருப்பதுபோல் அழகிய கண்களுடனுடைய அந்த திருப்பதி மலை மேல் இருக்கும்வெங்கட்ரமணனுடைய ராணீயாகிய எங்கள் அம்மாவே வருவாய்.வெள்ளிக்கிழமையன்று உனக்கு சக்கரையுடன் பாலும் அரிசியும் கலந்து சக்ரபொங்கல் செய்து உனக்கு படைத்து பூஜைகள் செய்யும் வேளயில் இந்த புரந்தர தாசனால் பாடப்படும் அளகிரி மலை மேல் இருக்கும் ரங்கன்னனின் மனதிற்குகந்த ராணீயே வருவாய் எங்கள் வீட்டிற்கு.

இப்பொழுதுஇந்தப்பாடலைமூன்றுபேர்களுடைய குரலில் கேட்க்கலாம்.

முதலில் திரு. பீம்சிங்ஜோஷி அவர்கள் தன்னிடைய கம்பீரமான குரலில் ஹிந்துஸ்தானி இசையையும் கர்னாடக சங்கீத்த்தையும் கலந்து கலக்கியிருப்பதை இங்கே கேட்கவும்

http://www.kannadaaudio.com/Songs/Devotional/BhimsenJoshi/Bhagyada.ram


இதேபாட்டை எம். எல். வசந்தகுமரியின் குரலில் கேட்க இங்கே கிளிக் செய்யவும் http://www.kannadaaudio.com/Songs/Classical/MLV/BhagyadaLakshmi.ram





ஆயிரம் பாடினாலும் நம்முடைய எம் ஸ் அம்மா பாடிய மாதிரி வருமா. அவரின் குரலில் இந்தப்பாட்டை<"இங்கே கேட்டுப் பாருங்களேன்


இவ்வளவு பேர் லக்ஷ்மியை அழைத்த பிறகு நம் தமிழ்த்தியாகைய்யா
பாபநாசம் சும்மா இருப்பாரா. அவர் எப்படி லக்ஷ்மியை அழைக்கிறார் என்று ம்று பதிவில் நாளை பார்க்கலாம்

Friday, August 24, 2007

வந்தாள் வரலக்ஷ்மி நம் இல்லத்திற்கு

இன்று வரலக்ஷ்மி பூஜை. ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்







அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்


அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா


மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா

மலர்களாலாலும் மலர்மொட்டுக்களாலும் அலங்கரிகப்பட்ட மரத்தை எப்படி வண்டுகள் சுற்றிக் கொண்டு மொய்த்துக்கொண்டு இருக்குமோ அதுபோல மஹாவிஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்துகொண்டு அவரையே எப்பொழுதும் அகண்ட கண்களால் பருகிக்கொண்டு இருக்கும் மஹாலக்ஷ்மிதாயே, நீ முழுக்கண்ணாலும் பார்க்கவேண்டாம்,கொஞ்சம் கடைக்கண்ணால் ஏழை மக்களையும் பார்த்து எல்லா செல்வங்களையும் வழங்குவாய் அம்மா என்று சொல்கிறவர் யார் தெரியுமா முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.







சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர்
மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்



ராகம்: லலிதா தாளம்: ரூபகம்


பல்லவி


ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி


ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)


அனுபல்லவி


கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்



ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்


கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)


சரணம்

ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்

பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்

மாதராம் அப்ஜமாலினீம்

மாணிக்ய ஆபரணாதராம்

சங்கீத வாத்ய விநோதினீம்

கிரிஜாம் தாம் இந்திராம்

சீதகிரண நிபவதனாம்

ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்

குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)



ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.

பல்லவி


தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்


அனுபல்லவி


அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்

பாற்கடல் பெற்று எடுத்தவளும்

மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்

கோவில் கொண்டு இருப்பவளும்

இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்

தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்

நான் எப்பொழுதும் பாடுவேன்


சரணம்


வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்

பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்

சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்

தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்

உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்

மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்

சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்

சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்

அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்

குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்


என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்

முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்


இனி பாடலை திருமதிகள் ராதா ஜெயலெட்சுமி அவர்களின் குரலின் மூலமாகக் <" இங்கே கேட்டு ரசியுங்கள்>"
நாளை புரந்தர தாசரின் பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா

கொசுறு
இந்த லலிதா ராகத்தில் நமது இளையராஜா அவர்கள் உன்னால் முடியும் தம்பி என்றபடத்தில் போட்ட இதழில் கதை எழுதும் நேரமிது பாட்டையும்

Tuesday, August 14, 2007

பாரத நாடு பழம்பெரும்நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்


இன்று நமது 60 வதாவது சுதந்திர தினம்.இந்தியவில் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நமது பிளாக் உலக நண்பர்கள் சேர்ந்து கொண்டாடவேண்டிய தினம். இந்த தினத்தை பாரதியாரின் இரண்டு பாடல்களுடன் அனுபவித்துக் கொண்டாடுங்கள்.






தாயின் மணிக்கொடி பாரீர்
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்! -

அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம்

என்றே பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

பட்டுத் துகிலென லாமோ? - அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று

மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? பணிகள் பொருந்திய மார்பும் - விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர் சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)

கன்னடர் ஓட்டிய ரோடு - போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும் பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)

பூதலம் முற்றிடும் வரையும் - அறப் போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும் மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)

பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) ---

அன்றைய தலைமுறை திருமதி டி.கே பட்டம்மாள் 60 ஆண்டுகளுக்கு முன் பாடிய இந்தப்பாடலை கேட்கஇங்கேசொடுக்கிக்கேட்கவும்



ஜய வந்தே மாதரம்

ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி

பல்லவி

வந்தே மாதரம் - ஜய வந்தே மாதரம்.

சரணங்கள்

ஜயஜய பாரத ஜயஜய பாரத

ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

ஆரிய பூமியில் நாரிய ரும் நர

சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

நொந்தே போயினும் வெந்தே மாயினும்

நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)

ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்

சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) ------

இன்றைய தலைமுறையில் திருமதி பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப்பாட்டைக் கேட்க இங்கேசொடுக்கிக்கேட்கவும்









Albert Einstein said: We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made.


Mark Twain said: India is the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great grand mother of tradition. Our most valuable and most structive materials in the history of man are treasured up in India only.


French scholar Romain Rolland said: If there is one place on the face of earth where all the dreams of living men have found a home from the very earliest days when man began the dream of existence, it is India.


Hu Shih, former Ambassador of China to USA said: India conquered And dominated China culturally for 20 centuries without ever having to send a single soldier across her border.



Friday, June 29, 2007

எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே

எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் வாகனமே என்று நினைத்து என்னை அழைத்த கீதா மேடம் மற்றும் எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் கேஆர்ஸ் அழைப்பிற்கும் நன்றி. எல்லாம் என் 71/2 யின் விதி. இதோ எட்டு

1) 8 வயதனிலே


என் வாழ்க்கையில் மறக்கமுடியாத வயது எட்டுதான்.எட்டு வயது வரைதான் நான் என் தந்தையுடன் வாழ்ந்தகாலம்.சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் என் தந்தையின் கைபிடித்துக்கொண்டு ராஜகணபதி கோவிலுக்கு சென்றதும்,சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் வலம் வந்ததும் அதன் காரணமாக என் அண்ணனுக்கும் அக்காவிற்கும் சுகவனம் என்றும் சொர்ணாம்பாள் பெயர் வைத்ததும்,பிறகு அக்காவையும்,அப்பாவையும் அக்னிக்கு தானம் செய்துவிட்டு,கையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல் சென்னைக்கு அம்மாவுடன் இரண்டு அண்ணன்களுடன் வந்ததையும் மறக்கமுடியுமா?


2)8,தமோதர ரெட்டித் தெரு


சென்னையில் இருந்த இருக்கப்போகும் நாட்களில் மறக்கமுடியாத நாட்கள் இந்தத் தெருவில் இருந்தபோதுதான்.இல்லாமை என்ற குறைதவிர வேறு எந்தக்குறையும் இல்லாத நாட்கள்.தி நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்தது, பின்பு ஜைன் கல்லூரியில் பி.காம் படித்து முதல் வகுப்பில் தேறியது,பிறகு சி.ஏ படித்தது எல்லாமே 8 ஆம் நம்பர் வீட்டில் மூலையில் இருந்த சிறிய 20x8 அடி 160 அடி உள்ள கார் செட்டில்தான்.வீட்டில் மொத்தம் 5 உருப்படிகள்.எப்படித்தான் 200 ரூபாயில் அம்மா ஒரு மாதத்தை ஓட்டினாளோ,கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டேன். எனக்கு நாரதகானசபா கச்சேரிக்கு போய்வரவே 200 ரூபாய் ஆட்டோ சார்ஜ்.இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று. அண்ணனும் அண்ணியும் வாழ்ந்தவீடும் இதுதான் பின்பு அம்மாவுடன் அவர்கள் மறைந்ததுவும் 8 ஆம் நம்பர் வீடுதான். ஆகவே மறக்கமுடியுமா இந்த 8 ஆம் நம்பர் வீட்டை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த 8 ஆம் நம்பரை காலி செய்துவிட்டு சென்ற நங்கநல்லூர் வீடும் 8 ஆம் நம்பர்தான்.


3) வங்கியில் பார்த்த 8 வேலைகள்


வங்கியில் சிறப்புஅதிகாரியாக வேலைபார்த்த 30 வருடங்களில் பார்த்த வேலைகளும் 8 தான். ஆயிரம் விளக்கு கிளையில் பயிலும் அதிகாரியாகத் தொடங்கி,ஹார்பர்கிளையில் வெளிநாட்டுசெலவாணிபிரிவிலதிகாரி,தணிக்கை பிரிவிலதிகாரியாக இருந்து பாரத் தர்ஷன் பட்டம் 3 முறை பெற்றதும்,பொது கணக்குத் துறையில் உதவி முக்கிய மேலாளாராகவும்,மியுச்சுவல் பண்டில் உதவி தலைமை அதிகாரியாகவும்,தணிக்கை மற்றும் கண்க்கு பிரிவில் முக்கிய அதிகாரியாகவும்(இங்குதான் 1000 த்துக்கும் மேற்பட்ட சார்ட்டர்டு அக்கௌண்டன்டுகளுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது), ஒருங்கிணைப்பட்ட கணினித் துறையில் உதவி பொது மேலாளர்ராகவும்,கடைசியாக வணிக வங்கித்துறையின் சேவை மையத்தில் இயக்குனர் ஆகவும் இருந்து ஓய்வு பெற்றது.(இங்குதான் ஆரம்பகாலத்தில் இலவசகொத்தனார் பணியில் இருந்தார்). இந்தப் பதவிகளில் நான் சிறப்பாக பணியாற்றினேனா அல்லது இந்த சிறப்பு பணிகளில் நான் இருந்தேனா என்பது கேள்விக் குறிதான். இருந்தாலும் பட்டயக் கணக்காளராக வங்கியில் புகுந்து இந்த 8 பணிகளில் இருந்தும் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து எந்தவிதமான விசாரணயும் இல்லாது 30 வருடங்கள் முழுச்சேவையையும் முடித்து முழு ஓய்வுதிய சலுகைகளுடன் வங்கியின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஓய்வு பெற்ற முதல் பட்டயக் கணக்காளர் அடியேன் என்பது பெருமைக்குரிய விஷயம்தான்.


4) 8 மார்க்

பள்ளிநாட்களில் எனக்கு வராத பாடமே கணக்குத்தான். ஆனால் பின்னால் நான் எப்படி கணக்கில் புலியாக மாறினேன் என்பது வேடிக்கைதான். 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது கணக்கில் வாங்கிய மார்க்கும் அதற்காக என் அண்ணன் என்னை பின்னி பெடலெடுத்த அடியும்தான் காரணம். பிறகு ஒரு வெறியுடன் படிக்க ஆரம்பித்து கணக்கை கைவசப்படுத்திக்கொண்டு C .A. வை முடித்தேன். அப்படி கணக்கில் நான் வாங்கிய மார்க்குதான் என்ன? வேறு ஒன்றுமில்லை எட்டும் வரை எட்டுதான்


5)8 விபத்துக்கள்



வாழ்க்கையே ஒரு விபத்து என்றான் ஒருவன்.. ஆனால் விபத்தே ஒருவனுக்கு வாழ்க்கையாக முடியுமா? முடியும் என்பதற்கு நானே சாட்சி.

இதுவரை நடந்த விபத்துக்கள் எட்டு . 1972 வில் மதுரையில் மோட்டர்சைக்கிளில்கீழே விழுந்து வலது கால் முட்டிகாலி. .1982இல் சென்னையில் தி' நகரில் மோட்டர் சைக்கிளிலிருந்து விழுந்து இடதுகால் முட்டியும் தொடை எலும்பும் அடி. 1986இல் ஸ்கூட்டர் மோதி கையில் அடி.1992 நங்க நல்லூரில் ஸ்டேஷன் பிளட்பாரத்திலிருந்து கீழே குதித்து மறுபடியும் கால் எலும்பு முறிவு. 1997 இல் மாடிப்படியில் இரண்டுபடிகளை ஒரே தாவலில் தாவியதால் கணுக்கால்எலும்பு முறிவு.1999இல் வீட்டில் குழாய் பள்ளத்தில்கால் வைத்து வலது முட்டி மறுபடியும்பிளவு. 2002இல் பீச் ரோடில்ஸ்கூட்டரின் மீது இரவு2 மணிக்கு வேன் வந்து மோதியதால் தலை மற்றும் கால்களில் அடி.உயிர்பிழைத்தது முருகன்அருள்.2006இல் வீட்டில் ஈரமான கோலத்தில்கால்வைத்து விழுந்து இடது கைஇரண்டு துண்டாகஉடைந்து மெடல் பிளேட் வைத்துஇன்னும்சரியாகமல் தவிப்பு.போதுமடா முருகா
இனி தாங்க முடியாது விபத்து போதுமென்று ஓய்வளிக்க உன்னைஅல்லால் வேறே கதி இல்லையப்பா.

6) பிடித்த 8 ஊர்கள்

(1)உலிபுரம்: நான் பிறந்த ஊர். சேலத்திற்கு அருகில் ஆத்தூரின் அருகில் தம்பம்பட்டி அதற்கு அருகில்தான் உலிபுரம்.திண்ணைப்பள்ள்ளிகூடத்தில் மண்லில் பயின்றது(எல்.கே.ஜி,யு. கே.ஜி) இங்கேதான் (2) குருவாயூர்: எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத குழந்தை கிருஷ்ணன் ஊர்.ஆனால் இப்போது இங்கும் திருப்பதிமாதிரி ஆகிவிட்டடது.(3) சாங்லி: மஹராஷ்ட்ரா மானிலத்தில் உள்ள அமைதியான அழகான ஊர்.(4) திரியம்பகபுரி: நாசிக் அருகே உள்ள ஊர். கோதவரி நதி பசுமாட்டின் குளம்பு போன்ற இடத்திலிருந்து உற்பத்தியாகும் இடம்.இயற்கை அழகு கொஞ்சும் இடம்.(5) ரோதங்பாஸ்: குளு மணாலிக்கு அருகில் உள்ள குளிர் நடுக்கும் இடம்.பனிப்பாறைகளால் நிறைந்த இடம்.இங்கு இருக்கும்போது தங்கமணிமுன்னால் இருப்பதுபோன்ற உணர்வு,கை கால்கள் உதறும்.(6) ஜோத்பூர்: ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள அழகான கோட்டைகளும் வெய்யில் வாட்டி எடுக்கும் ஊர்(7) தலைநகர் டெல்லி:சென்னையைத் தவிர்த்து நிறைய நாட்கள் தங்கியிருந்த ஊர்.மாதம் ஒருமுறையாவது சென்றுவருமூர். இருந்தாலும் இன்னும்வழி பிடிபடாத ஊர்.(8) சென்னை: சொர்கமே என்றாலும் அது நம்ம சென்னை அக்னிகுண்டம்போலாகுமா.


7) நிறைவேறாத 8 ஆசைகள்

சிறுவயதில் வக்கீலுக்கு படிக்க வேணடும் என்ற ஆசை

சென்னையை விட்டு வெளியூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை

ஸ்விஸ்ர்லாந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை

முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை

கீதா மேடத்திடமிருந்து ஆப்பு வங்காத அம்பியை பார்க்கும் ஆசை

தாய் தந்தையருக்கு வேஷ்டி,புடைவை எல்லாம் வாங்கிக் கொடுத்து
பிறந்த நாள் அன்றுஅவர்களிடம் ஆசீர்வதம் வாங்கும் ஆசை

பணத்தை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்ட நண்பனை ஒரு முறை பார்க்கும் ஆசை

தங்கமணியிடம்யிருந்து எப்படியாவது இவரும் நல்லவர்தான் நாம் நினைக்கிற மாதிர் அவ்வளவு கெட்டவர் இல்லைஎன்று நல்லபேர் வாங்கும் ஆசை

8) எட்டு

இந்த எட்டு எண் இருக்கிறதே இது நல்ல எண் இல்லை என்பது கணித மற்றும் ஜோஸியத்தின் கணிப்பு.(அதுதான் எட்டில் கீதாமேடத்துகிட்டே மாட்டிகிட்டே போதே தெரிகிறதே) ஒன்பதுதான்
நல்லஎண்ணாம்.ஹைய்யா நம்ப பிறந்த தேதி 9). எட்டுஎன்பது வாழ்க்கையில்
மேல்நிலையிலிருந்து கீழ் நிலைக்கு கூட்டிச் செல்லுமாம்
உதாரணமாக 8x1=8 ,8x2=16=7,8x3=24=6,8x4=32=5,8x5=40=4 இப்படியே குறைந்து கொண்டே வருமாம். ஆனால் 9 என்பது ஸ்திரமான எண்ணாம்.என்ன செய்தாலும் நிலையாக இருக்குமாம். சுக துக்கங்களை சமமாக பாவிப்பார்களாம்.உதாரணமக 9x1=9=9,9x2=18=9,9x3=27=9,9x4=36=9,
45-9=36=9,81-9=72=9





Sunday, May 27, 2007

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா.....

61 ஆவது பதிவு சபாபதிக்கு 61 ஆவது வயது உமபதிக்கு>


கீதா மேடம்(பொற்கொடி கவனிக்க) தன் பதிவில் மிக அழகாக சிதம்பர ரகஸியத்தைப் பற்றியும் தில்லை நடராஜரைப் பற்றியும் ஓர் சிறப்பு பதிவு
போட்டிருந்தார்.பின்னுட்டத்தில் நான் அதற்கு ஏற்ப ஒரு பாடல் போடுவதாகச் சொல்லியிருந்தேன்.சபாபதியின் பாடல்தான் இந்தப் பதிவின் சபாநாயகன்.
பதிவு போட ஆரம்பித்து இது 61ஆவது பதிவு.இது என்ன பெரிய விஷயம்
நாங்க எல்லாம் 350/300/100 பதிவுகள் போட்டாச்சு என்று கீதா மேடம்(Grrrrrr),
கார்திக்,அம்பி எல்லோரும் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் என் விஷயம்
கொஞ்சம் வேறு. இன்று எனக்கு 61 வருடங்கள் முடிந்து பிறந்தநாள். இரண்டும்
சேர்ந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு.


நல்ல குடும்பத்தில் பிறப்பு, நல்ல உயர் கலவி, கல்விகேற்ற வேலை,வேலையில் உயர் பதவி,ஓய்வு பெற்ற பின்பும் மறுபடியும்
நல்ல பதவி, கௌரவம்,இனிய இல்லாள்,பணிவான மகன்கள்,மகள்,பாசம் மிக்கமருமகள், உறவினர்கள்,நண்பர்கள்,எல்லாவற்றிற்கும் மேலாக என்னை தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மரியாதை செலுத்தும் பதிவுலக நண்பர்கள்.


இவற்றை இங்கனமே யான் பெறவே என்ன புண்ணியம் செய்து விட்டேன் என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே செய்யவில்லை என்பது நிதர்சனமாக
தெரிகிறது.ஆனால் இத்தனைக்கும் காரணமானவன் யார் என்று மட்டும் தெரிகிறது. அது வேறு யார்/ என் குலதெய்வமான திருத்தணி முருகன்தான்.
அவனுக்கு வணக்கமும் நன்றியுமாக இந்தப் பாடலை அவன் தாள்களில்
சமர்ப்பணம்.


ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி


பல்லவி


திருத்தணி முருகன் திருவருள் புரிவான்
திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)


அனுபல்லவி

அறுபடை வீட்டின் நாயகனே
குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)


சரணம்

குறுநகை புரிந்திடும் அருள்முகமும்

பரிவுடன் உதவும் பன்னிருகரமும்

வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்

என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)





இதோ கீதாமேடத்துக்காக இட்ட பாடல்

ராகம்:- ஆபோஹி தாளம்:-ரூபகம்

பல்லவி

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா
தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா( சபாபதிக்கு)

அனுபல்லவி

கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ
இந்த தரணி தன்னில் (சபாபதிக்கு..)

சரணம்

ஒருதரம் சிவசிதம்பரம் என்றால் சொன்னால் போதுமே
பரகதிக்குயடைய வேறே புண்ணியம் செய்யவேண்டாமே
அரிய புலையர் மூவர் பதம் அடைந்தார்
என்றே புராணம் சொல்லக்கேட்டோம்
கோபலகிருஷ்ணன் பாடும் (சபாபதிக்கு)






'இதே பாடலை பிரியா சகோதரிகளின் குரலில் இங்கே கேளுங்கள்">


கோபலகிருஷ்ண பாரதியார் முதலில் பாடல் எழுதும்போது
ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமா?
பரகதிக்கு அடைய வேறே புண்ணியம் பண்ண வேண்டாமா?
என்றுதான் எழுதினார்.தியகராஜரும் பாரதியும் சமகாலத்தவர்கள்.
ஒருமுறை சந்தித்தபோது தியாகராஜர் இந்தப் பாட்டைக் கேட்ட பிறகு
இறைவன் நாமத்தை ஒரு தரம் சொன்னாலே போதுமே வேறே புண்ணியம் ஏதாவது பண்ண வேண்டுமா என்ன. நாமத்திற்கு அவ்வளவு மகிமை உண்டே என்று சொன்னதாகவும்அதன் பிறகுதான் மாற்றி எழுதினார்.தியகராஜரும் ஆபோகி ராகப் பாட்டில் மகிழ்ந்து பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் " மனசு நில்ப சக்திலேகபோதே" என்ற ஒரு பாட்டை இயற்றினார்
என்ற ஒரு சொல் வழக்கும் உண்டு.