Saturday, March 12, 2011

அதிகார நந்தி சேவை

கயிலைக்கு சமானமான மயிலையில் பங்குனித் திருவிழா ஆரம்பித்து இன்று(12/03/11) அதிகார நந்தி சேவை.காலையில் ஆறு மணிக்கு சரியாக கபலீஸ்வரர் கோபுரவாசலில் தரிசனம் அருளுவார்.அதைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும். வாருங்கள் நாமும் தரிசனம் செய்யலாம்.இதோ காலை மணி 5.50 ஆகிவிட்டது. இந்த சிறிது குளிர்ந்த காலை வேளையிலும் பக்தர்கூட்டம் சந்நிதி தெருவெல்லாம் நிரம்பி வழிகிறதுஇதோ மெதுவாக ஆடி அசைந்து கொண்டு முதலில் வருவது யார் தெரியுமா. வேறுயார் வானவருக்கும் நம்மவருக்கும் முன்னவரான முந்தி முந்தி வினாயகர்தான் மூஷிகவாகனத்தில் வருகிறார்.




வினாயகருக்கு விசையின் மூலமாக பூச்சொரியும் காட்சி எல்லோரையும் கவர்ந்தது.நீங்களும் பாருங்கள் விடியோவில்



அவருக்கு பின்னால் கபலீஸ்வரரை தூக்கிக்கொண்டு கம்பீரத்துடனும் அதிகாரத்துடனும் எழுந்தருளுவார் நந்திகேஸ்வரர் . பிறகு முருகப்பெருமான் கந்தர்வ பெண் வீணைமீட்டிக்கொண்டு இருக்கும் வாகன உருவத்தில் உலாவருவார். அதன் பின்னால் கற்பகநாயகி அதே மாதிரி வாகனத்தில் திருவீதி உலாவுக்கு வந்தருளுவாள்.கடைசியாக சண்டிகேஸ்வரரும் இவர்களைத் தொடர்ந்து உலா வருவார். மலர் அலங்காரமும்,மற்றும் மாணிக்கம்,வைரம் முதல் நவரத்தின அல்ங்காரமும் வார்த்தைகளால் வர்ணிப்பதைவிட நேரில் பார்த்தால்தான் அனுபவிக்கமுடியும்.




இதை ஏன் அதிகார நந்தி என்கிறார்கள் அவர் எல்லோரையும் அதிகாரம் செய்வாரா? இல்லை சிவபெருமானின் சிறந்த பக்தரான அவர் ஏன் அதிகாரம் செய்யப்போகிறார்.இங்கு அதிகாரம் என்பது பரமேஸ்வரனை துக்குவதற்கு அவர்மட்டும்தான் அதிகாரம் பெற்றவர் என்பதைக் குறிக்கிறது.
அதையாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார். அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப் படும் ஒரு அதிகாரம் போல.அவர் முகத்தைப் பாருங்கள் என்ன ஒருபெருமிதம்.வலதுகாலை மடித்துஇடது காலை ஊன்றிஇருகைகளாலும் புவனங்களை ஆட்டிப்படைக்கும் காலசம்ஹாரமுர்த்தியை துக்கிக் கொண்டு ஒரு கர்வம் அவர் முகத்தில் காணலாம்.அந்த செந்நிற நாக்கைச் சுழற்றி பற்கள் வெளியே தெரிய, கண்களில் கோபக்கனல் பொங்க, இருகைகளிலும் மானும், கதையும் ஏந்தி இடுப்பில் அதிகாரபட்டைச் சிகப்புத் துணியுடன் போருக்குச் செல்லும் வீரன்போல்காட்சியளிக்கிறார்.


அவரே ஈஸ்வரன்போல்தான் இருக்கிறார்.அவர் பெயரும் நந்திகேஸ்வரன்தானே. கபாலீஸ்வரரைப் பாருங்கள் அவரும் கையில் அம்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்.இடது கையை இடது துடை மேல் வைத்து கம்பீரமாக காட்சித்தருவதைக் காண கண் கோடி வேண்டும்


இந்தக்காட்சியை மயிலையில் வாழ்ந்த பாபநாசம் சிவன் எப்படி அனுபவித்தார் என்று பார்க்கலாமா

ராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.

பல்லவி

காணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி

காணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)

அனுபல்லவி

மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்

மணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்

மதியோடு தாராகணம் நிறையும் அந்தி

வானமோ கமலவனமோ என மன்ம்

மயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க

அபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)

சரணம்

மாலோடு ஐயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்

மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே

நமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி

கருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்

காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்

சிவகணமும் தொடர கலைவாணி

திருவும் பணி கற்பகநாயகி வாமன்

அதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)

இந்தப் பாடல் அதிகாரநந்தி சேவையன்று திரு பாபநாசம் சிவனால் பாடப்பெற்ற சிறப்புப் பாடல்.

இந்தப்பாடலை பிரபலப்படுத்தியவர் கானகலாதர மதுரை மணிஐய்யர் அவர்கள் . அவரின் குரலில் "காணகண்கோடி வேண்டும்"  கேளுங்கள்





Tuesday, January 04, 2011

ஸ்ரீ ஹனுமனை துதி மனமே தினமே



ஸ்ரீ ராம ஜெயம்

மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)
ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான்.. மாதவம்)
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)
நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்

இன்று ஹனுமத் ஜயந்தி

வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு கூடவெ இருப்பினும்,விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.

மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி, கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,இணயில்லாத பலம் மிக்கவரும்,அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகபேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.வெறும் புஜ வலிமை போதாது.
மனித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான். தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.

ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவ கீ நாயீ
-ஹனுமனின் மீது ஒரு பாடல் கிளிக் செய்யுங்கள் < >

Thursday, December 09, 2010

நினைவெல்லாம் ரகுராமன்



1980 இந்த வருடம்தான் முதன்முதலாக ரகு என்கிற ரகுராமனை சந்தித்த வருடம்    என்  மனைவியின்  தங்கையை .பெண்பார்க்க வந்தார் அப்பாஅம்மாவுடன் . என்பீல்ட் மோட்டார் சைக்கிளில் வந்ததைப் பார்த்தவுடனேயே எனக்கு பிடித்துவிட்டது.என் வண்டியும் என்பில்ட் தான்.கண்களுக்கு சற்று கருத்த நிறம்தான் முதலில் தெரிந்தது ஆனால் உள்ளே இருக்கும் வெளுத்தமணம் தெரிவதற்கு பல வருடங்கள் ஆயிற்று.எந்தவித பந்தாவும் இல்லாமல் சரி என்று சொல்லிவிட்டார்.



கடைசியாகப் பார்த்தது இல்லை இல்லை புருஷனாகப் போனவரை வெள்ளைப் பொட்டலத்தில் கருப்பு பெட்டியில் கண்டது 20 ஆம் தேதி நவம்பரில்.முப்பது வருஷ பிணைப்பு தங்கமணியின் தங்கையின் கணவராக மட்டும் அல்ல தங்கமான மனிதராக.எதையும் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் குணமே அவரையும் எடுத்துக்கொண்டது கடைசியாக. நான் இப்போது சொல்லப்போகும் மனிதர் ரகுராமன் என்றும் ரகு என்று செல்லமாக அழைக்கப்பட்டு 1951 ஜுன் 1ஆம் தேதி பிறந்து ,2010 நவம்பர் 19 ஆம் தேதி மறைந்தவர் திரைப்பட இயக்குனர் திரு . சுசிகணேசனுடன் இருப்பவர்தான் மஞ்சள் சட்டை அணிந்த  ரகுராமன்
நினைவுகள் தொடரும்

Friday, October 15, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 15 10 2010




இன்றைய நாமம்







சிந்தூர திலகாஞ்சிதா


அம்பாளின் முகத்தில் திலகம் இருக்கிறதே அது எங்கே இருக்கிறது தெரியுமா இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது. அதுவும் அது இளம் சிவப்பு வண்ணமான சிந்தூரத்தினால் ஒளி பெற்று விளங்குகிறது.சூரியன் உதிக்கும் முன்பு அருணந்தான் முதலில் தோன்றுவான் அதுவும் இளம் சிவப்பாகத்தான் இருக்கும் அதே மாதிரி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போதும் இளம் சிகப்பு வண்ணமான சிந்தூர நிறம்தான்.எப்படி சூரியன் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் இளம்  சிகப்பு  நிறத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிகின்றானோ அது மாதிரிதான் தேவியும் சிந்தூர திலகத்துடன் எல்லாஇடங்களிலும் எல்லா நேரத்திலும் பிரகாசிக்கிறாள்.

லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன.  வானவில்லின்  நிறங்களை வரிசைப் படுத்தும் போது VIGBOYR  ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் அதனால்தான் அபிராமி  பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்துர திலகாஞ்ச்சிதா என்கிற இளம் சிகப்பு நிறம்    


நாளை இன்னுமொரு நாமத்தைப் பார்க்கலாமா?

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 14 10 2010











இன்றைய நாமங்கள் 

திரிபுரா

படைத்தல்  காத்தல் அழித்தல் என்கிற முன்றுவகையான தொழில்களைச் செய்யும் பிரும்மா விஷ்ணூ, சிவன் ஆகிய மூவர்க்கும் மூத்தவள். சரி இவர்களே மிகவும் வயதானவர்கள் அவர்களுக்கும் மூத்தவள் என்றாள் மிகவும் வயதானவளா அம்மா நீ என்றால் அபிரமி பட்டரைக் கேட்கவேண்டும்.
"மூத்தவளே மூவாமுதல்வர்க்கும் மூத்தவளே பின் கரந்தவளே இளையவளே"
அம்மா நீ எல்லோருக்கும் மூத்தவளாக இருந்தாலும் இளயவளாகத்தான் எங்களுக்குக் காட்சியளிக்கிறாய்.




Thursday, October 14, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 13 10 2010



இன்றைக்கு  எடுத்துக் கொள்ளும் நாமங்கள்

 
ரதிப்பிரியா


ரதிதேவியின் பிரியத்துக்கு உரியவள். அப்படி என்ன ரதிதேவிக்கு பிரியம் லலிதா தேவியின் மீது?.சிவனால் ஸ்ம்கரிகப்பட்டு ரதியின் கணவரான மன்மதன் சாம்பலாகிவிட்டான். ரதிதேவி அம்பாளை வேண்டி அவனை மறுபடியும் உயிர்ப்பித்து தருமாறு வேண்டினாள். அம்பாள் மன்மதனை எங்கு எந்த உருவத்தில் ஆவாஹானம் செய்யலாம் என்று தேடி சரியான இடம் கிடைக்காமல் தன்னுடைய முகத்திலேயே அவனுக்கு இடம் கொடுத்து ரதிதேவியை திருப்த்திப் படுத்தி அவளின் பிரியத்துக்கு பாத்திரமானாள். இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்மத ரதம் "என்று புகழ்கிறார்




அபிராமபட்டரும் "அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது" என்று அதிசயப் படுகிறார். 



இன்றைய சுண்டல் சிகப்பு அவல்
நாளை சந்திப்போம்

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 12 10 2010



இன்று எடுத்துகொள்ள இருக்கும் நாமங்கள்


நாமபாராயணப் பீரிதா

லலிதா பரமேஸ்வரிக்கு மிகவும் பிடித்தது நாம பாராயணம்தான். அவளைவிட அவளது நாமப் பெருமையை நமக்கு உணர்த்துவதற்காகவே ஏற்பட்டது இது.கடவுளைவிட அவரது நாமம்தான் பெரியது என்பதற்கு சிறந்த உதாரணம் ராமரும் ஹனுமானும்தான்.சேது சமுத்ரத்தைக் கடப்பதற்கு ராமருக்கு தேவைபட்டது பெரிய வானரசேனை, கல் போன்றவைகள். ஆனால் ஹனுமானுக்கோ இவை ஒன்றும் தேவைப் படவில்லை.அவருக்கு கடலை சுலபமாக கடக்க உதவிசெய்தது அந்த ராம நாமம் மட்டும்தான்.அதுபோல்தான் எங்கெல்லாம் அம்பிகையின் நாமம் உச்சரிக்கப் படுகிறதோ அம்பிகை அந்த இடங்களிலெல்லாம் ஆனந்தமாக அமர்ந்திருப்பாள்.
 
 
இச்சாசக்தி ஞானசக்தி கிரியாசக்தி ஸ்வரூபிணி


ஆசைப்படும் சக்தியாகவும் அதற்கு வேண்டிய ஞானத்தைத் தரும் சக்தியாகவும் பின்பு அந்த ஆசையை பூர்த்தி செய்ய அவசியமான ஒன்றான செயப்பாடு சக்தியாகவும் விளங்குபவள்.மூன்று சக்திகளுக்கும் அவள்தான் தலைவி.வள்ளியை இச்சாசக்தியாகவும், தெயவயாணையை கிரியாசக்தியாகவும் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு சக்திகளும் சேர்ந்தால் அது ஞானத்தில் சென்று முடியும். அந்த சக்திதான் முருகன் என்ற ஞனபண்டிதன்
 
சர்வாதாரா


எல்லாவற்றுக்கும் அவள்தான் ஆதாரமாகவும் இருக்கிறாள். இந்த பூமிதான் நமக்கெல்லாம் ஆதாரம் ஆனால் அந்த பூமியை உற்பத்தி செய்தவள் அம்பிகைதான் எனவே அதற்கும் ஆதாரமாக இருப்பதால் அவள்  ஸர்வாதராவாக இருக்கிறாள். இந்த உலகத்தை படைக்கும் நான்முகனுக்கும் அவளே ஆதாரம். மற்றும் அழிக்கும் தொழில் செய்யும் சிவனுக்கும் காக்கும் தொழில் செய்யும் மாதவனுக்கும் அவளேதான் ஆதாரம் அதனாலும் அவள் சர்வாதாரா என்று அழைக்கப் படுகிறாள்.இதயே அபிராம பட்டர் வாயிலாகப் பார்த்தால் நன்கு புரியும்.

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும்நாரணனும்,அயனும் பரவும் அபிராமவல்லிஅடியிணையைப் பயன் என்று கொண்டவர். முத்தொழில் புரியும் மூவரும் தங்களது தொழில் சிறப்பாக நடைபெற உனது அடியயைத்தான் பற்றி இருக்கிறார்கள்



நாளை சந்திக்கலாம், இன்றைய சுண்டல் காரமணி

Monday, October 11, 2010

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 11 10 2010


   பராசக்தி


மிகப்பெரிய சக்தியாக நிலைத்திருப்பவள்.அவளுடையபரிவார தேவதைகளுக்கும் சக்திகொடுப்பவள் அதனாலும் பராசக்தியாக விளங்குபவள்.பரம் என்று அழைக்கப்படும் சிவனுக்கே சக்தி அளிப்பவளாக இருப்பதாலும் பராசக்தி.இது நமக்கே புரிந்த ஒன்று.சக்தி இல்லாமல் சிவனால் ஒன்றும் செய்ய முடியாது.பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள் உனக்குத்தான் சக்தியில்லையே பேசாமே சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே என்று.
 
கலிகல்மஷநாசினி



கலிகாலத்தில் ஏற்படும் கஷ்டங்களை போக்குபவள். கலிகாலத்தில்தான் அழிவுகளும் கஷ்டங்களும் அதிகம்.ஆனாலும் அந்த கஷ்டங்களையும் போக்கும் சக்தி படைத்தவள்தான் பராசக்தி.

நிஷ்பிரபஞ்சா.


இந்த பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டவள். உலகத்தைப் படைத்தவள் அவள்தான் இருந்தாலும் பிரபஞ்சகட்டுப்பாட்டுக்குள் அவள்தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டாள்.கடவுள் என்ற பதம் மாதிரி. கடந்தும் இருப்பவள் உள்ளும் இருப்பவள் அதன்னால்தான் கடவுளென்று பெயர் வந்தது.அதுபோல பிரபஞ்சத்துக்கு உள்ளேயும் இருப்பாள் அதைக் கடந்தும் இருப்பாள்.அபிராமபட்டரும் இந்த தத்துவத்தை விட்டுவைக்கவில்லை. "பூத்தவளே பூத்தவண்ணம் பதிநான்கு உலகத்தையும் காத்தவளே, பின் கரந்தவளே" என்று புகழ்ந்தார்
நாளை சந்திப்போம் பட்டாணி சுண்டல் எடுத்துக்கொண்டு செல்லுங்கள்