சங்கீத ஞானம் எனக்கு அவளவாக என்ன அவளவும் போதாது, எனவே சிக்கலே இல்லாத ஒரு முழுமையான சங்கீதம் கேட்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை.Deserve before you desire(முதலில் தகுதி பின்புதான் ஆசை) என்பார்கள் ஆங்கிலத்தில். சரி நமக்கு என்றுதான் அந்தத்தகுதி வருமோ என்று காத்திருந்தேன். அன்று வந்தது. வேறு எங்கே 12ஆம் தேதியன்று மாலை நங்கநல்லூர் நம்ம தியகராஜ சங்கீத சமாஜத்தில்தான்.இந்தச் சபாவில்தான் என்னையும் ஒரு உபயோகமுள்ள மனிதனாக மதித்து காரியக் கமிட்டியில் சேர்த்துக்கொண்டார்கள் அதனால்தான் நம்ப என்ற அடைமொழி.
சமாஜம் காரியதரிசி திரு. ராமநாதன் தொலைபேசியில் அழைத்து "சார் இன்னிக்கு சிக்கில் குருசரன் கச்சேரி இருக்கு சாயங்காலம் வாங்கோ" என்றார்.நானும் உடனே "நிச்சியம் வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் "டிமிக்கி" கொடுத்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனால் அவர் அதற்கப்பறம் சொன்ன வார்த்தைகள் என் மனத்தின் எண்ணங்களை அடியோடு மாற்றி சங்கீதத்தின் மீது அபார பக்தி கொள்ளச் செய்து விட்டன. அப்படி என்னதான் சொன்னார் அவர் சங்கீதத்தை பற்றி. அவர் சொன்னது இதுதான்"சார் இன்னிக்கி கச்சேரி முடிந்ததும் பிரசாதம் சாம்பார் சாதமும்,தயிர்சாதமும்" அது போதாதா நான் குடும்பத்துடன் நங்கநல்லூரில் மாலை ஆறு மணிக்கே "டேரா" போடுவதற்கு.
அன்றைய நிகச்சி
திரு. சிக்கில் குருசரண்---வாய்பாட்டு
திரு. மைசூர் ஸ்ரீகாந்த்----வயலின்
திரு. ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ்- மிருதங்கம்
திரு. ஸ்.வி.ரமணி-----------கடம்
சிக்கில் குருசரண் வயதில் இளையவர், அபாரமான குரல் வளம், இனிமையான சரீரம் இளமையான சாரீரம் எல்லோரையும் கவரும் வசீகரமான தோற்றம்.வேய்குழல் விற்பன்னர்களான சிக்கில் சகோதரிகளின் பேரன், அதனால் நல்ல சங்கீத பரம்பரை வழி. குல வித்தை கல்லாமல் பாகம் படும். அன்று பட்டது . எப்படி என்று பார்க்கலாமா? வயலின் வாசித்த ஸ்ரீகாந்த்தும்,கடம் வாசித்த ரமணியும் முன்னிலை வித்வான்கள். மிருதங்கம் வாசித்த ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவோ அந்த வாத்தியத்தில் ஜாம்பவான்.கச்சேரி களை கட்ட வேறு என்ன வேண்டும். இனி கச்சேரிக்கு போகலாமா?
400 பேர்களேஅமரும் ஹாலில் கச்சேரி ஆரம்பம் ஆவதற்கு முன்பே கூட்டம்
நிறைந்து வெளியில் ரசிகர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். சாவேரி ராக வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம். நல்ல கச்சிதமான ஆரம்பம் All that begins well must end well நல்ல ஆரம்பம் நல்ல முடிவைநோக்கித்தான் செல்லும் என்பார்கள். அன்று அதுதான் நடந்தது.அடுத்து வந்தது முத்துஸ்வாமி தீக்ஷ்தரின் ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்த சித்தி விநாயகம் என்ற கிருதி.ராகத்தின் பரிமாணத்தை கொஞ்சம் காட்டிவிட்டு கிருதியின் உச்சரிப்பில் கவனம் செலுத்தி பாடியது அதுவும் ஸவரப்பிரஸ்த்தாரத்தில் ஒரு மினி 1000வாலவை கொளுத்திப் போட்டது போல ஸ்வரங்களை விளாசியது அற்புதம். தீக்ஷதர் கிருதிகளை கொஞ்சம் மடியுடன் வார்த்தை சேதமில்லாமல் பாடினால்தான் ரசிகர்களை சென்று அடையும். அதேமாதிரி அன்று சென்று அடைந்ததை ரசிகர்கள் தங்கள் கரகோஷத்தின் மூலம் தெரியப்படுத்தினார்கள். உடனே சுருசுறுப்புடன் பிலஹரி ராகத்தில் "வா மயூரமீதில் ஏறி வா என்னை ரக்ஷிக்க வா" என்ற பாடலால் மேலும்
மெருகூட்டினார். கச்சேரி நடைபெற்ற இடம் "ரஞ்சனி ஹால்" அதனால்தானோ என்னவோ ரஞ்சனி ராகத்தை எடுத்த குருசரண் அதை அலசி அதன் முழுஸ்வரூபத்தையும் தோரணமாக கட்டித் தொங்கவிட்டார்,அதிலும் தியாகராஜரின் "துன்மார்க்க சராதமுலெனு" கீர்த்தனத்தை எடுத்து வல்லின மெல்லின பிரயோகங்களுக்கு மதிப்பு கொடுத்து ஸ்வரபிரஸ்தாரங்களுடன் மென்மையாக வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.நிரவலின்போதும் ஸ்வரப்ரஸ்தாரத்தின்போதும் ஸ்ரீ முஷ்னம் ராஜா ராவ் பாடகருடன் கூடவே தொடர்ந்து வாசித்து காலப்ரமாணத்துடன், வாசித்த வாசிப்பு "சூப்பர்". மிருதங்கம் பேசுமா? பாடுமா? என்றால் அன்று அவர் வாசிப்பை கேட்டப்பிறகு முடியும் என்றுதான் கூறவேண்டும். என்ன வாசிப்பைய்யா அது! கைலாயத்தில் உள்ள நந்திதேவரே கேட்டு மகிழ்ந்திருப்பார். இதுவே இப்படி யென்றால் தனி ஆவர்தனத்தைப் பற்றி தனியாகச் சொல்லவேண்டுமா என்ன?
அன்று மொத்தம் 11 பாடல்களை வழங்கினார். எல்லாவற்றையும் விவரிக்கமுடியாது. அநுபவித்துதான் அறியமுடியும்.இருந்தாலும் அன்று கேட்ட இரண்டு முக்கிய உருப்படிகளைப் பற்றி சொல்லாமல் இருந்தால் விமரிசனம் முற்றுப்பெறாது. காம்போதி ராகத்தை எடுத்துக்கொண்டு விரிவாக ராக ஆலபனை செய்தார் காம்போதியில் அன்று அவர் வழங்கிய ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே என்ற காஞ்சி பரமாசாரியாருக்கு பிடித்த பாடலை .(இதை அவரே தன்னுடைய குரலில் அரியக்குடி ராமனுஜ ஐய்யங்காருக்கு பாடி பதம் பதமாக அர்த்தம் சொல்லி விளக்கியதாக கூறுவார்கள்) பாடியவிதம் அருமையிலும் அருமை. இந்தப்பாடலை ஒரு ஆறுமாசக் குழந்தையை துங்கச்செய்யும் தாயைப் போல அரவணைத்துப் பாட வேண்டும் ஏதோ ஆறுவயசு அடம் பிடிக்கும் குழந்தையை அடித்து கூட்டிச் செல்வதுபோல் பாடக் கூடாது. குருசரண் அருமையாக வழங்கினார்.
அடுத்து சொல்ல வேண்டியது "மெய்ன்' உருப்படியான ராகம் தானம் பல்லவியில் வழங்கிய சங்கராபரணம் ராகம்.ராகத்தை அஸ்த்திவாரத்திலிருந்து மெதுவாக ஆரம்பித்து கோர்வையாக் கார்வையுடனும் பிருகாக்களுடனும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே சஞ்சாரித்து ஸுஸ்வரத்துடன் கச்சிதமாக தானத்தையும் இரண்டறக் கலந்து அவர் அன்று வழங்கியது ரசிகர்களை சொர்க்கலோகத்துக்கே கொண்டு சென்றது.கச்சேரி "ஸ்வர ராக சுதா"வாகத்தான் இருந்தது. ஆமாம் அன்று அவர் வழங்கிய கிருதியும் தியாகராஜரின் "ஸ்வர ராக சுதா" தான்
கச்சேரி முடிந்ததும்தான் இந்த உலகுக்கே வந்தேன். ஆமாம் நிஜமாகவே ரசிகர்களை பயமுறுத்தாமல் இனிமையாகப் பாடிய
சிக்கல்இல்லாத சிக்கில் குருசரண் தான்.
நங்கநல்லூர் ரசிகர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக டி'நகர்,மயிலை,திருவல்லிகேணி போன்ற இடங்களில் பிரபல வித்துவான்களின் கச்சேரியைக் கேட்டு அனுபவித்து இப்பொழுது இங்கே வசிப்பவர்கள். கச்சேரி முடிந்ததும் ரசிகர்களே ஐந்துநிமிடம் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கடைசியாக சமாஜத்தைப் பற்றி ஒரு வார்த்தை. எந்தவிதமான மாதாந்திர கட்டணமும் இன்றி ரசிகர்களுக்கு மாதா மாதம் கச்சேரியும் இந்த வருஷம் ஜனவரி மாதம் முழுவதும் கச்சேரிகள் வைத்து அனைத்துத் தரமக்களுக்கும்
இலவசமாகத் தரும்ஒரே சபா இதுதான். இதை முன்னின்று நடத்திவரும் திரு.ராமனாதன் அவர்களை எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை.ஆனால் அவருக்கு புகழைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது இந்தத் தொண்டில் அவர் ஒரு தியாகராஜராகவே மாறிவிட்டார். சமாஜத்திற்கு தன் உடல், பொருள், இடம் எல்லாவற்றையும் வழங்கிவிட்டு பின்னனியில் அமைதியாக இருப்பவர் திரு.ஸ்.வி.ரமணிஅவர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்கும் திரு. சுந்தரராஜன் இவர்களின் பணி மகத்தானது. ஏதோ நானும் இவர்களுடன் இராமபிரானுக்கு அணில் சேவை செய்ததுபோல ஈடுபடுத்திக் கொள்ளும் பாக்கியம் கிடைத்தது பூர்வ ஜென்மாவில் செய்த புண்ணியம்தான்.