இன்று காலையில் தினமலர் பேப்பரில் ஒரு செய்தி.கிருஷ்ணா நதித் தண்ணீர் சென்னை வந்து புழலேரி நிறைந்தது. புழலேரி நிறைந்ததோ இல்லையோ ஆனால் டிஸெம்பர் 26ஆம்தேதியன்று மாலை நாரத கான சபாவில் இருந்த ரசிகர்கள் கிருஷ்ணாவின் சங்கீத பிரவாகத்தில் முழுகி மனது நிறைந்தவர்களாக ஆனார்கள்.
மணி4.30க்குத்தான் கச்சேரி ஆனால் 4.15க்கே ஹால் நிரம்பி வழிந்தது.4.40(10 நிமிடம் லேட்)க்கு கரகோஷத்துடன் கச்சேரி ஆராம்பம். அவருக்கு பக்காபலாமாக திரு. வரதராஜன் வயலின்,கரைக்குடி திரு. மணி மிருதங்கம்,திரு.சுரேஷ் கடம் பக்கபலமாக வாத்தியக்காரர்கள். நல்ல ஜமாவுடன் "சாமி தயாசூடா... என்ற கேதரகௌள வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம் அடுத்து வந்தது"வினதா சுத வாஹனா ச்ரி ராமா" என்ற ஜயந்தசேனா ராகத்தில் அமைந்த கிருதி. இந்த மாதிரி புதிய ராகங்களையும் கிருதிகளயும் பல வித்வான்கள் தொடுவதே இல்லை நமக்கு ஏன் வம்பு என்று.ஆனால் திரு. கிருஷ்ணா இதையும் லாவகமாக எடுத்து அருமையாகப் பாடி ரசிகர்களை குஷிப் படுத்தினார்
அடுத்தது வந்தது யதுகுல காம்போதி.ஒரு 20 நிமிஷம் நாரத கான சபா கிருஷ்ணா கான சபா ஆகிவிட்டது. அதாவது கிருஷ்ணா கான மழைதான். அதனுடன் கொஞ்சி விளையாடி யதுகுலகாம்போதியின் முழு ராகஸ்வரூபத்தையும் கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு சந்தேகமே வராதமாதிரி வெளிச்சம் போட்டு காட்டி விட்டார். திரு. வரதராஜனும் அப்படியே அதை வாங்கி அதே நெளிவு சுளிவுகளுடன் திருப்பிக் கொடுத்து தன் கணக்கை சரி பண்ணி விட்டார். எடுத்துக்கொண்ட கிருதியும் மறைந்த திரு.ஜி.என்.பி யின் "பரம கிருபா சாகரி பாஹி பரமேஸ்வரி".பின்னே கேட்கவேண்டுமா வெற்றிக்கு.
அதன் பின்னர் ஹிந்தோளவசந்தம் ராகத்தில் "சந்தான ராமஸ்வமினம்' என்ற கிருதியை துரித காலத்தில் சுருக்கமாக சுறு சுறுப்புட்ன வழங்கி விட்டு மெய்ன் ராகமான கீரவணிக்குத் தாவினார்.
கீரவாணியை மூன்று காலங்களிலும் விஸ்த்தாரமாக பாடி ஒரு அலசு அலசிவிட்டார்.பிருகாக்களும்,கோர்வைகளும் பின்னிவர ராகத்தின் லக்ஷ்ணங்களை அழகாக படிப்படியாக மேலே கொண்டு போய் "அவுட் வாணம்" போல் வானவேடிக்கைதான் போங்கள்.தியகராஜரின் "கலிகியுண்டே கதா" தான் கீர்த்தணை.நிரவல்,அதைத்தொடர்ந்து வந்த ஸ்வரப்பிரஸ்தாரங்களும் கீரவாணியை கச்சேரியின் ரகாof the day ஆக மாற்றிவிட்டது.
கரைக்குடி திரு. மணி தாள வாத்தியத்தின் மதிப்பை உயர்த்தியவர்.பரம ஞானஸ்த்தர்,நல்ல அனுபவசாலி,பாடகர்களுக்கும் பாட்டிற்கும் போஷித்து வாசிக்கும் வல்லமை படைத்தவர். அன்று அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தில் அவரது கை விரல்களில் நெருப்பு பொறி பறந்தது. அப்படி ஒரு லய வாசிப்பு. அன்று அவர் வைத்த மொஹராக்களும்,ப்ரன்களும்,முத்தாய்ப்பும் மற்றும் தாளப்பங்கீடும் அலாதி முத்திரையை பதித்தது.இருந்தாலும் மிருதங்கத்தின் நாதத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஆனால் கடம் திரு சுரேஷ் தன்னுடைய பங்குக்கு தனியில் தனிக்கொடி நாட்டி சாதித்துவிட்டார். என்ன நாதம் ஐய்யா அது,இன்னும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கிறது கச்சேரியின் ஆரம்பம் முதல் கடைசிவரை கச்சிதமான சபையோரைக் கவர்ந்த வாசிப்பு.
திரு கிருஷ்ணா பின்னர் சஹாணாவை ராகத்தை எடுத்துக்கொண்டு ஒரு மினி ராகம் தானம் பல்லவி பாடி அவையோரின் கரகோஷத்தையும். ஆஹாக்களயும்,உச்சு உச்சுக்களையும் ஏராளமக பெற்றுக்கொண்டார்.பல்லவி எளிமையானது"வடிவேலனை நிதம் போற்றுவொம். வையம் எல்லாம் அருள்புரிந்து காக்கும்...." அன்றைய கச்சேரியை மதுவந்தி ராகத்தில் சதாசிவ பிரும்மேந்திரரின் "ஸ்ர்வம் பிரும்ம மயம்" என்ற கிருதியுடனும் மற்றும் ரசிகர்களின் மனதை உருகச்செய்து உருகிபடிய 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம்" என்ற பெஹாஹ் ராகத்தோடு முடித்துக் கொண்டார்
வயலின் வாசித்த திரு வரதராஜனைப் பற்றி ஒரு வார்த்தை. ஆரம்பமுதல் தலையைக்குனிந்து கொண்டு வயலின் நாதம் எங்கிருந்து வருகிறது என்ற சந்தேகம் வருகிறமாதிரி அப்படி ஒரு அடக்கமான வாசிப்பு.பாடகரை நிழல் போலத்தொடர்ந்து அனுசரனையான வாசிப்பு.பாடகர் எந்தப் பிடி கொடுத்தாலும் இந்தா 'பிடி" என்று அதே வேகத்தில் திருப்பி வழங்கும் அலட்டல் இல்லாத வாசிப்பு. நல்ல ஒரு முழு நிறைவுள்ள கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினேன்.