Saturday, September 30, 2006

வாணி.... வாகதீஸ்வரி...வரம் அருள்வாய்...


வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வேபிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.


வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.


கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.


வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல் தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்; கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்! உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்; கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டைகேட்க செல்லவும் இங்கே

Thursday, September 28, 2006

சங்கீத... ஞானமும்... பக்தியும்...



சங்கீத உலகத்தில் திரு. தியாகராஜஸ்வாமிகளைத் தெரியாதவர் இருக்கமுடியாது.ராமபிரான்மீதும் சீதாதேவியின்மீதும் அளவற்றபக்திகொண்டு அதன் பயனாக எளிமையான பாடல்களை சுந்தரத்தெலுங்கில் பாடியவர்.நமக்கு அவை பாடல்களாகத் தோன்றினாலும் அவை உண்மையில் அவருக்கும் ராமருக்கும் இடையே நடந்த உரையாடல்கள்.காசியில் மரிப்பவர்களின் காதில் சிவபெருமான் ராம நாமத்தைச் சொல்லி அவர்களை சொர்கத்திற்கு அழைத்துச்செல்வதாக புராணங்கள் கூறுகின்றன.
அதேபோல், நமது தியாகராஜரும் திருவய்யாற்றில் உள்ள ஐய்யாறாப்பன் என்கிற பிரணதார்த்திஹரன்,அறம்வளர்த்த நாயகி என்கிற தர்மஸம்வர்த்தனி ஆலயத்தில் சிவன் சந்நிதியில் ஒரு கோடி ராமஜபம் செய்து சித்தி பெற்றவர்.
பல வருடங்களக சங்கீதத்தை கேட்டு அதனால் விளைந்த கேள்வி ஞானத்தினால் சில பாடல்களுக்கு விளக்கம் சொல்லாம் என்று முயற்சிக்கிறேன்.இடைஇடையே பத்திராசல ராமதாசர்,அருணாசலக்கவிராயார்,அருணகிரியார் போன்றவர்களும் ராமனை எப்படி அனுபவித்தார்கள் என்ற ஒப்பு நோக்குதலையும் அளிக்கப்படும்.
நண்பர்கள் தங்களது கருத்துக்களையும்,குறைகளையும்,கிண்டல்களையும்,ஆப்புகளையும் வழக்கம் போல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முழுமுதற்க்கடவுளாம்,விநாயகனை தொழுது, வணங்கி ஆரம்பம்.

ராகம்; சௌராஷ்டிரம் ஸ்ரி கணபதினி

ஸ்ரி கணபதினி ஸேவிம்பராரே
ச்ரித மான்வுலாரா (ஸ்ரி)

வக்கதிபதி ஸுபூஜல் ஜேகொனி
பாக நடிம்புசுகொனு வெடலின் (ஸ்ரி)

பனஸ நாரிகேளாதி ஜம்பூ
பலமுலனாரகிஞ்சி
கனதரம்புகனு மஹிபை பதமுலு
கல்லு கல்லன நுஞ்சி
அனயமு ச்ரி ஹரி சரண்யுகமுலனு
ஹிருதயாம்புஜமுன நுஞ்சி
வினயமுனனு த்யாகராஜ வினுதுடு
விவதகதுல தித்தளங்குமனி வெடலின (ஸ்ரி)

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல மனிதர்களே வரங்களை அள்ளித்தரும்
கணபதியை வணங்கிச்செல்ல வாருங்கள்

வாக்குக்கு அதிபதியான ஸரஸ்வதியின் கணவரான பிரும்மாவினாலும் மற்ற தேவர்களாலும் மிக நேர்த்தியகச் செய்யப்பட்ட பூஜையை ஏற்றுக்கொண்டு அதனால் உண்டாகிய சந்தோஷத்தால் மனமுவந்து தானே அழகாக நடனம் ஆடிக்கொண்டுவரும் நர்தன கணபதியை வணங்குவோம் வாருங்கள்


எளியதகவும் எங்கும் சிரமமில்லாமலும் கிடைக்ககூடிய பலாக்காய், தேங்காய்,நாகப்பழம் போன்றவற்றை அமுதமான உணவாகக்கொண்டும்,இந்தப்புண்ணிய பூமியின் மீது கால்களில் உள்ள சலங்கைகள் "ஜல் ஜல்" என்று ஸ்ப்தம் செய்ய நடனமாடிக்கொண்டும் அல்லும் பகலும் அனவரதமும் சரணாகதவத்சலனான மால்மருகனான முருகனின் மாமனாகிய மஹா விஷ்ணுவின் பதாரவிந்தங்களை தன்னுடைய ஹிருதயத்தில் வைத்துக்கொண்டும்,மிக விநயமுள்ள இந்த தியாகராஜனால் வணங்கப்படிகின்றவரும்,விதவிதமான தாளகதிகளுக்கு ஏற்ப "தித்தளாங்கு" என மலர்ந்தமுகத்துடன் ஆடிக்கொண்டு வரும்
அந்த கண்பதியை ஸேவிப்போம் வாருங்கள் நல்ல மனிதர்களே.


தியாகராஜரின் அழைப்பை ஏற்று வாருங்கள்! வணங்குவோம் கணபதியை! .


பாடலைக் கேட்க இங்கே செல்லவும்

Tuesday, September 26, 2006

அவனிடம் இல்லாதது... நம்மால் அவனுக்கு தரமுடிந்தது...

ஓர் அடியார் ஆண்டவனைப் பார்க்க வருகிறார்.பெரிய மனிதர்களை பார்க்கப் போகும்போது ஏதாவது கொடுக்க வேண்டுமே! என்ன கொடுக்கலாம் என்று யோஜனை. கோவிந்தா நீ இருப்பதோ பாற்கடல் என்னும் ரத்னாகரம் அதிலில்லாத மாணிக்கமே கிடையாது. சரி பக்கத்தில் பார்த்தால் சாட்சாத் மஹாலக்ஷிமி அமர்ந்து இருக்கிறாள் அப்படி இருக்கும் போது வேறு செல்வம் எது வேண்டுமுனக்கு. யோஜித்து கடைசியில் சொல்லுகிறார்அப்பா உன்னிடத்தில் இல்லாதது ஒன்று இருக்கிறது.என்ன தெரியுமா ? உன்னுடைய மனசு இருக்கு பாரு அது தான் உன்னிடத்தில் கிடையாது. ஏன் தெரியுமா அதைத்தான் நீ அடியார்கள் மனத்தில் வைத்துவிட்டாயே. நீயே சொல்லியிருக்கிறாய் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை. நான் வசிப்பது யோகிகளின் ஹிருதயத்தில்தான் என்று.ஆகவே அங்கே ஒரு காலி இடமும் உனக்கு தேவையும் இருக்கிறது.ஆகையால் இதோ என் ஹிருதயத்தை உனக்கு அர்பணிக்கிறேன் எடுத்துக்கொண்டு என்னை உன்னுடையவனாக்கு.இதை ஒரு நண்பரின் பதிவில் பின்னுட்டமாக இட்டிருந்தேன். பிறகு ஏன் அதையேபதிவாகப் போட்டு உங்களிடமிருந்து (புண்ணியத்தை) வாங்கிக்கட்டிக்கொண்டால் என்ன என்று தோன்றியது

Friday, September 22, 2006

உயிர்கள் இடத்தில் அன்பு வேணும் இது வாழும் முறையடி பாப்பா

தோற்றம் 10/12/1995 மறைவு16/09/2004
அன்று மாலை எங்கள் வீட்டுக்கு அவள் புதிய வரவு.சிறிய கண்ணை சிமிட்டிக்கொண்டு பயத்துடன் எங்களை பரிதாபாமாக பார்த்தது.அன்றிலிருந்து அவள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டாள்.என் மூன்று குழந்தைகளுக்கும் அவளோடு விளையாடுவதும்,போஷிப்பதும்தான் முக்கிய வேலையாகி விட்டது, அதிலும் என் மூத்த மகனுக்கு அதுவேதான் உலகம் என்று ஆகிவிட்டது. அவளுக்கு டெடி என்று பெயர்வைத்தோம்.அவளும் அவர்களுக்கு சமானமாக விளையாடும்.
ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்து விட்டாள்,புதிய வரவுகளுக்கு சிம்ம சொப்பனமாகிவிட்டாள்.இருந்தாலும் எங்களுக்கு, காவல் காப்பாது,பேப்பர் கொண்டு தருவது போன்ற சிறுவேலைகளை செய்துவிட்டு பிஸ்கெட்டுக்காக எங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பாள்.தரவில்லையென்றால் அதிகாரத்தோடு கேட்டு வங்கிக்கொள்ளுவாள். சொந்தப் பெண் போலவே அதற்கும் பிரசவம் பார்த்து அதன் 9 குட்டிகளையும் காலேஜில் முக்கிய பரிக்ஷை இருந்தாலும் மிக நேர்த்தியாகப் பார்த்துக்கொண்டான் என் மகன்.அதன் குட்டிகளை பிரிய மனமில்லாமல் நல்ல ஆளாகப் பார்த்து தானம் செய்தான்.
வாடகை வீட்டில் இருந்ததால் சில சமயம் வீட்டு உரிமையாளருக்கும் எங்களுக்கும் சிக்கல் வந்தது.நாங்களும் வீடு மாறிக்கொண்டே இருந்தோம் அவளும் எங்களுடன் வந்து கொண்டே இருந்தாள் நாங்களும் அவளுக்காக சில தியாகங்களைச்செய்ய வேண்டியதாயிற்று. குடும்பத்தில் எல்லொரும் ஒரே சமயத்தில் வேளியே போகமாட்டோம்.அப்படியே போனாலும் மாலை சீக்கிரமெ வந்துவிடுவோம். ஆனால் இதுஎல்லாம் அவள் எங்களிடம் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடுஇணை இல்லாதது. அலுவல் காரணமாக இரவு 3 மணிக்கும் 4 மணிக்கும் வீடு திரும்பினாலும் வாசலிலேயே காத்துக்கொண்டு இருப்பாள்.விடுமுறை வந்து விட்டால் டெல்லி,மும்பையிலிருந்து அவளுடன் விளையாட குழந்தைகள் கூடிவிடுவார்கள்.
இப்படி அவள் எங்களுடன் ஒருமித்து இருந்தபோது திடீரென்று ஒரு நாள் மாலை எனக்கு வீட்டிலிருந்து போன் "அப்பா டெடிக்கு உடம்பு சரியில்லை என்னமோ பன்னறது சீக்கிரம் வா".மிகமுக்கிய மீட்டிங்கில் இருந்த நான் 8 மணிக்குதான் போக முடிந்தது அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.நீண்ட நாள்களுக்கு பிறகு நான் வாய் விட்டு ஓ என்று கதறினேன்.,என் குடும்பத்தாரும் அழுதனர்.அவளூடைய இறுதியாத்திரையை முடித்துவிட்டு கனத்த மனத்துடன் வீடு திரும்பினோம். சிங்கபூரிலிருந்த என் மகனை தேற்ற முடியவில்லை.
எனக்கு அன்பு ,பாசம்,விஸ்வாசம் இவைகள் என்னவென்று போதிப்பதாவதற்க்காவே என்னுடன் 8 வருடங்கள் இருந்து விட்டுச் சென்றதோ?இரண்டு வருடங்கள் ஆனாலும் மறக்க முடியவில்லை.டெடி ஆன்மா சாந்தி அடையட்டும்.

Saturday, September 16, 2006

மஹாகவி காளிதாசன்

விதியை.... மதியால்..வெல்லலாம்



காளிதாசனுக்கு அறிமுகம் தேவையில்லை.உபமான..உபமேயத்திற்கு அவன் தான் சக்ரவர்த்தி.உபமான--உபமேயம் என்பது தெரியாத விஷயத்தை தெரிந்த விஷயத்தின் மூலமாக தெரிந்து கொள்வது. காளிதாசன் மீதும் அவனது புலமைமீதும் எல்லா கவிகளுக்கும் பொறாமை,அவனைபழிவாங்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தனர். மகாராஜாவிற்கு குழந்தை பிறந்.தது. எல்லோரும் குழ்ந்தயையும் ராஜனையும் பாடி பரிசுபெற்றுச் செல்வது வழக்கம். எல்லாக்கவிகளும் ஒன்றுகூடி சதி செய்து காளிதாசனை பழிவாங்க முடிவு செய்தனர்.
மன்னருடைய குழந்தை மன்னரைவிட புத்திசாலியா என்று கேட்கவேண்டும்.காளிதசன் ஆம் என்ற முறையில் உபமானம் சொன்னாலும்,இல்லை என்ற முறையில் சொன்னாலும் ராஜனையோ அல்லது ரஜகுமரனையொ பழித்துப்பேசிய ராஜ குற்றத்துக்கு ஆளாகவேண்டும்.அரசனிடமிருந்து நிச்சயம் தண்டனை கிடைக்கும்
காளிதாசன் முறை வந்தது. மஹாரஜாவும் காளிதாசனை பார்த்துக்கேட்டான் "என் இனிய நண்பரே என்குழந்தை எப்படி இருக்கிறது" என்று கூறி ஆசிவழங்கச்சொன்னான். காளிதேவியின் அருளால் சதியைஉணர்ந்த காளிதாசன் சொன்னான்.
"தீப இப ப்ரதீபாது" அரசே குழந்தை எப்படி இருக்கிறான் தெரியுமா ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கை ஏற்றிவைத்தால் ஒளி எப்படி ஒரே மாதிரி ப்ரகாசமாக இருக்குமோ அது போலத்தான் இருக்கிறான் என்றான். கவிங்ஞர்கள் வாயடைத்து நிற்க காளிதாசனுக்கு அரசன் நிறைய வெகுமதி அளித்தான்

கொசுறு

ஐயர்களுக்கும் நாயக்கர்களுக்கும் எப்போதும் எதாவது ஒரு கச்சேரியில் (கோர்ட்டில்)சண்டையும் வழக்கும் நடந்து கொண்டு இருக்கும் 1960 களில்.ஆனால் எனக்கு தெரிந்தவரை ஒரே ஒரு கச்சேரியில் மட்டும் இருவரும் சமாதானமாக சண்டையில்லாமல் .கணக்கு வழக்குகள் சரியாக இருந்து பரிமளிக்கச்செய்தனர். அது எந்த கச்சேரி தெரியுமா.?
இந்த சங்கீத கச்சேரிதான்.
மதுரை மணி ஐயர்---வாய்ப்பாட்டு
கோவிந்தசாமி நாயக்கர்---வயலின்

Saturday, September 02, 2006

சங்கீத.... ஜாதி....முல்லை(3)

விடிய..... விடிய.....இராமாயணம் ....
இந்த வருஷம் ராமநவமிக்கு அந்த பெரிய வித்வானின் கதாகாலட்சேஷபம் என்று சங்கீத சபை முடிவெடுத்தது.அந்த ஊர் பெரிய மனிதரும் செல்வந்தருமான சபைத்தலைவர் தாமாகவே முன்வந்து முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டார்.மொத்தம் ஒன்பது நாள் இராமாயணம் விரிவாக சொல்ல ஒத்துக்கொண்டார்.
நாளும் வந்தது. பாகவதரும் வந்து சேர்ந்தார்.அவருக்கு எல்லாரையும் அறிமுகம் செய்து முக்கியமாக சபைத்தலைவரையும் அவரது பெரிய மனதையும், தாராளகுணத்தையும்பற்றி எடுத்துச் சொன்னார்கள். பாகவதரும் தலைவரை மெச்சி அவர் ஒன்பது நாளும் வரவேண்டும் என்று விண்ணப்பித்தார்.தலைவரும் தானும் தன் மனைவியும் 9 நாளும் வருவதாகச் சொன்னார்.
முதல்நாள் மாலை நல்ல கூட்டம். தலைவரும் மனைவி சகிதம் 6.30 வந்து முதல் வரிசையில் நடுவில் அமர்ந்து கொண்டார்.பாகவதர் இராமாயண்த்தை ஆரம்பித்து விமரிசையாக பிரசங்கம் செய்தார். கூட்டமும் அவ்வப்போது கரகோஷத்தையும் அளித்தது. தலைவரும் ஒரு வினாடிகூட விரயம் செய்யாமல் முழுவதும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கதையை கேட்டுக்கொண்டு வந்தார்.இப்படியே எட்டு நாட்கள் கதை விமரிசையாக சென்றது.தலைவரும் தம்பதி சமேதராய் தினமும் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை உன்னிப்பாக கேட்டுவந்தார்.
ஒன்பதாம் நாள் வந்தது. அன்றுதான் கடைசிதினம்.பாகவதரும் பட்டாபிஷேகத்தோடு கதையை முடித்தார்.எல்லோரும் பாகவதரை புகழ்ந்து பேசினார்கள். பாகவதரும் தன் பங்குக்கு இந்த 9 நாட்கள் சொன்ன கதையில் யாருக்கவது ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்று சொன்னார்.
நமது தலைவர் உடனே மெதுவாக எழுந்து பவ்யமாக "அய்யா நான் ஒரு சிறு சந்தேகம் கேட்கலாமா" என்றார்.பாகவதரும் மிகவும் சந்தோஷமடைந்து சொன்னார்"யார் கேட்டாலும் சொல்லுவேன் அதுவும் நீங்கள் தினமும் ஆரம்பமுதல் கடைசிவரை 9 நாளும் வந்திருந்து ரொம்ப சிரத்தையோடு கேட்டு இருக்கீங்க உங்களுக்கு தெளியவைப்பதை விட வேறு நல்ல காரியம் உண்டா" அப்படின்னார்.தலைவர் கேட்டார் "இத்தனை நாளா கேட்ட ராமாயணத்திலே ஒரே ஒரு சந்தேகம்தான். இதிலே ராமன் ராட்சஷனா?இல்லை ராவணன் ராட்சஷனா? அது ஒன்னுதான் புரியலை." பாகவதர் இதைக் கேட்டவுடன் மயக்கம் போட்டு விழாத குறைதான், இருந்தாலும் சாமாளித்துக்கொண்டு கூறினார் "ராமாயணத்திலே ராமரும் ராட்சஷன் இல்லை,ராவணனும் ராட்சஷன் இல்லை. இத்தனை நாளும் உங்களுக்கு ராமாயணம் சொன்னேன் பாருங்கோ நான் தான் ராட்சஷன்"

கொசுறு
அரசியல்வாதிக்கு என்ன ராகம் பிடிக்கும்.இந்த இரண்டு ராகமும் சேர்ந்தது .
நாட்டை, சுருட்டி