Sunday, December 31, 2006

புத்தாண்டே வருக...வருக புன்னகை பூக்கும் நாட்களைத் தருக

வலையுலக நண்பர்களுக்கு பொலிக... பொலிக... புத்தாண்டு 2007

வாழ்க...வாழ்க... வளமுடன்

குடும்பத்தில் நல்லவை நடந்து மகிழ்ச்சிப் பொங்கட்டும்.

என்றும் அன்புடன் தி.ரா.ச.(TRC)

புத்தாண்டுக்கு என்ன எழுதலாம் என்று தேடியபோது
கண்ணில் பட்டு கருத்தைக் கவர்ந்தது
அவள் விகடனில் வந்த ஒரு கவிதை.:-

தண்ணீர் பஞ்சம் தொலைய வேண்டும்
தங்கம் விலை குறைய வேண்டும்

அழுகை இல்லா சீரியல் வேண்டும்
அழாமல் பிள்ளை சாப்பிட வேண்டும்

வாரா வாரம் அவுட்டிங் வேண்டும்
வஞ்சனை இல்லா ஷாப்பிங் வேண்டும்

சண்டை போடாத சர்வன்ட் வேண்டும்
சமையலில் உதவும் ஹஸ்பண்ட் வேண்டும்

வாக்கிங் இன்றி மெலிய வேண்டும்
வல்கர் சினிமா ஒழிய வேண்டும்

தொடர்பு விட்ட தோழிகள் வேண்டும்
தொல்லை தராத சொந்தங்கள் வேண்டும்

மயக்கம் இல்லாத மசக்கை வேண்டும்
மதியம் குட்டித் தூக்கம் வேண்டும்

மளிகைச் செலவு குறைய வேண்டும்
மாசக் கடைசியிலும் மகிழ்ச்சி வேண்டும்

வேண்டும் வேண்டும் இறைவா--என்
ஏக்கங்கள் எல்லாம் தீர்ப்பாயா
புன்னகை ததும்பும் வாழ்வை--நீ
புத்தாண்டு வரமாய் சேர்ப்பாயா!

நன்றி:- அவள் விகடன் எழுதியவர்:- மிஸஸ்.எக்ஸ்.

இது முற்றுப்பெறவில்லை நீங்களும் உங்கள் பங்குக்கு புதிய வருடத்தில் உங்கள் விருப்பங்களைச் எதிர்பார்ப்புக்களைச் சேர்க்கலாம்.
இதோ என் பங்குக்கு:-

குப்பை இல்லாத சென்னை வேண்டும்
தொப்பை இல்லாத போலீஸ் வேண்டும்

Friday, December 29, 2006

வைகுண்ட ஏகாதசி


நாளை வைகுண்ட ஏகாதசி. சீரி ரங்கத்தில் கூட்டம் உளுந்து போட்டால் உளுந்து விழாது. அரங்கனைக்காண பக்தர்கள் அலை மோதுவார்கள். அரங்கன் சொர்கவாசல் தரிசனமும் பரமபத சேவையும் காண ஆயிரம் கண்போதாது. அதைவிட முக்கியம் தாயார் ரங்கநாயகி படிதாண்டா பத்தினி வெளியே வந்து அரங்கனை காணும் காட்சி இருக்கிறதே அதை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம். நம்மால் அந்த கூட்டத்தில் போய் பார்க்க முடியுமா? அதனால் இங்கேயே பார்த்துவிடுங்கள்.
ஆமாம் அரங்கன் ஏன் பள்ளிகொண்ட நிலையிலேயே இருக்கிறான். காரணம் தெரியவேண்டுமா அருனாசல கவிராயரைக் கேளுங்கள். " ஏன் பள்ளீ கொண்டீர் ஐய்யா ச்ரீ ரங்கநாதா" என்ற பாட்டில் விவரமாகக் கூறுகிறார். அதை திருமதி.அருணா சாய்ராம் இசையின் மூலமாக கேட்கலாமா? பாட்டைக் கேட்க இங்கே

'><"a >

Wednesday, December 27, 2006

கிருஷ்ணப்பிரவாஹம்.

இன்று காலையில் தினமலர் பேப்பரில் ஒரு செய்தி.கிருஷ்ணா நதித் தண்ணீர் சென்னை வந்து புழலேரி நிறைந்தது. புழலேரி நிறைந்ததோ இல்லையோ ஆனால் டிஸெம்பர் 26ஆம்தேதியன்று மாலை நாரத கான சபாவில் இருந்த ரசிகர்கள் கிருஷ்ணாவின் சங்கீத பிரவாகத்தில் முழுகி மனது நிறைந்தவர்களாக ஆனார்கள்.

மணி4.30க்குத்தான் கச்சேரி ஆனால் 4.15க்கே ஹால் நிரம்பி வழிந்தது.4.40(10 நிமிடம் லேட்)க்கு கரகோஷத்துடன் கச்சேரி ஆராம்பம். அவருக்கு பக்காபலாமாக திரு. வரதராஜன் வயலின்,கரைக்குடி திரு. மணி மிருதங்கம்,திரு.சுரேஷ் கடம் பக்கபலமாக வாத்தியக்காரர்கள். நல்ல ஜமாவுடன் "சாமி தயாசூடா... என்ற கேதரகௌள வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம் அடுத்து வந்தது"வினதா சுத வாஹனா ச்ரி ராமா" என்ற ஜயந்தசேனா ராகத்தில் அமைந்த கிருதி. இந்த மாதிரி புதிய ராகங்களையும் கிருதிகளயும் பல வித்வான்கள் தொடுவதே இல்லை நமக்கு ஏன் வம்பு என்று.ஆனால் திரு. கிருஷ்ணா இதையும் லாவகமாக எடுத்து அருமையாகப் பாடி ரசிகர்களை குஷிப் படுத்தினார்

அடுத்தது வந்தது யதுகுல காம்போதி.ஒரு 20 நிமிஷம் நாரத கான சபா கிருஷ்ணா கான சபா ஆகிவிட்டது. அதாவது கிருஷ்ணா கான மழைதான். அதனுடன் கொஞ்சி விளையாடி யதுகுலகாம்போதியின் முழு ராகஸ்வரூபத்தையும் கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு சந்தேகமே வராதமாதிரி வெளிச்சம் போட்டு காட்டி விட்டார். திரு. வரதராஜனும் அப்படியே அதை வாங்கி அதே நெளிவு சுளிவுகளுடன் திருப்பிக் கொடுத்து தன் கணக்கை சரி பண்ணி விட்டார். எடுத்துக்கொண்ட கிருதியும் மறைந்த திரு.ஜி.என்.பி யின் "பரம கிருபா சாகரி பாஹி பரமேஸ்வரி".பின்னே கேட்கவேண்டுமா வெற்றிக்கு.

அதன் பின்னர் ஹிந்தோளவசந்தம் ராகத்தில் "சந்தான ராமஸ்வமினம்' என்ற கிருதியை துரித காலத்தில் சுருக்கமாக சுறு சுறுப்புட்ன வழங்கி விட்டு மெய்ன் ராகமான கீரவணிக்குத் தாவினார்.

கீரவாணியை மூன்று காலங்களிலும் விஸ்த்தாரமாக பாடி ஒரு அலசு அலசிவிட்டார்.பிருகாக்களும்,கோர்வைகளும் பின்னிவர ராகத்தின் லக்ஷ்ணங்களை அழகாக படிப்படியாக மேலே கொண்டு போய் "அவுட் வாணம்" போல் வானவேடிக்கைதான் போங்கள்.தியகராஜரின் "கலிகியுண்டே கதா" தான் கீர்த்தணை.நிரவல்,அதைத்தொடர்ந்து வந்த ஸ்வரப்பிரஸ்தாரங்களும் கீரவாணியை கச்சேரியின் ரகாof the day ஆக மாற்றிவிட்டது.

கரைக்குடி திரு. மணி தாள வாத்தியத்தின் மதிப்பை உயர்த்தியவர்.பரம ஞானஸ்த்தர்,நல்ல அனுபவசாலி,பாடகர்களுக்கும் பாட்டிற்கும் போஷித்து வாசிக்கும் வல்லமை படைத்தவர். அன்று அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தில் அவரது கை விரல்களில் நெருப்பு பொறி பறந்தது. அப்படி ஒரு லய வாசிப்பு. அன்று அவர் வைத்த மொஹராக்களும்,ப்ரன்களும்,முத்தாய்ப்பும் மற்றும் தாளப்பங்கீடும் அலாதி முத்திரையை பதித்தது.இருந்தாலும் மிருதங்கத்தின் நாதத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆனால் கடம் திரு சுரேஷ் தன்னுடைய பங்குக்கு தனியில் தனிக்கொடி நாட்டி சாதித்துவிட்டார். என்ன நாதம் ஐய்யா அது,இன்னும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கிறது கச்சேரியின் ஆரம்பம் முதல் கடைசிவரை கச்சிதமான சபையோரைக் கவர்ந்த வாசிப்பு.

திரு கிருஷ்ணா பின்னர் சஹாணாவை ராகத்தை எடுத்துக்கொண்டு ஒரு மினி ராகம் தானம் பல்லவி பாடி அவையோரின் கரகோஷத்தையும். ஆஹாக்களயும்,உச்சு உச்சுக்களையும் ஏராளமக பெற்றுக்கொண்டார்.பல்லவி எளிமையானது"வடிவேலனை நிதம் போற்றுவொம். வையம் எல்லாம் அருள்புரிந்து காக்கும்...." அன்றைய கச்சேரியை மதுவந்தி ராகத்தில் சதாசிவ பிரும்மேந்திரரின் "ஸ்ர்வம் பிரும்ம மயம்" என்ற கிருதியுடனும் மற்றும் ரசிகர்களின் மனதை உருகச்செய்து உருகிபடிய 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம்" என்ற பெஹாஹ் ராகத்தோடு முடித்துக் கொண்டார்

வயலின் வாசித்த திரு வரதராஜனைப் பற்றி ஒரு வார்த்தை. ஆரம்பமுதல் தலையைக்குனிந்து கொண்டு வயலின் நாதம் எங்கிருந்து வருகிறது என்ற சந்தேகம் வருகிறமாதிரி அப்படி ஒரு அடக்கமான வாசிப்பு.பாடகரை நிழல் போலத்தொடர்ந்து அனுசரனையான வாசிப்பு.பாடகர் எந்தப் பிடி கொடுத்தாலும் இந்தா 'பிடி" என்று அதே வேகத்தில் திருப்பி வழங்கும் அலட்டல் இல்லாத வாசிப்பு. நல்ல ஒரு முழு நிறைவுள்ள கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினேன்.

Wednesday, December 20, 2006

திரு. பாபநாசம் சிவன் தமிழ்த் தியாகய்யா...(4)

சிறுவயது முதல் எனக்கு பிடித்த பாடல் இந்தப்பதிவில் உள்ளது.இரும்புத்திரை என்ற படத்திற்காக எழுதப்பட்ட பாடல்.கரஹரப்ப்ரியா ராகத்தில் அமைந்த பாடல் இது.(அம்பி சொல்வது :- என்ன சார் நீங்க எதோ ராகம்னு சொல்லறீங்க ஆனால் பாதிதான் புரியரது பிரியாங்கறது கேட்டா பெயரா இருக்கு ஆனா கரஹரா புரியலைஎதோ சாப்பிட்ட பேர் மாதிரி இருக்கு)மாதவிப் பெண்மயிலாள் தோகை விரித்தாள் நல்ல மையிட்ட கண்களுக்கு.... என்ற பாடல் இருமலர்கள் படத்தில் வரும் இதுவும் கரகஹரப்ரியா ராகம்தான்.
மயிலை கற்பகவல்லியின் முன்பு நிற்கும்போதெல்லாம் இந்தப் பாட்டின் முதல் இரண்டு வரிகளை என் வாய் முனுமுனுக்கும்."என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேஎன் அன்னையே உமையே-- நீ என்ன செய்தாலும்..."திருமணத்திற்கு பிறகும் இந்தப்பாட்டுதான் பிடித்தமான பாட்டு. என்ன மூன்றாவது அடியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்"என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேசினந்தென்னை அடித்தாலும், பரிந்தென்னை அணைத்தாலும்என் அன்னையே உமாவே... நீ என்ன செய்தாலும் "


படத்தில் இந்தப் பாடலை பாடியவர்கள் தாயும் மகளும். மகள் திருமதி. வைஜயந்திமாலா அவர்கள்.வைஜயந்தியின் தாயாக நடித்தவர் யார் என்று கூறுங்கள் பார்க்கலாம். விடையை பிறகு பின்னுட்டத்தில் தருகிறேன்.இனி பாட்டைப் பார்ப்போம்

ராகம்:-கரஹரப்பிரியா தாளம்: ஆதி
பல்லவி

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே-- என்னை நீ
அனு பல்லவி
சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சினந்து என்னை அடித்தாலும் பரிந்து என்னை அணைத்தாலும்....(என்ன) சரணம்
முன்வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட
மூடமதி கொண்டுன்னை நோவது என் பேதமை
என் விதியால் இடராயிரம் சூழினும்
எல்லாம் உன் திருவிளையாடல் என்று எண்ணி இனி...(என்ன) Papanasam Sivan: The Tamil Tyagarajar (4)

அனுமனைத் துதி மனமே...தினமே..

ஸ்ரீ ராம ஜெயம்
மாதவம் செய்த...
மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)

ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான் ---(மாதவம்)

கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)

நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்

இன்று ஹனுமத் ஜயந்தி

Wednesday, December 13, 2006

திரு.பாபநாசம் சிவன் --தமிழ்த்தியாகய்யா(3)

சிலசமயம் பாடல்கள் பாடியவர்களால் பெருமை பெறும். சில சமயம் படியவர்கள் பாட்டினால் பெருமை பெறுவார்கள்.பாடியவர்களாலும் பாட்டை எழுதியவர்களாலும் பாடல் பெருமை பெறும். அந்த மூன்றாம்வகையைச் சேர்ந்ததுதான் இந்தப் பாடல்.பசுக்களையும்(விலங்கினத்தையும்) குழந்தைகளையும் மயங்கச்செய்யும் கீதம்.மீரா படத்திற்காக திரு பாபநாசம் சிவன் எழுதி,எம்.ஸ் அம்மா அவர்கள் தன் இனிய குரலால் எல்லோரையும் கவர்ந்த பாடல்.இதற்கு இசை அமைத்தவர் திரு ஸ்.வி.வெங்கடராமன் என்று நினைக்கிறேன்.கல்லையும் கனிய வைக்கும் கீதம் உங்களையும் நிச்சியமாக கனியவைக்கும்.எம்.ஸ் அம்மாவின் பிறந்த நாள் அன்று போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அன்று வெளியூர் சென்று இருந்த காரணத்தால் முடியவில்லை. காற்றினிலே வரும் கீதம்

Wednesday, December 06, 2006

திரு.பாபநாசம் சிவன் --தமிழ்த்தியாகய்யா--(2)

திரு. பாபநாசம் சிவன் பாடல்கள் எளிய தமிழில் இருந்ததால் எல்லா தரப்பு மக்களையும் சென்று அடைந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.தமிழ் சினிமா முதலில் பேசாத படமாக இருந்து பின்பு பேசும் படமாக ஆனாலும் அதை காது கொடுத்து கேட்கும் படமாக ஆக்கியவர் திரு.சிவன் அவர்கள்

அவரது பல பாடல்கள் மனதைக்கவர்ந்தாலும் குறிப்பாக இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடிக்கும்.கண்ணனை வளர்த்த யசோதை என்ன தவம் செய்து இருக்கவேண்டும் என்பதை கொஞ்சி விளையாடும் தமிழில் அவர் வயலின் வித்தகர் லால்குடி திரு.ஜெயராமனுக்கவே எழுதிய பாடல் என்றால் மிகையாகது.இந்தப்பாடல் நடனத்திற்கும் மிகவும் பொருந்தும்.பாடலைப் பற்றி திரு ஜெயராமன் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.பின்னர் அவருடைய வயலின் வாசிப்புக்கு இந்தப்பாடலை திருமதி. ச்ரிநிதி சிதம்பரம்(இப்போது ச்ரிநிதி கார்த்திக்)நடனத்தை அழகாக ஆடி இருப்பதையும் பார்க்கலாம்.

ராகம்:--காபி பல்லவி தாளம்:--ஆதி

என்ன தவம் செய்தனை-- யசோதா
எங்கும் நிறை பரபிரும்மம் அம்மா என்று அழைக்க.........என்ன)
அனுபல்லவி


ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ...............(என்ன)

சரணம்

பிரமனும் இந்திர்னும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத் தாயே.............(என்ன)
சனாகதியர் தவயோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனிதமாதே எளிதில் பெற................(என்ன)

சரி இப்போது பாட்டை கண்டும் கேட்டும் அனுபவியுங்கள், நாளை அடுத்த பதிவில் சந்திக்கலாம்

Papanasam Sivan: The Tamil Tyagarajar (II)



பாபநாசம் சிவன் -தமிழ்த் தியாகய்யா.

Papanasam Sivan: The Tamil Tyagarajar (I)
தமிழ்த் தியாகய்யா திரு.பாபநாசம் சிவனுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.மிக எளிமையான பக்தி பாவம் ததும்பும் பாடலகளைத் தமிழ் உலகுக்கு தந்தவர் அவர்.சினிமாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து "மன்மத லீலயை வென்றார் உண்டோ", "ராதே உனக்கு கோபம் ஆகாதடி",போன்ற பாடல்களைத் தந்தவர்.அவரது வரலாறு இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்புக்கள் அதிகம் இல்லை.அவரைப்பற்றித் சிறிதுதெரிந்து கொள்வோமா.இன்று முதல் பாகம்.

Monday, December 04, 2006

வாழு.....வாழவிடு....


உலகத்தில் மிக வேகமாக அழிந்துவரும் விலங்கினத்தில் புலிதான் முதலிடம் வகிக்கிறது.வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி சீறிப்பாயும் இந்தப் புலி இனம் இப்படியே போயிக்கொண்டு இருந்தால் 2020யில் பார்க்கவே முடியாது என்று புலி இயல் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
1920களில் ஒரு லக்ஷ்மாக இருந்த இதன் எண்ணிக்கை இப்போது5000 முதல் 7000வரைதான் உள்ளது.முதலில் எட்டுவகை புலிகள் இருந்தது அதில் பாலி,கேப்சிகன்,ஜாவன் வ்கைகள் அறவே அழிந்த நிலையில் பெங்கால்,சைபீரியன்,இந்தோசைனா,சுமத்ரான்,தெற்குசைனா இந்த ஐந்து வகைகளும் வாழ்வதற்குப் போராடிக் கொண்டு இருக்கின்றன
இப்போது இந்தியாவில்600 முதல் 800வரைஎண்ணிக்கையில் புலிகள் இருந்து வருகின்றன.மனிதனின்சந்தோஷத்திற்காகவும்,விளையாட்டிற்காகவும் அதன் தோலுக்கவும் புலிகள் திருட்டுத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.புலிகளின் உணவுபெரும்பாலும் மான்,காட்டெருமை,மாடு,பன்றிதான்.ஆனால் வயதான வேட்டைக்குச் செல்ல முடியாத புலிகள்தான் மனிதனைத்தின்னும்.புலிகள் மனிதனைகண்டு அஞ்சி ஒடி ஓளிந்து கொள்ளும்.புலியினுடைய தோலை கள்ள மார்கெட்டில் USS$ 10000(Rs.4,50,00)க்கு விற்கப் படுகிறது.

வெள்ளைப் புலிகள் இந்தியாவில் மட்டும்தான் உருவக்கப்படுகின்றன.இயற்கையிலேயே கருப்பு வரிகளும் நீல நிறக்கண்களும் பார்க்க மிக அழகாகவும் அருகில் சென்றால் ஆபத்தை விளைவிக்கும் குணமும் கொண்டவை.தவிர்க்கப்பட்ட இனச்சேர்க்கையின் மூலமாகத்தான் இவைகள் உருவாகின்றன.
இந்த அரிய இனத்தை பாதுகாக்க வேண்டிய முயற்சிகளைச் செய்யுவோம்.இந்த அழகில் புலி இந்தியாவின் தேசிய மிருகம் வேறு.அதென்னவோ தெரியவில்லை நமக்கு தேசிய விலங்கு(புலி)தேசியப் பறவை(மயில்),தேசியத்தந்தை(மஹாத்மா காந்தி)இதெல்லாம் கொல்லுவதற்காத்தான் என்ற எண்ணம். அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு நாமும் வாழ்வோம் புலியையும் வாழவைப்போம்