சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
Sunday, October 28, 2007
காற்றினிலே வந்து காற்றினிலே கலந்த கீதம்..........
இந்த பதிவுக்கு விளக்கம் தேவையில்லை
A post that needs no elobration
Sunday, October 21, 2007
கொலு முடிந்தது (10)
மேலே உள்ள மூன்று படங்களும்தான் என்வீட்டு சுடாத கொலு
எருமை உருவம் கொண்ட அசுரன் மகிஷன். அவனது தொல்லை தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனது மிருகத்தன்மை கண்டு மும்மூர்த்திகளும் அஞ்சினர். தேவலோக தலைமைப் பதவிக்கு குறி வைத்து அசுரகுல அரசன் மகிஷன் போரிட்டான். மிருகபல சேனையிடம் தேவர்படை தோல்வியுற்றது. தோல்வியடைந்த இந்திரனும்இ தேவாதி தேவர்களும் பிரம்மனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூட்டிச் சென்றார். அனைவரும் சிவபெருமானை சந்தித்தனர்.மகிஷனின் கொடுமைகளை மும்மூர்த்திகளிடம் விளக்கினர். தேவர்கள் கொடுமைகளை பற்றி கேட்ட சிவபெருமானுக்கு கோபம் பொங்கியது. சாந்த ஸ்வரூபியான மாலவனுக்கும் மகிஷனின் கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்து கோபாவேசமாக காணப்பட்ட இரு மூர்த்திகளுடன் பிரம்மனும் சேர்ந்து நின்றார். அந்த கோபக் கனல்களும் சாதுக்களின் வயிற்றிலிருந்து புறப்பட்ட தீபமும் ஜோதிவடிவாய் இணைந்து ஒன்றுபட்டது. அனைத்துமாக தேவியாக உருவம் பெற்றது.
நாமும் ஆரத்தியுடன்(நன்றி டி டி) முடிப்போம்
Saturday, October 20, 2007
கொலுவுக்கு வாருங்கள் (9)
வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.
வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.
கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசைதோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்தமேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.
வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல்
தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)
வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க செல்லவும் இங்கே
இன்று கொண்டகடலை சுண்டல்.
Thursday, October 18, 2007
கொலுவுக்கு வாருங்கள்( 7)
வாணி நீ அருள்வாய்! சரஸ்வதிக்கு உகந்த மலர் வெள்ளைத் தாமரை. சரஸ்வதிக்கு 'தூயாள்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. வெண்மை தூய்மைக்கு சான்று. சரஸ் என்றால் பொய்கை, நீர். வெள்ளம் போன்று கல்வியைப் பெருக்குவதால் சரஸ்வதி என்று அழைக்கப் பட்டாள். சரஸ் என்றால் அறிவு, ஒளி என்றும் பொருள். சூரியனுக்கு 'சரஸ்வான்' என்று பெயருண்டு
வட இந்தியாவில் கங்கையைப் போன்று சரஸ்வதி என்ற நதிஒன்று ஓடியதாக வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. பின்பு அந்த நதி திசை மாறி எங்கோ மறைந்துவிட்டது.அந்த சரஸ்வதிஆறு எங்கே தோன்றியது? எங்கெல்லாம் ஓடி, எப்போது மறைந்தது என்பதைக் கண்டறிய நிபுணர்களைக் கொண்ட 'சரஸ்வதி ஆராய்ச்சிக் குழு' அமைக்கப்பட்டிருக்கிறது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் தலத்தில் கங்கை யமுனையோடு சரஸ்வதி ஊற்றுப்போன்று அந்தர் முகமாய் கலக்கின்றது என்றுநம்பப்படுகின்றது.
குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையின் முதற்பாடல்
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே
பொருள்
உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றைஅழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும்கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கேஅல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதிஇல்லையோ?
சங்கீத பாடம் ஆரம்பிக்கும் போது இந்தப்பாடலைத்தான் முதலில் கற்றுத்தருவார்கள்.ஆரபி ராகத்தில் அமைந்த முத்துஸ்வாமி தீக்ஷதரின் பாடல்
ராகம்:- ஆரபி தாளம்:- ரூபகம்
பல்லவி
ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே பரதேவதே அம்ப .....(ஸ்ரீ சரஸ்வதி..)
(அனனை சரஸ்வதியேநமஸ்காரம் சகலதேவதைகளும் வணங்கும்அம்பாளே)
அனுபல்லவி
ஸ்ரீபதி கௌரிபதி குருகுஹவினுதே விதியுவதே..(ஸ்ரீ சரஸ்வதி)
(லக்ஷ்மியின் பதியான திருமாலும், உமாவின் பதியான சந்திரசேகரனும்,முருகனும் வணங்கும் எப்பொழுதும் இளமையாய் இருப்பவளே)
சரணம்
வாஸனாத்திரய விவர்ஜிதே வரமுனிவரவித மூர்த்தே
(அறம் பொருள் இன்பம் அளிப்பவளே,நாரதமுனிவருக்கு தாயே)
வாஸவாத்ய கிலனீசர வரவிதரன பகுகீர்த்தே
(எல்லாவித வாத்யங்களுக்கும் ஆதாரமாக இருந்துகொண்டும், பல சிறப்புகளையும் கொண்டவளே )
தரஹாஸ்யயுதமுகாம்புருகே அத்புதசராணம்புருகே
(எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்தவளே,அதிசயிக்கும் சரணங்களை உடையவளே)
ஸ்மசாரவித்யாபகே ஸகலமந்த்ராக்ஷ்ர குஹே ...(ஸ்ரீ சரஸ்வதி..)
(உலக வாழ்க்கையில் கல்விக்கு அதிபதியே, எல்லாமந்திரங்களுக்கும் உட்பொருளாய் உறைபவளே ஸ்ரீ சரஸ்வதியே வணக்கம்)
<"மும்பைஜெயஸ்ரீ பாடுகிறார் இங்கே"> "
இன்று பிரசாதம் கடலை பருப்பு சுணடல்
Wednesday, October 17, 2007
கொலுவுக்கு வாருங்கள் ( 6 )
இன்று ஆறாவது நாள் லக்ஷ்மிக்கு உரிய நாள்.
ஆறாம் நாளன்று மஹாலக்ஷ்மி இந்திராணியாகத் தோன்றுவதால் அன்று செம்பருத்திப் பூக்களால் அம்பாளை அலங்காரம் செய்து, நீலாம்பரி ராகம் பாடி, தேங்காய் சாதம் படைத்து வழிபட மனக் கவலைகள் எல்லாம் நீங்கும், விரோதங்கள் அகலும், வெற்றிகள் பல கிட்டும். நீலாம்பரி ராகம்மனதை சாந்தப்படுத்தும் ராகம்.அதில் மீனாக்ஷி அம்பாள் பேரில் உள்ள இந்தப்பாடலைக் கேளுங்கள்.
<"நித்யஸ்ரீயின் நீலாம்பரி"> ">
ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு
பல்லவி
மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)
அனுபல்லவி
மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)
சரணம்
பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)
இந்தப் பாடலை மிக இளம் வயதிலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">
கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.
Monday, October 15, 2007
கொலுவுக்கு வாருங்கள்(4)
எனது முன்பதிவுகளிலிருந்து எடுத்தது ஆனால் இதற்கும் பொருந்துகிறது.
ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்
சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்
ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்
பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்
மாதராம் அப்ஜமாலினீம்
மாணிக்ய ஆபரணாதராம்
சங்கீத வாத்ய விநோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்
சீதகிரண நிபவதனாம்
ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்
குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)
பல்லவி
தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்
அனுபல்லவி
அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்
பாற்கடல் பெற்று எடுத்தவளும்
மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்
கோவில் கொண்டு இருப்பவளும்
இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்
தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்
நான் எப்பொழுதும் பாடுவேன்
சரணம்
வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்
பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்
சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்
தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்
உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்
மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்
சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்
சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்
அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்
குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்
என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்
முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்
இனி பாடலை திருமதிகள் ராதா ஜெயலெட்சுமி அவர்களின் குரலின் மூலமாக <" இங்கே கேட்டு ரசியுங்கள்>"
Sunday, October 14, 2007
கொலுவுக்கு வாருங்கள்(3)
பல்லவி
ஸ்ரீசக்ராதிபதியாகவும் இருப்பவளுமவளே.
எல்லோருக்கும் தெரிந்த பிடித்த அகத்திய கீதமான "ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி" பாடல் இதே
ராகம்: செஞ்சுருட்டி தாளம்:- ஆதி
Saturday, October 13, 2007
கொலுவுக்கு வாருங்கள்(2)
ஈஸ்வரிதான் பிரதானம்.இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியை மூன்று
மூன்று நாட்களாக பிரித்து முறையே துர்கா, லக்ஷ்மி,சரஸ்வதியாக வழிபாடு.
ஈஸ்வரி என்றாலே ஜகதீஸ்வரி,அகிலாண்டேஸ்வரிதான் ஞாபகத்துக்கு வரும். திருச்சிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் கோவிலில் குடிகொண்டு இருப்பவள்.அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; இரு காதுகளிலும் ஆதி சங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரத்தை தாடங்கம்என்கிற காதணிகளைஅணிந்து எதிரில்அமர்ந்து இருக்கும் ஆனை முகத்தோனுக்கும்,அடியவருக்கும் அருள்பாலிப்பவள். பார்க்கப் பார்க்க திகட்டாத ஜ்வலாமுகி அவள். ஸ்ரீ வித்யா உபாஸகரானதிரு.முத்துஸ்வாமிதீக்ஷ்தர்அவர்கள்திருவானைக்காவல்
உறைஅகிலாண்டேஸ்வரியின் மீது த்விஜாவந்திராகத்தில்அருமையானகீர்த்தனையைவழங்கியுள்ளார்.
இந்தப்பாட்டைக் கேட்டாலேஅம்மனை நேரில் பார்த்தஉணர்வு வரும். அதுவும் மும்பை ஜெயஸ்ரீ குரலில் கேட்டால் . கேட்டுப் பார்த்துதான் சொல்லுங்களேன்
<"அகிலாண்டேஸ்வரீம் ரக்ஷமாம் "> ">(மும்பை ஜெயஸ்ரீ)
<"திரு.சேஷகோபாலன் பாட்டை இங்கே கேட்கவும்">">
சரி பட்டைக் கேட்டாச்சா சுண்டல் பிரசாதம் வாங்கிச் செல்லுங்கள் .
சுண்டலைப் பற்றிய ஒரு வெண்பா
விருப்புடன் உண்ணவே வெந்த பருப்பில்
துருவிக் கலந்திட்ட தேங்காய் மிளகாயும்
உப்பும் கடுகுமிட்ட சுண்டலில் உண்டாம்
உடலுக் குற்ற புரதம்